Page load depends on your network speed. Thank you for your patience. You may also report the error.

Loading...

திரவியம், தேஹம் இரண்டாலும் : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

கால் காசு ஐவேஜியில்லாமல்தான் சிவன் ஸமீபத்தில் இருந்திருக்கிறார். ஆனால் அவர் பெயரிலேயே ‘அன்னதான’ என்பது ஒட்டிக்கொள்கிற மாதிரி, மஹா க்ஷேத்திரங்களில் நடந்த மஹோத்ஸவங்களிலெல்லாம் லக்ஷக்கணக்கான ஜனங்களுக்கு முட்ட முட்ட விருந்துச் சாப்பாடு போட்டிருக்கிறார். பரம த்யாகியாக இருந்து கொண்டு, கட்டின துண்டோடு ஊர் ஊராகப் போய் இவர் தனிகர்களை, மிராஸ்தார்களை, பண்ணையார்களைப் பார்த்து, ”இத்தனை மூட்டை அரிசி அனுப்பு; இத்தனை தூக்கு புளி அனுப்பு” என்று சொன்னால் அதை ஒரு பாக்யமாக, ஆக்ஞையாக நினைத்து அவர்களும் அனுப்பி விடுவார்கள். உத்ஸவத்துக்கு வந்தவர்களுக்கெல்லாம் வயிறார அன்னதானம் பண்ணி விடுவார். ஆனால் அவர் தாம் மாத்திரம் இந்த விருந்துச் சாப்பாட்டைத் தொடவே மாட்டார். ஏதோ கொஞ்சம் பழையதைத்தான் நாலு வாய் உருட்டிப் போட்டுக் கொள்வார். அதனால்தான் அவர் சாமான்களைக் கொடுத்த தனிகர்களுக்கு பவ்யப்படாமல் இருக்க முடிந்தது. அவர்கள் இவரிடம் கை கட்டிக்கொண்டு நின்றார்கள். பரோபகாரம் என்று வரும்போது பணத்தைக் காட்டி ஒரு ஸுபீரியாரிடி ஏற்படுத்திக் கொள்ளாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது ரொம்பவும் அவச்யம் என்பதற்காகச் சொன்னேன்.

பணக்காரர்கள் பரம த்யாகிகளாக, trustees (தர்மகர்த்தாக்கள்) மாதிரி, தங்கள் பணத்தை ஸமூஹக் காரியங்களுக்காகத்தான் ப்ரயோஜனப்படுத்த வேண்டும் என்பதே நம் தர்மம். மநு, திருவள்ளுவர் நாளிலிருந்து காந்திவரை இப்படித்தான் சொல்லி வந்திருக்கிறார்கள். இது வாஸ்தவத்தில் நடந்தால் கம்யூனிஸம், ரெவல்யூஷன் எதுவுமே இல்லாமல் லோகமெல்லாம் ஸந்தோஷமாக சாந்தமாக இருக்கும். இதெல்லாம் எனக்குத் தெரியாமல் போகவில்லை. ஆனாலும் அவர்கள் தாங்களாக தர்ம சிந்தையை வளர்த்துக்கொண்டு, பிரியப்பட்டு உபகாரம் செய்யத்தான் நாம் தூண்டுதலாகப் பிரசாரம் செய்ய வேண்டுமே தவிர அவர்களைப் போய் நிர்ப்பந்தப்படுத்த வேண்டாம். என்று தோன்றியதால் சொன்னேன். பாதி ஸீரியஸாகவும் பாதி விளையாட்டாகவும் சொன்னேன்.

இன்னொன்றுகூட நான் விளையாட்டாகச் சொல்வதுண்டு. பொதுக் கார்யம் செய்கிறவர்கள் இப்போது முதலில் இன்னின்னார் நிறைய உதவக்கூடும் என்று ‘லிஸ்ட்’ போட்டுக்கொண்டு அந்த வரிசைப்படி கலெக்ஷ்னுக்குப் போகிறார்கள் அல்லவா? இதில் அநேகமாக ஏமாற்றங்கள்தான் உண்டாகின்றன. நாம் ரொம்பவும் தாரளாமாகக் கொடுப்பான் என்று நினைக்கிறவனுக்கு ஏதாவது ச்ரமமிருக்கிறது. அல்லது மனஸில்லை. கையை விரித்துவிடுகிறான். அல்லது மூக்கால் அழுதுகொண்டு சுஷ்கமாகக் கொடுக்கிறான். உடனே நமக்குப் பணியிலேயே உத்ஸாஹம் குறைந்துவிடுகிறது. அந்த ஆசாமியைத் தூற்ற ஆரம்பிக்கிறோம். இதற்குப் பதிலாக நான் என்ன சொல்கிறேன் என்றால், யாரார் நன்கொடை தர மாட்டார்கள் என்று தோன்றுகிறதோ அவர்களை ஒரு லிஸ்ட் போட்டுக் கொள்ளுங்கள், முதலில் இப்படிப்பட்டவர்களைப் போய்ப் பாருங்கள். அவர்கள் கையை விரித்து விட்டால் அதற்காக நமக்கு மனஸ் தளரப் போவதில்லை. ஏனென்றால் இது நாமே எதிர்பார்த்தது தானே? மாறாக அவர்கள் ஏதோ கொடுத்தாலும் கொடுக்கலாம். சில சமயம் அள்ளியும் கொடுக்கலாம். இப்படிக் கொடுக்க நேரிட்டால் நமக்கு உத்ஸாஹம் கரைகடந்துவிடும்! பணியில் இன்னும் தீவிரமாக இறங்குவோம். இப்படி என் வார்த்தைப்படி, கொடுக்காமல் இருக்கக்கூடியவர்களின் லிஸ்டைப் போட்டுக்கொண்டு முதலில் அவர்களிடம் வசூலுக்குப் போய், அப்புறம் கொடுக்கக் கூடியவர்களைப் பார்த்தவர்கள், பிற்பாடு என்னிடம் வந்து ‘ஸைகலாஜிக’லாக இதில் தங்களுக்கு ரொம்பவும் த்ருப்தியும், உத்ஸாஹமும் உண்டானதாகச் சொல்லியிருக்கிறார்கள். யாசகக் கலையில் இப்படிப் பல ‘ட்ரிக்கு’கள் இருக்கின்றன!

நான் சொல்ல வந்தது என்னவென்றால், ஏழையோ, பாழையோ, ஸமூஹத்தில் உள்ள அத்தனை பேரும் ஒரு காலணா அரையணாவாவது போட்டு எல்லோருமாகச் சேர்ந்தே பொதுக் காரியங்களுக்கான செலவுகளை ஏற்க வேண்டும். பணக்காரன் பணம் மட்டும் கொடுத்துவிட்டு, சரீரத்தால் உழைக்காமலிருந்தான் என்று இருக்கக்கூடாது; ஏழை சரீரத்தால் மட்டும் உழைத்து விட்டுப் பணம் கொடுக்காமலிருந்தான் என்றும் இருக்கக் கூடாது. பணக்காரன் ரூபாய் தருவதும், ஏழை சரீர கைங்கர்யம் செய்வதும் பெரிய த்யாகமில்லை. பணக்காரன் ஏழைகளோடு வந்து நின்றுகொண்டு மண்வெட்டி எடுத்து வெட்ட வேண்டும்; ஏழை தன் கூழுக்கு ஒரு மிளகாய் வாங்கிக் கொள்வதற்குப் பதிலாக காலணா டொனேஷன் கொடுக்க வேண்டும். அதுதான் பெரிசு. ஸோஷல் ஸர்வீஸ் பண்ணும்போதே பண்ணுகிறவர்கள் மனஸில் உயர்ந்து வளர வேண்டுமானால் செலவு, உழைப்பு இரண்டிலுமே ஒவ்வொருத்தனுக்கும் பங்கு இருக்க வேண்டும். ச்ரமதானத்துக்கு பலஹீனர்கள் மட்டும் எக்ஸெப்ஷன் (விதிவிலக்கு) .

எனக்கு தெரிந்த ஒரு ப்ராம்மணர். இரண்டே இரண்டு தென்ன மரம் உள்ள பூமிதான் அவருக்கு ஆரம்பத்தில் இருந்தது. அதில் தானே மண்வெட்டி பிடித்து வேலை பண்ணினார். சாஸ்தரப் பிரகாரம் பண்ண வேண்டியது எதையும் இதற்காக விட்டுவிடவில்லை. காலையில் எழுந்து அக்னி ஹோத்ரம், பூஜை எல்லாம் செய்வார். அப்புறம் மண்வெட்டியும் கையுமாகப் போய் வேலை ஆரம்பித்து விடுவார். அந்த வேலை முடிந்த அப்புறம் மாத்யான்ஹிக ஸ்நானம் செய்து, பாக்கி கர்மாநுஷ்டானங்களும் பண்ணிவிட்டுச் சாப்பிடுவார். இப்படி தன் கையாலேயே உழைத்து இரட்டைத் தென்ன மர பூமியைத் தென்னந் தோப்பாகவே மாற்றிவிட்டார் பசங்களுக்கு இப்படி நல்ல பூ ஸ்திதி தேடி வைத்தார். நல்ல விருத்தாப்யம் வந்த பிற்பாடும், எண்பது எண்பத்தைந்து வயஸு வரைக்கும்கூடத் தோப்புக்குத் தினமும் போய்த் தன் கையால் வெட்டி கொத்தி வேலை செய்வதை அவர் நிறுத்தவில்லை. இப்போது திரவிய ஸெள‌கர்யம் ஏற்பட்டு, இவர் உழைத்துத்தான் ஆக வேண்டும் என்று இல்லாவிட்டாலுங்கூட, ”இந்தக் கார்யம்தானே நமக்கு இத்தனை அபிவ்ருத்தியைத் தந்தது? இதை விடப்படாது” என்று சரீர உழைப்பில் பக்தி விச்வாஸம் வைத்து சாகிறவரை பண்ணி வந்தார்.

அவர் சொந்த நிலத்தில் வேலை செய்து அடைந்த ஸந்தோஷத்தைவிட ஜாஸ்தியாகவே பொதுத்தொண்டுகளில் சரீரத்தை சிரமப்படுத்தி வேலை பண்ணுவதில் நிறைவு கிடைக்கும். பண்ணிப் பார்த்தால் தெரியும்.

கொஞ்ச நேரமாவது குளம் வெட்டுவது, ஆலயத்தில் நந்தவனம் வைப்பது என்கிற மாதிரி ஏதோ ஒன்றில் தேஹத்தை ஈடுபடுத்த வேண்டும். கொஞ்சம் காசாவது இம்மாதிரி கார்யங்களுக்குச் செலவழிக்க வேண்டும். ஏழை வித்யார்த்திக்கு ஒரு பலப்பம் வாங்கிக் கொடுக்கலாம்; நாலு பிச்சைகாரர்களுக்குக் கூழ் வார்க்கலாம்; மோர்த் தண்ணியாவது நம் செலவில் கொடுக்கலாம்.

எந்த ஆஃபீஸானாலும் ஃபாக்டரியானாலும் வாரத்தில் ஒருநாள் லீவ் இருக்கிறதல்லவா? பள்ளிக்கூடம், கோர்ட் முதலியவற்றில் வாரத்துக்கு இரண்டு நாள் லீவ்கூட இருக்கிறது. இந்த லீவ் நாட்களெல்லாம் பொதுத் தொண்டுக்கு என்றே பகவான் கொடுத்திருப்பது என்று நினைத்து, கூட்டாகச் சேர்ந்து ஸேவை செய்யவேண்டும். மனஸ் மட்டும் இருந்துவிட்டால், செய்வதற்கு எத்தனையோ பணிகள் இருக்கின்றன.

Previous page in  தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is செலவு விஷயம்;ஜாக்ரதை தேவை
Previous
Next page in தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is  ஜாதி அம்சமில்லாத ஸேவை தேவை
Next
htmltitle
UPDATE on 13 July 2017:

Thanks to the devotees at dheivathinkural.wordpress.com, many corrections have been incorporated on these pages. If you find an error, please help us by reporting it