Page load depends on your network speed. Thank you for your patience. You may also report the error.

Loading...

வலம்புரியானை வலம் புரிவோம்! : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

குட்டிக்கொள்வது, தோப்புக்கரணம் போடுவது, சிதறு தேங்காய் உடைப்பது, எருக்கும் அருகும் அர்ச்சனை பண்ணுவது, மோதகம் நிவேதிப்பது இவையெல்லாம் பிள்ளையார் வழிபாட்டில் விசேஷமாயிருக்கிறாற்போலவே அவரைப் பலமுறை பிரதக்ஷிணம் பண்ணுவதும் ஒரு விசேஷமாகும். பிள்ளையார் சுழி போடுகிறபோதும் பிரதக்ஷிணக் கிரமத்தில்தான் கொம்பை ஆரம்பிக்கிறோம்! பிள்ளையாரை குறைந்தது, மூன்று தடவை பிரதக்ஷிணம் பண்ணுவது வழக்கம். இருபத்தியோரு தடவை, நூற்றியெட்டுத் தடவை என்றெல்லாம் சுற்றிச் சுற்றி வருவார்கள். பார்வதி பரமேச்வரர்களை ஸர்வ பிரபஞ்சமாகவும் புரிந்து கொண்டு வலம் வந்து பலம் (பழம்) பெற்ற விக்னேச்வரரை நாமும் வலம் வந்தால் ஸகல பலனும் பெறலாம். அவருடைய தொப்பை வயிறே உருண்டையாகப் பிரபஞ்சம் மாதிரிதானே இருக்கிறது? அவரை வலம் வருவதே நமக்கு பலமுமாகும் — தேஹபலம், புத்திபலம் எல்லாம்!

அவரே வலம்புரி விநாயகராகவும் இருக்கிறார். விக்னேச்வரர் மூர்த்தத்தில் ஏகப்பட்ட ரூப பேதங்களிருந்தாலும் பொதுவாக நாம் பார்க்கிற பிள்ளையார்கள் தும்பிக்கையை இடது பக்கமாகச் சுழித்துக் கொண்டிருப்பவையாகவே இருக்கும். அபூர்வமாகச் சில இடங்களில் வலது பக்கம் தும்பிக்கையைச் சுழித்துக் கொண்டிருப்பார். இவரைத்தான் வலம்புரி விநாயகர் என்பது. தக்ஷிணா வர்த்தமாக உள்ள சங்கை எப்படி வலம்புரிச் சங்கு என்று சிறப்பிக்கிறோமோ அப்படியே வலம்புரி விநாயகருக்கும் விசேஷமான அனுக்ரஹ சக்தி இருப்பதாக ஆகமத்தில் சிறப்பித்திருக்கிறது. இப்படித் தும்பிக்கை வலமாகச் சுழித்திருக்கிறபோதுதான் (இது பிள்ளையாரே போடும் சுழி! தம்முடைய ஒரு அங்கத்தாலேயே போடுகிற சுழி!) அவருடைய வாயின் வலது ஓரத்தில் ஆரம்பித்து, கன்னம், மஸ்தகம் [சிரஸ்] இவற்றைச் சுற்றிக்கொண்டு, இடது பக்கம் தும்பிக்கை வழியாக இறங்கி, அதன் சுழித்த முடிவுக்கு வந்தால், இந்த அவுட்லைன், க்ரந்தாக்ஷர ‘ஓம்’ (தமிழ் ‘ஓ’ மாதிரி) இருக்கும். இடது பக்கம் தும்பிக்கையைச் சுழித்த பிள்ளையார் ரூபத்தில் இப்படி ப்ரணவ ஸ்வரூபம் கிடைக்காது. இது வலம்புரியின் விசேஷம்.

வலம்புரி விநாயக க்ஷேத்ரங்களில் கும்பகோணத்துக்குக் கிட்டேயிருக்கிற ‘திருவலஞ்சுழி’ என்றே பெயர் பெற்ற ஸ்தலம் விசேஷமானது. அதனுடைய மஹிமையைக் காட்ட ஒன்று சொல்கிறேன்.

மஹாராஷ்டிராவில் கணபதி உபாஸனை அதிகம். ஆரம்ப ஸ்வாமியான பிள்ளையார், முடிவிலே வரும் ஸ்வாமியான ஆஞ்ஜநேயர் ஆகிய இருவருக்கும் அங்கே ரொம்ப வழிபாடு நடக்கிறது. பிரிட்டிஷ் கெடுபிடியின் போது நம் ஜனங்களை ஒன்று கூட்டவே, திலகர் பிள்ளையாரை வைத்துத்தான் வழி கண்டுபிடித்தார். பிள்ளையார் சதுர்த்தியன்று பெரிசு பெரிசாக, கலர் கலராகப் பிள்ளையார் பொம்மைகள் பண்ணி ஊர்வலம் விடுகிறது என்று ஆரம்பித்து, இதனாலேயே பதினாயிரக் கணக்கான ஜனங்களைக் கூட்டம் கூட்டினார். மத விஷயம் என்பதால் வெள்ளைக்கார ராஜாங்கம் இதில் தலையிடவில்லை. (நம்முடைய ‘சொந்த ‘ராஜாங்கம் என்று சொல்லப்படுவது ஏற்பட்ட அப்புறந்தான் ஹிந்து மதம் ஒன்றின் விஷயத்தில் மட்டும் ஸர்க்கார் பிரவேசித்து என்ன வேண்டுமானாலும் செய்யலாமென்று இருக்கிறது. அது வேறு விஷயம்.) திலகர் நாளில் இப்படி ”கணேஷ் சதுர்த்தி” என்ற பெயரில் ஜனங்களை கூட்டிய பின் அவர்களுக்கு ஸ்வதந்திரப் பற்றை ஊட்டி தேசத் தலைவர்கள் பேசுவார்களாம்! இப்போதும் பம்பாய் மாதிரி ஊர்களில் பிள்ளையார் சதுர்த்தியென்றால் ஒரே அல்லோல கல்லோலந்தான். இப்படிப்பட்ட மஹாராஷ்டிராவில் காணபதர்கள் பூர்வத்தில் நிறைய இருந்திருக்கிறார்கள்.

காணபத்யம் என்பதாக கணபதியையே முழுமுதற் கடவுளாக வழிபடுகிற மார்க்கத்தைச் சேர்ந்தவர்களே காணபதர்கள். ஒரே வேதாந்த ஸமயத்தில் ஆறு பிரிவுகள். ஒரே நதியில் ஆறு துறைகள் மாதிரி. இதில் கணபதி உபாஸனையையே மோக்ஷ உபயமாகச் சொல்வது காணபத்யம். குமாரஸ்வாமி (முருகன்) உபாஸனையைச் சொல்வது கௌமாரம். அம்பாள் சக்தியின் உபாஸனையைச் சொல்வது சாக்தம். ஸூர்யனையே பரம்பொருளாகச் சொல்வது ஸெளரம். விஷ்ணுவைச் சொல்வது வைஷ்ணவமென்றும், சிவனைச் சொல்வது சைவமென்றும் தெரிந்திருக்கும். ஷண்மதங்கள் என்ற இந்த ஆறு உபாஸனாக்ரமங்களையும் சுத்தப்படுத்தி வைதிகமாக நிலைநாட்டியதாலேயே பகவத்பாதாளுக்கு [ஆதி சங்கரருக்கு] ஷண்மதப்ரதிஷ்டாபனாசார்யர் என்று பெயர்.

இதில் ஒன்றான காணபத்யம் அதிகம் அநுஷ்டானத்திலிருந்த மஹாராஷ்டிராவில் ‘அஷ்ட விநாயகர்’கள் என்ற எட்டுப் பிள்ளையார்களுக்கான எட்டு க்ஷேத்ரங்கள் இருக்கின்றன. அவர்களில் ‘மயூரேசர்’ என்ற பிள்ளையாருக்கும் அவர் இருக்கிற ‘மோர்காம்’ க்ஷேத்ரத்துக்கும் பிரஸித்தி ஜாஸ்தி. ‘மோர்காம்’ என்பது ‘மயூரக்ராமம்’ என்பதன் திரிபு. பிள்ளையாரைச் சுற்றி அவருடைய பரிவார தேவதைகள் இருக்க வேண்டிய க்ரமத்திலேயே மோர்காமைச் சுற்றிப் பரிவார தெய்வங்களின் கோயில்கள் இருக்கின்றன.

மயூரம் என்பது தமிழில் மயில் என்றும், வடக்கத்தி பாஷைகளில் மோர் என்றும் இருக்கிறது. ஸுப்ரம்மண்யர் தான் மயில் வாஹனர் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். புராணங்களின்படியும் தந்த்ர சாஸ்திரங்களின்படியும், நாம் மூஷிகவாஹனராகவே நினைக்கிற பிள்ளையாருக்கும் மயில் வாஹனத்தோடு ஒரு அவஸரம் (ரூப பேதம்) உண்டு. அவர்தான் மயூரேசர்.

மயூரேச க்ஷேத்ரமான மஹாராஷ்டிர மோர்காமின் க்ஷேத்ர புராணத்தில் நம் தமிழ்நாட்டுத் திருவலஞ்சுழியை உசத்திச் சொல்லியிருக்கிறது! ‘தசஷிணாவர்த்தம்’ என்று இதற்கு அங்கே பெயர் கொடுத்திருக்கிறது. ‘தக்ஷிண’–வல; ‘ஆவர்த்தம்’–சுழி. இந்த ‘தக்ஷிணாவர்த்தம்’தான் பிள்ளையாருடைய ராஜதானி, அதாவது Capital என்று சொல்லியிருக்கிறது.

திருவலஞ்சுழியில் சிவன் கோயிலில் ஒரு ஸந்நிதியாகத்தான் வலம்புரிப் பிள்ளையார் இருக்கிறார். அது தவிர கோவிலுக்கு வெளியே தனியாக ஒரு வெள்ளைப் பிள்ளையார் இருக்கிறார். அவர் இடம்புரிக்காரர்தான். ஆனாலும் ஏக ப்ரஸித்தியோடிருக்கிறார். இந்த ஸ்தலத்து ஈஸ்வரனை ஞானஸம்பந்தரும் அப்பரும் பாடியிருக்கிறார்கள். ஆனால் பிரஸித்தியெல்லாம் வெள்ளை பிள்ளையாருக்கே இருக்கிறது! அவர் இருக்கும் மண்டபம் ரொம்பவும் வேலைப்பாடு அமைந்தது. குறிப்பாக, அங்கேயிருக்கிற ஸலவைக்கல் பலகணியைச் சொல்ல வேண்டும்.

பழைய காலத்தில் கோயில் நிர்மாணிக்கிற சில்பிகள் வேலை ஒப்புக்கொண்டு முச்சிலிக்கா எழுதித்தருகிறபோது, ஐந்து தினுஸான நிர்மாணங்கள் தவிர பாக்கியெல்லாம் தாங்கள் செய்து தருவதாகக் குறிப்பிடுவார்களாம். அந்த ஐந்து மட்டும் தங்கள் திறமைக்கு அப்பாற்பட்டது என்று விட்டுவிட்டதாக அர்த்தம். ஆவுடையார்கோயில் கொடுங்கை, கடாரங் கொண்டான் மதில், தஞ்சாவூர் கோபுரம், திருவீழிமிழலை வெளவால் ஒட்டி மண்டபம் என்ற நாலோடு திருவலஞ்சுழிப் பலகணியும் ஐந்தாவதாக இந்த அற்புதங்களில் ஒன்றாக அந்த ஸ்தபதிகளால் சொல்லப்பட்டிருக்கிறது!

பதினாறு துளைகள் போட்டு, நுட்பமாக வேலைப்பாடு செய்து இந்தப் பலகணி அமைக்கப்பட்டிருக்கிறது. ‘ஷோடச கணபதி ‘என்று பிள்ளையார் மூர்த்தங்களில் பதினாறைச் சொல்வதற்கேற்ப இங்கே பதினாறு த்வாரங்கள் இருக்கின்றன. பதினாறுதான் பூர்ணத்வம். ஷோடச கலாபூர்ணம் என்பது.

பூர்ணமான ப்ரணவ ஸ்வரூபமாக விளங்கும் இந்த வெள்ளை விநாயகரை தேவேந்திரன் பூஜை பண்ணியதால் தான் க்ஷீரஸாகரத்தில் அம்ருதம் திரண்டு வந்ததாம். அந்த ஸாகரத்தின் பால் ஏட்டினாலேயே அவரைப் பண்ணியதால்தான் வெள்ளை வெளேரென்று இருக்கிறார். வெண்மை நிறத்தைக் கொண்டே அவருக்கு ‘ச்வேத விநாயகர்’ என்று பெயர். அவரைத் தொடாமலே பூஜை பண்ண வேண்டும். அங்கே பிரம்மோத்ஸவமே அவருக்குத்தான்; ஈச்வரனுக்கு இல்லை.

திருவலஞ்சுழியில் இன்னொரு விசேஷம். கோவிலுக்குள்ளே ஒரு விநாயகர் தும்பிக்கையை வலது பக்கம் சுழித்துக் கொண்டிருப்பது போலவே இங்கே காவேரியும் திரும்பி வலது பக்கமாக சுழித்து ஓடுகிறது!

காவேரிக்கும் விக்நேச்வரருக்கும் கிட்டின ஸம்பந்தமுண்டு. குடகு தேசத்தில், ஸஹ்ய பர்வதத்தில் அகஸ்தியர் கமண்டுலுவுக்குள் பொத்திப் பொத்தி வைத்துக் கொண்டிருந்த காவேரியைப் பிள்ளையார்தான் காக்காய் ரூபத்தில் வந்து கவிழ்த்துவிட்டு, லோகோபகாரமான புண்ய நதியாக ஓட வைத்தார். நம் தமிழ் நாட்டின் உடம்பு, உள்ளம் இரண்டையும் வளர்க்கிற காவேரியைக் கொடுத்தவர் என்பதற்காகப் பிள்ளையாரிடம் நாம் விசேஷமாக பக்தி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறோம்.

குடகிலிருந்து கர்நாடக தேசத்தைத் தாண்டித் தமிழ்நாட்டில் பாய்ந்த காவேரி கும்பகோணம் தாண்டினதும் ஒரு பிலத்துக்குள் மறைந்துவிட்டாளாம். அப்போது ஹேரண்டர் என்ற மஹரிஷி பரம கருணையோடு தம்மையே பலி கொடுத்துக்கொண்டாராம். உடனே காவேரி பிலத்துக்குள்ளேயிருந்து பொங்கிக் கொண்டு வெளியிலே வந்து இந்தப் பிள்ளையார் க்ஷேத்ரத்தைப் பிரதக்ஷிணமாக, வலப் பக்கம் சுழித்துக் கொண்டு மேலே ஓடினாளாம்.

தலைக்காவேரியில் கன்னங்கரேலென்று காக்காயாக வந்தவர் இங்கே வெள்ளை வெளேரென்று காட்சி தருகிறார்!

”ப்ரணவ ஸ்வரூப வக்ர துண்டம்” என்கிறபடி இங்கேயே இன்னொரு மூர்த்தி வலம்புரியாக இருக்க, தீர்த்தமும் வலப்பக்கமாக ஓடுகிற பெருமை திருவலஞ்சுழிக்கு இருக்கிறது.

வலம்புரி விநாயகரை — அவர் இடம்புரியாகக் கோயில் கொண்டிருக்கிற இடங்களிலும் ப்ரணவ ஸ்வரூபி என்றே புரிந்துகொண்டு — நாம் வலம் வந்து வணங்கி எல்லா நலமும் பெறுவோமாக!

Previous page in  தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is எழுத்துப் பணியில் விநாயகர் தொடர்பு
Previous
Next page in தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is  'ஆசார்ய' இலக்கணம்
Next
htmltitle
UPDATE on 13 July 2017:

Thanks to the devotees at dheivathinkural.wordpress.com, many corrections have been incorporated on these pages. If you find an error, please help us by reporting it