எழுபத்திரண்டு மதங்கள் : தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

எத்தனை ஆராய்ச்சி செய்து பார்த்தும் அந்த எழுபத்திரண்டில் பலவற்றுக்குப் பெயர்கூடத் தெரியவில்லை! இப்படிச் சொன்னவுடனேயே, ‘பார்த்தேளா? இந்த மாதிரிதான் ஆதாரம் காட்டமுடியாமலே கதை கட்டுவது நம் வழக்கம். இப்படிப் பண்ணித்தான் ‘ஹிஸ்டரி’ என்பதேயில்லாமல் எல்லாம் ‘மித்’ (myth) -ஆக எழுதிவைத்துக் கொண்டிருக்கிறோம்’ என்று ஆக்ஷேபிக்க வேண்டாம்! எழுபத்திரண்டு மதத்திற்கும் பெயர் தெரியாவிட்டாலும், நாற்பது நாற்பத்தைந்தை நன்றாகக் கண்டுபிடிக்க முடிகிறது. இவற்றில் பலவற்றுக்கு ஆதாரப் புஸ்தகங்களும் ஏராளமாக உள்ளன. பல ஒரு காலத்தில் அநுஷ்டானத்தில் இருந்திருக்கின்றன என்பதற்கும் அழுத்தமாக ‘எவிடென்ஸ்’ இருக்கிறது. இவற்றில் மீமாம்ஸை, ந்யாயம், வைசேஷிகம் போன்ற சில நம்முடைய வேதாந்த மதத்திற்கே ஓரளவு வரை ஆதரவாக இருப்பதால் இன்றைக்கும் பாடசாலைகளில் சொல்லிக்கொடுத்துவருகிறோம். ‘எழுபத்திரண்டு மதம்’ என்ற பேச்சு ரொம்ப காலமாகத் தொடர்ந்து இருந்து வந்திருக்கிறது. ஆகவே, நமக்கு அதில் சுமார் பாதி, அல்லது அதற்கு மேலேயே தெரிவதால், தெரியாமற்போன பாக்கியும் ஒரு காலத்தில் இருந்திருக்கவேண்டும்; இதில் கட்டுக்கதை ஒன்றுமில்லை, என்று அநுமானிக்க முடிகிறது.

ஆசாரியாளின் ஸமகாலத்தியவை என்றே சொல்லக் கூடிய அவரது சரித்ர புஸ்தகங்களில் அநேக மதங்களின் பெயர்களைச் சொல்லி அவற்றையெல்லாம் அவர் நிராகரணம் செய்தார் (நிராகரித்தார்) என்று விவரித்திருக்கிறது. சிவ மதங்கள், விஷ்ணு மதங்கள் மாதிரி ப்ரஹ்மாவையே குறித்ததாக ‘ஹைரண்யகர்ப்ப மதம்’ என்றுகூட இருந்திருக்கிறது! இந்த்ர மதம், குபேர மதம், இன்னும் மன்மத மதம், யம மதம் என்றெல்லாங்கூட இவர்கள் ஒவ்வொருவரையும் முழு முதல் தெய்வமாக வைத்து மதங்கள் இருந்திருக்கின்றன. இப்படியே பித்ருக்களைக் குறித்து மதம், பூத வேதாளங்களைக் குறித்துக்கூட மதம், குணங்களே கடவுள் என்று வழிபடுவது, காலமே கடவுள் என்று வழிபடுவது-என்றெல்லாம் விசித்ரமாக அந்தப் புஸ்தகங்களில் பார்க்கிறோம்.

அதிக விவரம் தெரியாத இவை தவிர, இன்னதுதான் ஸித்தாந்தம் என்று பூர்ணமாகத் தெரிந்த ஒரு இருபது, இருபத்தைந்து மதங்கள் இருந்திருக்கின்றன. என்னென்ன என்றால்: ஆசார்யாள் புது ஜீவனோடு ஸ்தாபித்த வேதாந்தம் தவிர ஷட்தர்சனம் என்ற ஆறில் மீதியுள்ள ஸாங்க்யம், யோகம், ந்யாயம், வைசேஷிகம், மீமாம்ஸை என்ற ஐந்து; பாசுபதம், காலாமுகம், பாகவத-பாஞ்சராத்ரம் (இந்த இரண்டையும் ஒன்றுபடுத்தியே ஆசார்ய பாஷ்யங்களில் சொல்லியிருக்கும்) ஆகிய நாலு; தப்பான முறையில் அவைதிகமாகப் பின்பற்றப்பட்ட காணபத்யம், கௌமாரம், சைவம், சாக்தம், வைஷ்ணவம், ஸெளரம் என்ற ஆறு (இந்த ஆறையே வைதிகமான ஷண்மதங்களாக ஆசார்யாள் ஸ்தாபித்தார்) ; வேத ஸம்பந்தமே கூடாது என்று அடியோடு ஆக்ஷேபித்து எழும்பிய பௌத்தம், ஜைனம்; அப்பட்டமான நாஸ்திகமாக, ஆத்ம விஷயமாகவே போகாமல் முழு ‘மெடீரியலிஸ’மாக இருந்த சார்வாகம் என்ற லோகாயத மதம் (பார்ஹஸ்பதம் என்று சொன்னேனே, அது) -என்று, ஒரு இருபது, இருபத்தைந்து மதங்கள் இருந்திருக்கின்றன. எல்லாவற்றையும் கூட்டினால் நாற்பது, நாற்பத்தைந்து தேறலாம். (எழுபத்திரண்டில்) பாக்கியுள்ள சுமார் முப்பதுக்குப் பேர்கூடத் தெரியவில்லை! பேர் தெரிந்தவற்றில் சிலவற்றுக்கு மூலப் புஸ்தகங்கள் கிடைக்கவில்லை. அதெல்லாம் எப்படியானாலும், அந்த எழுபத்திரண்டில் எதுவுமே இன்று நம் தேசத்தில் அநுஷ்டானத்தில் இல்லை!

பௌத்தம் வெளி தேசங்களில் பரவி உலகத்தின் பெரிய மதங்களில் ஒன்றாக இருந்தபோதிலும் அது பிறந்த நாடான இந்தியாவில் இல்லை. ஜைனம் கொஞ்சம் கொஞ்சம் இருந்தாலும் நிறைய ஹிந்துமத வழிபாட்டு அம்சங்களை எடுத்துக்கொண்ட மதமாகவே இருக்கிறது. ‘ஜைன்’ என்று பேர் போட்டுக்கொள்ளும் பல பேர் ஹிந்துக்களோடு கொள்வினை-கொடுப்பனை செய்துகொள்பவராக இருக்கிறார்கள். ஆசார்ய பாஷ்யங்களில் ஜைனம் விசேஷமாக அலசப்படவில்லை. இன்னும் சொன்னால் ஆச்சர்மாயிருக்கும்-பௌத்தமத கண்டனம்கூட (ஆசார்ய பாஷ்யங்களில்) அதிகம் இராது. இந்த விஷயத்தைப் பிற்பாடு பார்க்கலாம்.

இப்போது நம் தேசத்தில் சைவமாகவும் வைஷ்ணவமாகவும் பல மதங்கள் இருக்கின்றனவென்றாலும், ஆசார்யாள் அவர் காலத்தில் கண்டனம் செய்த சைவ-வைஷ்ணவ மதங்கள் வேறே, தற்போது இருப்பவை வேறே. அவர் கண்டனம் செய்து, வழக்கற்றுப் போய்விட்ட மதங்களில் சில அம்சங்களை மாத்திரம் பிற்கால சைவ-வைஷ்ணவ மத ஸ்தாபகர்கள் எடுத்துக்கொண்டிருக்கலாம். ராமாநுஜாசார்யாரின் வைஷ்ணவத்தில் ஆசார்யாள் கண்டித்த பாஞ்சராத்ரக் கொள்கைகள் கலந்திருக்கின்றன. ஸித்தாந்த சைவம் (ஆசார்யாள் கண்டித்த) பாசுபதத்தை அங்கங்கே தழுவிக்கொண்டு போகலாம். எப்படியானாலும், இந்த மதங்களெல்லாம் ஆசார்யாள் அவர் காலத்தில் கண்டனம் செய்த அந்த மத ரூபங்களிலிருந்து மாறுபட்டு, அவருக்குப் பிற்காலத்தில் வந்த மத ஸ்தாபகர்கள் கொடுத்த புது ரூபங்களில்தான் இருந்து வருகின்றன.

ந்யாயம், மீமாம்ஸை போன்றவற்றுக்கு நிறையப் புஸ்தகம் இருந்து, இவற்றைப் படிப்பவர்களும் இன்றுவரை இருந்து வந்தாலும், ‘ந்யாய மதஸ்தர்’, ‘மீமாம்ஸை மதஸ்தர்’ என்றெல்லாம் அவற்றையே மதமாக எடுத்துக் கொண்டு அநுஸரிப்பதென்பது ஆசார்யாளுக்கு அப்புறம் இல்லை. இன்றைக்கு யோக மார்க்கங்கள் நிறையத் தோன்றிப் பல பேர் அவற்றின்படிப் பண்ணிப் பார்த்தாலும்கூடத் தங்களை ஹிந்துமதத்திலிருந்து பிரித்து ‘யோக மதஸ்தர்’ என்று சொல்லிக் கொள்ளவில்லை அல்லவா?

எழுபத்திரண்டில் பல, பேர்கூடத் தெரியாமல் ஓடிவிட்டிருக்கின்றன என்றால் ஆசார்யாள்தான் ஓட்டியிருக்கிறார்! சிலவற்றைப் புஸ்தகங்களிலிருந்து தெரிந்துகொள்கிறோம். சில, தேசாந்தரங்களில் வழக்கத்தில் இருப்பதால் தெரிகிறது. இடிந்த சிலைகள், மண்டபங்களிலிருந்தும், “ஓஹோ! முன்னே இன்ன மதம் இருந்திருக்கிறது” என்று கண்டுபிடிக்கிறோம். ஆசார்யாள் ஒருத்தர் மட்டும் வந்திருக்காவிட்டால் அவற்றைக் கண்டுபிடிக்க இத்தனை கஷ்டப்படவே வேண்டாம்! ஹிந்து மதத்தைத்தான் தேடிக் கண்டுபிடிக்க நேர்ந்திருக்கும்!

Previous page in  தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is சங்கர 'விஜயம்'
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is  ஆசார்யாளின் ஆச்சரிய ஸாதனை
Next