ரந்தி தேவன் : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

ரந்திதேவன் என்பவன் சந்திர வம்சத்தில் வந்த ராஜா. இவன் ஏகப்பட்ட யாகயஜ்ஞாதிகளைச் செய்த விஷயம் மஹாபாரதத்தில் வருகிறது. இப்படிக் கர்மாநுஷ்டத்திலேயே ஈடுபட்டிருந்ததால் இவனுக்கு ஜீவகாருண்யம் வற்றிவிடவில்லை என்கிற கதையை ஸ்ரீமத் பாகவதம் சொல்கிறது.

பழைய சாஸ்திரங்களில் ‘இஷ்டம்’, ‘பூர்த்தம்’, என்று ஜனங்கள் அநுஷ்டிக்க வேண்டிய இரண்டு விஷயங்களைச் சொல்லியிருக்கிறது. இவற்றில் ‘இஷ்டம்’ அல்லது ‘இஷ்டி’ என்பது யாக யஜ்ஞாதிகள். தசரதன் புத்ர காமேஷ்டி பண்ணினான் என்கிறோமே, அது புத்ர காம இஷ்டி தான் – அதாவது பிள்ளையை விரும்பிச் செய்த இஷ்டி (யாகம்) .

‘பூர்த்தம்’ என்பது என்னவென்றால், அதுதான் தற்காலத்தில் ரொம்பப் பேர் நம் மதத்தில் இல்லாதது என்று நினைக்கிற ஸோஷல் ஸர்வீஸ். கிணறு-குளம் வெட்டுவது, ரோடு போடுவது, கோயில் கட்டுவது முதலிய ஸமூஹப் பணிகளுக்குப் ‘பூர்த்தம்’ என்று பேர். இஷ்டம் செய்யச் சில பேருக்குத்தான் அதிகாரம் உண்டு. அது ரொம்பக் கஷ்டம்கூட! நியமங்கள் ஜாஸ்தி. பூர்த்தம் இப்படியில்லை. பாமர ஜனங்களிலிருந்து ச்ரௌதிகள் வரையில் ஏழை-பணக்காரன், அந்த-ஜாதிக்காரன் இந்த ஜாதிக்காரன் என்கிற பேதம் கொஞ்சம்கூட இல்லாமல் ஸகல ஜனங்களும் ஒன்று சேர்ந்து பண்ண வேண்டியதே பூர்த்தம். பூர்த்தத்தைப் பற்றிப் பின்னால் இன்னும் சொல்கிறேன். இப்போது ரந்திதேவன் கதையைப் பார்க்கலாம்.

இந்த ரந்திதேவன் யஜ்ஞங்கள் செய்து ஏகமாக தக்ஷிணை கொடுத்து, தானம் பண்ணினான். அவனுடைய கஜானா முழுக்கக் காலியாகி விட்டது. ஒரு செல்லாக் காசு பாக்கியில்லை. அப்படி வாரி வாரி, ”தேஹி” என்று வந்தவர்களுக்கெல்லாம் ”நாஸ்தி” என்று சொல்லாமல் தானம் பண்ணிவிட்டான்.

அப்போது பகவான், மஹாவிஷ்ணு, ஒரு சோதனை பண்ணினார். ராஜ்யத்திலே பெரிய பஞ்சம் வரும்படியாகப் பண்ணிவிட்டார். நியாயமாகப் பார்த்தால் யஜ்ஞம் செய்வதே மழை, தான்ய ஸம்ருத்திக்காகத்தான், இப்போது நேர்மாறாக ஒரே பஞ்சமாகிவிட்டது.

அப்போதும் ரந்திதேவன் தன்னுடைய உடைமைகளையெல்லாம் ஒவ்வொன்றாக தானம் பண்ணிக் கொண்டே வந்தான். கடைசியில் ராஜாவான அவனுக்கும், அவனுடைய ராஜ குடும்பத்துக்குமே ஒரு வேளை கூழுக்குக் கூட கதியில்லை என்கிற நிலைமை வந்து விட்டது. ஆனால் கொடுத்தே பழகிய அவன் யாசகம் பண்ணவில்லை. நாற்பத்தெட்டு நாள் – ஒரு மண்டலம் – குடும்பத்தோடு சுத்த உபவாஸம் இருந்து விட்டான். அப்பறம் எப்படியோ வெளியிலே ராஜ குடும்பம் பட்டினி கிடக்கிறது என்று தெரிந்து விட்டது. ஆனானப்பட்ட ராஜா – வள்ளலாகப் பிரஜைகளை ரக்ஷித்தவன் – குடும்பத்தோடு வயிறு காயக் கிடக்கிறான் என்றவுடன் யாரோ எப்படியோ கொஞ்சம் கோதுமைக் கஞ்சியும் தண்ணீரும் சேகரம் பண்ணி நாற்பத்தொன்பதாவது நாளன்று அவனுக்கும் அவனுடைய பத்தினி புத்தரர்களுக்குமாக அனுப்பிவைத்தார்கள்.

முதுகோடு வயிறு ஒட்டிக்கொள்கிற மாதிரிக் காய்ந்து கிடந்த ஸ்திதியில் இது தேவாம்ருதமாக வந்தது. ஆசையோடு அந்தக் கஞ்சியை ராஜகுடும்பத்தினர் வாயில் விட்டுக் கொள்ளப் போகிற ஸமயம். அப்போது பார்த்து ஒரு பிராம்மணன் அங்கே வந்து சேர்ந்தான், ”பிக்ஷாம் தேஹி”! என்று.

துளி அன்னம் விழுமா விழுமா என்று வயிறு தபித்து ஏங்கிக் கொண்டிருந்த ஸமயம். ராஜாவாக பஞ்ச பக்ஷ்யம் சாப்பிட்டவன் பஞ்சத்தில் அடிப்பட்டு துடித்துக் கொண்டிருக்கும்போது கடைசியில் கொஞ்சம் கஞ்சி கிடைத்ததென்றால், சொல்லி வைத்தாற்போல் அப்போது யாசகர் வந்து விட்டார்.

ரந்திதேவன் யாசகரைப் பார்த்தான். எப்படிப் பார்த்தான்?’ சனியன் பிடித்தவன் எங்கே வந்தான்?’ என்றா? இல்லை. ஸாக்ஷாத் ஸ்ரீமந் நாராயணனாகவே அந்தப் பிராம்மணனைப் பார்த்தான்.

‘நல்லவேளை, இதை நானே சாப்பிடாமல் இந்த க்ஷணத்தில் இவர் வந்தாரே! நான் பகவதபசாரம் செய்யாமல் காப்பாற்றினாரே! என்று ஸந்தோஷப்பட்டான்.

அவனுடைய பத்தினி புத்திரர்களும் உதார குணத்தில் அவனுக்குக் குறையாதவர்கள். எல்லாரும் தங்களிடமிருந்ததைப் பங்கு போட்டுப் பிராம்மணனுக்கும் கொடுத்தார்கள். அது இவர்களுக்கே போதும் போதாததாகத்தான் இருந்தது. ஆனால் அதிலே கணிசமாக ஒரு பங்கு யாசகருக்குக் கொடுத்து அவரைத் திருப்திப்படுத்தி அனுப்பினார்கள்.

பாக்கியை ராஜ குடும்பத்தினர் சாப்பிட இருந்தபோது மறுபடியும் ஒரு யாசகன் முளைத்தான். இப்போது வந்தவன் நாலாம் வர்ணத்தவன். பசிக்கும் கருணைக்கும் வர்ணம், ஜாதி என்ற பேதங்கள் உண்டா என்ன? இவர்கள் ஏற்கனவே குறைந்து போய்விட்ட கஞ்சியிலிருந்தும், தாங்கள் கால் வயிறு சாப்பிட்டால் போதும் என்று கொஞ்சமே வைத்துக் கொண்டு, பாக்கியை அந்தப் பிச்சைக்காரனுக்குக் கொடுத்து விட்டார்கள். ராஜாவின் கண்ணில் இவனும் விஷ்ணுவாகத்தான் தெரிந்தான்.

மிச்சமிருந்த கஞ்சியில் மற்றவர்கள் தங்கள் பங்கைக் குடித்தார்கள். ரந்திதேவன் மாத்திரம் இந்த ஸமயத்திலும் இரண்டு ஜீவன்களுக்கு உபகாரம் பண்ணும்படியாக பகவான் அநுக்ரஹம் செய்ததையே நினைத்துக் கொண்டோ என்னவோ, சாப்பிடாமல் யோசனையில் இருந்தான்.

இவனுக்கு சாப்பிடுகிற எண்ணம் வந்த அதே ஸமயத்தில் மறுபடியும் ஒரு தீனக்குரல் வந்தது. மநுஷக் குரலோடு நாய்கள் குரைப்பு வேறு! நாய்களைப் பிடித்துக் கொண்டு ஒரு வேடன் வந்து நிற்கிறான். இந்தக் கஞ்சிக்குத்தான் போட்டியாக வந்திருக்கிறான்!

நாய்கள், நாய்க்காரான் எல்லோருமே ரந்திதேவனுக்கு நாராயண ஸ்வரூபமாகத்தான் தெரிந்தார்கள். வேதத்தில் ஸ்ரீருத்ரத்தில் பரமேஸ்வரனை ‘நாய்களின் உருவத்தில் இருக்கிறவன்; நாய்களை வைத்திருக்கிற வேடனாக இருக்கிறவன்’ என்று சொல்லியிருக்கிறது. ரந்திதேவன் வாஸ்தவத்திலேயே அப்படி ஈஸ்வர ரூபமாகப் பார்த்தான்.

ரந்திதேவனுக்கு அப்படிப்பட்ட த்ருஷ்டி இருந்தது. ‘நாராயணன்தான் இப்படி நாய்களாகவும் அதைப் பிடித்துக்கொண்டு வருபவனுமாக வேஷம் போட்டுக் கொண்டிருக்கிறான். தனக்குப் பசியிருப்பதாக வேஷம் போடுகிறான். அதைத் தணிப்பதுதான் பகவத் ஆராதனம்’ என்று நினைத்தான். கொஞ்சம்கூட மனஸ் கலங்காமல் தன் பங்கில் பாக்கியிருந்த கஞ்சி முழுவதையும் அவர்களுக்கு முன்னால் வைத்துவிட்டான். ‘நாய்க்கு நமஸ்காரம், நாயின் யஜமானுக்கு நமஸ்காரம்’ என்று ருத்ரம் சொல்கிற மாதிரியே அவர்களுக்கு நமஸ்காரம் பண்ணினான்.

இப்போது அவனிடம் இருந்ததெல்லாம் வெறும் தீர்த்தம்தான். ஒரே வறட்சிக் காலமாதலால் அந்தத் தீர்த்தம் கிடைப்பதுகூட ரொம்ப துர்லபமாகத்தான் இருந்தது. அதையாவது பானம் பண்ணினால்தான் இவனுடைய ஜீவன் உடம்பிலே நிற்கும் என்கிற ஸ்திதி.

இப்போதும் பகவான் சோதனையை நிறுத்தவில்லை. ஜலத்தையாவது குடித்துப் பிராணனை ரக்ஷித்துக் கொள்ளலாம் என்று இவன் பார்க்கிறபோது, மறுபடியும் ”சாமீ, தாஹம், தாஹம்!” என்று பிரலாபம் வந்தது.

”அந்தத் தண்ணீரையாவது ஊத்து சாமீ” என்று சொல்லிக் கொண்டு ஒரு பஞ்சமன் (புலையன்) வந்து நின்றான்.

அப்போது ரந்திதேவன் சொன்னதாக பாகவதத்தில் இரண்டு ஸ்லோகங்கள் வருகின்றன. இரண்டும் இரண்டு ரத்னங்கள். த்யாகத்துக்கு, பரோபகாரத்துக்கு இதைவிடப் பெரிய மந்திரமில்லை என்று சொல்லலாம். அதை அவன் சொன்ன வார்த்தையிலேயே சொல்கிறேன். அப்புறம் தமிழில் அர்த்தம் சொல்கிறேன்.

ந காமயே (அ) ஹம் கதிம் ஈஸ்வராத் பராம்

அஷ்டர்த்தி யுக்தாம் அபுநர்பவம் வா

ஆர்த்திம் ப்ரபத்யே (அ) கில தேஹ பாஜாம்

அந்தஸ்திதோ யேன பவந்த்யது:கா: ||

ருத்தி என்றால் ஸித்தி என்றே அர்த்தம் பண்ணிக் கொள்ளலாம். அற்புத சக்திகளை (miracle -கள் செய்கிற சக்திகளை) எட்டு ஸித்திகள் அல்லது ருத்திகள் என்று சொல்வார்கள். இந்த ‘அஷ்ட ருத்தி’ தான் ‘அஷ்டர்த்தி’ என்று ஸ்லோகத்தில் வருகிறது. இவை இருந்துவிட்டால் ஸர்வ லோகத்தையும் ஆட்டிப்படைத்து ஆளலாம். ரந்திதேவன் என்ன சொல்கிறான் என்றால், “(பராம்–)உயர்ந்ததான இந்த‌ ஸித்திகளைப் பெறுகிற (கதிம்–) வழியைக் கூட நான் (ஈஸ்வராத்–) ஈஸ்வரனிடமிருந்து (ந காமயே–) இச்சிக்கவில்லை; ப்ரார்த்திக்கவில்லை. எனக்கு மகா சக்திகள் வேண்டுமென்றுகூடப் பிரார்த்தனை பண்ணவில்லை”. சரி, அப்படியானால் இந்த சக்தி எல்லாம் அடங்கி அப்படியே பரம சாந்தமாக ஆடாமல் அசையாமல் இருக்கிற ஸமாதி நிலையை, மோக்ஷத்தைப் பிரார்த்திக்கிறானா? மறுபடியும் மறுபடியும் பிறவா நெறியான ‘அபுனர்பவம்’ என்ற முக்தியை விரும்புகிறானா?” அதுவும் எனக்கு வேண்டாம்; ந காமயே (அ) ஹம் அபுனர்பவம் வா”. பின்னே ஈஸ்வரனிடமிருனந்து எதைத்தான் இவன் இச்சித்துப் பிரார்த்திக்கிறானாம்?

புழுவாகவோ, பூச்சியாகவோ, பக்ஷியாகவோ, மிருகமாகவோ, மநிஷ்யனாகவோ சரீரம் என்று ஒன்றை வைத்துக்கொண்டு இத்தனை ஜீவராசிகள் இருக்கின்றவே, இந்த (அகில–) அனைத்து (தேஹ பாஜாம்–) சரீரம் படைத்த பிராணிகளுக்கும் ஏதாவது துன்பம் இருக்கிறதல்லவா? ‘ஆர்த்தி’ என்றால் துன்பம், துக்கம். அந்தத் துன்பத்தை ஒவ்வொருவருக்கும் உள்ளே இருக்கிற உள்ளம்தானே உணர்கிறது? உள்ளேயிருப்பதால் தான் அதற்கு உள்ளம் என்று பேர். ”அந்த:”– உள்ளே, ”ஸ்தித:”– இருப்பது அந்த உள்ளம்தான். ”எப்படியோ ஒரு தினுஸில் என்னால் மட்டும் அந்த உள்ளங்களுக்குள் இருக்க முடிந்துவிட்டால், ஜீவராசிகளின் துன்பம் எல்லாம் என்னிடம் வந்து சேர்ந்துவிடுமல்லவா? இப்படி ஸகல ஜீவர்களின் கஷ்டத்தையும் வாங்கிக் கொண்டு அநுபவிக்கிற சக்தியைத்தான், ஈஸ்வரா, உன்னிடம் நான் விரும்பிப் பிரார்த்திக்கிறேன். (யேன–) எதனால் பிராணிகள் (அது:கா:) துக்கமற்றவையாக (பவந்தி–) ஆகுமோ, அதைத்தான் உன்னிடம் வேண்டுகிறேன்”என்கிறான்.

துக்கம் என்பது பாப கர்மாவினால்தான் வருகிறது. ஒருத்தருடைய பாபத்தை இன்னொருத்தர் வாங்கிக் கொண்டு அநுபவிப்பதை vicarious suffering என்று சொல்வார்கள். ஜீஸஸ் இப்படித்தான் லோகம் பூராவின் பாபத்தையும் வாங்கிக்கொண்டு தீர்ப்பதற்கே சிலுவையில் அறைபட்டதாகச் சொல்வார்கள். அந்த உத்க்ருஷ்டமான தியாக சிந்தனை நம் மதத்துக்குப் புதிதானதல்ல. ரந்திதேவன் வேண்டினது இதைத்தான். ”அகில தேஹ பாஜாம் ஆர்த்திம் ப்ரபத்யே — ஸகல உயிரினத்துடையவும் கஷ்டங்களை ஏற்றுக் கொள்கிறேன்”என்று இதைத்தான் வேண்டினான்.

இதில் ‘ப்ரபத்யே’ என்று ஒரு வார்த்தை வருகிறது. அநேக ஸ்தோத்ரங்களில் – முக்யமாக ஸ்ரீவைஷ்ணவ க்ரதங்களில் – ”சரணம் ப்ரபத்யே, சரணம் ப்ரபத்யே” என்று வருவதைக் கேட்டிருப்பீர்கள். வேதத்திலேயே இருக்கப்பட்ட ஸ்ரீஸூக்தத்திலும் துர்கா ஸூக்தத்திலும் ”சரணம் ப்ரபத்யே”என்று வருகிறது. ‘ப்ரபத்யே’என்றால் ‘அடைக்கலம் புகுகிறேன்’, ‘சரணாகதி பண்ணுகிறேன்’என்று அர்த்தம். ஒன்றிடம் ஸர்வஸங்க பரித்யாகம் (total surrender) பண்ணிவிடுவதுதான் ப்ரபத்தி. அதாவது ‘ஸரண்டர்’ பண்ணுகிறவன் தன்னை அடியோடு ஸைஃபராக்கிக் கொண்டுவிட வேண்டும். அப்போது எதனிடம் இவன் ‘ஸரண்டர்’ பண்ணுகிறானோ, அது இவனை ஆட்கொண்டு, அப்படியே ரொப்பி விடும். இப்படியே பகவானிடம் தன்னை அடியோடு ஸைஃபராக்கிக் கொண்டு அவனாலேயே பூராவும் ரொப்பப்படுகிற நிலையைத்தான் பொதுவாக நாம் பார்க்கிற ஸ்தோத்ரங்கள், மந்தரங்கள் எல்லாவற்றிலும் ‘ப்ரபத்யே’, ‘ப்ரபத்யே’ என்று சொல்லியிருக்கிறது. மஹாலக்ஷ்மியை, துர்காதேவியை சரணடைகிறேன் என்று வேத ஸூக்தத்தில் வருகிற மாதிரி, மற்ற ஸ்தோத்ரங்களில் ”இந்த ஸ்வாமியை சரணடைகிறேன்,” ”அந்த ஸ்வாமியை சரணடைகிறேன்”, என்று ஒவ்வொரு ஸ்வாமி பெயரைச் சொல்லி வரும். உபநிஷத்தை சாந்தி பாடக்ரமத்தில் ஆரம்பிக்கும்போது, ”மோக்ஷத்தில் நாட்டமுடைய முமுக்ஷுவான நான் புத்தியைப் பிரகாசிக்கப் பண்ணும் பரமாத்மாவை அடைக்கலம் புகுகிறேன்” என்கிறபோதும் இந்த ”சரணம் ப்ரபத்யே” வருகிறது. ஆனால் ரந்திதேவன் என்ன சொன்னான்? ” ஆர்த்திம் ப்ரபத்யே” என்றான்!’ஆர்த்தி’என்றால் துன்பம், இன்னல், கஷ்டம். பரமாத்மா என்னை அப்படியே ஆட்கொள்ளட்டும் என்று சொல்லாமல், ”ஜீவலோகத்தின் ஸகல கஷ்டமும் என்னைப் பூராவாக ஆட்கொண்டு என்னிடமே வந்து சேரட்டும். நான் லோகத்தின் கஷ்டத்துக்கு சரணாகதி பண்ணுகிறேன்” என்று பரம த்யாக நிலையில் இருந்துகொண்டு சொல்கிறான்!

எல்லாரும் பொதுவாக என்ன வேண்டுவோம்? எல்லா இன்பமும் எனக்குக் கிடைக்கட்டும் என்றுதான். ரந்திதேவனோ ”எல்லார் துன்பமும் எனக்கு வந்து சேரட்டும்”என்றான். ”எல்லா ஜீவராசிகளின் கஷ்டங்கள் அனைத்தையும் நான் எடுத்துக்கொண்டு அநுபவிக்கிறேன். அதனால் அவற்றின் துக்கம் தீரட்டும்”என்றான்.

இன்னொரு ஸ்லோகம் சொன்னான்.

க்ஷூத்-த்ருட்-ச்ரமோ காத்ர பரிப்ரமச்ச

தைன்யம் க்லம:சோக விஷாத மோஹா: |

ஸர்வே நிவ்ருத்தா: க்ருபணஸ்ய ஜந்தோ:

ஜிஜீவிஷோ ஜீவ ஜலார்ப்பணாத் மே ||

பெரிய ச்ரௌதிக்ளுக்கு தானம் பண்ணுகிறபோது மந்த்ரம் சொல்லிக்கொண்டு தீர்த்தம் போடுகிற மாதிரி, அந்தப் பஞ்சமனுக்குத் தன்னிடம் எஞ்சியிருந்த தீர்த்தத்தையும் தத்தம் செய்துகொண்டு ரந்திதேவன் இந்த ஸ்லோகத்தைச் சொன்னான். இதற்கு என்ன அர்த்தம்?” இதோ இந்த ஜலத்தைக் கொடுக்கிறேனே, இது இந்தப் பஞ்சமன் ஒருத்தனுக்கு மட்டும் தாக சாந்தி, தாப சாந்தி பண்ணுவதா? இல்லை. ஸர்வபூத அந்தராத்மாவான நாராயணனாக இவனை நினைத்தல்லவோ இதை இவனுக்கு அர்ப்பணம் பண்ணுகிறேன்? அதனால் இந்த ஜலமே ஸகல உயிர்களுக்கும் தாக சாந்தியை, துக்க நிவ்ருத்தியைக் கொடுக்கட்டும்.”

(ஜீவ ஜிஜீவிஷோ-) உயிர்வாழ வேண்டுமென்று விரும்பும், (க்ருபணஸ்ய-) நிராதரவான (ஜந்தோ:-) ஸகல ப்ராணிகளும் (மே-) நான் கொடுக்கிற இந்த (ஜலார்ப்பணாத்-) தீர்த்த தானத்தால் (க்ஷூத்-) பசி (த்ருட்-) தாகம் இவற்றால் ஏற்படும் (ச்ரம:-) ச்ரமத்திலிருந்தும் (காத்ர பரிப்ரமச்ச-) வியாதி வக்கை மாதிரியான சரீரக் கஷ்டங்களிலிருந்தும் (தைன்யம்-) மனஸின் கஷ்டமான தீனநிலை, (க்லம:-) மனத்தளர்ச்சி, (சோக-விஷாத-மோஹா:-) துக்கம், கலக்கம் (dejection), மயக்கம் (ஸர்வே-) முதலிய எல்லாத் துன்பங்களிலிருந்தும் (நிவ்ருத்தா:-) நிவாரணம் பெறட்டும்.

ஒரே ஒருதனுக்குத் தருகிற கொஞ்சம் தீர்த்தம் இப்படி ஸர்வ ஜீவன்களின் கஷ்டத்தையும் போக்குமா என்றால்:

த்ரௌபதி அலம்பி வைத்திருந்த அக்ஷய பாத்திரத்தில் துளிப்போல ஒட்டிக் கொண்டிருந்த கீரையை க்ருஷ்ண பரமாத்மா சாப்பிட்டார்; உடனேயே துர்வாஸருக்கும் அவருடைய பதினாயிரம் சிஷ்யர்களுக்கும் பெரிய ஸமாராதனை சாப்பிட்ட மாதிரி வயிறு நிரம்பி விட்டது என்று படிக்கிறோமல்லவா? அந்த மாதிரிதான் இதுவும். ‘இவன் யாரோ ஒரு பஞ்சமன்’ என்று நினைக்காமல் பரமாத்ம ஸ்வரூபமாகவே அவனைப் புரிந்து கொண்டு அவனுக்குக் கொடுக்கிறபோது, அந்த பரமாத்மாவுக்குள்ளேயே அடங்கியிருக்கிற ஸகல ப்ரபஞ்சமும் அதனால் த்ருப்தியாகிறது. பாவம் நிஜமாக இருக்கவேண்டும். அதுதான் முக்யம்.

த்யாகத்தின் உச்சநிலையில் இருந்துகொண்டு இப்படி ரந்திதேவன் தன் ப்ராணனை ரக்ஷிப்பதற்கு அத்யாவச்யமாயிருந்த தீர்த்தத்தையும் புலையனுக்குக் கொடுத்தானோ இல்லையோ, உடனே முதலில் வந்த பிராம்மணன், அப்புறம் வந்த நாலாம் வர்ணத்தவன், அதற்குப் பின்னால் நாய்களோடு வந்த நாய்க்காரன், கடைசியில் வந்த பஞ்சமன் எல்லோரும் விஷ்ணு தூதர்களாக அவன் முன் தங்கள் நிஜ ரூபத்தைக் காட்டினார்கள்.*

”அவன் அவர்களுக்கு நமஸ்காரம் பண்ணிவிட்டு நாராயண த்யானத்தில் மூழ்கிவிட்டான். இந்த மாய வாழ்க்கை ஒரு கனா மாதிரி அவனிடமிருந்து மறைந்தே போய்விட்டது” என்று பாகவத்தில் இந்த புண்ய சரித்திரம் முடிகிறது.

சாதரணமாக நம் புராணங்களிலோ, மற்ற காவிய நாடகங்களிலோ கூட முக்கியமான பாத்திரம் (Hero) செத்துப் போனதாக முடியாது. ‘ட்ராஜெடி’ நம் ஸம்பிரதாயத்திலில்லை. மங்களமாக முடிய வேண்டும் என்று, லோக ரீதியிலே ஸந்தோஷமாக ஒரு கல்யாணம், ஒரு பட்டாபிஷேகம் என்றிப்படி முடிப்பதுதான் வழக்கம். ராமாயணம், மஹாபாரதம் இவற்றில் ஸ்ரீராமனும், பஞ்சபாண்டவர்களும் வைகுண்ட ஆரோஹணம், ஸ்வர்க ஆரோஹணம் பண்ணுவதாகவே வால்மீகியும், வியாஸாசாரியாளும் மூல க்ரந்தத்தில் முடிந்த்திருந்தும்கூட, இப்போதும் ஒரு ஹரிகதை, அல்லது உபந்யாஸம் என்று நடக்கிறபோது ஸ்ரீராம பட்டாபிஷேகம், தர்மராஜ பட்டாபிஷேகம் இவற்றோடு பூர்த்தி பண்ணி, அதற்கு மேற்பட்ட அந்திமக் கதையைச் சொல்லாமலே விட்டு விடுவதைத்தான் பார்க்கிறோம். த்ருவன், ப்ரஹ்லாதன் மாதிரியானவர்கள் பகவான் ப்ரத்யக்ஷமானதும் அவனோடேயே முக்தி அடைந்துவிட வேண்டும் என்று ப்ரார்த்தித்தாலும்கூட, பகவான்”அதெல்லாம் கூடாது”என்று சொல்லி, அவர்களுக்குப் பட்டாபிஷேகம் பண்ணினதாகத்தான் பாகவத புராணத்திலேயே சொல்லியிருக்கிறது. ஆனால் இந்த ரந்திதேவன் கதையில் மட்டும் விஷ்ணு தூதர்கள் வந்தார்கள் என்று சொன்னபின், ‘உடனே பஞ்சமெல்லாம் தீர்ந்துவிட்டது; ரந்திதேவனின் பசி, தாகம் எல்லாம் தீர்ந்து நெடுங்காலம் ராஜ்யபாரம் பண்ணினான்’ என்று சொல்லாமல், ”மாயையே ஒரு ஸொப்பனம் மாதிரி அவனைவிட்டு ஓடிப்போயிற்று”பரலோகம், பரமபதம் என்கிறார்களே, அதற்குப் போய் விட்டான் என்றுதான் அர்த்தம் ஏற்படுகிறது. அவனுடைய மஹா த்யாகம் நம் மனஸில் நன்றாக உறைப்பதற்காகவே இப்படி மங்கள முடிவை மாற்றிச் சொல்லியிருக்கிறாற் போல் தோன்றுகிறது.,

இந்த லோகத்தின் ஸந்தோஷம் எப்படியும் சாஸ்வதமில்லை. கல்யாணம், பட்டாபிஷேகம் எல்லாம் தாற்காலிக ஸந்தோஷம்தான். பகவானிடம் போய்ச் சேருவதுதான் நிரந்தரமான மங்களம். அப்படிப் பார்த்தால் ரந்திதேவன் கதைக்குத்தான் நிஜமான மங்கள முடிவு.

ரந்திதேவன் கதை மாதிரி இன்னொன்று பாரதத்தில் வருகிறது.


*ஸ்ரீ பெரியவர்களின் உரையாடல்களிலிருந்து ஒரு பக்தர் எடுத்த குறிப்புகளிலிருந்து இப்பகுதி உருவாக்கப்பட்டிருக்கிறது. அதில் ”விஷ்ணு தூதர்கள்” என்றே காண்கிறது. ஆனால் ஸ்ரீமத் பாகவதத்திலோ மூவுலகின் அதீச்வரர்கள் என்று உள்ளது. பிரம்ம, விஷ்ணு, ருத்ரர்களாகிய திரிமூர்த்தியரையே பாகவதம் மூவுலக அதீசராகக் கூறுமாதலால், பாகவத வ்யாக்யாதாக்கள் மும்மூர்த்தியார் ரந்திதேவனுக்கு தரிசனம் தந்ததாகக் கூறுகிறார்கள். ஆனால் முதலில் பிராமணன், பிறகு நான்காம் வர்ணத்தவன், அப்புறம் நாய்க்காரன், கடைசியில் தீண்டாதான் என நால்வரைச் சொல்லிவிட்டு அவர்களை மூன்று மூர்த்திகளாகக் குறிப்பிடுவது எப்படிப் பொருந்துமெனப் புரியவில்லை. நாயைப் பிடித்து வந்தவன், நீர் கேட்டவன் ஆகிய இருவரும் ஒருவனாகவே இருக்கலாம். ஸ்ரீ பெரியவர்கள் ”விஷ்ணு தூதர்கள்” என்று கூறியிருப்பாரேயாகில் இவ்வித சங்கைகளுக்கு இடமில்லை.

Previous page in  தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is வைதிக மதமும் உலகப் பணியும்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is  விசித்தரக் கீரிப்பிள்ளை
Next