Page load depends on your network speed. Thank you for your patience. You may also report the error.

Loading...

நரகவாஸிக்கும் நலன் : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

நரகத்தில் இருப்பவர்களுக்குக்கூட, நம் சாஸ்திரப்படி பரோபகாரம் நடக்கிறது.

திவஸமும், தர்ப்பணமும் செய்கிறபோது பூலோகத்திலோ வேறு எங்கோ, எந்த ரூபத்திலோ பிறந்திருக்கிற நம் மூதாதைகளுக்கு அது க்ஷேமத்தைக் கொடுக்கிறது. இங்கே நாம் கொடுக்கிற எள், தண்ணீர், பிண்டம் முதலானவைகளைப் பித்ரு தேவதைகள் நம் மூதாதைகள் எந்த ரூபத்தில் எங்கே பிறந்திருந்தாலும், அதற்கேற்ற ஆஹாரமாக மாற்றி அங்கே கிடைக்கச் செய்து விடுவார்கள். நம் நாட்டு ரூபாயை வெளிதேசக் கரன்ஸியாக்க எக்ஸ்சேஞ்ச் பாங்க் இருக்கிற மாதிரி பித்ரு தேவதைகள் இப்படி ஆஹாரத்தை மாற்றிக் கொடுக்கிறார்கள்.

இந்த தேசாசாரம் ஜனங்களின் ரத்தத்தில் அடியோடு வற்றிப் போய்விடாததால் இன்னமும் அநேகமாக எல்லாரும் ரொம்பச் சுருக்கமாகவாவது பித்ரு கார்யங்கள் திவஸம், தர்ப்பணம் முதலியவற்றைச் செய்து வருகிறார்கள். ஆனால் சிரத்தைதான் போய்விட்டது. பித்ரு காரியங்களுக்கு ‘ச்ராத்தம்’ என்று பேர் இருப்பதே அதற்கு ச்ரத்தை முக்யம் என்பதால்தான். ச்ரத்தை இருந்தால் இப்படி சுருக்கமாகவும், குறுக்கியும், ச்ராத்தகாலம் தப்பியும் பண்ணுவது போலில்லாமல் யதோக்தமாக, புஷ்களமாக நடக்கும். பலனும் ப்ரத்யக்ஷமாகத் தெரியும். என்ன பலன் என்றால் சொல்கிறேன். இப்போது பெரும்பாலோர் ஏதோ ஒப்புக்குத்தான் பித்ரு கார்யங்கள் பண்ணுகிறார்கள். பாக்கியிருப்பவர்களோ மேலும் துணிந்து ‘ஸூப்பர்ஸ்டிஷன்’ என்றே இவற்றை அடியோடு நிறுத்தியிருக்கிறார்கள். இதன் விபரீத பலன் எனக்குத்தான் தெரியும். அநேக வீடுகளில் சித்தப்பிரமம், அபஸ்மாரம் (காக்காய் வலிப்பு) , இன்னும் போன தலைமுறைகளில் கேள்வியே படாத அநேக ரத்த வியாதிகள், nervous disease- களுடன் அநேகர் அவஸ்தைப் பட்டுக் கொண்டு ஜோஸ்யர், ஆரூடக்காரர், மாந்த்ரிகர் எல்லாரிடமும் போய்விட்டு என்னிடம் வருகிறார்களே – இந்த கஷ்டங்களுக்குப் பெரும்பாலும் காரணம் பித்ரு கார்யங்களை விட்டு விட்டதுதான். ”மாதா பிதாக்கள் உயிர் போனபின் அவர்களுக்காக மக்கள் செய்யாதது மக்களைத் தாக்கும்” என்றும் புரிந்து கொள்ள வேண்டும். அப்பாவும், அம்மாவும் மற்ற வம்ச முதல்வர்களும் எங்கேயாவது கோபித்துக் கொண்டு சபிப்பார்களா என்று கேட்கக் கூடாது. பித்ருக்கள் சபிக்காமலிருக்கலாம். ஆனால் பித்ரு தேவதைகள் இருக்கிறார்களே, அவர்கள் இந்தப் பின் தலைமுறையினர் தங்கள் மூலமாக முன்னோர்களுக்கு எள்ளோ, தண்ணியோ, அன்னமோ அளிக்கவில்லையே என்பதைப் பார்த்துச் சபித்துவிடுவார்கள். ஆனபடியால் நாமும் நம் பின்ஸந்ததியும் நன்றாயிருக்கவே முன் தலைமுறையினருக்கு திவஸ தர்ப்பணாதிகள் பண்ணத் தான் வேண்டும். அதாவது இங்கே பரோபகாரத்தோடு ஸ்வய உபகாரமும் சேருகிறது.

செத்துப் போனவுடனேயே எல்லாரும் மறுபடியும் இந்த பூலோகத்திலேயே பிறந்து விடுவதில்லை. நன்றாக வேலை செய்தால் இன்க்ரிமென்ட் மட்டுமல்லாமல் போனஸும் தருகிறார்கள் அல்லவா?ரொம்ப நன்றாகச் செய்தாலோ ப்ரமோஷனே கொடுத்து மேலே தூக்கி விடுகிறார்கள். வேலையில் தப்புப் பண்ணினால் இன்கிரிமென்டை நிறுத்தி விடுகிறார்கள். பெனல்டி (அபராதம்) விதிக்கிறார்கள். ரொம்ப மோசமாகப் பண்ணினால் கீழே வேலைக்கே தள்ளி விடுகிறார்கள். இதேபோல், புண்யம் பண்ணினவர்களுக்கு, இன்கிரிமென்ட் மாதிரி இந்த பூலோகத்தில் ஸெளக்கியமான இன்னொரு ஜன்மா கிடைப்பதற்கு முன்னாடி ஒரு போனஸ் கிடைக்கிறது. ஸ்வர்க வாஸம்தான் இந்த போனஸ். ரொம்பப் புண்யம் பண்ணியிருந்தால் ஸ்வர்க்க லோகத்துக்கே நிரந்தரமான ப்ரமோஷன். இப்படியே பாபம் பண்ணினவர்கள் முதலில் பெனல்டியாக நரக லோகத்தில் வஸிக்க வேண்டும். அப்புறம் இன்க்ரிமென்ட் இல்லாத மாதிரி பூலோகத்தில் கஷ்டத்திலே பிறக்க வேண்டும். ரொம்பப் பாபம் பண்ணினால் கீழ் வேலைக்கே போகவேண்டியது – நிரந்தர நரகவாஸம்.

தர்ப்பணம், திவஸம் இவற்றின் பலன் நரகலோகம் தவிர மற்ற லோகங்களில் உள்ளவர்களையே சேரும். ஸ்வர்க்கத்திலேயே பல தினுஸுகள்; பல லோகங்கள். தேவலோகம், கந்தர்வ லோகம், வித்யாதர லோகம் என்று இப்படி நரகத்திலும் தாமிஸ்ரம், அந்ததாமிஸ்ரம், புத், ரௌரவம் என்று பல உண்டு. நாம் இறைக்கிற எள்ளும் தண்ணீரும், கொடுக்கிற பிண்டமும் இப்படிப்பட்ட லோகங்களிலுள்ள நரகவாஸிகளுக்குப் போய்ச் சேராது.

ஒரு தேசத்துக்கும் இன்னொரு தேசத்துக்கும் சண்டை ஏற்பட்டுவிட்டால், அப்போது பணம் எக்ஸ்சேஞ்ச் பண்ணி எதிரி தேசத்துக்கு அனுப்பவே முடிவதில்லையல்லவா? இப்படி நரகவாஸிகளுக்காகப் பித்ரு தேவதைகள் ஆஹார எக்ஸ்சேஞ்ச் பண்ணுவதில்லை.

இப்படிப்பட்ட நரகவாஸிகளான மஹா பாபிகளிடமும் நம்முடைய ரிஷிகளுக்கு மனஸ் உருகி, அவர்களுக்கும் க்ஷேமம் உண்டாக்குவதற்காக மந்த்ர பூர்வமாக சில வஸ்துக்களைக் கொடுக்கச் சொல்லி ஏற்பாடு பண்ணியிருக்கிறார்கள். சுத்தமான வஸ்துக்களை அவர்களுக்கு நாம் சேர்க்க முடியாது. ஆனால் சில அசுத்த வஸ்துக்களே அவர்களுடைய மஹா கஷ்ட நிலையில் ஆஹாரமாக அவர்களுக்குக் கிடைக்கலாம் என்று பகவான் வைத்திருக்கிறான்;நாம் வேஷ்டியை பிழிகிற அழுக்கு ஜலம், குளிக்கிறபோது நம் சிகை வழியாக வருகிற ஜலம் இவை எல்லாம் நரகத்திலுள்ளவர்களுக்கு ஆஹாரமாக மாறி, அவர்களுடைய மஹா கஷ்டத்தில் கொஞ்சம் கொஞ்சம் ஸுகம் தருகின்றன. அவர்களை உத்தேசித்து நாம் அன்பான பாவனையோடு துணியைப் பிழிந்தால், குடுமி ஜலத்தைப் பிழிந்தால், இந்தப் பலன் அவர்களுக்குக் கிடைக்கும். மந்த்ரமும் சொல்லி இந்தக் காரியங்களைச் செய்ய அதிகாரம் பெற்றவர்கள் அப்படியே செய்ய வேண்டும். சாப்பிட்டு முடிந்தபின் எச்சில் கை ஜலத்தை இலைக்கு வலது பக்கத்தில் மந்த்ரம் சொல்லி விட்டால் அது நரகங்களிலேயே ரொம்பக் கொடூரமாக ரௌரவத்தில் எத்தனையோ கோடி வருஷங்களாக இருப்பவர்களின் தாஹத்தை தீர்க்க உத்வுகிறது. ஆந்திரர்கள் உத்தராபோஜனத்துக்குப் பின் இதைத் தவறாமல் பண்ணுகிறார்கள். இப்படி எச்சிலையும், அழுக்கு ஜலத்தையும் ஒருவருக்குத் தருவதா என்று நினைக்க வேண்டாம். நரக வாஸத்தில் அவர்கள் இருக்கிற ஸ்திதியில் இதுவேதான் அவர்களுக்குப் பிடித்தமானதாக இருக்கும். நம் லோகத்திலேயே வராஹத்தைப் பார்க்கவில்லையா? கரப்பான்பூச்சி முதலானவை அழுக்குகளையே தின்னவில்லையா?

நாம் பண்ணும் பாபத்தையெல்லாம் எத்தனையோ கருணையோடு மன்னிக்கும் பகவான் இப்படி ஒருத்தரை ரௌரவத்தில் போட்டு வதைக்கிறான் என்றால் அவர்கள் செய்திருக்கிற பாபம் ரொம்பவும் பயங்கரமாயிருந்திருக்க வேண்டும். அப்படிப்பட்டவர்களுக்குங்கூட தாஹம் தீரட்டும், தாபம் தணியட்டும் என்று நினைத்து அதற்கான வழியைச் சொல்கிறது. நம் தர்ம சாஸ்த்ரம்.

பௌத்த மதம், கிறிஸ்தவ மதம் மாதிரி நம் மதத்தில் ஜீவகாருண்யத்துக்கு முக்கியத்துவம் தரவில்லை என்று தப்பாக நினைக்கிறவர்கள் இதையெல்லாம் கவனிக்க வேண்டும்.


Previous page in  தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is கார்த்திகை தீப தத்வம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is  வேதசாஸ்த்ரஙளில் தானதர்மம்
Next
htmltitle
UPDATE on 13 July 2017:

Thanks to the devotees at dheivathinkural.wordpress.com, many corrections have been incorporated on these pages. If you find an error, please help us by reporting it