முரணுக்குக் காரணம் : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

இந்தக் கதையெல்லாம் இப்போது எதற்கு அளக்கிறேனென்றால், நான் நம் ஹிந்து தர்மப்படி பரோபகாரம் செய்ய வேண்டும் என்பதை emphazise பண்ணினதில் தனி ஆள், குடும்பம் இவற்றின் கார்யம் கெட்டுபோகும்படிப் பண்ணிவிட்டேன் என்று ஒரு ‘கம்ப்ளெய்ன்ட்’வந்திருக்கிறென்றால், இதற்கு நேர்மாறாக, நம் மதத்துக்கே தனி ஆளும், அவனை உருவாக்குகிறதும் அவனால் உருவாக்கப்படுவதுமான அவனுடைய குடும்பமுந்தான் அச்சாணியாயிருக்கிறதே யொழிய, பொதுப்படையான ஜன ஸமூஹமல்ல என்றும் ஒரு ‘கம்ப்ளெய்ன்ட்’இருக்கிறது என்று காட்டத்தான்!பரோபகாரத்தை விஷயமாக எடுத்துக்கொண்டபோது நான் தனி ஆளின் கடமை, குடும்பக் கடமை இவற்றை neglect பண்ணிவிட்டேன் என்கிறமாதிரியே, நம்முடைய ஸமயசாரங்களைப்பற்றி நான் பேசுவதை மட்டும் கேட்டுவிட்டு ஸொஸைட்டியை நான் ignore பண்ணினதாகச் சண்டை போட்டவர்களும் உண்டு. சண்டை என்றால் சண்டை இல்லை. வசவு என்று நான் சொன்னதை கௌரமான முறையிலேயே அவர்கள் பண்ணினார்கள் என்பதைப்போல, சண்டையும் மரியாதையாகத்தான் போட்டார்கள். நான்தான் அதில் இருக்கக்கூடிய நியாயம் எனக்கு நன்றாக உறைப்பதற்காகச் ‘சண்டை’என்று சொல்லிக்கொள்கிறேன்.

நான் சொன்னது எல்லாவற்றையும் பேப்பர்காரர்கள் போடவில்லை என்று ஸமாதானம் சொல்லி நான் தப்பித்துக்கொள்ள இஷ்டப்படவில்லை அந்தந்த ஸமயத்தில் எந்த விஷயத்தை எடுத்துக் கொள்கிறேனோ அதில் கேட்பவர்களுக்குக் கெட்டியான பிடிமானம் உண்டாகவேண்டும் என்றே அதைக் கொஞ்சம் ஜாஸ்தியாக stress செய்துவிடுகிறேன் என்று தோன்றுகிறது. இப்படிச் சொன்னால்கூடப் பிறத்தியாரை உத்தேசித்துத்தான் இப்படி செய்கிறேன் என்று காட்டி எனக்கு நல்லபேர் கேட்கிற மாதிரி இருக்கிறது. அதனால் இப்படியெல்லாம் நியாயம் கல்பித்துக் கொள்ளாமல் எந்த ஸப்ஜெக்டை எடுத்துக்கொள்கிறேனோ அதுவே என்னைக் கொஞ்சம் இழுத்துக்கொண்டு போய்விடுகிறது, அதன் பக்ஷமாகவே என் கண்ணைத் திருப்பிவிட்டு விடுகிறது என்று வேண்டுமானால் ஒப்புக்கொண்டு விடுகிறேன்.

என் விஷயம் இருக்கட்டும். இப்போது பொது விஷயத்தைப் பார்க்கலாம். வைதிக ஸமயாநுஷ்டானம் என்பதைப்பார்த்தால் அது முக்யமாக தனி மநுஷ்யனைத்தான் centre -ல் வைத்திருக்கிறது. அதில் ஒரு ஸமூஹப்பணி. ஸமூஹத்தை நலமடையச் செய்யும்போதே, அப்படிச் செய்வதாலேயே இந்தத் தனி மநுஷ்யன் ஆத்ம பரிபக்குவம் அடைவதுதான் இந்தப் பரோபகாரத்துக்கும் குறிக்கோள்*. ஸேவைக்குப் பாத்திரமாகிறவனும், அதாவது தானம் பெறுகிற தீனன், சிகித்ஸை பெறுகிற நோயாளி, வித்யாதானத்தால் ப்ரயோஜனமடையும் மாணவன், இப்படியாகப் பலவித பரோபகாரங்களுக்கும். பாத்ரமாக இருக்கப்பட்டவனும் இந்த லௌகிக உபகாரங்களைப் பெற்றதோடு த்ருப்தி பெற்று நின்றுவிடக்கூடாது. இவனும் தன்னுடைய இந்த லௌகிகமான problem தீர்ந்தது, இதற்கான விசாரம் இனி இல்லாமல் ஆத்மா பக்கம் விச்ராந்தியாகத் திரும்புவதற்குத்தான் என்று புரிந்து கொண்டு அந்த வழியில் போக வேண்டும். வெறுமே லௌகிகத் தேவைகளைப் பூர்த்தி செய்வதோடு பரோபகாரம் நின்றுவிடுமானால் அது செய்தவனுக்குத் தான் சித்த சுத்தி என்ற பெரிய லாபத்தைக் கொடுப்பதாகுமேயொழிய உபகாரம் பெற்றவனுக்கு சாச்வதமான லாபம் தரவில்லை என்றேயாகும்.
நான் ஸோஷல் ஸர்வீஸ் பற்றியும் பேசியிருக்கிறேன்;தனி மநுஷ்யனின் அநுஷ்டானங்கள் பற்றியும் பேசியிருக்கிறேன். ஸோஷல் ஸர்வீஸில் அநேக லௌகிகமான உபகாரங்களைச் சொல்லியிருக்கிறேன். அன்னதானம் செய்வது, வைத்யசாலை வைப்பது, வித்யாதானம் (ஸெக்யூலர் எஜுகேஷனையும் சொல்லியிருக்கிறேன்) , வேலையில்லாதவர்களுக்கு உத்தயோக வசதி பண்ணித்தருவது, ஏழைகளுக்கு விவாஹத்துக்கு உதவி செய்வது என்று நான் சொன்ன அநேக விஷயங்கள் லௌகிகமானவைதான். இவை நேரே ஆத்மாபிவிருத்திக்கு உதவுகிற பணிகளல்ல.

ஆனால் ஒரு இன்டிவிஜுவலின் ஆத்மாபிவிருத்திக்காக நான் அநுஷ்டானங்களைப் பற்றிச் சொல்லும்போது ஜெனரலாக க்ருஹஸ்த தர்மம், ஸ்த்ரீ தர்மம் என்றெல்லாம் சொன்னாலும், லௌகிக அம்சங்களை விஸ்தாரப்படுத்திச் சொன்னதில்லை. ஆத்மாபிவிருத்தியை aim -ஆக [லக்ஷி்யமாக] வைத்தே அதற்காக ஸ்த்ரீ புருஷர்கள் தனி வாழ்க்கையிலும் குடும்பத்திலும் என்ன செய்ய வேண்டும். என்பதை மாத்திரந்தான் சொல்லி வந்திருக்கிறேன். மற்றபடி ‘ஒரு ஏழைக்குக் காசுபோடு’ என்கிற மாதிரி ‘உனக்குக் காசு தேடிக்கோ’ என்று சொன்னதில்லை. கதியில்லாத ஒரு வியாதியஸ்தனுக்குச் சிகித்ஸை பண்ணு’ என்று சொன்ன மாதிரி, ‘உனக்கோ, வீட்டு மநுஷ்யர்களுக்கோ உடம்பு ஸரியில்லாவிட்டால் டாக்டரிடம் காட்டு’ என்று நான் சொன்னதில்லை;’ ஏழைப்பிள்ளை ஒருத்தனுக்குப் படிப்புக் கொடு;வேலை பண்ணி வை’என்று சொல்லியிருக்கிறேனே தவிர ‘உன் பிள்ளையை நன்றாகப் படிக்க வைத்து நல்ல உத்யோகமாக ஸம்பாதித்துக்கொடு’ என்று சொன்னதில்லைதான்!’ எவனோ ஒரு ஏழையின் பெண்ணுக்குக் கன்னிகாதான ஸஹாயம் பண்ணு’ என்பேனே தவிர, ‘உன் பெண்ணுக்கு வரன் பார்த்துக் கல்யாணம் பண்ணு’ என்பதில்லை. ‘ஊருக்குக் குளம் வெட்டு’ என்பேனே தவிர ‘உன் வீட்டுக்குக் குழாய் போட்டுக்கொள்’ என்று சொன்னதில்லை.

ஏன்? இந்த லௌகிக உதவிகளை இன்னொருத்தனுக்குப் பண்ணுவதே இவனுக்கு ஆத்மிகமாக உதவி பண்ணுகிறது இவனுடைய சித்த சுத்திக்கு ஸஹாயம் செய்கிறது. ஆனால் இதே லௌகிக விஷயங்களைத் தனக்கும் தன்னைச் சேர்ந்த குடும்பத்தவர்களுக்கும் பண்ணிக்கொள்கிறபோது அதிலே ஆத்ம ஸம்பந்தமாக எந்த லாபமும் சேராமலே போகிறது. காரணம் – தான், தன் மநுஷ்யர் என்பவர்களுக்குச் செய்வது தனக்கே பண்ணிக்கொள்ளும் உபகாரந்தான். அதாவது லௌகிகமான லாபம் இவனுக்கே கிட்டுகிறது. நிறையப்பணம் நஷ்டப்பட்டுப் பெண்ணுக்குக் கல்யாணம் பண்ணிப் பெரிய இடத்தில் ஒப்படைக்கிறான் என்றாலுங்கூட அதிலும் நம் பெண் நல்ல இடமாகப் போய் அடைந்தாளே என்ற ஸ்வய பாச திருப்தி என்ற லௌகிகமான ஸ்வய லாபம் இருக்கத்தான் செய்கிறது. லௌகிக லாபத்தைப் பிறத்தியானுக்குக் கிட்டப் பண்ணினால் அதற்குப் பிரதியாக இவனுக்கு ஆத்மலாபம் கிடைப்பதே நியாயம். லௌகிக லாபமே நேராக இவனுக்குக் கிடைக்கிறபோது அதற்கு குட்டிப் போட்டுக்கொண்டு ஆத்ம லாபமும் எப்படி கிடைக்கும்?


* இவ்விஷயம் ‘பரோபகாரம்‘ என்ற உரையிலேயே விளக்கப்பட்டிருக்கிறது.

Previous page in  தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is நமது ஆலய வழிபாட்டின் நோக்கம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is  சொந்தப் பணியைச் சொல்லாததேன்?
Next