Page load depends on your network speed. Thank you for your patience.

Loading...

தெய்வங்களின் வில்கள் : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

எல்லா ஸ்வாமிக்கும் தநுஸ் உண்டு. அந்த தநுஸுக்கு என்று ஒரு தனிப்பெயரும் உண்டு. பரமசிவன் கையில் வைத்திருக்கிற தநுஸுக்குப் ‘பிநாகம்’ என்று பெயர். அதனால் அவருக்கே ‘பிநாகபாணி’ என்று ஒரு பேர். த்ரிபுர ஸம்ஹாரத்தில் அவர் மேருவையே தநுஸாக வளைத்தார். மஹாவிஷ்ணுவுக்கு ‘சார்ங்கபாணி’ என்று ஒரு பேர் சொல்கிறார்கள். பலர் இப்படிப் பேர் வைத்துக் கொள்கிறார்கள். ‘ஸ்ரீரங்கம்’ மாதிரி ‘சாரங்கம்’ என்று நினைத்துக் கொண்டு ‘சாரங்க பாணி’ என்கிறார்கள். அது தப்பு. இதிலே ‘ரங்கம்’ எதுவுமில்லை. ‘சார்ங்கம்’ என்பதே சரி; சாரங்கம் அல்ல. சார்ங்கம் என்பது மஹாவிஷ்ணுவின் கையில் இருக்கப்பட்ட வில். பொதுவிலே சங்க-சக்ர-கதா-பத்ம ஆயுதங்களைச் சதுர்புஜங்களில் தரித்தவர் என்று சொன்னாலும், இதுகளைப் சார்ங்கம் என்ற வில்லும் அவருக்கு முக்யம். ‘பஞ்சாயுத ஸ்தோத்ரம்’ என்று அந்த நாலோடு இந்த ஐந்தாவதையும் சேர்த்தே ஸ்தோத்ரம் இருக்கிறது*1. விஷ்ணுஸஹஸ்ரநாமக் கடைசி ஸ்லோகத்திலும் சார்ங்கத்தைச் சேர்த்து ஐந்து ஆயுதங்களே சொல்லியிருக்கிறது. “தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்” நன்றாக வர்ஷிக்கட்டுமென்று ஆண்டாள் திருப்பாவையில் பாடியிருக்கிறாள்.

தேவர்கள் மஹாவிஷ்ணுவுக்கும் பரமேஸ்வரனுக்கும் பலப் பரீக்ஷை பார்க்க நினைத்தார்கள். அவர்களும் சரியென்று விளையாட்டாக உடன்பட்டு தநுர்யுத்தம் பண்ணிக் கொண்டார்கள். அப்போது மஹாவிஷ்ணு சிவனுடைய வில்லைக் கொஞ்சம் சேதம் பண்ணிவிட்டார். கொஞ்சம் பின்னமாய்ப் போன இந்த சிவ தநுஸ் விதேஹ ராஜாக்கள் வம்சத்திலே வந்து கடைசியாக ஜனகரிடம் இருந்தது. இதைத்தான் ‘தநுர்பங்கம்’ என்று ராமர் உடைத்து சீதையைக் கல்யாணம் பண்ணிக் கொண்டார். (தநுர்பங்கம்) பண்ணின இடம் பீஹாரில் ‘தர்பங்கா’ என்று இருக்கிறது); அப்புறம் அவர்கள் அயோத்திக்குத் திரும்புகிற வழியில் பரசுராமர் ஆக்ரோசமாக எதிர்ப்பட்டு ஒரு வில்லை ராமர் முன்னாடி நீட்டி, “நீ ஏதோ சொத்தை வில்லை மிதிலையில் உடைத்துப் பெரிய பேர் வாங்கிவிட்டாயே! இப்போது இந்த தநுஸை நாண் பூட்ட முடிகிறதா பார். சிவ விஷ்ணுக்களின் தநுர் யுத்தத்தில் பழுதாகாமலிருந்த நாராயண தநுஸ் இதுதான்” என்றார். ராமர் அந்த தநுஸையும் அலாக்காக நாண் பூட்டி பரசுராமருடைய அவதார சக்தியையே அதற்கு லக்ஷ்யமாய் வைத்து க்ரஹித்துக் கொண்டுவிட்டார் – என்று ராமாயணத்தில் வருகிறது.

ராமச்சந்திரமூர்த்தி என்று நினைத்த மாத்ரத்தில் கோதண்டபாணியாகத்தான் தோன்றுகிறது. க்ருஷ்ணாவதாரத்தில் வில் வைத்துக்கொள்ளாவிட்டாலும் தன்னுடைய ஆத்ம ஸகாவான அர்ஜுனனுக்கு வில்லாளி என்பதாகவே ஏற்றம் கிடைக்கும்படி அநுக்ரஹித்திருந்தார். ‘காண்டீவம்’என்பது அவனுடைய வில்லின் பெயர். ‘காண்டீபம்’ என்று சொல்வது தப்பு.

ஸாக்ஷாத் பராசக்தியும் ராஜராஜேச்வரியாக இருக்கும்போது இக்ஷு தநுஸ் என்பதாகக் கரும்பு வில் வைத்துக் கொண்டிருக்கிறாள். மன்மதனுக்கும் இதுவேதான் ஆயுதம்.

தநுஸுக்கு இப்படி விசேஷமிருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலே, இத்தனை தெய்வங்களாயும் ஆகியிருக்கிற நிர்குணப் பிரம்ம வஸ்துவை அடைவதற்கும் உபநிஷத்திலேயே தநுர்வித்தை அப்யாஸத்தைத்தான் உபமானமாய் சொல்லியிருக்கிறது. சிஷ்யனைப் பார்த்து குரு, “ஸெளம்யா! உபநிஷத்திலேயிருக்கிற மிகப்பெரிய அஸ்திரமான, மஹாஸ்த்ரமான வில்லை எடுத்துக் கொண்டு அதிலே உபாஸனையாலே நன்றாகச் சாணை தீட்டி கூராயிருக்கிற அம்பைப் பூட்டி, அக்ஷரமான குறியை நோக்கி அதுவாகவே ஆகிவிடும் பாவனையோடு விடு” என்பதாகச் சொல்லியிருக்கிறது*2. இங்கே உபநிஷத்திலிருக்கிற மஹா அஸ்த்ரம் என்பது ஓங்காரம். அம்பு என்கிறது ஜீவனையேதான். குறியாகச் சொன்ன ‘அக்ஷரம்’ என்பதற்கு ‘அழிவில்லாதது’ என்று அர்த்தம்: பரப்பிரம்மம் தான் அது. ஜீவன் ஸாதனையால் தன் சித்தத்தை ஒரு முகமாகக் கூர் பண்ணி ஓங்காரத்தில் அதைப் பூட்டி, அதாவது ஓங்கார த்யானத்திலே ஈடுபட்டு அப்படியே பிரம்மத்தில் சேர்ந்து, அம்பு லக்ஷ்யத்தில் அப்படியே ஒன்றாய்ப் பதிந்து விடுகிற மாதிரி அத்வைதமாகிவிட வேண்டுமென்று அர்த்தம். இங்கே ஓங்காரம் தநுஸாகவே உவமிக்கப்படுகிறது.


*1‘பஞ்சாயுத ஸ்தோத்ர’த்தில் பத்மத்துக்குப் பதில் ‘நந்தகி’ எனப்படும் கத்தி கூறப்படுகிறது. விஷ்ணு ஸஹஸ்ரநாமக் கடைசி ஸ்லோகத்திலும் சங்கு, நந்தகி எனும் வாள், சக்ரம், சார்ங்கவில், கதை ஆகியனவே கூறப்படுகின்றன.

*2முண்டகோபநிஷத்: 2.2.3

Previous page in  தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is அஸ்த்ரம் சஸ்த்ரம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is  மூவகை ஆயுதங்கள்
Next