Page load depends on your network speed. Thank you for your patience. You may also report the error.

Loading...

திருவெஃகா பெருமாளின் பெருமை : தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

திருவெஃகா மாதிரியே திருத்தண்கா என்றும் பதினாலில் இன்னொன்று இருக்கிறது. வெஃகா, தண்கா என்றால் (முறையே) வெம்மையான காடு என்றும் தண்மையான காடு என்றும் அர்த்தம். ஆதியில் காடுகளில் ரிஷிகள் பூஜை பண்ணிக்கொண்டிருந்த இடங்கள்தான் அப்புறம் நாம் பார்க்கிற க்ஷேத்ரங்களாக ஆனதால் கா, காடு என்றே அவற்றில் பலவற்றின் பேர் இருக்கிறது – திருவானைக்கா, திருக்கோடிகா, திருவேற்காடு, திருமறைக்காடு (வேதாரண்யம்) இப்படி. தண்காவைத் தூப்புல் என்பார்கள். தூய புல்லான தர்ப்பை வளரும் இடம். வடகலை ஆசார்ய புருஷரான வேதாந்த தேசிகரின் ஜன்ம ஸ்தலம் அதுதான். தண்காவுக்கு இப்படிப் பெருமையென்றால், நம்முடைய கதைக்கார ஆழ்வார் ஸம்பந்தப்பட்ட வெஃகாவில் தான், அதன் புஷ்கரிணியில் (திருக்குளம் என்கிற பொய்கையில்) ஆழ்வார்களில் முதல்வராக இருக்கப்பட்ட பொய்கையாழ்வார் அவதாரம் செய்திருக்கிறார். அங்கேதான் யதோக்தகாரியாக பகவான் இருப்பது. யதோக்தகாரி என்ற பெயர் ஏற்படுவதற்கு முந்தியே அவர் அங்கே புஜங்க சயனப் பெருமாளாகப் படுத்துக் கொண்டிருந்திருக்கிறார். வரதராஜா ஆவிர்பவித்ததற்கு முந்தியே இருந்திருப்பவர் இவர். ஏனென்றால்…ப்ரஹ்மா ஒரு யாகம் பண்ணி, அதில் வரம் தர வந்தவர்தான் வரத ராஜா. அந்த யாகம் பண்ணும்போது ப்ரஹ்மாவுக்கும் ஸரஸ்வதிக்கும் மனஸ்தாபம். அதனால் ப்ரஹ்மா ஸரஸ்வதியை ஒதுக்கிவிட்டு, ஸாவித்ரி காயத்ரி என்ற இரண்டு பேரையே யஜ்ஞ பத்னிகளாக வைத்துக்கொண்டு யாகம் ஆரம்பித்தார். அப்போது ஸரஸ்வதி ஒரே கோபமாக வேகவதி என்ற நதி ரூபம் எடுத்துக்கொண்டு, வேகமாக வெள்ளம் அடித்துக் கொண்டு யாகசாலையை நோக்கி வந்தாள். அந்த ஸமயத்திலே இந்த புஜங்க சயனப் பெருமாள்தான் நதி வருகிற வழியில் குறுக்கே போய்ப் படுத்துக்கொண்டு தடுத்தார். யஜ்ஞமும் பூர்த்தியாகி, ப்ரஹ்மாவுக்கு மாத்திரமில்லாமல் எல்லா ஜனங்களுக்கும் எல்லாக் காலத்திலும் வரம் கொடுப்பதற்காக வரதராஜா தோன்றிக் கோயில் கொண்டார். நம்முடைய கதையில் வரும் ஆழ்வாரான திருமழிசைக்காரர் காஞ்சீபுரத்தில் இந்த புஜங்கசயனர் ஆலயத்திலோ, அல்லது அதை ஒட்டினாற்போலவோதான் வஸித்து வந்தார். அப்போதுதான் அவர் பெருமாளைத் தாம் சொன்னபடி செய்ய வைத்து யதோக்தகாரியாக்கியது.

வரதராஜா உள்படக் காஞ்சீபுரத்திலுள்ள பெருமாள்களில் பெரும்பாலும் எல்லாருமே ‘நின்ற திருக்கோலம்’ தான். ‘இருந்த திருக்கோலம்’ என்பதாக உட்கார்ந்த நிலையில் ஓரிரண்டு பெருமாள் இருக்கலாம். திருவெஃகாக்காரரோ ‘கிடந்ததிருக்கோலம்’. அதாவது ஸ்ரீ ரங்கநாதர், பத்மநாபஸ்வாமி, சார்ங்கபாணிப்பெருமாள் ஆகியவர்களைப் போலப் பள்ளி கொண்டிருப்பவர். இவரைப்பற்றி ஒன்று குறிப்பிட்டுப் பெருமையாகச் சொல்வார்கள்.

என்னவென்றால்…எந்த க்ஷேத்ரத்திலுள்ள சயனக் கோலப் பெருமாளானாலும் ஸரி, அவருடைய சரீரம் மல்லாக்க (மல்லாந்து) படுத்திருந்தாலும், சிரஸையும் அந்தப்படியே வைத்து ஆகாசத்தைப் பார்த்துக் கொண்டிருக்க மாட்டார். முக மண்டலத்தை ஸந்நிதிப் பக்கம் கொஞ்சமாவது திருப்பி பக்த ஜனங்களைக் கடாக்ஷித்துக் கொண்டுதானிருப்பார். ஸ்ரீரங்கநாதர் தெற்குப் பார்த்த திருமுகமண்லடத்தோடு மேற்குப் பக்கம் சிரஸை வைத்துக்கொண்டு கிழக்கே பாதத்தை நீட்டிக் கொண்டிருப்பவர். நாம் அவருடைய ஸந்நிதிக்கு எதிரே நின்று பார்க்கும்போது நமக்கு இடதுகைப் பக்கம் அவருடைய சிரஸும், வலது கைப்பக்கம் பாதமுமாக இருப்பார். திருவனந்தபுரத்தில் பத்மநாப ஸ்வாமி கிழக்குப் பார்த்த திருமுகண்டலத்தோடு இருக்கிறார்.

அவர் தெற்கே சிரஸும் வடக்கே பாதமுமாக சயனித்துக் கொண்டிருப்பதால் அவரையும் நாம் எதிரேயிருந்து பார்க்கும்போது நமக்கு இடதுகைப் பக்கம்தான் சிரஸ், வலதுகைப் பக்கம் பாதம் என்று இருக்கும். கும்பகோணத்தில் ஆராவமுதன் என்கிற சார்ங்கபாணியும் அப்படித்தான் இருக்கிறார். திருவெஃகாவில் மாத்திரம் எப்படியிருக்கிறதென்றால், பெருமாள் தெற்கு – வடக்காக சிரஸ் – பாதங்களை வைத்து சயனித்திருந்தாலும் ஸந்நிதி மேற்குப் பார்த்தது. அதாவது அவருடைய திருமுகமண்டலம் மேற்குப் பார்க்கிறது. இதனால் என்னவாகிறதென்றால் நாம் அவருக்கு எதிரே நின்று தர்சிக்கும்போது நம்முடைய வலதுகைப் பக்கம் அவர் சிரஸும் இடதுகைப் பக்கம் பாதமும் இருக்கின்றன. மேலே சொன்ன மற்ற சயனமூர்த்திகளின் வலது பார்ச்வம் (right side ) நமக்குக் கிட்டேயும், இடது பார்ச்வம் (left side) திருமேனிக்கு மறுபக்கம், நமக்குத் தள்ளி அந்தண்டையும் இருக்கும். ஸந்நிதிப் பக்கமாக நமக்குக் கிட்ட இருக்கும் வலது கையை நன்றாகத் தூக்கி அவர் அபயம் காட்டுவதாக அந்தப் பெருமாள்களின் சில்பம் அமைந்திருக்காது. சயன பீடத்தை ஒட்டினாற்போலவே அந்தக் கை தலைப் பக்கமாக மடிந்திருப்பதாகத்தான் மூர்த்தி பெரும்பாலும் அமைந்திருக்கும். அதாவது அந்தக் கையையே அவர் ‘தலைக் கோசரம்’ (தலைக்கு உயரமான தலையணை) மாதிரி வைத்துக் கொண்டிருக்கும் பாவனையில்தான் சில்பம் இருக்கும். உள்ளங் கையை விரித்து அவர் அபய முத்ரை காட்டினாலுங்கூட, முழங்கைக்குக் கீழே எடுப்பாகத் தூக்கி நன்றாக ஆசீர்வாதம் செய்கிறாற்போலில்லாமல், பீடத்தின் மட்டத்தோடேயே சேர்ந்தாற்போலதான் கை இருக்கும். கையைத் தூக்கினால் திருமேனியையே கொஞ்சம் மறைக்கிறாற்போலக் குறுக்கே நிற்கும்; கர்ப்பூரம் காட்டும்போது அதன் நிழல் திருமேனி மேல் விழும் – என்பது காரணமாயிருக்கலாம். அதோடுகூட, horizontal – ஆக – குறுக்கு வாட்டமாக – சயன மூர்த்தியைப் பெரிசாகச் சில்பத்தில் வடிக்கிறபோது முன்னங்கையைத் தூக்கினாற்போல் பண்ணுவதில் ச்ரமங்கள் உண்டு.

ஆனால், திருவெஃகாவில் ஸ்வாமி மற்ற சயன மூர்த்திகளைப் போல இல்லாமல், வித்யாஸமாக, தெற்கே சிரஸ் – வடக்கே பாதம், ஆனால் மேற்குப் பார்த்த திருமுக மண்டலம் என்று இருப்பதால் எல்லாம் மாறிப்போகின்றன! எதிரே ஸந்நிதியில் நின்று தர்சிக்கும்போது அவருடைய இடது பார்ச்வம் நமக்குக் கிட்டேயும் வலது பார்ச்வம் அந்தண்டையுமாக இருக்கின்றன. அதாவது அவரது இடது கை நமக்குக் கிட்டேயும், வலது கை – அபயமுத்ரை காட்டக் கூடிய வலதுகை – திருமேனிக்கு மறுபுறமுமாக இருக்கும். இங்கே, ஸ்வாமி வலது கையைத் தலைக்கோசரம் மாதிரி வைத்துக் கொண்டாரானால் முகத்தை அந்தக் கைப் பக்கமாகச் சாய்க்கநேர்ந்து, அவர் ஸந்நிதியைப் பார்க்கிறதற்குப் பதில் பின் சுவரைப் பார்ப்பதாகிவிடும்! அதனால் இங்கே பெருமாள் மூர்த்தி அப்படியில்லை. இடது பக்கமாக ஸந்நிதியை, ஸந்நிதியில் நிற்கிற நம்மைப் பார்க்கிறாற் போலவே அவர் முகத்தைச் சாய்த்தபடி சயனித்துக் கொண்டிருக்கிறார். இந்த விதமான அமைப்பில் (Posture -ல்) என்ன விசேஷமென்றால், நம் பார்வையில் அவருடைய திருமேனிக்கு மறுபுறம் இருக்கும் வலது கையை அவர் நன்றாகத் தூக்கி அபயம் ஸாதித்தாலும் அது நமக்கும் பிம்பத்துக்கும் குறுக்கே வந்து மறைக்காது. வலது கை திருமேனிக்கு மறுபக்கம் போய், பிம்பத்தின் அந்த மறுபக்கம் பின்சுவரை ஒட்டினாற்போலப் போய்விடுவதால், அந்தக் கையைத் தூக்கி வைத்து சில்பம் பண்ணுவதிலும் ச்ரமம் இல்லை. இந்தக் காரணங்களால், முன்னே சொன்ன சயன மூர்த்திகளுக்கெல்லாம் வித்யாஸமாக, விசேஷமுள்ள வித்யாஸமாக, இந்த யதோக்தகாரி நமக்கெல்லாம் நன்றாக வலதுகையை உயர்த்தி அபயம் ஸாதித்தபடி சயனித்துக் கொண்டிருக்கிறார்!

Previous page in  தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is பல்லவர் தோற்றுவாய்
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is  கணிகண்ணன்:அருள் நெஞ்சும் அஞ்சாநெஞ்சும்
Next
htmltitle
UPDATE on 13 July 2017:

Thanks to the devotees at dheivathinkural.wordpress.com, many corrections have been incorporated on these pages. If you find an error, please help us by reporting it