Page load depends on your network speed. Thank you for your patience. You may also report the error.

Loading...

ஆழப் பதியும் ஆற்றல் : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

நவரஸங்களை ஈஸ்வரபரமாகச் சேர்த்து, தர்மத்தோடு சேர்த்து ராமாயணம், மஹாபாரதம், புராணங்களையும், மஹான்களுடைய சரித்ரங்களையும் நாடகமாகப் போட்டால் அதற்கு மனஸிலே புகுந்து வேலை செய்யும் சக்தி அதிகம். ‘ஸோஷல் தீம்’, அது, இது என்று கெட்டதற்கு நாடகக் கலையைப் பிரயோஜனப்படுத்துவது நம் தப்புத்தான். காந்தி சொல்லியிருக்கிறார், “ச்ரவண பித்ருபக்தி நாடகம்” என்று சின்ன வயஸில் அவர் பார்த்த ட்ராமா அவர் மனஸில் ஆழப் பதிந்துவிட்டதாக. பித்ரு பக்தி பற்றி எத்தனை வியாஸம் படித்தாலும், உபதேசம் கேட்டாலும் இப்படி ஜீவனுள்ள பாத்ரங்கள் அதை நடித்துக் காட்டுவதில் ஏற்படுகிற மாதிரி deep impression உண்டாக்க முடியுமா?

பாரதக் கதை சொல்வதையும் பாரதக் கூத்தாடுவதையும்தான் பொது ஜனங்களின் தர்மாபிவிருத்திக்கான மிகப் பெரிய பணியாகப் பழைய கால ராஜாக்கள் கருதி அதற்கு ஸகல வசதிகளும், மான்யங்களும் கொடுத்துப் பேணியிருக்கிறார்கள் – பல்வேறு இடங்களை, பல நூற்றாண்டுகளைச் சேர்ந்த கல்வெட்டுகளைப் பார்த்தாலே தெரியும். காதால் கானத்தோடு கேட்கிறதற்குப் பேச்சையும் எழுத்தையும்விட அதிகம் சக்தி உண்டு. இதைவிடவும் ‘visual art’ என்பதாகக் கண்ணாலும் பார்ப்பதற்கு இன்னும் ஜாஸ்தி சக்தி இருக்கிறது. பேச்சு, பாட்டு ஆகியவற்றோடு சேர்ந்த நாடகம், பாட்டோடு மட்டும் சேர்ந்த நாட்டியம் ஆகிய இரண்டு காட்சிக் கலைகளுக்கு இப்படி விசேஷமான சக்தி இருக்கிறது.

“க்ருஷ்ண கர்ணாம்ருத”த்தில் ஒரு ஸ்லோகம்,

கஸ்தூரீதிலகம் லலாட பலகே வக்ஷஸ்தலே கௌஸ்துபம்

நாஸாக்ரே நவ மௌக்திகம் கரதலே வேணும் கரே கங்கணம் |

ஸர்வாங்கே ஹரிசந்தநம் ச கலயன் கண்டே ச முக்தாவளிம்

கோபஸ்த்ரீ-பரிவேஷ்டிதோ விஜயதே கோபாலசூடாமணி: ||

என்று இருக்கிறது. பாலக்ருஷணன் நெற்றியிலே கஸ்தூரிப் பொட்டும், மார்பிலே கௌஸ்துப மணியும், மூக்கு நுனியில் முத்துப் புல்லாக்கும், உள்ளங் கையிலே புல்லாங்குழலும், மணிக்கட்டிலே கங்கணமும், கழுத்தில் முக்தாஹாரமும், ஸர்வாங்கங்களிலும் சந்தனப் பூச்சும் தரித்துக்கொண்டு, இடையர் குலத்துக்கே முடிமணியாக கோபிகா ஸ்த்ரீகள் புடைசூழப் பிரகாசிக்கிறான் என்று இது வர்ணிக்கிறது. இதை வாயால் சொல்லி, காதால் கேட்டு மனக்கண்ணிலே சித்ரமாகக் கொண்டு வந்தால் ஏற்படுகிற ஆனந்தத்தை விடப் பன்மடங்காக ஒரு தேர்ந்த நடீயானவள் பக்தியுள்ளத்தோடு அபிநயம் பிடித்து ஆடிக் காட்டினால் உண்டாய்விடும். ராதையோ யசோதையோ கிருஷ்ணனுக்கு இப்படித் திலகமிட்டு, சந்தனம் பூசி, கங்கணம் ஹாரம் புல்லாக்கு முதலானவற்றைப் போட்டுவிடுவதாக பக்திக் கல்பனையில் அபிநயித்துக் காட்டினால் பரவசமாயிருக்கும்.

புல்லாக்கைப் பற்றிச் சொல்கிறேன். ஸ்த்ரீ ரூபங்களில் ரொம்ப அழகு லலிதாம்பிகை; புருஷர்களில் ரொம்ப அழகு ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி; இந்த இரண்டு பேரின் அழகும் சேர்ந்து, ஸ்த்ரீ புருஷ ஸெளந்தர்யம் முழுக்க வாய்ந்தவர் கிருஷ்ணர் என்று ஒரு ஸ்லோகமிருக்கிறது. இப்படி ஸ்திரீ லக்ஷணமும் அவரிடம் இருப்பதால்தான் நகைகளில் புல்லாக்கையும் சொல்லியிருக்கிறது.

இந்த நகைகளையும், இன்னும் இதில் சொல்லாமல் விட்ட மயில்பீலி, மகரகுண்டலம், பீதாம்பரம், தண்டை, கொலுஸு எல்லாவற்றையும் சேர்த்துக்கொண்டு ஆடிக் காட்டினால், இவற்றைச் சூட்டுகிற ராதையின் ப்ரேமை அல்லது யசோதையின் வாத்ஸல்யம், அதற்குப் பாத்திரமாகிற க்ருஷணனின் குறும்பு, கருணை முதலான பாவங்கள் ஆகியவற்றையும் அபிநயித்துக் காட்டினால் நாம் அந்த க்ருஷ்ண லோகத்துக்கே போய்விட்ட உணர்ச்சியை உண்டாக்கி விடலாம். கோபிகா ஸ்திரீகள் மாத்திரமின்றி நாமும் புடைசூழ நமக்கு நடுவிலேயே பகவான் இருக்கிறாற் போன்ற அநுபவத்தை அடைந்துவிடலாம். க்ருஷ்ண கர்ணாம்ருதம் நேத்ராம்ருதமாகக் கண்ணுக்கும், ஹ்ருதயாம்ருதமாக உள்ளத்துக்கும் தித்திக்கும்.

நல்லது, கெட்டது இரண்டையும் மனஸில் ஆழப் பதிப்பதற்கு காந்தர்வ வித்யைகளுக்கு சக்தி இருக்கிறது. நாம்தான் புத்திசாலிகளாக இவற்றில் நல்லதை மட்டும் பெறும்படியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

ஆபாஸமாகச் சித்திரம் போடலாம்; சிலை பண்ணி வைக்கலாம். அது மனஸைத் தீவிரமாகக் கலக்கத்தான் செய்யும். இதற்குப் பதில் ஒரு தெய்வ ரூபத்தைச் சித்திரமாகப் போட்டுப் பார்த்தால், ஸாக்ஷாத் அம்பாளுக்கு ஒரு விக்ரஹம் பண்ணிப் பார்த்தால் எவ்வளவு பாராயணம், தியானத்திலும் உண்டாகாத பக்தியும் ஆனந்தமும் இதன் தர்சனத்திலேயே பெறலாம்.

ஸெளந்தர்ய லஹரி ஸ்லோகமிருக்கிறது; தேவராம், ஆழ்வார் பாசுரம், தாயுமானவர் பாடல் இப்படித் தமிழில் கணக்கு வழக்கில்லாமல் தெய்வ ஸம்பந்தமான அநுபவ வாக்குகள் இருக்கின்றன. இவற்றை வெறுமே படித்தாலே மனஸைத் தொடுகின்றன. ஆனால் பாவமறிந்து, அதற்குப் பொருத்தமாக ராகம் போட்டு கானம் செய்துவிட்டாலோ நம் கல் நெஞ்சுகூடக் கரைந்து போகிறது.

Previous page in  தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is அழகுணர்ச்சி ஆன்மாநுபவம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is  தேவார திவ்யப் பிரபந்த மரபுகள்
Next
htmltitle
UPDATE on 13 July 2017:

Thanks to the devotees at dheivathinkural.wordpress.com, many corrections have been incorporated on these pages. If you find an error, please help us by reporting it