Page load depends on your network speed. Thank you for your patience. You may also report the error.

Loading...

கண்ணன் செய்த புனருத்தாரணம் : தெய்வத்தின் குரல் (ஐந்தாம் பகுதி)

ஸூர்யனுக்குத் தாம் உபதேசித்து, அப்புறம் இக்ஷ்வாகு பரம்பரையில் தொடர்ந்து உபதேசிக்கப்பட்டு வந்த யோகம் காலக்ரமத்தில் சைதில்யம் அடைந்துவிட்டது (சிதிலமாகி விட்டது) என்று பகவான் அர்ஜுனனிடம் சொல்லி, “அதை பக்தனும் ஸகாவுமான உனக்கு உபதேசித்துப் புத்துயிர் கொடுக்கவே நான் வந்திருக்கிறேன்” என்று கீதோபதேசம் செய்தார். அர்ஜுனனைப் சாக்காக வைத்து லோகம் முழுவதற்கும் உபதேசம் செய்தார்.

இமம் விவஸ்வதே யோகம் ப்ரோக்தவான்-அஹம்-அவ்யயம் |

விவஸ்வான் மநவே ப்ராஹ மநுரிக்ஷ்வாகவே (அ)ப்ரவீத் ||

ஏவம் பரம்பரா ப்ராப்தம் இமம் ராஜர்ஷயோ விது: |

ஸ காலேநேஹ மஹதா யோகோ நஷ்ட: பரந்தப ||

ஸ ஏவாயம் மயா தே (அ)த்ய யோக: ப்ரோக்த: புராதந: |

பக்தோ (அ)ஸி மே ஸகா சேதி ரஹஸ்யம் ஹ்யேதத்-உத்தமம் || (IV 1-3)

[“இந்த அழிவில்லாத யோகத்தை நான் ஸூர்யனுக்கு உபதேசித்தேன். ஸூர்யன் மநுவுக்கு உபதேசித்தான். மநு இக்ஷ்வாகுவுக்கு உபதேசித்தான்.
இவ்விதம் வம்ச பரம்பரையாக வந்த இதனை ராஜரிஷிகள் அறிந்திருந்தனர். எதிரிகளை தபிக்கச் செய்பவனே (அர்ஜுனா)! நெடுங்காலப் போக்கில் அந்த யோகம் இவ்வுலகில் நஷ்டமடைந்தது (நலிவுற்றது) . நீ எனக்கு பக்தன்; தோழனாகவும் இருக்கிறாய்! அப்புராதன யோகமே இன்று என்னால் உனக்கு எடுத்துரைக்கப்பட்டது. இது உத்தமமான ரஹஸ்யம் அன்றோ!”]

பகவான் இங்கே சொல்லும் யோகம் கர்மயோகம் அதைத்தான் பஹுகாலமாக ராஜரிஷிகள் பரிபாலித்து வந்து, க்ருஷ்ணர் காலத்தில் அது சைதில்யமாயிருந்ததால் அவர் மறுபடி ராஜகுலத்தைச் சேர்ந்த அர்ஜுனனுக்கு அதை உபதேசித்துப் புனருத்தாரணம் செய்வதாகச் சொல்கிறார். கீதையின் immediate context-ஐப் பார்த்தால் இப்படித் தெரியும். ஆனால் இதற்கு முதலத்யாய ஆரம்பத்தில் — இங்கே கர்ம யோகத்தைத் தாம் ஆதியில் ஸூர்யனுக்கு உபதேசித்ததாகச் சொன்னமாதிரியே — “ஞான யோகம், கர்மயோகம் என்ற இரண்டையும் நான் முறையே ஸாங்க்யர்கள் என்கிற ஸந்நியாஸிகளுக்கும், யோகிகள் என்கிற நிஷ்காம்ய கர்மமார்க்கிகளுக்கும் உபதேசித்திருக்கிறேன்” என்றும் சொல்லியிருக்கிறார்.

லோகே (அ)ஸ்மிந் த்வி-விதா நிஷ்டா புரா ப்ரோக்தா மயா (அ) நக |

ஞாநயோகேந ஸாங்க்யாநாம் கர்மயோகேந யோகிநாம் || (III-3)

ஆகையால் ப்ரவ்ருத்திக்காரர்களுக்கான கர்ம யோகத்தை மட்டுமின்றி, நிவ்ருத்திக்காரர்களுக்கான ஞான யேகத்தையும் புனருத்தாரணம் செய்யத்தான் க்ருஷ்ணர் அவதாரம் எடுத்திருக்கிறாரென்று தெளிவாகிறது. இவ்விரண்டு யோகங்களென்றால் ‘எல்லா யோகமும் அடங்கலாக’ என்றே அர்த்தம்! எதுவானாலும் ப்ரவருத்தி நிவ்ருத்தி என்ற இரண்டிலொன்றின் கீழ் வந்துதானே ஆக வேண்டும்

இக்ஷ்வாகுவிலிருந்து வழிவழி வந்ததாக அவர் சொன்ன அந்த ராஜரிஷிகள்கூட ப்ரவ்ருத்தி தர்மத்தை கர்ம யோகமாக மெருகேற்றி உபதேசித்தபோது அது எதிலே கொண்டு சேர்த்ததோ அந்த நிவ்ருத்தி தர்மத்தை, அதாவது ஞான யோகத்தைப் பற்றியும் ஓரளவாவது உபதேசிக்காமல் மொட்டையாக நிறுத்தியிருக்கமுடியாது. அவர்கள் ஸமாசாரம் எப்படி வேண்டுமானால் இருக்கட்டும். பகவான் (க்ருஷ்ணர்) நிச்சயம் ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி இரண்டையும் தான் புது ஜீவன் உண்டாக்கி உத்தரணம் பண்ணினார். கீதையில் அவர் ஸகல யோகங்களையும்தானே சொல்லிக் கொண்டு போயிருக்கிறார்? ஆனாலும் அவரது உபதேசம் ஆரம்பிப்பதும் ஞானிகளுக்கேயான ஸாங்க்ய யோகம், முடிவதும் மோக்ஷ ஸந்நியாஸ யோகம் என்பதிலிருந்து ஞானத்தினால் அத்வைத ஸித்தி பெறும் நிவ்ருத்தி தர்மத்தைத்தான் அவர் பரம லக்ஷ்யமாக நிலைநாட்டுகிறாரென்று தெரிகிறது. கீதை கர்ம யோகத்தைத்தான் சொல்கிறது என்று சில பேர் நினைக்கிற அளவுக்கு அநேக இடங்களில் அதை பகவான் ச்லாகித்து, அழுத்தம் கொடுத்துச் சொல்லியிருக்கிறாரென்றால் அதற்குக் காரணம் கீதோபதேசத்தை அவரிடமிருந்து பெற்றுக்கொண்ட நேர் சிஷ்யனான அர்ஜுனன் கர்ம யோகத்திற்கே அதிகாரியாக இருந்ததுதான்.

இப்படி, ப்ரவ்ருத்தி நிவ்ருத்தி ஆகிய இரண்டு மார்க்கங்களையும் சீர்ப்படுத்தி்க் கொடுத்து, முடிவாக ஞான மோக்ஷத்தை நிலைநாட்டி, ஸநாதனமான வைதிக தர்மத்தை ஸம்ஸ்தாபனம் செய்யவே க்ருஷ்ணாவதாரம் ஏற்பட்டது. கீதாபாஷ்ய உபோத்காதத்தில் (முகவுரையில்) ஆசார்யாள் இப்படித் தெளிவாக்கியிருக்கிறார்.

தாம் ஸூர்யனுக்கு உபதேசித்து, பிறகு ராஜரிஷிகள் வழியாகப் பலகாலம் விளங்கிவந்த கர்மயோகம் தம் நாளில் நஷ்டப்பட்டுப் போனதையே க்ருஷ்ண பரமாத்மா வ்யக்தமாகச் சொன்னபோதிலும், அவருடைய காலத்தில் எல்லா யோகங்களும், எல்லா மார்க்கங்களுமே பழுதாகித்தானிருந்தன என்றும் கீதையிலிருந்து தெரிகிறது. பிற்பாடு கலியில் ஒரேயடியாக சைதில்யம் அடைந்தாற்போல் ஆகாவிட்டாலும், இந்த யுகத்தைத் தொட்டுக்கொண்டு அவர் அவதாரம் செய்த த்வாபராந்தரத்திலும் பொதுப்படையாக ஓரளவு நலிவு எல்லா மார்க்கத்திலும் ஏற்பட்டதாகத் தெரிகிறது. கர்மா செய்யும் இந்த்ரியங்களை சும்மா வெளிக்கு மட்டும் அடக்கின மாதிரி இருந்துகொண்டு, உள்ளுக்குள்ளே இந்த்ரிய விஷயங்களான சிற்றின்பங்களையே நினைத்துக் கொண்டிருப்பவன் வெறும் மித்யாசாரன், அதாவது மோசக்காரன், ‘ஹிபாக்ரிட்’ என்று ஒரு இடத்திலே திட்டுகிறார்1. இது நிவ்ருத்தியில், அதாவது ஞான மார்க்கத்தில், போன மாதிரி இருந்துகொண்டே அந்த ஐடியலிலிருந்து நழுவிப்போன வாய் வேதாந்திகள் அந்த நாளிலும் இருந்திருப்பதைக் காட்டுகிறது. இதற்கு முந்தி, தம்முடைய உபதேசத்தை ஆரம்பிக்கும் இரண்டாவது அத்யாயத்திலேயே, மீமாம்ஸகர்களைத் திட்டியிருக்கிறார்2. வேதத்தின் ஸாரமான தத்வார்த்தத்தை எடுத்துக் கொள்ளாமல், ஏதோ இலக்கண ரீதியில் மட்டும் அந்த வாக்கியங்களை அலசி வாதம் செய்து அதிலேயே பூரித்துப்போகிற ‘வேத வாதரதா:’ என்கிறார். இப்படி மீமாம்ஸகர்கள் அர்த்தம் பண்ணித்தான் வேதத்தின் ப்ரயோஜனமே அது கர்மாவில் மநுஷ்யனை ஏவுவதில்தான் இருக்கிறதே ஒழிய, ஞான விசாரமென்று கர்மாவை விட்டுவிட்டு ஸந்நியாஸியாகப் போகிறதில் இல்லை என்று நிர்ணயிப்பது. ஆசைப் பூர்த்திக்காகவே கர்மங்களைச் செய்யும் இவர்களை “காமாத்மா”க்கள் என்று வைகிறார். மோக்ஷமென்ற நித்யானந்தத்தை நாடாமல் தேவலோகம் என்ற கேளிக்கை உலகத்தையே நாடும் ‘ஸ்வர்க்கபர’ர்கள் தங்களுக்கு இந்த வழியில்தான் போகமும் ஐச்வர்யமும் கிடைப்பதால், வாஸ்தவத்தில் பிறவிச் சுழலிலேயே பிடித்துத் தள்ளுவதான இந்த விஸ்தாரமான சடங்குகளைப் பற்றிப் பிரமாதமாக, வசீகரமாக ப்ரஸங்கம் பண்ணுகிறவர்கள் — என்றெல்லாம் கண்டனம் செய்கிறார். புஷ்பாலங்காரம் செய்வதுபோல வார்த்தைகளை ஜோடித்தே ஜயிக்கிறார்கள் என்பதற்கு ‘புஷ்பிதாம் வாசம்’ என்கிறார். இங்கிலீஷிலும் Flowery language என்றுதான் சொல்கிறார்கள். இவர்களை அறிவில்லாத ‘அவிபச்சிதர்’கள் என்கிறார். கிருஷ்ணருடைய காலத்தில் கர்மயோகமும் கெட்டுப் போயிருந்ததை இது காட்டுகிறது. ‘பிற்காலத்தில் நஷ்டப்பட்டுப் போன யோகம்’ என்று பகவானே சொன்ன விஷயம்.

பக்தி மார்க்கத்திலும் தப்பான வழிகள் ஏற்பட்டதை முன்னேயே சொன்னேன். யக்ஷ ராக்ஷஸர், பூத ப்ரேதங்கள் வரை எல்லாவற்றையும் ரஜோ-தமோ குணக்காரர்கள் ராஜஸிகமாகவும் தாமஸிகமாகவும் வழிபட்டதைச் சொன்னேன்.

இப்படி எல்லா மார்க்கத்திலும் ஏற்பட்டிருந்த சீரழிவைப் போக்கிப் புனருத்தாரணம் செய்யவே க்ருஷ்ணாவதாரம் ஏற்பட்டது.

தர்ம ஸம்ஸ்தாபனத்திற்காகவே அவதாரம் என்று க்ருஷ்ணன் சொன்னது தெரிந்திருக்கும். தர்மம் என்பது ப்ரவ்ருத்தி தர்மம், நிவ்ருத்தி தர்மம் என்று இரண்டாக இருப்பதென்று ஆரம்பித்தேன். நிவ்ருத்திக்குப் பக்குவப்படுத்தும் நிஷ்காம்ய கர்ம யோகமாக ப்ரவ்ருத்தி மார்க்கம் அமையாதவரையில் அதற்கு ‘தர்மம்’ என்று பேர் கொடுக்கவே க்ருஷ்ண பரமாத்மா தயாராக இல்லை. எத்தனைதான் வேத கர்மாநுஷ்டானம் செய்தாலும் ஸரி, கர்ம பலனுக்காகவே செய்தால் ப்ரயோஜனமில்லை; பலனைத் தியாகம் செய்து, நித்ய ஸெளக்கியத்திற்கான நிவ்ருத்தி மார்க்கத்தை மேற்கொள்ளும் சித்தப் பக்குவத்தைப் பெறுவதுதான் ப்ரயோஜனம் என்பதே அவர் அபிப்ராயம். வேதாந்தத்தில் இருப்பதைத்தான் அவர் தம்முடைய அபிப்ராயமாகவும் சொன்னார். ஆசார்யாளும் அதையேதான் நன்றாக மெருகேற்றி ப்ரகாசிக்க வைத்தார். ப்ரவருத்தியைக் கர்ம யோகமாக்கினால்தான், கர்ம யோகத்தினால் சித்த சுத்தி. சித்த சுத்தி பெற்றபின் கர்மாவில் பற்றுப் போய் ஞான விசாரத்தில் ஈடுபாடு ஏற்பட்டு நிவ்ருத்திக்குப் போவது என்று ஆகும். பலனுக்காகவே கர்மாவை ஆயுஸ் முழுக்கப் பண்ணிக்கொண்டிருப்பது என்ற மீமாம்ஸையை ஏற்றுக்கொண்டு விட்டால் அப்புறம் நிவ்ருத்தி மார்க்கம் ஏது? இவ்விதத்தில் க்ருஷ்ணர் நாளில் நிவ்ருத்தி தர்மத்திற்கு முக்யமாக ஹானி ஏற்பட்டு, அவர் இரண்டையும் ஸ்தாபிப்பதற்காக அவதரித்தார்.


1 III.6
2 II. 42.3

Previous page in  தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is 'நிரந்தர'யோகமான அத்வைதம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் -  ஐந்தாம் பகுதி  is  கண்ணுனம் சங்கரரும்
Next
htmltitle
UPDATE on 13 July 2017:

Thanks to the devotees at dheivathinkural.wordpress.com, many corrections have been incorporated on these pages. If you find an error, please help us by reporting it