அநன்ய பக்தி : நடைமுறை சிரமங்கள் : தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

ரொம்பவும் உயர்ந்த நிலைக்குப் போய்விட்டால் அநன்ய பக்தி என்பது ஆத்மாவுக்கு அன்யமாய் எதுவுமே இல்லை என்று அதிலேயே ஆணி அடித்த மாதிரி நின்று விடுகிற ஞானமாகிவிடுகிறது. அதற்கு அடுத்த நிலையில், மனஸே அடியோடு போகாத நிலையில், அந்த மனஸுக்கு ஆலம்பனமாக ஏதோ ஒன்றே ஒன்று மட்டும் தேவைப்பட்டு அதிலேயே அது பூர்ணமாக நீடித்துத் தோய்ந்திருக்கின்ற யோக்யதை கிடைத்திருக்கும். அப்போது வேண்டுமானால் ஒரு மூர்த்தியிடமே அநன்ய பக்தி பாராட்டலாம். மற்ற படி, பல மூர்த்திகளிடம், அவை ஒவ்வொன்றும் ஒரே பரமாத்மாவின் தோற்றமே என்ற உணர்வோடு, அவற்றுக்கிடையே ஏற்றத் தாழ்வுகள் இல்லை என்ற ஸமரஸ பாவத்தோடு பக்தி செலுத்தத் தோன்றுவதுதான் மநுஷ மன இயற்கை, அதிலே தப்புமில்லை.

ஒரே மூர்த்தியிடம் பக்தி, அது குரு மூர்த்தியே என்று சொன்னால் இன்னொரு தினுஸான கேள்விகூட எழும்பலாம். ஒருவருக்கே ஒன்றுக்கு மேற்பட்ட குரு இருக்கலாம். வெவ்வேறு சாஸ்திரங்களை வெவ்வேறு குருவிடம் ஒருவர் படித்திருக்கலாம். வெவ்வேறு மந்த்ர தீக்ஷைகள் வெவ்வேறு குருவிடமிருந்து பெற்றிருக்கலாம். ‘பெற்றிருக்கலாம்’ என்ன? உங்களிலேயே தீக்ஷை ஆனவர்களில் பல பேருக்கு அப்படித்தான் இருக்கும். நீங்கள் இந்த விஷயமாக யோசித்துப் பார்க்காவிட்டாலும், சொல்கிறேன். உங்களுக்கு ப்ரம்மோபதேசம் பண்ணியது யார்? தகப்பனார் தானே? அதாவது அவர்தான் உங்களுக்கு காயத்ரீ தீக்ஷை தந்த குரு. பல பேருக்கு இந்த விஷயம் தோன்றுவதே இல்லை. மந்த்ர தீக்ஷை என்றால் ஏதோ பஞ்சாக்ஷரீ, அஷ்டாக்ஷரீ மாதிரி பண்ணிக்கொள்வதுதானென்று நினைக்கிறார்களே தவிர, தங்களுக்கு ‘மந்த்ர ராஜம்’ எனப்படுகிற காயத்ரீ தீக்ஷை ஆகியிருப்பதோ, அப்படி தீக்ஷை கொடுத்த குரு தன்னுடைய பிதா என்பதோ பலபேருக்கு ஞாபகமே இருப்பதில்லை! அதோடுகூட பஞ்சாக்ஷரீ, அஷ்டாக்ஷரீ போன்ற ஏதோ ஒரு மந்த்ரமும் உபதேசமானவர்கள் உங்களில் இருப்பீர்கள். பெரும்பாலும் இவற்றைத் தகப்பனாரிடமிருந்து இல்லாமல் வேறொருவரிடமிருந்துதான் வாங்கிக் கொண்டிருப்பீர்கள். இப்போது ஒன்றுக்கு மேற்பட்ட தீக்ஷா குரு ஆகிவிடுகிறதல்லவா? ரொம்பப் பெரியவர்களாக இருந்த சில பேருக்கே ஒன்றுக்கு மேற்பட்ட குருமார்கள் இருந்திருப்பதுண்டு. சாஸ்த்ரங்களை உபதேசித்த வித்யா குரு ஒருவராகவும், ஸந்நியாஸம் கொடுத்த ஆச்ரம குரு இன்னொருவராகவும் இருப்பார்கள். இரண்டு குருக்களையுமே ஸ்தோத்ரம் பண்ணி எழுதியுள்ள பெரியவர்கள் இருக்கிறார்கள்.

இன்னங்கூட ஒன்று. குரு பீடங்களாக மடாலயங்கள் இருக்கின்றன. இவற்றில் ஒரே ஸமயத்தில் இன்றைய மடாதிபதி, வருங்கால மடாதிபதியான இளவரசுப் பட்டம் என்று இரண்டு பேர் இருப்பதுண்டு. நாமே நிறைய இப்படி ஒரே மடத்தில் ஸீனியர் ஸ்வாமி, ஜூனியர் ஸ்வாமி என்று பார்க்கிறோம். இரண்டு பேருமே குரு ஸ்தானம்தான்.

இதெல்லாம் போக, ஜபம் த்யானம் என்று உட்காரும் போதே குரு பரம்பரை என்று ஆதியிலிருந்து அநேக குருக்களை த்யானம் பண்ணவேண்டுமென்று விதி இருக்கிறது.

ஆகையால் இப்படி குருவாகவே பலபேர் இருக்கிற போது ஒரே குருவிடம் அவரே ஈச்வரன் என்று முழு பக்தியையும் அநன்யமாகச் செலுத்துவது என்றால் அது நடைமுறைக்கு முடியாமல் ச்ரமமாகத்தானே ஆகும்? ஒரே பக்தியாவேசமாக ‘இவர்தான் நமக்கு ஸகலமும்’ என்று ஒருத்தரிடமே மனஸைக் கொடுத்துவிட்ட சில பேருக்குத்தான், ‘இன்னொருவரை நினைப்பானேன்? அத்தனை குரு பரம்பரையும், அத்தனை சாமி பட்டாளமும் இவருக்குள் தான் அடக்கம்’ என்ற த்ருட நம்பிக்கை உண்டாகி, மனஸும் அதன் ஸாமான்ய நேச்சர்படி ‘சேஞ்ஜ்’, ‘சேஞ்ஜ்’ என்று பறக்காமல், அந்த ஒரு குரு சரணத்திலேயே ஒட்டிக் கொண்டுகிடக்கும்.

மனஸே போய்விடுகிற ஞானத்துக்கு அடுத்தபடியாக அந்த மனஸ் நாலா திசையில் ஓடாமல் ஒரே ரூபத்தோடு த்ருப்திப்பட்டு, அதுவே ஆலம்பனம் என்று இறுகப்பிடித்துக் கொண்டு லயித்துப் போகிற உசந்த நிலையை நினைத்துப் பார்த்துக்கொண்டோமானால், அப்படிப்பட்ட நிலையில்தான் மனஸானது சிதறாத பக்தியினால் பற்றிக்கொள்ள வேண்டிய ஒரே வஸ்து ஈச்வரன் என்ற குருவா, அல்லது குரு என்ற ஈச்வரனோ என்ற கேள்வி எழும்பும்; அதற்கு பதில் சொல்ல வேண்டியிருக்கும். ஈச்வரனே குரு என்று பக்தி பண்ணுவதை விட, குருவையே ஈச்வரன் என்று பக்தி பண்ணுவதை அங்கே அந்த இடத்தில்தான் ஏற்றதாக இப்போது உயர்த்திச் சொல்லப்போகிறேன்.

Previous page in  தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is அநன்ய பக்தி; ஆதர்சத்துக்கான யுக்தியே
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is  'ஈசனே குரு'என்பதும், 'குருவே ஈசன்'என்பதும்
Next