புரட்சி மதங்கள் : தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

எங்கேயும் எப்போதும் ஜன ஸமூஹத்தில் ஒரு மூலையில் சில பேருக்காவது, ‘பழசையெல்லாம் உடைத்துப் போட்டு விட்டு எல்லாம் புதிசாகப் பண்ணிப் பார்த்தால் என்ன?’ என்ற எண்ணம் — ‘புரட்சி மனப்பான்மை’ என்று தற்காலத்தில் கொண்டாடிச் சொல்கிறார்களே, அந்தப் போக்கு — இல்லாமலிருக்காது. ஆனாலும் வஜ்ரம் பாய்ந்த tradition-ஐ (மரபைச்) சட்டென்று உடைத்துக் கொண்டு கிளம்புவதற்குப் பூர்வ காலங்களில் ரொம்பவும் தயங்கியிருப்பார்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில் யாராவது ஒருத்தர், இரண்டு பேர் துணிச்சலாகப் பிய்த்துக்கொண்டு கிளம்பிவிட்டால், அப்புறம், ஒரு ஏரிக்கரையில் சின்னதாக ஒன்று இரண்டு ஓட்டை விட்டாலும் அதுவே அரித்து அரித்துப் பெரிசாக உடைப்பெடுத்துக் கொள்வது போல, அந்த ஒன்று-இரண்டு புரட்சிக்காரர்களை அநுஸரித்துக்கொண்டு பல பேர் புறப்படுவார்கள்.

இப்படித்தான் அப்போது, ‘வேதம் என்ன? எங்கள் சாஸ்த்ரம்தான் பகவான் ஏற்படுத்தியது’ என்று சிலபேர் புறப்பட்டபோது, இன்னம் சிலர், ‘வேதம் என்ன? பகவானும் தான் என்ன? வேதமும் வேண்டாம், பகவானும் வேண்டாம். வேதம், பகவான் இரண்டையும் தள்ளிவிட்ட எங்கள் சாஸ்த்ரம் தான் ஸரியானது’ என்று முழுப் புரட்சியாகவே புது மதங்கள் ஸ்தாபித்தார்கள்.

இப்படித் தோன்றிய பௌத்தம், ஜைனம், சார்வாகம் ஆகிய மூன்றைச் சொன்னேன். இவற்றில் சார்வாகத்திற்கு அதிகம் ஆள் சேரவில்லை. என்ன இருந்தாலும், ‘ஸ்வாமியே கிடையாது, உடம்பின் ஸுகத்துக்கு மேலே எதுவும் கிடையாது, மதாசரணை எதுவுமே வேண்டியதில்லை’ என்றால் அதைப் பெரும்பாலான ஜனங்களால் துணிந்து ஏற்றுக் கொள்ள முடியாது. அதனால் இந்த அப்பட்ட லோகாயதத்துக்குப் பெரிசாக ஆதரவு கிடைக்கவில்லை. கொஞ்சமே கிடைத்தது. பௌத்த-ஜைன மதங்களுக்குத்தான் நிறைய ஆதரவு இருந்தது. ராஜ குடும்பத்தில் பிறந்தும் துறவிகளாகப் போய்ப் பிரசாரம் செய்த புத்தருக்கும் ஜினருக்கும் இருந்த ஆகர்ஷணம், அப்புறமும் அந்த மதங்களில் வரிசையாகப் பல அறிவாளிகள் தோன்றி நூல்களைக் கொடுத்தது எல்லாவற்றுக்கும் மேலாக ராஜாக்களின் பேராதரவு அந்த மதங்களுக்கு இருந்தது — எல்லாம் சேர்ந்து அவற்றுக்கு நல்ல வளர்ச்சியைக் கொடுத்தது. ஸம்ஸ்க்ருதத்தைவிட்டு, ஸாதாரண ஜனங்களுடைய பேச்சு மொழியான ப்ராக்ருத பாஷையில் மதப் புஸ்தங்களை பௌத்தர் கொடுத்ததும், சமணர்கள் எல்லா ஜனங்களுக்கும் பள்ளிக்கூடம் வைத்துத் தாய்மொழியில் போதனை கொடுத்ததும் அவற்றின் பாபுலாரிடிக்கு ஒரு காரணமாயிற்று. அந்த மத உபதேசங்கள் என்ன என்று ஜனங்கள் அவ்வளவாகக் கவலைப்படவில்லை. அவற்றை நடத்திக் காட்டவும் விசேஷமாகப் பாடுபடவில்லை. இருந்தாலும் தங்களுக்கும் பொதுவாக மத சாஸ்த்ரம் இருக்கிறது, பள்ளிகள் இருக்கின்றன என்ற பெருமைக்காக அந்த மதங்களில் சேர்ந்தார்கள். அவர்கள் விட்டுப் போகமால் மேலும் மேலும் சேர வசதியாகப் பிற்காலத்தில் அந்த மதங்களில் மூர்த்தி வழிபாடும் வைக்கப்பட்டு விட்டதைச் சொன்னேன். பொது ஜனங்களுக்கு இது இருந்துவிட்டால் போதும்.

இவ்விரண்டில் ஜைனம் ஆசார்யாள் நாளில் அவ்வளவு ஓங்கி இருக்கவில்லையென்று தெரிகிறது. ஏனென்றால் முன்னேயே சொன்னாற்போல், அவருடைய புஸ்தகங்களில் ஜைன மத கண்டனம் ரொம்பவும் கொஞ்சமாகவே இருக்கிறது. பௌத்தம் பற்றி அங்கங்கே கண்டனம் இருந்தாலும் அதுவுங்கூடக் குறைச்சல்தான். மீமாம்ஸா கண்டனம்தான் அதிகம். காரணம் பிற்பாடு பார்க்கலாம்.

Previous page in  தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is முழுதும் வேத ஸம்மதமானாலே வைதிகம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is  அவதாரம் தோன்ற அவசியச் சூழ்நிலை
Next