Page load depends on your network speed. Thank you for your patience. You may also report the error.

Loading...

நவீன ‘ஸுபர்ஸ்டிஷன்’கள் : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

அத்ருஷ்ட பலனை நம்பால் பிரத்யக்ஷ பலனை மட்டும் பார்த்து அநேக விஷயங்களை ஸுபர்ஸ்டிஷன் என்று தள்ளுகிறார்கள் என்றாலும் இவர்களுடைய பகுத்தறிவு (‘ரீஸன்’) படி பதில் சொல்ல முடியாத அநேக ஸுபர்ஸ்டிஷனை இவர்களே உண்டாக்கிக் கொண்டும், பின்பற்றிக் கொண்டும்தான் இருக்கிறார்கள்! ‘ஜேய் ஹிந்த்’ என்று சத்தம் போட்டு விட்டால் அதில் என்ன பிரத்யக்ஷ பலன்? இப்படிக் கத்துவதால் தேசம் ஸுபிக்ஷமாய்விடுமா என்ன? ஆனாலும் ”மந்த்ராஸ்” என்று கேலி பண்ணுகிற பிரதம மந்திரியே* பிரஸங்கம் பண்ணி முடித்தவுடன், “ஜேய் ஹிந்த் கோஷிக்க வேண்டும்; இன்னும் பலமாக கோஷிக்கணும்; இது கூடப்போதாது” என்று மூன்று நாலு தரம் ஜனங்கள் தொண்டை கொண்ட மட்டும் கத்தச் சொல்கிறாராம்!

நம் தேசத்தில் மட்டுந்தான் என்றில்லை Faith-ஐ (நம்பிக்கையை) க் குலைத்து அதனிடத்தில் reason-ஐ (பகுத்தறிவு என்கிற வெறும் புத்தி தர்க்கத்தை) வைத்து, நம்மையும் இப்படியிழுத்து விட்டிருக்கிற எல்லா தேசத்திலுமே இப்படியிருக்கிறது. Rational -ஆகப் பார்த்தால் flag (கொடி) என்பது என்ன? ஏதோ ஒரு துணிதானே! அதன் மீது துப்பினால் அது தேசத்ரோகம் என்றால் இது த்ருஷ்ட பலனா என்ன? ஆனாலும் இப்படிப் பண்ணுகிறவனுக்கு த்ருஷ்ட பலனாகவே ஜெயில் தண்டனை கொடுக்கிறார்கள்! மந்த்ரபூர்வமாய் ஒரு ப்ரதிமையில் தெய்வத்தை ஆவாஹனம் பண்ணிப் பூஜை பண்ணுவதைக் கேலி செய்துவிட்டு, ஒரு துணிதான் தேசத்துக்கு ஸிம்பல் என்றால் அது எப்படி? புண்யகாலமாவது, புண்ய க்ஷேத்ரமாவது என்று சொல்லிவிட்டு நாஸ்திகப் பிரசார விழாக்களைக்கூட புத்தர், அம்பேத்கர் பிறந்த நாளில் பண்ணுகிறார்கள்! ஈரோட்டில், காஞ்சீபுரத்தில்தான் ஆரம்பவிழா என்கிறார்கள்! அதாவது அவர்களும் ஏதோ ஒரு ‘புண்ய’ — இப்படிச் சொல்வது எனக்கே வேடிக்கையாகத்தான் இருக்கிறது! — புண்யகாலம், க்ஷேத்ரம் இவற்றில் நம்பிக்கை வைத்துத்தானிருக்கிறார்கள்! ரொம்ப விசித்ரம், ‘ஸமாதி’, ‘ஸமாதி’ என்கிற பேர் வைத்து (நாம் ஏதோ வருஷத்தில் ஒருநாள் திருவையாறு, நெரூர் மாதிரி இடங்களில் *ஆராதனை நடத்துகிறோம் என்றால்) அவர்களோ நித்தியப்படி ஆராதனையே பண்ணிக்கொண்டிருக்கிறார்கள்! ஆஸ்திகர்களாயிருக்கிற சட்டசபைக்காரர்கள் பதவிப் பிரமாணத்துக்கு முந்தி கோயிலுக்குப் போகாமலிருந்தாலும் இருப்பார்கள்; போய்விட்டு வந்தாலுங்கூடச் சொல்வதற்கு வெட்கப்பட்டுக் கொண்டு இருந்தாலும் இருப்பார்கள்; ஆனால் இவர்கள் [பகுத்தறிவாளர் என்று சொல்லிக் கொள்கிறவர்கள்] ‘ஸமாதி’ என்கிறார்களே, அதற்கு ஊர்வலமாகப் போய் மரியாதை பண்ணிவிட்டு வராமல் swearing-in செய்வதேயில்லை.

வெறும் ரீஸன் என்று மட்டும் எடுத்துக் கொண்டால் அதற்குப் பொருந்தாத அநேக விஷயங்களை எவருமே பண்ணத்தான் வேண்டியிருக்கிறது;அப்போதுதான் நம்முடைய லக்ஷ்யத்தில் நமக்கு ஒரு ஆர்வத்தை, ஈடுபாட்டை எழுப்பி அதற்கு மற்றவர்களின் ஆதரவையும் திரட்டமுடிகிறது. இதற்குச் சின்னங்களும் காரியமும் இருந்தேயாக வேண்டியிருக்கிறது. இப்படி கறுப்பு-சிவப்பு அல்லது கதர் போட்டுக் கொண்டு கொடியையும் ஸ்லோகன் அட்டையையும் தூக்கிக் கொண்டு பாத யாத்திரை, ஸைகிள் ஊர்வலம், மாட்டுவண்டி ஊர்வலம் என்று நடத்தும்போது இதில் பகுத்தறிவுக்குச் சேராத எத்தனை விஷயம் இருக்கிறது என்று பார்ப்பதில்லை. அதுவே பஞ்சகச்சம், பரிவட்டம், ஜாலரா, நாமசங்கீர்த்தனம் என்று பஜனை கோஷ்டி போனால் பரிஹாசமாகிறது. பொலிடிகல் இன்டரஸ்ட் (அரசியல் ஈடுபாடு), லேபர் இன்டரஸ்ட் என்பதுபோல இந்த லோகத்தை மட்டுமே சேர்ந்த விஷயங்களுக்காக இப்படி ரீசனை விட்டு விட்டு, மண்ணெண்ணையை கொட்டி கொளுத்திக்கொண்டு உயிரைவிடுகிற அளவுக்குப் போனால் martyr [தியாகி] பட்டம் கொடுக்கிறார்கள்! அதுவே சாச்வதமான தர்மத்துக்காக, மதத்துக்காக விட்டால் ‘ஸுபர்ஸ்டிஷியஸ்’,‘அசடு’என்று மட்டம் தட்டுகிறார்கள்.

Previous page in  தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is மனத் தூய்மையும் வெளிக் காரியமும்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is  தெய்வமும் மதமும் தர்மமும்
Next
htmltitle
UPDATE on 13 July 2017:

Thanks to the devotees at dheivathinkural.wordpress.com, many corrections have been incorporated on these pages. If you find an error, please help us by reporting it