பிக்ஷையும் ஸ்வயம்பாகமும் : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

ப்ரம்மசாரிகள் பிக்ஷாசர்யம் பண்ண வேண்டும் (பிக்ஷை எடுத்துச் சாப்பிட வேண்டும்) என்று நான் சொல்லி வருவதற்கு1* இது [மாணவன் ஸ்வயம்பாகம் செய்து சாப்பிட வேண்டுமென்பது] விரோதமாயிருக்கிறதே என்று தோன்றலாம். வித்யாப்யாஸ காலம் பூராவும் ஒரு பையன் பிக்ஷை எடுத்துச் சாப்பிடுவான், சாப்பிட வேண்டும் என்று நான் இந்தக் கால நிலைமையில் எதிர் பார்க்கவுமில்லை, நிர்பந்திக்கவுமில்லை. அப்படி ஒருத்தன் பண்ணினால் அது எனக்கு ரொம்ப ஸந்தோஷந்தான். ஆனால் அபூர்வமாய் எவனோதான் அப்படிப் பண்ண முடியும். பொதுவில் எல்லா மாணவர்களும் ஒரு வருஷமாவது பிக்ஷாசர்யத்துடன் குருகுல வாஸம் பண்ண வேண்டுமென்பதுதான் நான் சொல்வது. மீதி வருஷங்களில் அவனும் ஸ்வயம்பாகம் பண்ணிக் கொள்வது என்று வைத்துக் கொள்ள வேண்டும்.

க்ருஹஸ்தனான பிராம்மணன் பிறத்தியாருக்கு போதனை பண்ணி அதற்குத் தக்ஷிணை வாங்கும்போது தான்யமாகவும் கறிகாயாகவும் பச்சையாக்த்தான் (raw-ஆகத்தான்) வாங்கலாமே தவிர, பக்வம் பண்ணினதாக [சமைத்ததாக] வாங்கக் கூடாது; ஆனால் ஸந்நியாஸிக்கும் பிரம்மசாரிக்கும் மாத்திரம் பக்வ அன்னமே பிக்ஷையாக வாங்க ரைட் இருக்கிறது – யதிச்ச ப்ரஹ்மசாரிச்ச பக்வான்ன ஸ்வாதீனௌ உபௌ – என்று விதி இருக்கிறது. இதனால் யதி [ஸந்நியாஸி] யைப் போலவே பிரம்மசாரியும் பிக்ஷை வாங்கித்தான் சாப்பிட்டாக வேண்டுமென்று ஒரே தீர்மானமாக வைத்துவிட்டதாக அர்த்தமில்லை. இவர்கள் இரண்டு பேருக்கும் பிக்ஷை எடுக்க வேண்டும் என்று வைத்ததற்குக் காரணம் வேறு வேறாகும். யதி எப்போதும் ஆத்ம விசாரம் பண்ண வேண்டியவனாதலாலும், உடைமையே அவனுக்குக் கூடாதாகையாலும் சமையற்கட்டைக் கட்டிக்கொண்டு அழ விடமால் அவனுக்குப் பிக்ஷா நியமம் வைத்தார்கள். குறிப்பாக எவரோ ஒருத்தர் இரண்டு பேர் அவனுக்கு ஆஹாரம் கொடுப்பது என்று வைத்துக் கொண்டால் அவர்களுக்கு இவன் obliged-ஆகிவிடுவான் [கட்டுப்பட்டு விடுவான்] என்பதால் அப்படிக் கூடாது என்று ஏதோ நாலு ஐந்து வீடாக இன்றைக்குப் போன இடத்துக்கு நாளைக்குப் போகாமல், ஸமூஹம் பூராவிலிருந்தும் பிக்ஷை வாங்கிச் சாப்பிட வேண்டுமென்று வைத்தார்கள். தனியாக எவருக்கும் இவனைப் பராமரிக்கிற பொறுப்புப் பளுவைத் தராமல், ஸமூஹம் முழுவதற்கும் அதைப் பகிர்ந்து தரும் உத்தேசமும் இதில் அடங்கியிருக்கிறது. அதோடு கூட இவனுக்கு அக்னி ஸம்பந்தமேயிருக்க கூடாது. [ஸந்நியாஸ] ஆச்ரமம் வாங்கிக் கொண்டவுடனேயே அக்னி ஹோத்ரம், ஒளபாஸனம் முதலான எல்லா அக்னி கார்யமும் நின்று விடுகின்றன. சமையல் செய்வதென்றால் அக்னியில்லாமல் முடியுமா? இவன் அடுப்பு மூட்டிச் சமைக்கும்போது ஏதோ பூச்சிப் பொட்டு விழுந்து செத்துப் போனால், இவனுடைய ஆச்ரமத்தின் பரமதர்மமான அஹிம்ஸைக்கு ஹானியாய் விடும். இந்தக் காரணங்களை உத்தேசித்தே இவன் சமைத்த ஆஹாரத்தை பிக்ஷை வாங்க வேண்டும் என்று வைத்திருப்பது2*.

பிரம்மசாரிக்குப் பிக்ஷை வைத்ததற்குக் காரணம் வேறு. விநயம் ஏற்பட வேண்டும், அப்போதுதான் வித்யை பலன் தரும் என்பதற்காகத்தான் வீடு வீடாகப் போய் அவனை பிச்சைக் கேட்கும்படியாக விதித்திருப்பது. அப்புறம் இவனுக்குச் சமைத்துப் போடுவதற்காக குருபத்தினியைச் சிரமப்படுத்த வேண்டாமென்றுதான், சமைத்த அன்னமாகவே பிக்ஷை வாங்கி வரலாம் என்று அநுமதித்திருப்பதும். அக்னி ஸம்பந்தமே கூடாது என்று ஸந்நியாஸிக்குக் கட்டுப்பாடு இருப்பது போல் பிரம்மசாரிக்குக் கிடையாது. அவன் தினமும் இரண்டு வேளையும் பண்ண வேண்டிய ஸமிதாதானம் என்பது அக்னி வளர்த்து அதில் ஸமித்தைப் போடுகிற சடங்குதான்.

ஆகையால் வித்யாப்யாஸ காலம் பூராவும் பிக்ஷாசர்யம் பண்ணுவது என்பது ஸாத்யமாகத் தெரியாத நம் காலத்தில், ஏதோ ஒரு வருஷமாவது அப்படி ஒரு பாடசாலை மாணவன் பண்ணிவிட்டு, மற்ற காலத்தில் ஸ்வயம்பாக நியமம் வைத்துக்கொள்ளலாமென்று என் அபிப்ராயம். எத்தனை மூலதனமிருந்தும் வேதப் படிப்புக்குப் போதவில்லை என்பதால் பாடசாலைகளை மூடி விடுகிற நிலைமை மாற வேண்டுமானால் செலவில்லாத ஸிம்பிள் ஆஹார வழக்கத்தை வித்யார்த்திகள் மேற்கொள்ளும்படி செய்ய வேண்டி இருக்கும்போது, ஸ்வயம்பாகம் என்று வைத்தாலே தன்னால் இப்படி ஏற்பட்டு விடுகிறது என்று பார்க்கிறேன்.


1.* பார்க்க: “தெய்வத்தின் குரல்” இரண்டாம் பகுதியில், “குருகுல வாஸம்” என்னும் உரை.

2.*தீவிரமான துறவறத்தில் சமைத்த உணவாயின்றி, தானே விழுகிற பழம், பத்திரம் ஆகியவற்றை மாத்திரம் உண்ண வேண்டும் என்று ஸ்ரீபெரியவர்கள் ‘மரக்கறியில் ஹிம்ஸை இல்லையா?‘ என்ற பிரிவில் கூறியிருப்பதும் கருதற்பாலது.

Previous page in  தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is வேத வித்தை வளரவும் வழி
Previous
Next page in தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is  வடதேச வழக்கின் உயர்வு
Next