சஸ்த்ர சிகித்ஸை : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

ஆபரேஷன்-ஸர்ஜரி என்பது-செய்துகொள்ள வேண்டிய வியாதி என்றால் இப்போது இங்கிலீஷ் வைத்தியத்துக்குத்தான் போகவேண்டுமென்றாகி விட்டது. இது இப்போதைய நிலையில் தவிர்க்க முடியாததுதான். ரொம்பவும் ஆசாரம் பார்க்கிறவர்கள்கூட ‘காடராக்ட் மாதிரி ஏற்பட்டால் இங்கிலீஷ் வைத்ய முறையில் ஆபரேஷன்தான் பண்ணிக் கொள்ள வேண்டியிருக்கிறது. இதிலே இப்போது நாம் ஒன்றும் பண்ணிக்கொள்வதற்கில்லையென்றாலும் முன்காலத்திலேயே நம்முடைய ஜாக்ரதைக் குறைவால் ஒரு தப்பு ஏற்பட்டுவிட்டதென்பது என் அபிப்ராயம்.

‘ஸர்ஜரி’ நம்முடைய வைத்ய முறையில் இல்லை என்று நாம் நினைக்கும்படி ஆக்கியிருப்பதுதான் தப்பு. வாஸ்தவத்தில் நம்மிடம்தான் ஆதியிலேயே, ஆயுர்வேத சாஸ்திரம் ஏற்பட்ட புராதன காலந்தொட்டே ‘ஸர்ஜரி’ என்பதான சஸ்த்ர சிகித்ஸை இருந்திருக்கிறது. ஆயுர் வேதத்துக்கு இரண்டு பெரியவர்கள் மூல புருஷர்கள். ஒருத்தர் சரகர், இன்னொருவர் ஸுச்ருதர். இவர்கள் எழுதிய ஸம்ஹிதைகள்தான் ஆயுர்வேதத்துக்கு மூல க்ரந்தங்களாக இருப்பவை. சரகர் என்பது பதஞ்சலியே எனத் தெரிகிறது. அக்னிவேச்ய ரிஷி எழுதியதைச் சரகர் விஸ்தாரம் செய்திருக்கிறார். வாக்படர் எழுதிய ‘அஷ்டாங்க ஹ்ருதய’மும் ஆயுர்வேதத்துக்கு ஒரு அதாரிடி. தமிழ் பாஷையிலும் அநேக பிராசீன நூல்கள் ஸம்பிரதாயமாக வந்திருக்கின்றன. சரகர், ஸுச்ருதர் என்ற இருவரில் சரகர் மருந்து கொடுத்துக் குணப்படுத்துவது பற்றிச் சொல்கிறார். ஸுச்ருதர் சஸ்த்ர சிகித்ஸை செய்து குணப்படுத்துவது பற்றிச் சொல்கிறார். Physician, surgeon என்று இப்போது இரண்டு பேரை சொல்கிறோம். மருந்து கொடுப்பவன் ஃபிஸீஷியன்; சஸ்த்ர சிகித்ஸை செய்பவன் ஸர்ஜன். எம்.பி.,பி.எஸ். என்பதில் இரண்டும் அடக்கம். ‘எம்.பி.’என்றால் மருந்து கொடுக்கிறவன்; Medicine Bachelor*1. ‘பி.எஸ்.’என்றால் ஆபரேஷன் பண்ணுகிறவன்: Bachelor of Surgery. ஆயுர்வேதத்தை நாம் ஜாக்கிரதையாகப் பூர்ண ரூபத்தில் காப்பாற்றி வந்திருந்தால் ஆயுர்வேத வைத்தியர்களும் M.B.,B.S. காரர்கள் மாதிரி மருந்து கொடுப்பதோடுகூட சஸ்த்ர சிகித்ஸை செய்வதிலும் திறமை படைத்தவர்களாயிருந்திருப்பார்கள். ஆனால் சரக ஸம்ஹிதை பிரசாரத்தில் வந்திருக்கிறமாதிரி, ஸுச்ருதருடைய ‘ஸர்ஜரி’ நூல் வராததால் நஷ்டமடைந்திருக்கிறோம்.

இதிலே என்ன பரிதாபம் என்று சொல்கிறேன். ‘என்ஸைக்ளோபீடியா ப்ரிட்டானிகா’ என்ற வால்யூம்கள் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும். அதிலே ஒவ்வொரு ஸயன்ஸ், சாஸ்த்ரம், கலை பற்றியும் விவரமாகச் சொல்லியிருக்கும். இருபது, முப்பது வருஷத்துக்கு ஒரு தடவை புதிசு புதிசாகத் தெரிய வருகிறவைகளையும் சேர்த்துத் திருத்தி அந்தப் புஸ்தகங்களின் புது எடிஷன்கள் போடுவார்கள். அதிலே எந்த ஸயன்ஸானாலும், சாஸ்திரமானாலும் அதைப் பற்றின சரித்திரமும் போட்டிருக்கும். அது எங்கே முதலில் தோன்றிற்று, எந்தக் காலத்தில் தோன்றிற்று, எந்தக் காலத்தில் எவர் அதை எந்தெந்தப் பிற தேசங்களுக்குக் கொண்டு போனார்கள் என்று விவரம் கொடுத்திருக்கும். அதிலே என்ன போட்டிருக்கிறதென்றால் ஸர்ஜரி என்ற ரணசிகித்ஸை வித்யை இந்தியாவிலேயே முதலில் தோன்றிற்று என்று இருக்கிறது. இங்கேயிருந்து அது அரேபியா வழியாக க்ரீஸ் தேசத்துக்குப் போனதாகவும், அங்கேயிருந்து இத்தாலிக்குப் பரவி, பிறகு ஐரோப்பா பூரா பிரசாரமானதாகவும் போட்டிருக்கிறது.

இது ‘ஸுச்ருதம்’ என்கிற சாஸ்திரத்தில் நவீன காலத்தில் ஆஸ்பத்திரிகளில் எத்தனை விதமான ரண சிகித்ஸை ஆயுதங்கள் உபயோகத்திலிருக்கின்றனவோ அத்தனையைப் பற்றியும் சொல்லபட்டிருக்கிறதாம். புதிதாகக் கண்டெடுத்த சுவடிகளைப் பரீக்ஷித்தும், ரிக் வேதத்திலிருந்து ஆரம்பித்து புராணம், காவியங்கள் முதலியவற்றிலுள்ள கதைகளில் ரோக நிவ்ருத்தி பற்றி, இருப்பவற்றை இதோடு பொருத்தியும் பல அறிஞர்கள் ‘அநேக ஆச்சர்யமான ஸர்ஜரி நுணுக்கங்களெல்லாம் நம் பூர்விகர்களுக்கு நன்றாகத் தெரியும்’ என்று காரணம் காட்டி எழுதி வருகிறார்கள். ரிக்வேதத்தில் வீராங்கனையாக இருந்த ஒரு ராணிக்கு*2 யுத்தத்தில் கால் போய், அதற்குப் பதில் அச்விநி தேவர்கள் என்ற தேவ வைத்யர்கள் இரும்புக் கால் வைத்ததாக வருகிறது. வால்மீகி ராமாயணத்தில் அஹல்யையிடம் தப்பாக நடந்து கொண்ட இந்திரனுக்கு இந்திரியம் போய்விட்டதாகவும் அதற்குப் பதில் ஆட்டின் இந்திரியத்தைப் பொருத்தினார்களென்றும் வருகிறது. சயவனர், யயாதி முதலியவர்கள் வயோதிகம் போய் யௌவனம் அடைந்ததாக மஹாபாரதத்தில் இருக்கிறது. இப்படியிருக்கும் அநேகம் கதைகளை வைத்ய சாஸ்திரங்களில் சொல்லியிருப்பவற்றோடு சேர்த்து நன்றாக ஆராய்ச்சி பண்ணிப் பார்த்ததில், இவையெல்லாம் கற்பனை இல்லை. நிஜமாகவே நடந்திருக்க வேண்டும். ஏனென்றால் வைத்ய சாஸ்திரங்களில் நமக்குக் கிடைத்திருப்பதில் தெளிவாகவும் நுட்பமாகவும் சொல்லியிருக்கிறவற்றிலிருந்து அந்தக் காலத்திலேயே artifical limb surgery (செயற்கை உறுப்புகளைப் பொருத்தும் சஸ்த்ர முறை), transplantation (ஒருவர் உறுப்பை இன்னொருவருக்குப் பொருத்துவது) , ‘காயகல்பம்’ என்ற பெயரில் rejuvenation (ஒருவருடைய சதை முதலியவற்றையே எடுத்துப் பொருத்தித் தோற்றத்தை அழகாகும்படி மாற்றி அமைப்பது) எல்லாம் செய்யப்பட்டிருக்க வேண்டும்’ என்று ரிஸர்ச் ஸ்காலார்கள் எழுதுகிறார்கள்.

ஸெப்டிக் ஆகாமல் தடுப்பது ஸர்ஜரியில் முக்யம். ஆபரேஷன்போது வலி தெரியாமல் மயக்க நிலை மாதிரி இருப்பதும் முக்யம். இந்த இரண்டுங்கூடப் பூர்வ காலத்திலேயே தக்கபடி செய்யப்பட்டு வந்தன என்று காட்டியிருக்கிறார்கள். ‘வாளால் அறுத்துச் சுடினும்‘ வைத்யனிடம் நோயாளி மனஸ்தாபப்படாத மாதிரி பகவான் எத்தனை சோதித்துக் கஷ்டப்படுத்தினாலும் அவனிடம் தனக்குப் பிரேமை போகமாட்டேனென்கிறது என்று (குலசேகர) ஆழ்வார் பாடியிருக்கிறார். இங்கே ‘வாளால் அறுப்பது’ தான் ஸர்ஜரி. அப்புறம் அதைச் ‘சுடுவது’ என்பது அது ஸெப்டிக் ஆகாமல் ‘காடரைஸ்’ பண்ணுவது.

இத்தனை இருந்தும், ஏதோ கட்டி, ராஜபிளவை என்றால் அறுப்பது தவிர பிற்காலத்தில் ஆயுர்வேதத்தில் சஸ்த்ர சிகித்ஸை ஏன் நஷ்டமாய் விட்டதென்றால் இரண்டு காரணம் தோன்றுகிறது. என்ன இருந்தாலும் ஆபரேஷன் என்பது ஆபத்துதான். அதனால் பின்னால் பாதகமான விளைவுகள், after-effects ஏற்படுவதும் அதிகம். எனவே கற்றுக்குட்டிகள் கையில் கத்தியைக் கொடுப்பதாகவும், எடுத்ததற்கெல்லாம் இந்தக் காலத்தில் இங்கிலீஷ் வைத்தியத்தில் நடப்பதுபோல் அறுப்பது கிழிப்பதாகவும் ஆகிவிடக் கூடாதென்று மிகவும் ஜாக்ரதை பண்ணிச் சிலபேருக்கு மட்டும் கற்றுக் கொடுத்ததிலேயே நாளாவட்டத்தில் இதை வெகுவாக இழக்கும்படியாகியிருக்கலாம். இன்னொரு காரணம்: அப்போது வைத்யர்கள் நல்ல அநுஷ்டாதாக்களாக இருந்து நல்ல தபோபலம் பெற்றவர்களாயிருந்ததால் அவர்களுக்கு ஹிமாசலம், பொதிகை மாதிரி எந்த மலையில் எந்தப் பொந்தில் என்ன மூலிகை இருந்தாலும் தெரிந்திருக்கிறது. எத்தனை கொடிய வியாதியானாலும், ஆழமான வ்ரணமானாலும் அதை குணம் செய்யவும் மூலிகையே போதுமானது என்று அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. ஸைன்யமெல்லாம் பிரக்ஞை போய்க் கிடந்தபோது ஆஞ்ஜநேய ஸ்வாமி ஸஞ்ஜீவி பர்வதத்தைக் கொண்டு வந்தார்;அந்த மூலிகையின் காற்றுப் பட்ட மாத்திரத்திலேயே ஸேனை புது பலத்தோடு எழுந்துவிட்டதென்று படிக்கிறோமல்லவா? இப்படி மூலிகை வைத்தியத்தால் ஸெளக்யமாகவே எதையும் ஸ்வஸ்தம் செய்துவிடத் தெரிந்திருந்ததால்தான், ஆயுதத்தைப் போட்டு வெட்டிக் குடைந்து சஸ்த்ர சிகித்ஸை செய்வதை அவ்வளவாக மேற்கொள்ளாமல் இருந்து, இதனால் நாளா வட்டத்தில் அதை மறந்து விடும்படியாகியிருக்கலாமென்றும் தோன்றுகிறது.

மருந்து சாப்பிடுவது, ஆபரேஷன் என்ற இரண்டு மாத்திரமின்றி இன்னம் அநேக சிகித்ஸை முறைகளும் ஆயுர்வேதத்தில் சொல்லப்பட்டிருக்கின்றன. ‘லேபம்’ என்று ஒன்று. ஆயின்மென்ட் பூசுவது. ப்ளாஸ்டர் போடுவது எல்லாம் ‘லேபம்’தான். மலையாள வைத்யத்தில் இவை பின்பற்றப்படுகின்றன. ‘வமனம்’ என்பது வாந்தி பண்ண வைத்து குணம் செய்வது. ‘விரேசனம்’ என்பது இதே மாதிரி பேதியாக வைப்பது. ‘ஸ்வேதனம்’ என்பது வியர்த்துக் கொட்டப்பண்ணி அதன்மூலம் துர்நீர் வெளியே போகச் செய்வது. ‘ஸ்நேஹனம்’ என்பது எண்ணெய் தேய்த்து மயிர்க்கால் வழியே உள்ளுக்குள் மருந்தை இறக்குவது. இதுவும் மலையாள வைத்யத்தில் நிறையக் காணப்படுகிறது. உள்ளே இருக்கும் கெடுதலை வெளியிலே கொண்டு வருவதற்காக ஆயுர்வேதத்தில் உள்ள பஞ்சகர்மம் என்ற ஐந்து சிகித்ஸை முறைகளில் வமனம், விரேசனம் தவிர ‘நஸ்யம்’ என்பது மூக்காலே தும்ம வைத்து தோஷத்தை வெளிவரச் செய்வது; ‘அநுவாஸனம்’, ‘நிரூஹம்’ என்ற இரண்டும் இருவிதமான எனிமா.

கண்ணுக்குத் தெரிகிற ரோகம் மாத்திரமின்றி குடல், மூளை இவற்றின் உள்ளுக்குள்ளேயிருப்பது, தோல் – எலும்பு -ரத்தம் (blood pressure) , டயாபெடீஸ், மனோவியாதி என்று கணக்கில்லாமலுள்ள அத்தனையையும் ‘டயாக்னோஸ்’ பண்ணி மருந்து தருவதற்கும் ஆயுர்வேதத்தில் வழி சொல்லியிருக்கிறது. இப்போது ‘ஆயுர் வேதம்’ என்றால் முக்யமாக ‘ஓஷதி’ என்கிற மூலிகை அடுத்தபடியாக ‘ரஸ வர்க்கம்’ என்கிற தாதுக்கள் (மினெரல் என்பவை) ஆகியவற்றால் செய்யும் மருந்துதான் என்றே நினைக்கிறோம். மரம், செடி, கொடி எல்லாமே ஓஷதி வர்க்கத்தில் வந்துவிடும். கந்தகம், பாஷாணம், லோஹங்கள் முதலியவை ரஸவர்க்கம்.

‘காயகல்பம்’ என்றால் சரீரத்தை அழியாமல் பண்ணிக் கொள்வது என்று கேள்விப்படுகிறோம். இப்படி சிரஞ்ஜீவியானவர்கள் எவருமில்லை என்பது பிரத்யக்ஷம். ஆனாலும் இப்படி காயஸித்தி பண்ணிக்கொண்டு பிற்பாடு இந்திரிய விரயம் ஏற்படாமல் சுத்தர்களாக, சாந்தர்களாக இருந்தவர்கள் மற்றவர்களைவிட வெகு நீண்ட காலம் நோய் நொடி இல்லாமலிருந்தார்களென்று தெரிகிறது. யோகம், தபஸ், ஞானாப்யாஸம் முதலியவை செய்வதற்கே உடம்பை த்ருடமாகவும், தீர்க்க காலமுள்ளதாகவும் வைத்துக் கொள்ள வேண்டுமென்று காரியஸித்தி பண்ணிக் கொண்டாலே ஜாஸ்தி பலன் தருவதாகவும், போக போக்யங்களை அநுபவிப்பதற்காகப் பண்ணிக் கொண்டால் அவ்வளவு பலிக்கவில்லை என்றும் தோன்றுகிறது. காயகல்ப முறையில் ரஸாயன சாஸ்திரம் நிறைய வந்துவிடும். பசு மந்தையில் இருந்துகொண்டு செய்கிற ரஸாயன ஸேவை, நெல்லி மரத்தடியில் செய்யும் ரஸாயன ஸேவை என்றெல்லாம் உண்டு. தர்ம சாஸ்திரத்தின் பாப, புண்ணியமே வைத்ய சாஸ்த்ரத்தில் ஹிதம், அஹிதம் என்று வருகிறதென்று நான் சொன்னதற்கு இதுவும் சான்றாகிறது. கோதூளி பட்டாலே பாபநிவ்ருத்தி, நெல்லி மரத்தின் கீழ் தியானம் பண்ணினால் அதற்கு effect அதிகம் என்று தர்ம சாஸ்த்ரங்களில் இருப்பதை இந்த ரஸாயன ஸேவைகள் வைத்ய ரீதியில் பயனுள்ளவையாகக் கொண்டு வந்துவிடுகின்றன.

மொத்தத்தில் காயஸித்தி முறைகள் தேஹத்தில் புது மாம்ஸம், ரத்தம் இவற்றை உண்டாக்கி, ஆயுஸை விருத்தி பண்ணுபவையாகும்.


*1 M.B. என்பது Bachelor of Medicine என்று பொருள்படும் என்பதன் Medicinae Baccalaureus முதல் எழுத்துக்களாகும்.

*2 கேலன் என்ற மன்னனின் மனைவியான விச்பலா.

Previous page in  தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is ஆயுர்வேதமும் மத ஆசாரணையும்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is  ஆயுர்வேதத்தில் இதர ஸயன்ஸ்கள்
Next