ஒரே பக்திதான்; க்ருபையும் ஒன்றுதான்! : தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

சற்று முன் நாம் பார்த்த விஷயம் இங்கே தெளிவாகி விடுகிறது. இரண்டு பக்திகளா, இரண்டு க்ருபைகளா என்று விசாரித்துப் பார்த்தோமல்லவா? அதற்கு இங்கே ஆன்ஸர் வந்து விடுகிறது. அத்தனை பேரிடம் செலுத்தும் பக்தியும் ஒருத்தனிடம்தான் போய்ச் சேருகிறது என்ற பிறகு, குரு பக்தி, ஈச்வர பக்தி என்று இரண்டைப் பிரித்துச் சொல்ல அவசியமேயில்லாமலாகிறது. குருவிடம் செலுத்தும் பக்தியும் ஈச்வரனிடம்தான் போய்ச் சேரப்போகிறது என்கிறபோது பிரித்துப் பிரித்து இவருக்கு, அவனுக்கு என்று இரண்டு பக்தி பண்ணுவானேன்?

அப்புறம் க்ருபைக்கு வருவோம். ‘குரு க்ருபை, ஈச்வர க்ருபை-ஒன்றா, இரண்டா?’ என்கிற விஷயம். அதற்கும் இங்கே ஆன்ஸர் கிடைத்துவிடுகிறது. எந்த ஸ்வாமி, அல்லது மஹாபுருஷர்கள், குரு போன்றவர்கள் க்ருபை செய்கிறார்களென்றாலும் எதை முன்னிட்டுச் செய்கிறார்கள்? பக்தியை முன்னிட்டே செய்கிறார்கள். நாம் பக்தியாக இருந்தால் அதற்கு ப்ரதியாகவே க்ருபை செய்கிறார்கள். நாம் செய்கிறது பக்தி. அதற்காக அவர்கள் செய்வது க்ருபை. பக்திக்கு அடையாளமாக நாம் நமஸ்காரம் பண்ணுகிறோம், அப்போது அவர்கள் அதற்குப் பதிலாக ஆசீர்வாதம் பண்ணுகிறார்களென்றால், அந்த ஆசீர்வாதமென்பது க்ருபைக்கு அடையாளமே.

ஸரி, எல்லா நமஸ்காரமும் ஒரு பரமாத்மாவுக்குத்தான் போகிறதென்றால், அதற்குப் பதிலாக நமஸ்கரிக்கப்படுபவர் எவர்களானாலும் அவர்கள் பண்ணுகிற ஆசீர்வாதமெல்லாமும் அந்த ஒருவனிடமிருந்தே என்று தானே அர்த்தம்? நமஸ்காரத்தை இவர்கள் – இந்த ஸாமிகள், ஆஸாமிகள் எவரானாலும் இவர்கள் – வாங்கிக் கொள்ளவில்லை, இவர்களுக்கு அந்த ‘ரைட்’ இல்லை என்கிறபோது ஆசீர்வாதம் மட்டும் இவர்கள் எப்படிப் பண்ண முடியும்? ஈச்வரனுக்குச் செய்யப்பட்ட நமஸ்காரத்துக்குப் பதிலாக இவர்கள் யார் ஆசீர்வாதம் பண்ண? அதனால் விஷயம் தெரிந்தவர்களாயிருந்தால், ஒரு மரியாதையை, ஸம்ப்ரதாயத்தை உத்தேசித்து ஆசீர்வாதம் சொன்னாலும், தங்களுக்குச் செய்யப்பட்ட நமஸ்காரத்தை வாஸ்தவத்தில் அவனுக்கே அர்ப்பணம் பண்ணிவிட்டு, ‘அப்பா! இந்தக் குழந்தையை நீ எப்படி ஆசீர்வாதம் பண்ண நினைக்கிறாயோ அப்படிப் பண்ணு’ என்று தாங்களும் மனஸுக்குள் அவனிடம் ஒரு நமஸ்காரம் பண்ணிக் கேட்டுக்கொள்ளத்தான் செய்வார்கள். நமஸ்காரம் பண்ணுகிறவனுக்காகப் பண்ணப்படுபவரும் ஈச்வரனிடம் மனஸுருகி வேண்டிக்கொண்டு நமஸ்காரம் பண்ணும்போது, ஈச்வரன் அவரை முன்னிட்டு அவனுக்கு இன்னும் கொஞ்சம் சேர்த்து க்ருபை பண்ணுவான்.

‘உங்களுக்குப் பண்ணுகிற நமஸ்காரங்களையெல்லாம் நானே வாங்கிக் கொள்வேன். பதிலுக்கு ஆசீர்வாதம் மட்டும் நீங்கள் பண்ணவேண்டும்’ என்று ஈச்வரன் நிச்சயம் இருக்கமாட்டான். ஸகல ஆசீர்வாதமும் அவன் பண்ணுவதுதான்.

‘ரொம்ப பெரியவா, மஹான்-னு சொல்றவா, அவாளெல்லாம் ஆசீர்வாதம் பண்ணினாளே, அப்படியும் பலிக்காமப் போயிடுத்தே!’ என்று சில பேர் நொந்து கொள்வதைக் கேட்கிறோம். (இப்படி நடப்பதற்கு) என்ன அர்த்தம்? ஒன்று, அந்தப் பெரியவர், ‘இவர்களுக்கு ஏதோ தற்கால சாந்தியாக இருக்கட்டும். எப்படியும் கர்மா இவர்களைப் பழிவாங்கத்தான் போகிறதென்றாலும், அப்படிப் பழிவாங்கின அப்புறம் இவர்கள் அழுதுவிட்டுப் போகட்டும். இப்போதே பிடித்து அழவேண்டாம் அதனால் கொஞ்சம் ஆறுதலாகத்தான் சொல்லி வைப்போமே’ என்று நல்லபடியாக ஆசீர்வாதம் பண்ணியிருக்கலாம். அல்லது, ஏதோ ஒரு மஹாமாயை, அதன் விளையாட்டில், அவரும்கூட ஈச்வர ஸங்கல்பத்தைத் தெரிந்து கொள்ளாமல், அல்லது ‘அவனுடைய ஆசீர்வாதம்தான் தன் மூலம் பாயவேண்டும்; தான் நிமித்த மாத்ரந்தான் (கடவுளின் கருவியளவுதான்) ‘என்பதை மறந்து, தானே ஆசீர்வாதம் பண்ணியிருக்கலாம். ஈச்வரனுடைய ஆசீர்வாதம் ஒருத்தரிடம் புகுந்து அவருடைய ஆசீர்வாதம் மாதிரி வந்தாலொழிய எவருடைய ஆசீர்வாதமும் அதுவாகவே பலித்துவிடாது.

சிஷ்யன், பக்தன் போன்றவர்களின் மனஸில் ஒரு நல்ல விநயமான எண்ணமாகப் புகுந்து அவர்களை நமஸ்காரம் பண்ண வைக்கிறவனுங்கூட ஈச்வரன்தான்! அப்புறம் அவர்கள் யாருக்கு நமஸ்காரம் செய்தாலும் அதை வாங்கிக் கொள்கிறவனும் அவன்தான். அதற்கப்புறம் அவர்களுக்குள் புகுந்து ஆசீர்வாதம் செய்கிறவனும் அவனேதான்.

பலருடைய நமஸ்காரங்களுக்கும் பாத்ரராகிற எல்லாருடைய ஆசீர்வாதங்களையும் பண்ணுவிக்கிறவன் அவனொருத்தன்தான். அதாவது எல்லா பக்திகளுக்குமாக, – அறியாத நிலையில் குரு பக்தி, ஈச்வர பக்தி என்று நாம் பிரித்துப் பிரித்துப் பலபேரிடம் செலுத்துகிற எல்லா பக்திகளுக்கும் பதிலாக – அப்படிப் பல ரூபத்திலிருக்கிறவர்கள் செய்கிற க்ருபைகளும் அவன் ஒருத்தனே செய்வதுதான்.

குருவுக்கு ஸொந்தமாக க்ருபா சக்தி என்று ஒன்று எப்படி உண்டாகமுடியும்? ஸகல சக்திகளும் அந்த ஈச்வரன் ஒருவனைச் சேர்ந்தவைதானே? அவனோடு சேர்ந்திருந்து அவனிடமிருந்துதானே குருவும் சக்தி பெறுகிறார்? குரு என்கிறவர் அந்த ஸ்தானத்துக்கு உயர்ந்ததும் ஈச்வர க்ருபையால்தான். குருவான அப்புறமும் ஈச்வரனுடைய க்ருபையை நம்பி, அதைத்தான் பற்றிக்கொண்டு அவரும், இருக்கிறார். ஆகவே, அவருடைய க்ருபா சக்தி என்று தனியாக ஒன்று இல்லை. அதுவும் ஈச்வர சக்திதான். திருவருள், குருவருள் என்று இரண்டு சொல்வதில் குருவருள் என்பதும் திருவருளே இவர் மூலமாக வருவதுதான்.

Previous page in  தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is எல்லா வணக்கமும் போய்ச் சேருவது ஒருவனையே
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is  ஸ்லோகப் பொருளில் மாறுதல்
Next