மௌனப் பிரார்த்தனை : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

இன்றைக்கு இதை விஷயமாக எடுத்துக்கொள்ள அரசாங்கத்தாருடைய ஒரு அபிப்ராயம்தான் ‘ப்ராவகேஷ’ னாக (தூண்டுதலாக) இருந்தது. ஸமீபகாலமாக, பள்ளிக் கூடம் ஆரம்பிக்கும்போது மாணவர்களுக்கு ‘ப்ரேயர்’ இருக்க வேண்டுமா, வேண்டாமா என்பதில் இரண்டுவித கருத்துக்கள் இருந்து வந்திருக்கின்றன. தலைவர்களில் சில பேர் தெய்வபக்தி உள்ளவர்களாகவும், சில பேர் அப்படியில்லாதவர்களாகவும் இருக்கிறார்கள். அதனால்தான் அபிப்ராய பேதம். அப்புறம் தெய்வபக்தியில்லாதவர்களும் ‘ஸ்கூல் ஆரம்பத்தில் ‘ப்ரேயர்’ என்பது நீண்டகால வழக்கமாக இருந்து வந்துவிட்டதே;இதை எடுத்துவிட்டால் நான் ரொம்பப் பேரின் அதிருப்திக்குப் பாத்திரமாக வேண்டிவருமே!’ என்பதால், ப்ரேயர் இருந்தால் இருந்துவிட்டுப் போகட்டும், இஷ்டப்பட்ட பசங்கள் பண்ணட்டும், இஷ்டமில்லாதவர்களுக்குக் கட்டாயமாக்க வேண்டாம் என்று சொல்ல ஆரம்பித்தார்கள். ஆனால் இதோடு பிரச்னை தீர்ந்து விடவில்லை. ‘ப்ரேயர்’ என்றால் எதை வைப்பது? இதுவோ மதச்சார்பில்லாத ஸெக்யூலர் அரசாங்கம். அநேக மதங்களைச் சேர்ந்த பசங்கள் சேர்ந்து படிக்கும்போது எந்த ஒரு மதத்தின் பிரார்த்தனையை மட்டும் வைத்தாலும் தப்பாகிவிடுமே என்று யோசித்தார்கள். முடிவாக இப்போது பசங்கள் எல்லாரும் பாடங்கள் ஆரம்பிப்பதற்கு முன்னால் இரண்டு நிமிஷமோ மூன்று நிமிஷமோ மௌனமாகப் பிரார்த்தனை பண்ணிக் கொள்ளட்டும் என்று தீர்மானம் பண்ணியிருக்கிறார்கள்.

சின்னக் குழந்தைகளுக்கே இப்படி மௌனத்தை அவர்கள் சொல்வதால், நாமுந்தான் பெரிய குழந்தைகளுக்கும் மௌனத்தைப் பற்றிச் சொல்லாமே என்று தோன்றிற்று.

அவர்கள் மட்டும்தான் மாணவர்களா என்ன? நீங்கள், நான் எல்லோரும் மாணவர்கள்தான். லோகம் என்கிற இந்த பெரிய ஸ்கூலில் வாழ்நாள் பூராவும் விஷயங்களைத் தெரிந்துகொள்ள வேண்டிய வித்யார்த்திகளாகத்தான் நாம் எல்லாருமே இருக்கிறோம்.

இன்றைக்கு நீங்கள் கற்றுக்கொண்டது மௌன வித்யை. ‘ மோனம் என்பது ஞான வரம்பு ‘என்று பிரம்ம வித்யையாகவே அதைச் சொல்லியிருக்கிறது. ஜன்மா எடுத்ததற்கு இந்த ஜன்மாவில் நாம் என்னென்ன செய்ய வேண்டுமென்று தெரிந்து கொள்ள வேண்டியது எவ்வளவு அவசியமோ, அவ்வளவு அவசியம் ஒன்றுமே செய்யாமல், பேசாமல், நினைக்காமல் இருக்க வேண்டுமென்று தெரிந்து கொள்வதுமாகும். மனஸ் போகிறபடியெல்லாம் நினைப்பது, வாயில் வந்தபடியெல்லாம் பேசுவது என்றால், பிற்பாடு ஜன்மாவின் பலனையே அடையவில்லை என்று துக்கப்படும்படியாகும். அதனால்தான் மனஸை அடக்கி மௌனமாயிருக்க வேண்டுமென்று தெரிந்து கொள்வதே (அப்படிச் செய்வது அப்புறம் இருக்கட்டும்) உங்களுக்கு ஒரு வித்யா லாபம் என்று நினைத்துச் சொன்னேன்.

Previous page in  தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is ஸமூஹ நலனுக்கும் உதவுவது
Previous
Next page in தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is  நான் கற்ற பாடம்
Next