Page load depends on your network speed. Thank you for your patience. You may also report the error.

Loading...

ஐயப்பனின் தாயாரைப் பற்றிய பிரச்னை! : தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

விக்னேச்வரரின் மாதாக்கள், முருகனின் மாதாக்கள் ஆகியவர்களைப் பற்றிச் சொல்லும்போது வேடிக்கையாக ஒன்று நினைவுக்கு வருகிறது. இந்த இரண்டு பேரைப் போலவே பரமேச்வரனுக்கு மூன்றாவது குமாரராக ஒருத்தர் உண்டு. இப்போது நாளுக்கு நாள் பிரஸித்தி பெற்றுவரும் ஐயப்ப ஸ்வாமிதான் அவர். ஈச்வரனைப் பிதாவாகவும், மோஹினி ரூபத்தில் வந்த மஹாவிஷ்ணுவை மாதாவாகவும் கொண்டு உத்பவித்தவர் அவர். அவருடைய தாயார் உறவு விஷயமாகத்தான் வேடிக்கை. வேடிக்கை, வேடிக்கை என்று நான் சொன்னாலும் அவருக்கு ரொம்ப விசாரமளித்து வந்த ஒரு பிரச்னையாக அது இருந்தது.

கதை என்னவென்றால் –

பதினாறாம் நூற்றாண்டில் அப்பைய தீக்ஷிதர் என்று மஹான் இருந்தார். மன்னார்குடிப் பெரியவாளின் குலகூடஸ்தராகச் சொன்ன அந்தப் பெரியவர்தான். அவர் அத்வைதியானபோதிலும் சிவ உபாஸனையை விசேஷமாக வளர்த்துக் கொடுத்தவர். அவர் காலத்தில் சிவாராதனத்தை மட்டம் தட்டியும் சிவாராதனம் செய்து வந்தவர்களை எதிர்த்தும் விஷ்ணு உபாஸனையானது “aggressive” என்று சொல்லக்கூடிய விதத்திலேயே பரப்பப்பட்டு வந்ததால்தான் அவர் எதிர் நடவடிக்கையாக சிவோத்கர்ஷத்தை (சிவபெருமானின் உயர்வை) ஸ்தாபித்து நிறையப் பிரசாரம் பண்ணும்படியாயிற்று. அவருக்கு ஸம காலத்தவராகிய தாதாசாரியார் என்பவர் விஜயநகர ராயவம்சத்தின் கடைசி ராஜாக்களிடம் நிரம்பச் செல்வாக்குப் பெற்றுத் தீவிரமாக வைஷ்ணவப் பிரசாரம், மத மாற்றம் பண்ணி வந்ததுதான் சைவத்தை விசேஷமாக நிலைநாட்டும்படி தீக்ஷிதரைத் தூண்டியது. மற்றபடி, எதிராளிகளுக்கு ஒரேயடியாக சிவத்வேஷம் இருந்த மாதிரி அவருக்கு விஷ்ணு த்வேஷம் என்பது லவலேசமும் இருக்கவில்லை. சற்றுமுன் ‘ரத்ன த்ரயம்’ என்று சொன்னபடி ஈச்வரன், அம்பாள் ஆகியவர்களோடு விஷ்ணுவையும் ஸாக்ஷாத் பரப்ரஹ்மதத்தின் ஸ்வரூபமாக – ஏனைய தேவதைகளுக்கெல்லாம் உச்சியிலுள்ள மும்மணிகளில் ஒருவராக – ச்ருதி, யுக்தி பிராமணங்கள் காட்டி தீக்ஷிதரே ஸ்தாபித்திருக்கிறார்.

ஒரு ஸமயம் தீக்ஷிதர், தாதாசாரியார் ஆகிய இரண்டு பேருடன் ராஜா ஒரு கோயிலுக்குப் போனார். அந்த ராஜா விஜயநகரத்து ராமராயராகவோ, வேலூர் சின்ன பொம்ம நாய்க்கராகவோ, தஞ்சாவூர் வீர நரஸிம்ஹ பூபாலராகவோ இருக்கலாம். ராஜா யார் என்பது கதைக்கு முக்யமில்லை. சைவம், வைஷ்ணவம் ஆகிய ஒவ்வொன்றிலும் தலைமை ஸ்தானத்தில் இருந்தவர்களான இந்த இரண்டு பேரை, இருவருமே நல்ல வித்வத் ச்ரேஷ்டர்களாக இருந்தவர்களை, ராஜா ஒரே சமயத்தில் தன்னோடு கோயிலுக்கு அழைத்துக்கொண்டு போனதுதான் முக்யம்.

கோயிலில் ஐயப்ப சாஸ்தாவின் பிம்பம் இருந்தது. அது ஒரு புது மாதிரியான பிம்பமாக இருந்தது. சாஸ்தா மூக்கின்மேல் விரலை வைத்துக்கொண்டு ரொம்பவும் விசாரத்துடன் என்னவோ யோசிக்கிற பாவனையில் விக்ரஹம் அமைந்திருந்தது.

“இது ஏன் இப்படிப் புது மாதிரியாக இருக்கிறது?” என்று ராஜா கேட்டார்.

கோயிலைச் சேர்ந்தவர்கள், “இது பஹு காலத்துக்கு முந்திச் செய்த விக்ரஹம். இந்த விக்ரஹம் அடித்த ஸ்தபதிக்கு ஐயப்ப சாஸ்தா ஏதோ ஒரு விஷயமாக இப்படி தீர்க்க சிந்தனையில் இருப்பதுபோல தர்சனம் கிடைத்ததாம். அது என்ன விஷயம் என்று அவர் (ஸ்தபதி) தெரிவிக்கவில்லை. ஆனால் தமக்கு தர்சனம் கிடைத்த பாவனையிலேயே இந்த மூர்த்தியைப் பண்ணி வைத்துவிட்டு, ‘பிற்காலத்தில் ஸர்வஜ்ஞதை (அனைத்தறிவு) வாய்ந்த ஒரு பெரியவர் இங்கே வருவார். அவர் சாஸ்தாவின் விசாரம் எதைப் பற்றி என்ற ரஹஸ்யத்தை வெளிப்படுத்திவிடுவார். உடனே விக்ரஹம் மூக்கின் மேலிருந்து விரலை எடுத்துவிட்டு, எல்லாக் கோயில்களிலும் இருக்கிற மாதிரி ஆகிவிடும்’ என்று சொல்லிவிட்டுப் போய்விட்டாராம். அப்புறம் எத்தனையோ பெரியவர்கள் இங்கே வந்து (சாஸ்தாவின் தீவிர யோசனைக்கு) என்னென்னவோ காரணங்கள் சொல்லிவிட்டார்கள். ஆனால் எதுவும் நிஜமான காரணமாக இல்லாததால் சாஸ்தா விரலை எடுக்காமலே இருக்கிறார்” என்று சொன்னார்கள்.

ராஜா உடனே தாதாசாரியாரைப் பார்த்தார்.

அவர் அதன் உள்ளர்த்தத்தைப் புரிந்துகொண்டு தாமும் ஒரு காரணம் கற்பித்து ச்லோகமாகச் சொன்னார்.

விஷ்ணோ : ஸுதோஹம் விதிநா ஸமோஹம்

தந்யஸ் – ததோஹம் ஸுரஸேவிதோஹம் |

ததாபி பூதேச ஸுதோஹம் ஏதைர்

பூதைர் – வ்ருதச் சிந்தயதீஹ சாஸ்தா ||

‘சாஸ்தாவுக்கு என்ன விசாரம் என்றால் இதுதான்’ என்று தாதாசாரியார், சாஸ்தா சொல்கிற மாதிரியே ச்லோகத்தை ஆரம்பித்துப் பண்ணியிருக்கிறார். சாஸ்தா என்ன சொல்கிறாராம்? “நான் விஷ்ணுவுக்குப் பிள்ளை, ஆனபடியால் பிரம்மாவுக்கு ஸமதையானவன். இதனால் நான் தன்யனாக இருக்கிறேன். தேவர்கள் எல்லோராலும் வணங்கப்படுகிறேன். ஆனாலும் ……”

ததாபி‘ என்று ச்லோகத்தில் வருவதற்கு ‘ஆனாலும்’ என்று அர்த்தம். தன்னுடைய உயர்வுகளையெல்லாம் பற்றி சாஸ்தா சொல்லிவிட்டு ‘ஆனாலும்’ போடுகிறாரென்பதால் இனிமேல் அவருடைய விசாரத்தின் காரணம் வரப்போகிறது என்று புரிகிறதல்லவா? இதிலேயே தாதா சாரியாருக்கு சிவ ஸம்பந்தமான விஷயங்களில் அபிப்ராயமில்லை என்பதும் தெரியவரும்!

‘ஆனாலும்’ போட்ட சாஸ்தா மேலே என்ன சொல்கிறார்?

“ஆனாலும் நான் சிவனுக்கும் பிள்ளை” – “ததாபி பூதேச ஸுதோஹம்“. சிவனுக்கு எத்தனையோ பேர். நல்ல நல்ல பேராக சிவன், ஈஸ்வரன், சம்பு, பசுபதி, ஸாம்பன், நடராஜா, தக்ஷிணாமூர்த்தி என்று எத்தனையோ இருக்க, ‘பூதேசன்’ என்ற பேரே ச்லோகத்தில் கொடுத்திருக்கிறது! பூதக்கூட்டங்களின் தலைவன் என்று ஈசவரனைச் சொல்லி, ‘அப்படிப்பட்டவனின் பிள்ளையாகவும் நான் இருக்கிறேனே!’ என்று ஐயப்ப ஸ்வாமி அங்கலாய்த்துக் கொள்கிறமாதிரி ச்லோக வாக்யம் போகிறது.

பூதங்களையும் அடக்கி அவற்றுக்குத் தலைவராக ஒருவர் இருக்கிறாரென்றால் உண்மையில் அதுவும் அவருடைய உயர்ந்த ப்ரபுத்வ சக்தியை, அதிகார சக்தியைக் காட்டி அவருக்குப் பெருமை தருவதுதான். பரமேச்வரன் ஸத்துக்களை பூதங்கள் ஹிம்ஸை செய்யாமல் அவற்றை அடக்கி வைத்து லோக ரக்ஷணம் செய்கிறவர்தானேயன்றி அவற்றை இஷ்டப்படி செய்யுமாறு அவிழ்த்துவிடுகிறவரில்லை. நம்மைக் கெட்ட சக்திகள் தாக்காதபடி அவர் பிடித்து வைத்துக்கொண்டு அடக்கி அதிகாரம் செய்கிறாரென்பதைத்தான் அவர் பூதேசராக இருப்பது காட்டுகிறது.

பூதேசனாகிய பரமேச்வரனுக்கே மஹாதேவன் என்றும் பெயர். தேவர்களிலெல்லாம் பெரியவர் அவர். தன்னுடைய மூன்று பிள்ளைகளில் ஒரு பிள்ளையை, ஸுப்ரஹ்மண்ய ஸ்வாமியை, தேவ ஸேனைகளுக்கெல்லாம் அதிபதியாக நியமித்தார். பூதப்படைகளை இரண்டாகப் பிரித்து ஒரு கணத்தின் அதிபதியாக கணபதியை வைத்தார். “பூதகணாதி ஸேவிதம்” என்று அவரை ஸ்தோத்திரிக்கிறோம். பூத கணங்களிலேயே இன்னொரு பகுதிக்கு ஐயப்ப சாஸ்தாவை அதிபதியாக நியமித்தார். மலையாள தேசத்தில் ஐயப்பனை ‘பூதநாதன்’ என்றும் சொல்வார்கள்.

எளிதில் அடங்காத பூதப்படைகளை அடக்கி வைப்பது சாஸ்தாவுக்குப் பெருமை தருகிற விஷயந்தான். உக்ர குணமுடைய க்ஷூத்ர (சில்லுண்டி) தேவதைகள் ஊருக்குள் போய் உத்பாதம் விளைவிக்காதபடி அவற்றை அடக்கித் தம்மிடம் வைத்துக்கொண்டு க்ராம எல்லையில் காவல் தெய்வமாக உள்ள சாஸ்தா பெருமிதப்பட வேண்டிய லோகோபகாரம்தான் செய்கிறார். ஆனால் சிவ சம்பந்தமான விஷயங்களில் தாதாசாரியாருக்கு அபிப்ராயமில்லாததால் இதுதான் சாஸ்தா தீர்க்கசிந்தனையில் மூக்கில் விரலை வைத்திருப்பதற்குக் காரணம் என்று ச்லோகம் பண்ணி முடித்துவிட்டார்: “மிகவும் உயர்வுக்குக் காரணமாக, நான் விஷ்ணு புத்ரனாயிருந்து, பிரம்மாவுக்கு ஸமானனாயிருந்தாலும், தேவ ஸமூஹத்தினரால் போற்றப் படுபவனாயிருந்தும்கூட பூதத் தலைவனின் ஸுதனாகவும் இருக்க நேர்ந்துவிட்டதால் எப்போதும் பூதகணங்களால் சூழப்பட்டவனாக இருக்கிறேனே!” – ஏதைர் பூதைர் வ்ருத: என்று ச்லோகத்தில் வருவதற்கு ‘இந்த பூதங்களால் சூழப்பட்டிருக்கிறேன்’ என்று அர்த்தம். ‘இப்படி இருக்கும்படியாகி விட்டதே என்றுதான் சாஸ்தா மூக்கிலே விரலை வைத்துக்கொண்டு விசாரத்துடன் சிந்திக்கிறார்: சிந்தயதீஹ சாஸ்தா‘ என்று தாதாசாரியார் முடித்துவிட்டார்.

ஆனால் சாஸ்தா பிம்பம் அதைக்கேட்டு மூக்கின் மேல் வைத்திருந்த விரலை எடுத்துவிடவில்லை. ஏனென்றால், நாம் ஆலோசனை பண்ணிப் புரிந்துகொண்ட மாதிரி, பூதங்கள் சூழக் காவல் தெய்வமாக இருந்துகொண்டு ஒரு க்ராமத்தைக் காப்பாற்றிக் கொடுப்பது சாஸ்தாவின் பெருமைக்குத்தான் காரணமே தவிர விசார யோசனைக்குக் காரணமாகாது.

சாஸ்தா விக்ரஹம் தாதாசாரியார் சொன்ன காரணத்துக்கு விரலை எடுக்காமலிருந்தவுடன் ராஜா அப்பைய தீக்ஷிதரைப் பார்த்தார். அவருக்குக் காரணம் ஸ்புரித்தது. உடனே ச்லோக ரூபமாக அதைத் தெரிவித்தார். தாதாசாரியார் சொன்ன மாதிரியே இவரும் சாஸ்தாவின் வசனமாகவே ஆரம்பித்துச் சொன்னார்:

அம்பேதி கௌரீம் அஹம் ஆஹ்வயாமி

பத்ந்ய பிதுர் – மாதர ஏவ ஸர்வா: |

கதம் நு லக்ஷ்மீம் இதி சிந்தயந்தம்

சாஸ்தாரம் ஈடே ஸகலார்த்த ஸித்த்யை ||

சாஸ்தா விசாரப்பட்டுக் கொண்டு, ‘இதென்னடா, இதற்கு வழிகாண முடியாமலிருக்கிறதே!’ என்று மூக்கிலே விரலை வைத்து யோசித்துக் கொண்டு என்ன சொன்னதாக தீக்ஷிதர் சொல்கிறார்?

“கௌரியான சிவ பத்னியை நான் அம்மா என்று கூப்பிடுகிறேன், “அம்பேதி”: “அம்பா இதி”: அம்மா என்று. “ஆஹ்வயாமி”: அழைக்கிறேன். விஷ்ணு போட்டுக்கொண்ட மோஹினி ரூபம்தான் வாஸ்தவத்தில் என்னைப் பெற்றெடுத்த தாயாரானாலும், தகப்பனாருக்கு எத்தனை பத்னிகள் இருந்தாலும் அத்தனை பேரும் மாத்ரு ஸ்தானம் என்பதால் என் தகப்பனாரான ஈஸ்வரனுக்குப் பத்னியான பராசக்தியையும் நான் தாயாராகக் கொள்ளுகிறேன்.” விக்னேச்வரர் இப்படித்தானே கங்கையைத் தாயாராகக் கருதினார்?

“ஈச்வரனை அப்பாவாகவும், மஹாவிஷ்ணுவை அம்மாவாகவும் கொண்ட எனக்குப் பராசக்தி என்ன உறவுமுறை என்று யோசித்துக் குழம்பவேண்டிய அவசியமில்லை. பத்ந்ய பிதுர் மாதா ஏவ ஸர்வா: – பிதாவின் பத்னிகள் எல்லாருமே தாயார்கள்தான். அதனால் பராசக்தியிடம் அம்மா என்று உறவு பாராட்டுகிறேன் : அம்பேதி கௌரீம் அஹம் ஆஹ்வயாமி.

ஆனால் என்ன உறவுமுறை சொல்வது என்று புரியாமல் யோசித்துக் குழம்பும்படியாக இன்னொன்று இருக்கிறது. அது என்ன? யாருக்கு உறவுமுறை வகுத்துக் கூற முடியவில்லை?

லக்ஷ்மீம்

லக்ஷ்மிக்குத்தான்.

“லக்ஷ்மியை எப்படி அழைப்பேன்? கதம் நு லக்ஷ்மீம்?

இதுதான் சாஸ்தாவின் விசாரம். மூக்கில் விரலை வைத்துக் கொண்டு, ‘இதற்கு எப்படியடா ‘ஆன்ஸர்’ கண்டுபிடிப்பது?’ என்று அவர் யோசிப்பது எதற்கென்றால், தாம் லக்ஷ்மியை என்ன உறவுமுறை சொல்லிக் கூப்பிடுவது என்பது புரியாததால்தான்.

நமக்கும் புரியத்தானே இல்லை?

ஏன்?

லக்ஷ்மி யார்? மஹாவிஷ்ணுவின் பத்னி. மஹாவிஷ்ணு யார்? அவர் சாஸ்தாவுக்கு என்ன ஆகணும்? அம்மா ஆகணும். ஸாக்ஷாத் மஹாவிஷ்ணுதான் மோஹினியாகிப் பரமேச்வரனிடத்தில் இவரைப் பெற்றார். அதனால்தானே இவருக்கு ஹரிஹரபுத்ரன் என்று பேர்? ஸரி, அப்படியானால் லக்ஷ்மி இவருக்கு என்ன ஆகணும்?

அம்மாவின் பத்னி ஆகணும்.

வேடிக்கை என்றேனே அது இதுதான்! அப்பாவின் பத்னி, சித்தப்பாவின் பத்னி, மாமாவின் பத்னி, அண்ணாவின் பத்னி என்றெல்லாந்தான் கேள்விப்பட்டிருக்கிறோம். இவர்களை அம்மா, சித்தி, மாமி, மன்னி என்பது போல உறவு சொல்லிக் கூப்பிடுகிறோம். அம்மாவின் பத்னி என்று எங்கேயாவது யாருக்காவது ஒரு உறவு கேள்விப்பட்டதுண்டா? இந்த சாஸ்தா ஒருத்தருக்குத்தான் இப்படி உலகத்திலேயே இல்லாத விசித்தரமாக அம்மாவுக்குப் பத்னி என்று லக்ஷ்மி இருக்கிறாள்! அவளை இவர் என்ன உறவு சொல்லிக் கூப்பிடுவார்?

கதம் நு லக்ஷ்மீம்?” – லக்ஷ்மியை என்னவென்று கூப்பிடுவேன்? ‘நு’ போட்டால் ஸந்தேஹக் குறி.

இதி சிந்தயந்தம் சாஸ்தாரம்” – என்றிப்படி விசாரப்பட்டுக் கொண்டிருக்கிற ஐயப்ப சாஸ்தாவை “ஈடே” – போற்றி வழிபடுகிறேன்.

ஸகலார்த்த ஸித்த்யை சாஸ்தாரம் ஈடே‘ என்று முன்பின்னாகச் சேர்த்து அர்த்தம் செய்துகொள்ள வேண்டும். ‘எல்லாவிதமான புருஷார்த்தங்களும் ஸித்திப்பதற்காக சாஸ்தாவைப் போற்றி வழிபடுகிறேன்’ என்று தீக்ஷிதர் முடித்தார்.

பிள்ளையார் ஸமாசாரத்தில் ஏகமாக ஐயப்பனை இழுத்து விட்டுவிட்டோமே என்று பார்த்தால், ‘எல்லாம் அதற்கும் இதற்கும் ரொம்ப ஸம்பந்தந்தான்’ என்று ஸமாதானம் பண்ணுகிற மாதிரி, பிள்ளையார் ச்லோகத்தில் ‘ஸர்வார்த்த ப்ரதிபாதன சதுர’ ராக அவரைச் சொல்லியிருக்கிறதென்றால் இங்கே சாஸ்தாவை ‘ஸகலார்த்த ஸித்தி’ தருபவராகச் சொல்லி இரண்டையும் சேர்த்து முடிச்சுப் போட்டிருக்கிறது! சாஸ்தா ச்லோகத்தைப் பண்ணினவருடைய வம்சத்தில் வந்தவர்தான் பிள்ளையார் ச்லோகத்தைப் பண்ணினவர்!

தீக்ஷிதர் ச்லோகத்தில் தெய்வ பேதம், அது உசத்தி – இது தாழ்த்தி என்கிற அபிப்ராயங்கள் எதுவுமில்லை. அம்பாளையும் லக்ஷ்மியையும் ஒருபோலச் சொல்லிருக்கிறார். அதோடு தீக்ஷிதர் ச்லோகத்தில் புத்தியை மட்டும் காட்டாமல், பக்தியையும் காட்டி ‘ஸகலார்த்த ஸித்திக்காக சாஸ்தாவை வழிபடுகிறேன்’ என்று சொல்லியிருக்கிறார். எதற்காக மூக்கில் விரலை வைத்துக்கொண்டிருக்கிறாரென்று ‘அர்த்தம்’ தெரியாதபோது, சகல ‘அர்த்தமும்’ ஸித்திப்பதற்காக அவரையே வேண்டிக்கொள்வதாகச் சொல்வது, அவர் க்ருபை இருந்தாலொழிய அவரைப் பற்றிய ரஹஸ்யத்தை நம் புத்தி சாதுர்யத்தால் மட்டும் கண்டுபிடித்துவிட முடியாது என்பதையும் பணிவோடு உணர்த்துகிறது.

இதெல்லாவற்றுக்கும் மேலாக, தீக்ஷிதர் காட்டியிருக்கிற காரணம்தானே நிஜமாகவே எந்த மேதாவியாலும் கண்டு பிடிக்க முடியாத புதிராக இருக்கிறது? அம்மாவுடைய பத்னி என்பது என்ன உறவு என்று எத்தனை யோசித்துப் பார்த்தாலும் பதில் கிடைக்குமா?

வாஸ்தவத்திலும், விடையில்லாத இந்தக் கேள்வி சாஸ்தாவுக்கு எழும்பித்தான் அவர் ஒரே விசாரமாக யோசித்துக்கொண்டு மூக்கிலே விரலுடன் ஸ்தபதிக்குக் காட்சி கொடுத்து ஸ்தபதி அப்படியே சிலை அடித்திருந்தார். ஆகையால் இப்போது தீக்ஷிதர் அந்த உண்மைக் காரணத்தைக் கண்டுபிடித்துச் சொன்னாரோ இல்லையோ, பிம்பம் மூக்கின் மேலிருந்த விரலை எடுத்துவிட்டு, எல்லா ஆலய சாஸ்தா மூர்த்திகளும் இருக்கிறமாதிரி கையை வைத்துக் கொண்டுவிட்டது!

ஒரு விக்ரஹம் ச்லோகம் கேட்டு மூக்கிலிருந்து விரலை எடுத்தது என்றால், கூடியிருந்தவர்களெல்லாம், ‘இப்படியும் ஒரு அதிசயமுண்டா?’ என்று மூக்கின்மேல் விரலை வைத்துக்கொண்டிருப்பார்கள்!

த்வைமாதுரர் என்று பிள்ளையாரைச் சொல்லப்போக அவருடைய ஒரு சஹோதரர் ஷாண்மாதுரராயிருப்பது நினைவு வந்து, அப்படியே இன்னொரு ஸஹோதரரான சாஸ்தாவுக்கு மாதாவின் பத்னி என்று ஒரு உறவு இருந்ததில் கொண்டு விட்டுவிட்டது!

பரமேச்வரனின் மூத்த புத்திரரை நினைக்கும்போது மூன்று பிள்ளைகளையும் ஸ்மரிக்க நேர்ந்தது விசேஷம்.

Previous page in  தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is ஆறு தாயார்க்காரர்!
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is  விக்னேஸ்வரர் ரக்ஷிக்கட்டும்!
Next
htmltitle
UPDATE on 13 July 2017:

Thanks to the devotees at dheivathinkural.wordpress.com, many corrections have been incorporated on these pages. If you find an error, please help us by reporting it