சாச்வதச் சட்டமும் தாற்காலிக மாறுதல்களும் : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

எடுத்ததற்கெல்லாம் தன்னிஷ்டப்படிச் சட்டம் செய்ய இடமுள்ளபோதுதான் யதேச்சசாதிகாரத்துக்கு இடம் கொடுத்துப் போகும். பழைய காலத்தில் ‘மானார்க்கி’தான் நடந்ததென்றாலுங்கூட ராஜாக்களுக்கு இப்படி நினைத்த மாதிரியெல்லாம் சட்டம் செய்ய ‘அதாரிடி’ இருக்கவில்லை என்பது தெரியாததால்தான் ‘க்ரிடிஸைஸ்’ செய்கிறார்கள். க்ரிடிஸைஸ் செய்பவர்கள் கவனிக்க வேண்டிய விஷயமென்னவென்றால், அடிப்படைச் சட்டங்கள் யாவும் தர்ம சாஸ்திரத்திலும் அர்த்த சாஸ்திரத்திலும் எழுதி வைக்கப்பட்டவையாகவே இருந்துவிட்டன. சாச்வத வாழ்க்கைக்கு ஒரு துணை உபாயமாக இந்த தார்மிகச் சட்டங்கள் இருப்பதால் இவையும் சாச்வதம்தான் என்ற நம்பிக்கையும் பிடிப்பும் எல்லா ராஜாக்களுக்கும் இருந்தன. வைதிகத்தையும், ஆஸ்திக்யத்தையும், தர்மத்தையும் விருத்தி செய்வதே ராஜாவின் பொறுப்பு என்று சின்ன வயஸில் குருகுல வாஸத்திலேயே அரச குமாரர்களுக்கு ஆழமாக போதிக்கப்பட்டிருந்தது. ‘இந்த சாச்வத ஸத்யங்களைப் பழைய சாஸ்திரங்களின் சட்டங்களையே சாச்வதமாகப் பின்பற்றினால்தான் அடைய முடியும்; கொஞ்சமும் ஸ்வயநலம் கலக்காமல், லோகத்தின் நிரந்தர க்ஷேமத்திற்கென்றே ரிஷிகள் கொடுத்துள்ள விதிகளை அவர்களுடைய நிலைக்கு எவ்வளவோ கீழே உள்ள நாம் மாற்றப்படாது’என்று ஒரு ராஜா வித்யாப்யாஸத்தின் போதே ‘கன்வின்ஸ்’ பண்ணப்பட்டிருப்பான். அதனால், இந்த சாஸ்திரங்கள், நடைமுறைத் தேவைகள் ஆகிய இரண்டையும் நன்றாயறிந்த மந்திரிகளின் துணையுடன் அவன் ஆட்சி பண்ணும்போது கால, தேச, வர்த்தமானங்களின் நிர்ப்பந்தத்தினால் சாஸ்திரச் சட்டங்களில் எங்கே மாறுதல் தேவைப்படுகிறதோ அங்கே மட்டும் கொஞ்சம் பண்ணிப் புது ‘ரூல்’ போடுவான். மாறுதல் என்றால் முழுக்க change பண்ண மாட்டான்; கொஞ்சம் modify மட்டும் பண்ணுவான். சாஸ்திரத்திலேயே அவ்வப்போது வருகிற ராஜாவின் discretion -க்கு (ஸமயோசித புத்திக்கு) என்று விட்டிருக்கிற இனங்களில்தான் சட்டம் போடுவான். ‘தேர்ச் சக்கரம் பாதையை விட்டுக் கொஞ்சங்கூட விலகாத மாதிரி மநு தாமத்தை விட்டு விலகாமலே திலீபன் ஆட்சி பண்ணினான்’ என்று காளிதாஸன் சொல்வது* அக்காலத்தில் பொதுவாக எல்லா ராஜாங்கத்தின் நடைமுறையையும் reflect பண்ணுவதுதான்.

‘ஸெக்யூலரிஸம்’ என்பதை இப்போது நடத்துகிற மாதிரி நடத்துகிறபோது சாச்வத தர்மத்தைப் பற்றி நினைக்க இடமேயில்லை. மாறிக்கொண்டேயிருக்கிற நடைமுறை வாழ்க்கை நலனை, மாறி மாறிப் பலவிதமாக நினைக்கிறவர்கள் ரக்ஷித்துக் கொடுப்பதே ராஜாங்கம் என்று ஆகிறபோது, சட்டங்களும் மாறிக்கொண்டேயிருக்கின்றன. தார்மிகச் சட்டங்கள் எத்தனையோ ஆயிரம் வருஷங்கள் இந்த தேசத்தில் மாறாமல் பின்பற்றப்பட்டிருக்க, ‘அர்த்தம்’ என்கிற தற்காலிக விஷயத்தையே லக்ஷ்யமாகக் கொண்ட இன்றைய ஜனநாயக அரசாங்கங்களின் சட்டங்கள் அவ்வப்போது ஆட்சிக்கு வருகிறவர்களின் இஷ்டப்படி தினம் தினம் மாறுகின்றன.

புரோஹிதர், குலகுரு, மந்திரி-அமாத்யர்-ஸசிவர் என்கிற பலவிதமான ஆலோசகர்களைக் கலந்து கொண்டும், ஒவ்வொரு ஸமுதாயத்துக்குமான பிரதிநிதிகளைக் கொண்ட ஸபைகளின் அபிப்ராயங்களைக் கருத்தில் கொண்டும், ஏற்கனவே ஏற்பட்டுள்ள ராஜநீதி சாஸ்திரச் சட்டங்களை ஆதாரமாகக் கொண்டும்தான் ராஜாக்கள் ஆண்டார்களே தவிர, யதேச்சாதிகாரம் பண்ணவேயில்லை. ஸ்தல ஸ்தாபன ஆட்சி என்று இப்போது வார்த்தையில் சொல்கிறபடி நிஜமாக அங்கங்கே பஞ்சாயத்து ராஜ்யம் நடந்தது பழங்காலத்தில்தான். ஸூபர்வைஸர் மாதிரிதான் ராஜா மேற்பார்வை பார்த்து வந்தான். யுத்தம், ராணுவ ஸமாசாரத்தில்தான் மத்ய ராஜாங்கத்துக்கு அதிகாரம் நிறைய இருந்தது. கோயில் குளம் கட்டுவது, சிஷ்டர்களையும் வேத வ்யுத்பன்னர்களையும், பல கலைகளைச் சேர்ந்தவர்களையும் மானியம் தந்து ஆதரிப்பது முதலானவையே ‘ஸிவில்’ விஷயங்களில் ராஜாவின் முக்ய கார்யமாயிருந்தது. மற்ற ‘ஸ்வில்’ விஷயங்கள் ஸ்தல ஸ்தாபானங்களின் ஆலோசனைகளை முக்யமாகக் கொண்டே கவனிக்கப்பட்டன.

அவ்வப்போது ஆட்சி செய்யும் ராஜாக்கள் பழைய ஆதாரச் சட்டத்தை அநுஸரித்தே அவசியமான இடத்தில் புது ரூல் போடலாம் என்பது அக்காலத்தில் பின்பற்றியமுறை. அவ்வப்போது ஆட்சியதிகாரத்திலிருப்பவர்கள், தங்களுக்கு இஷ்டமானபடி, தங்களுக்கு அநுகூலமானபடி எப்படியெல்லாம் அபிப்ராயப்படுகிறார்களோ, அப்புறம் இந்த ஐடியாலஜியையும் எப்படியெல்லாம் மாற்றிக் கொள்கிறார்களோ அதன்படி ‘லா’க்கள் பண்ண வேண்டும் என்பதற்காக, இதற்கு அநுகூலமாக ஆதாரச் சட்டத்தையே மாற்றிவிட வேண்டுமென்பது இப்போதைய நடைமுறை! வருஷா வருஷம் கான்ஸ்டிட்யூஷனுக்கு அமென்ட்மென்ட்! இது ஜனநாயகம்! பழைய முறை யதேச்சாதிகாரம்!


*“ரகுவம்சம்” 1.17

Previous page in  தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is அர்த்த சாஸ்த்ரமும் தர்ம சாஸ்த்ரமும்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is  அரசனுக்கிருந்த கட்டுப்பாடுகள்
Next