Page load depends on your network speed. Thank you for your patience. You may also report the error.

Loading...

வஜ்ரம் பாய்ந்த விருக்ஷம் : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

பூர்விகர்கள் ஒழுகிய வழியில் போவதற்கே ‘ஆசாரம்’ என்று பெயர். ஆசார-வ்யவஹாரங்கள் என்று சொல்வதுண்டு. வ்யவஹாரம் என்பது நிகழ்கால நடப்பாக மட்டும் இருப்பது. ஆசாரம் என்பது பூர்வத்தில் நெடுங்காலமாக நம் முன்னோர்கள் தங்கள் நன்னடத்தைக்கு ஆதாரமாக என்ன செய்தார்களோ அது. அதற்கு நீண்ட காலம் நிலைத்து நின்றதால், நெடுங்கால மரத்தில் உண்டாகிற வஜ்ரம் போன்ற உறுதி உண்டு. அந்த உறுதியான அஸ்திவாரத்தின் மேல் நாமும் நம் வாழ்முறையை எழுப்பிக்கொண்டால்தான் நமது வாழ்க்கை ஸ்திரமாக இருக்கும்.

நம் பூர்விகர்கள் எப்படிப்பட்ட நெறிகளைக் கைக் கொண்டிருந்தார்களென்றால், நம் சாஸ்திரங்களிலும் ஸம்பிரதாயங்களிலும் என்னென்ன உண்டோ அவற்றைத் தான். அவற்றை அவர்கள் அநுஷ்டித்த சிறப்பினால்தான் நம் தேசமே தொன்றுதொட்டுப் பாரமார்த்திகத்திலும், ஞானத்திலும், பக்தியிலும், அது மட்டுமின்றி எல்லாக் கலைகளிலுங்கூட லோகத்திலேயே முதன்மை ஸ்தானம் பெற்றிருக்கிறது. இன்றைக்கு நாம் இவ்வளவு சீரழிந்துவிட்ட பிறகுங்கூட நாம்தான் ஆத்யாத்மிகத்தில் தங்களுக்கு வழிகாட்ட வேண்டுமென்று மற்ற தேசத்தவர்கள், மற்ற மதஸ்தர்கள் இங்கே உள்ள ஆச்ரமங்களுக்குக் கூட்டம் கூட்டமாக வந்து கொண்டிருக்கிறார்கள் என்றால் அது பூர்வாசாரம் ‘பெடல்’ பண்ணிவிட்ட வேகத்தின் எஞ்சிய பலத்தால்தான்!

இந்த ஆசாரங்களில் பெரும்பாலானவற்றை விட்டுவிட வேண்டுமென்றுதான் ஸமீப காலமாக, ஓரிரு நூற்றாண்டாக, நம் நாட்டில் சீர்திருத்தக்காரர்கள் சொல்லி வருகிறார்கள். ஒவ்வொரு சீர்திருத்தக்காரரும் வரும்போது, நம்முடைய மதம் என்னும் வயலில் இதுதான் களை, இதை எடுத்துவிட்டால் போதும், பயிர் நன்றாக இருக்கும் என்று சொல்கிறார்கள். இப்படி அவரவருக்குத் தோன்றுகிறபடி ஒவ்வொன்றாக எடுத்துப் போட்டுக் கொண்டேயிருந்தால் பயிர் என்றே ஒன்றும் மிஞ்சாது! ஆனதால் நம்மைவிட அறிவிலும், அருளிலும், அநுக்ரஹ சக்தியிலும் எவ்வளவோ மேல் நிலையிலுள்ள ரிஷிகள் தர்ம சாஸ்திரங்களில் என்னென்ன சொல்லியிருக்கிறார்களோ அவற்றைப் பூர்ணமாக அநுஸரிப்பதற்குத்தான் நாம் ப்ரயத்தனப்பட வேண்டும். அதற்கான மன உறுதியைத் தரும்படி பகவானிடம் பிரார்த்திக்க வேண்டும்.

இன்னொன்று யோசித்துப் பார்க்க வேண்டும். இத்தனை சீர்திருத்தத் தலைவர்கள் வந்து இவ்வளவு சீர்திருத்த இயக்கங்களை ஆரம்பித்தும் இவற்றிலிருந்து நாம் மஹானாக ஞானியாக எத்தனை பேரைப் பெறமுடிந்திருக்கிறது? யாரை வேண்டுமானாலும் ரிஷி, அவதாரம், Messenger of God என்று சொல்லிவிடலாம். ஆனால் வாஸ்தவத்தில் ஜனங்களின் தாபத்தை சமனம் செய்கிற அநுக்ரஹ சக்தி இவர்களுக்கு இருக்கிறதா என்பதே கேள்வி. ஸம்பிரதாயமாக வருகிற குரு உபதேசத்தால் இப்போதும் பலபேர் பெற்று வருகிற அநுக்ரஹமும் ஸ்வாநுபூதியும் இந்த reform-காரர்களிடமிருந்து வருமா? நேற்றைக்கொன்று, இன்றைக்கொன்று என்று சொல்லிக் கொண்டிருக்கும் இவர்களுக்காக tradition என்ற வஜ்ரம் பாய்ந்த ஸம்பிரதாய விருக்ஷத்தை வெட்டி விடுவதா? இப்படி நான் கேட்கவில்லை. பத்துப் பன்னிரண்டு வெள்ளைக்காரர்களே – அவர்கள் ஆத்ம ஸம்பந்தமாக நிறையப் படித்து ரொம்பவும் ஸாதனைகளும் செய்தவர்கள் – என்னிடம் வந்து இப்படி வற்புறுத்திக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். “Tradition என்கிற சாஸ்திர மரபு, அதன்படியே சொந்த வாழ்க்கையை நடத்தினதால் பரிசுத்தி பெற்ற குருமார்கள், அப்படிப்பட்டவர்களின் அநுபவத்தில் ஊறிப் பக்குவமாகி வருகிற உபதேசம் தீக்ஷை முதலானவை, இவை சிஷ்யனுக்குள்ளேயும் போய் அவனை சுத்தி பண்ணுவது – என்றிப்படியில்லாமல் ஆத்மாநுபவம் எப்படி வர முடியும்? எத்தனையோ மதங்கள், reform-கள் வந்துவிட்டாலும் பூர்வாசாரத்தில் ஊறிய ஆசார்யர்களைப் பின்பற்றா விட்டால் ஆத்மாபிவிருத்தி என்பது மிகவும் துர்லபமாகத் தானே இருக்கிறது?” என்று அவர்கள் கேட்டார்கள்.

அநுபவிகளுக்குள்ளேயே வித்யாஸம் உண்டுதான். அதனால்தான் அநேகமாகப் பெரிய மத ஸ்தாபகர்கள் எல்லாரும் அநுபவிகளாயிருந்தாலும் ஸமயாசாரங்கள் வித்யாஸப்படுகின்றன. ஆனாலும் எவனொருவன் எங்கே பிறந்திருந்தாலும் அந்த மதத்துக்கான ஆசாரங்களைப் பின்பற்றினால் அவனுடைய ஆத்மா கடைத்தேறிவிடும். ஆத்மா கடைத்தேறச் சீர்திருத்தக்காரர்களை நம்பிப் பிரயோஜனம் இல்லை. அநேகமாக இந்த reformer-கள் ஸமத்வம், அது, இது என்று சொல்லி, இந்த லோக வாழ்க்கையில் எல்லோருக்கும் பெருமையான ஸ்தானம் வாங்கித் தருபவர்களாயிருக்கிறார்களே தவிர, ஆத்ம லோகத்தில் இவர்களால் ஒன்றும் ப்ரயோஜனமில்லை என்பதுதான் அந்த வெள்ளைக்காரர்கள் கட்சி.

எனக்கு எந்தக் கட்சியும் கிடையாது. ஒரு ஜட்ஜை எந்தக் கட்சி என்று கேட்டால் என்ன சொல்வது? ‘லா’வை (சட்ட புத்தகத்தை) ப் பார்த்து, சொந்த அபிப்ராயமில்லாமல், அதன் பிரகாரம் சொல்லத்தான் ஜட்ஜ் இருக்கிறார். ‘எடர்னல் லா’ (ஸநாதன தர்மம்) என்கிற சாஸ்திரங்களைப் பார்த்து அதிலிருப்பதைச் சொல்லவும், என்னால் முடிந்தமட்டும் அப்படிச் சொல்லியிருப்பதன் பிரகாரமே நடக்கப் பிரயத்னப்படவுந்தான் நான் இருக்கிறேன். அந்த சாஸ்திரங்களில் சொல்லியுள்ள ஆசாரங்களின்படி நீங்கள் நடக்க வேண்டும் என்று சொல்ல வேண்டியதுதான் ஆசார்யாளின் சின்னப் பிரதிநிதியாக இருக்கிற என் பொறுப்பு.  நான் சொல்வது உங்களுக்கு ஏறுவதும் ஏறாததும் நானே அந்த சாஸ்திரப்படி எவ்வளவுக்குச் செய்கிறானோ, செய்யவில்லையோ அதைப் பொறுத்ததுதான். எனக்கு அநுஷ்டான சக்தி இருந்தால் தான் என் சொல்லுக்கு அதன்படி சாஸ்திர ரீதியாக உங்களை நடக்கப் பண்ணுவிக்கிற சக்தி இருக்கும்.

வெவ்வேறு மதங்களுக்கிடையிலேதான் ஆசாரங்களில் வித்யாஸம் இருக்கிறதென்றில்லை. ஒரு மதத்திலேயேகூட பல கிளை ஸம்பிரதாயங்கள் உண்டாகி மாறுபட்ட ஆசாரங்கள் இருக்கின்றன. பௌத்தத்திலேயே ஹீனயானம், மஹாயானம், Zen என்றெல்லாம் வெவ்வேறு ஆசாரங்கள் இருக்கின்றன. கிறிஸ்டியானிடியில் காதலிக், ப்ராடெஸ்டென்ட், க்ரீக் சர்ச் என்று இருக்கின்றன. இஸ்லாத்தில் ஸியா, ஸுன்னி, அஹமதீயா என்று மூன்று பிரிவு உண்டு. ஹிந்து மதத்திலும் சைவம், வைஷ்ணவம், வைதிகம், தாந்த்ரிகம் என்றெல்லாம் பல இருக்கின்றன.

தேச வித்யாஸத்தாலும் ஆசார வித்யாஸம் ஏற்படுவதுண்டு. நம் தேசத்திலேயே வடக்கே குளிர்காலத்தில் ஜலமெல்லாம் ஐஸாகப் போகிற ஊர்கள் இருக்கின்றன. அதனால் அங்கே பண்டா சட்டை போட்டுக்கொண்டே பூஜை பண்ணுவான். அங்கங்கே கிடைக்கும் தான்யாதிகளைப் பொருத்து நைவேத்யம், போஜன ஆசாரம் முதலியன கொஞ்சம் மாறும்.

Previous page in  தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is சேமிப்புக்கு வழி
Previous
Next page in தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is  பிறந்த குலாசாரமே உய்நெறி
Next
htmltitle
UPDATE on 13 July 2017:

Thanks to the devotees at dheivathinkural.wordpress.com, many corrections have been incorporated on these pages. If you find an error, please help us by reporting it