வேதத்தில் சிவநாமத்தின் ஸ்தானம் : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

விலையுயர்ந்த ரத்னமொன்று நம்மிடமிருந்தால் வீட்டிலே எங்கே வைப்போம்? வாசல் புற ரூமில் வைப்போமா? தோட்டத்தைச் சேர உள்ள ரூமில் வைப்போமா? ரொம்பவும் காபந்தாக மத்தியில் இருக்கிற ரூமில் இரும்புப் பெட்டியில்தான் வைப்போம். அப்படியே வேதத்தில் ஜீவரத்னமான சிவநாமத்தை ரொம்பவும் ஜாக்ரதைப்படுத்தி வைத்திருக்கிறது. நாலில் மத்தி இரண்டாவது. நாலு வேதங்களில் இரண்டாவது யஜுஸ். அதர்வவேதத்தைச் சேர்க்காமல் ரிக், யஜுஸ், ஸாமம் என்ற மூன்றை மட்டும் ‘த்ரயீ’ என்பதுண்டு. அப்போதும் ரிக்குக்கும் ஸாமத்துக்கும் நடுவில் வருவது யஜுஸே. யஜுஸிலேயே சுக்ல யஜுஸ், க்ருஷ்ண யஜுஸ், என்று இரண்டு இருப்பதால் நாலு வேதத்தை நாலு வேதத்தை ஐந்து என்று ஆக்கினாலும் ரிக், சுக்ல யஜுஸ், க்ருஷ்ண யஜுஸ், ஸாமம், அதர்வம் என்ற ஐந்தில் நட்ட நடுவாக வருவது மூன்றாவதான க்ருஷ்ண யஜுஸ்தான் இந்த க்ருஷ்ண யஜுர் வேதத்தில் மத்ய பாகம் அதன் நாலாவது காண்டம். அந்தக் காண்டத்தின் மத்யம் ஐந்தாவது ப்ரச்னம். இதிலேதான் நடுவில் ஸ்ரீ ருத்ர ஸூக்தம் எனப்படுவதில் நடுநாயகமாக பஞ்சாக்ஷரம் வருகிறது. அந்த பஞ்சாக்ஷரத்துக்கும் மையமாக ‘சிவ’ என்ற த்வயக்ஷரம் இருக்கிறது.

உடம்பை மெய் என்கிறோம். அதிலே இருக்கிற பரமாத்மாவை மெய்ப்பொருள் என்பார்கள். ஸத்வஸ்து என்று வேதாந்தத்தில் சொல்வதைத் திருவள்ளுவர் அப்படியே தமிழில் ‘மெய்ப்பொருள்’ என்கிறார். வேதங்களையெல்லாம் ஒரு சரீரமாக – மெய்யாக – வைத்துக் கொண்டால் அதில் உயிராக, மெய்ப்பொருளாக இருப்பது சிவநாமா. உயிர் என்னும் பரமாத்மா இருக்கும் ஸ்தானம் ஹ்ருதயம் என்றால், அந்த ஹ்ருதயம் சரீர மத்தியில்தான் இருக்கிறது. இதைத்தான் ஞானஸம்பந்தரும் சொல்கிறார்.

வேத நான்கினும் மெய்ப்பொருளாவது

நாத(ன்) நாமம் நமச்சிவாயவே

வீட்டுக்கு நடுவே காபந்தாக இருக்கும் ரத்னம் போல வேத சரீரத்தின் நடுவே அதன் ஜீவரத்னமாக உயிர் கொடுத்துக்கொண்டு சிவ நாமாவாகவே பரமாத்மா இருக்கிறார். இந்த அபிப்ராயத்தையே அப்பைய தீக்ஷிதர் ப்ரஹ்ம தர்க்க ஸத்வத்தில் (ஸ்லோ. 27) “யஜ்-ஜீவ ரத்நம் அகிலாகம லாலநீயம்” என்கிறார்.

Previous page in  தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is சிவ நாம மஹிமை!சிவன் தரும் மஹிமை
Previous
Next page in தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is  அனைவருக்குமான நாமம்
Next