‘தநுர்’ என்பது ஏன்? : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

ஆயுதங்கள் என்னென்ன, அவற்றை எப்படிப் பிரயோகம் பண்ணுவது என்பதே தநுர்வேதத்தில் முக்யமான விஷயம். இதற்கு ‘ஆயுதவேதம்’ என்று பேர் இல்லாமல் ‘தநுர்வேதம்’ என்று ஏன் பேர் என்றால், தநுஸ்தான் ஆயுதங்களுக்குள் முக்யமானது. தநுஸ் என்றால் வில் என்று எல்லோருக்கும் தெரிந்திருக்கும்.

சுத்தி, கதை, சூலம் முதலியவற்றைக் கையிலே பிடித்துக் கொண்டு எதிரே கிட்டக்க இருப்பவனிடம் மட்டுமே யுத்தம் செய்யலாம். ஈட்டியைத் தூரத்திலிப்பவனிடமும் எய்து தாக்கலாமாயினும் அதோடு அந்த ஈட்டியே கைக்குத் திரும்பி வராமல் போனாலும் போய் விடும். தநுஸ் அப்படி இல்லை. அது கையைவிட்டுப் போகிறதில்லை. அதில் எத்தனை அம்பை வேண்டுமானாலும் பூட்டி, எய்து எத்தனையோ தூரத்தில் இருப்பவனையும் அடித்துத் தள்ளலாம். ஈட்டி நஷடம் மாதிரி இல்லை. அம்பு போவது. அம்பு ஈட்டிபோல அத்தனை பெரிசோ, கனமானதோ இல்லை. அது போகிறது பெரிய நஷ்டமில்லை. பலசாலியாக இருக்கிற ஒரு க்ஷத்திரியன் நூற்றுக்கணக்கான அம்புகளைக் கொண்ட அம்பறாத்தூணியை ஈஸியாகத் தோளில் தாங்கிக் கொண்டிருப்பான். ‘சரமாரி’ என்றே வார்த்தை இருக்கிறது – ஸுலபமாக, ஒரு அம்பு போனால் இன்னொன்று என்று மழை பெய்கிறமாதிரி விட்டுக் கொண்டேயிருக்கலாம். அத்தனை அம்புகளுக்கும் ஆதாரமாகப் பூட்டப்படும் தநுஸ் மாறாது.

Previous page in  தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is தண்டநீதி
Previous
Next page in தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is  அஸ்த்ரம் சஸ்த்ரம்
Next