யதார்த்தத்துடன் லக்ஷ்யத்தின் இசைவு : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

‘ஐடியல்’ விடாமல் ‘ப்ராக்டிக்’லில் போனால்தான் இரண்டும் நிற்கும்; முடிவாக நல்ல பக்குவம் ஏற்பட்டு எல்லாரும் ஐடியலுக்குப் போவார்கள். ஐடியலையே ஸர்வத்ர ஜனங்களுக்கும் ப்ராக்டிகலாக்கப் பார்த்தால் ஐடியல் அடியோடு போய்விடுவதாகத்தான் ஆகும்.

‘ஸாத்விக ஆஹாரந்தான் ஐடியல் ;மது மாம்ஸம் வேண்டாமென்றுதான் இப்போதில்லா விட்டாலும் முடிவிலாவது ஆக்கிக் கொள்ள வேண்டும்’ என்று இதர ஜாதியினரும் உணரும்படியாக நம் தேசத்தில் ஆசாரங்கள் அமைந்து, நடத்தப்பட்டிருக்கின்றன.

வெஜிடேரியனிஸம் என்ற ஐடியல் நம் தேசத்தில் ஒரு குறிப்பிட்ட குலாசாரமாக மாத்திரம் இருப்பதாலேயே, அதைப் பார்த்து, சாஸ்திரத்தின் ‘கம்பல்ஷன்’ இல்லாமல், தாங்களாகப் பிரியப்பட்டு வேறுவித குலாசாரமுள்ளவர்களும் அதை எடுத்துக்கொண்டு, ஐடியல் மேலும் மேலும் ப்ராக்டிஸில் பரவுவதைப் பார்க்கிறோம். “நாங்கள் இரண்டு தலைமுறையாக சுத்த சைவமாயிருக்கிறோம்” என்று இதரர்கள் பெருமையோடு சொல்லிக்கொள்வதைக் கேட்கிறோமென்றால், அதற்கு முந்தி அசைவமாயிருந்தவர்கள் தாங்களாகவே சைவ ஆஹார நியமத்தில் மதிப்பு வைத்து மாறியிருக்கிறார்களென்று தானே அர்த்தம்? இன்னும் சிலபேர், “வீட்டில் அன்னிய பதார்த்தம் சாப்பிடுவார்கள்; ஆனால் நம்ம கிட்டயே அந்த வாடை வரக் கூடாது” என்று பெருமைபட்டுக் கொள்ளும்போது, எப்படி ஒரு ஐடியலைச் சிலருக்கு மட்டும் விதியாக வைக்கிறபோது, அது மற்றவர்களில் சிலரையும் அந்தப்படி தாங்களாக இஷ்டப்பட்டுச் செய்ய ‘என்கரேஜ்’ பண்ணுகிறது என்று தெரிகிறது.

எதைப்பற்றியுமே, சொல்வது ஜாஸ்தியாகி விட்டால் அப்புறம் செய்வது அந்த அளவுக்குக் குறைந்து கொண்டுதான் வருகிறது. செய்யாததற்குப் பதில் சொல்லித் தீர்த்து விடுகிறமாதிரி வெறும் பேச்சாயும், எழுத்தாயும் மட்டுமே, எது காரியத்தில் நடக்க வேண்டுமோ அது நின்று விடுகிறது! காந்தி யுகத்திலிருந்து அஹிம்ஸை, non-violence என்று ஓயாமல் பேச்சாயிருந்தாலும் இப்போதுதான் எல்லாவித ஹிம்ஸைகளும் தேசத்தில் ஜாஸ்தியாகிக் கொண்டு வந்திருக்கிறது; தலைமுறை தலைமுறையாக வெஜிடேரியனிஸமே பின்பற்றி வந்த பிராம்மணப் பசங்கள் கூட இதர பதார்த்தம் சாப்பிடுவதான அநியாயம் இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறது.

பௌத்தத்தில் ஆதியில் இப்படித்தான் மனஸ், வாக்கு, காயம் மூன்றாலும் யாரும் எந்த உயிருக்கும் ஹிம்ஸை விளைவிக்கக் கூடாது என்று பொது ஜனங்கள் எல்லோருக்கும் நிறையச் சொல்லிவந்தார்கள். அஹிம்ஸைக் கொள்கை (doctrine of non-violence) சொல்லிக் கேட்க நன்றாகத்தான் இருக்கும். ஆனால் ஸர்வ ஜன ஸாத்யமாக நடைமுறைக்கு வருமா என்பதுதான் கேள்வி. பிற்பாடு பௌத்தம் விரிவாயும் ஆழமாயும் பரவின சீனா, ஜப்பான் முதலான தேசங்களில்தான் நம் தேசத்து மாம்ஸ போஜனக்காரர்கள் கூட நிஷித்தம் என்று ஒதுக்குகிற தவளை, பாம்பு முதலானது உள்பட எல்லாப் பிராணிகளையும் ஜனங்கள் பிடித்துத் தின்று கொண்டிருக்கிறார்கள். கசாப்புக் கடைக்குப் போவதில் ஏதோ நூற்றில் ஒரு பங்கு யாகத்தில் பலியானதற்கு “ஐயையோ அக்ரமம் பண்ணுகிறார்களே!” என்று புத்தர் அழுதார், வைதார். ‘லோக க்ஷேமார்த்தமாகச் சில சக்திகளைப் பிரீதி பண்ணவே யஜ்ஞம்’ என்று அவருக்குப் புரிய வைக்க அந்த நாளில் யாருமில்லை போலிருக்கிறது. அவர் கண்டனம் செய்த யஜ்ஞப் பிராம்மணாள் வம்ச பரம்பரையாக வெஜிடேரியன்களாக இருந்து வருவது பிரத்யக்ஷம்; அவருடைய follower s-ல் [பின்பற்றுபவர்களில்] வெளிதேச பிக்ஷக்கள் உள்பட மாம்ஸத்திலும் ரொம்பவும் நிக்ருஷ்டத்தை [கீழானதை] போஜனம் பண்ணுவதும் பிரத்யக்ஷம்!

இதிலே ஒரு வேடிக்கை சொல்கிறேன். வெளிதேசத்தில் பௌத்தம் பரவின பிறகுதான் என்றில்லை; நம் தேசத்திலேயே எல்லாருக்கும் ஸ்ட்ரிக்ட் அஹிம்ஸா தர்மம் என்று புத்தர் பண்ணியதில் அந்த மதஸ்தர்கள் எல்லோரும் நேர்மாறாகத்தான் அசைவ போஜனம் செய்ய ஆரம்பித்தார்கள். பிராம்மணனைத் தவிர இதரர்களுக்கெல்லாம் மாம்ஸ போஜனத்தை அநுமதித்திருக்கிற நமது மதத்தில் ஸந்நியாஸிகள் கண்டிப்பாக வெஜிடேரியன்களாகத்தான் இருக்க வேண்டும் என்று விதித்து, அப்படியே ஸ்ட்ரிக்டாகப் பின்பற்றப் படுவதாயிருக்க, ஸர்வ ஜனங்களுமே பரிபூர்ண அஹிம்ஸா தர்மத்தை அநுஷ்டிக்க வேண்டும் என்ற பௌத்தத்திலோ அந்த மதத்தைச் சேர்ந்த ஸந்நியாஸிகளான பிக்ஷுக்கள் கூட மாம்ஸ போஜனம் செய்வதாக ஆகிவிட்டது. இது இன்றைக்கு ஏற்பட்ட விஷயமில்லை. ஆயிரத்து முந்நூறு வருஷத்துக்கு முந்தி மஹேந்திரப் பல்லவன் எழுதின “மத்த விலாஸ ப்ரஹஸனம்” என்ற ஹாஸ்ய நாடகத்திலேயே (‘ப்ரஹஸனம்’ என்பதை farce , satire என்று சொல்லலாம்) இதைக் கேலியாகச் சொல்லியிருக்கிறான் ஆனால் ரொம்ப ஸ்பஷ்டமாகச் சொல்லியிருக்கிறான். அந்த ட்ராமாவிலே ஒரு காபாலிகன் பிச்சை வாங்குகிற கபாலம் காணாமல் போய் விடுகிறது, அது எங்கே போயிருக்கும் என்று யோசிக்கிற போது, “அந்தக் கபாலத்திலே பக்குவம் பண்ணின மாம்ஸம் இருந்ததல்லவா? அதனால் அதை ஒன்று, ஏதாவது நாய் இழுத்துக் கொண்டு போயிருக்க வேண்டும்;இல்லாவிட்டால் எவனாவது புத்த பிக்ஷு அமுக்கிக் கொண்டு போயிருப்பான்!” என்று காபாலிகன் சொல்வதாக வருகிறது. அப்புறம் அந்த நாடகத்தில் ஒரு புத்த பிக்ஷுவே வருகிறார். அவரும் தனக்குத் தானே ஸந்தோஷமாகப் பேசிக்கொள்கிறபோது, “தனதாஸன் என்கிற வியாபாரிதான் எனக்கு எவ்வளவு நல்ல பிக்ஷை செய்து வைத்தான்! எத்தனை ருசியும், வாஸனையும், வர்ண விசித்திரமுமான மத்ஸ்ய மாம்ஸங்களை ஆஹாரமாகப் போட்டான்!” என்று சொல்லிக் கொள்வதாக வருகிறது.

பௌத்தர்கள் காஞ்சிபுரத்தில் நிறைய வாஸம் பண்ணிய காலத்திலேயே அங்கேயிருந்த ஆண்டு கொண்டிருந்த ராஜா இப்படி ஒரு ட்ராமாவில் எழுதுகிறான் என்பதிலிருந்து அது அப்போதிருந்த வழக்கத்தையே படம் பிடித்துக் காட்டுகிறது என்றுதானே அர்த்தம்?

அஹிம்ஸையை பௌத்தர்கள் போலப் பெரிசாக பிரகடனம் பண்ணாத நம் மதத்தில் ஸந்நியாஸிகள் ஸொப்பனத்தில்கூட மாம்ஸத்தை நினைக்க முடியாத போது, “எல்லோருக்கும் அஹிம்ஸா தர்மம்” என்று வானளாவச் சொன்ன அந்த மதக்காரர்களில் ஸந்நியாஸிகள்கூட இப்படியிருந்தால் ஹிந்துக்கள் சும்மாயிருப்பார்களா? இதைப்பற்றி அவர்களைக் கேட்டுப் பரிஹாஸம் பண்ணாமலிருப்பார்களா? “அஹிம்ஸை என்கிறீர்கள், ஆனால் இப்படிப் பண்ணுகிறீர்களே!” என்று கேட்டபோது அவர்கள், “எங்கள் புத்தர் பிராணிவதை கூடாது என்றுதான் சொல்லியிருக்கிறார். ஆஹாரத்தைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லை. நாங்கள் அவர் சொன்னபடிதான் செய்கிறோம். நாங்களாக எந்தப் பிராணியையும் கொல்வதில்லை. எவனோ குருவிக்காரன், வேடன், கசாப்புக் கடைக்காரன் கொன்று விற்பதைத்தான் வாங்கித் தின்கிறோம். அதனால் எங்களுக்கு ஜீவஹிம்ஸை தோஷம் இல்லை!” என்று ஸாமர்த்தியமாகச் சொல்வார்களாம்.

இவர்களை நினைத்துக் கொண்டுதான் திருவள்ளுவர் ஒரு குறள் பண்ணியிருக்கிறாரென்று தோன்றுகிறது.

தினற் பொருட்டால் கொல்லா(து) உலகு எனின் யாரும்

விலைப் பொருட்டால் ஊன் தருவார் இல் [-குறள் : 256]

‘ஏதோ கசாப்புக் கடைக்காரன் மாம்ஸத்தை விற்கிறானே, அவன் பிழைப்பு நடந்துவிட்டுப் போகட்டும்’ என்றுதான் தாங்கள் அதை வாங்கிச் சாப்பிடுகிற மாதிரிச் சொல்லி அல்லவா இந்த பௌத்தர்கள் தப்பித்துக் கொள்கிறார்கள்? இதுவா நிஜம்? அவன் கொன்று விட்டானே என்கிறதற்காகவா இவர்கள் தின்கிறார்கள்? இவர்கள் தின்கிறார்கள் என்பதற்காகத்தானே அவன் கொல்கிறான்?” என்று திருவள்ளுவர் நினைத்திருப்பார் போலிருக்கிறது. “ஊன் தின்னுபவர்கள் இருப்பதால்தான் அதற்காக ஒருத்தன் பிராணிகளை அடித்து விலைக்கு விற்பது என்று ஏற்பட்டிருக்கிறது. ஊன் தின்னாதவர் இருந்தால் கசாப்புக் கடையே தோன்றியிருக்காது”  என்ற கருத்தை வைத்தே ஒரு குறளைச் செய்து தம்முடைய உயர்ந்த நூலில் அதைச் சேர்த்து விட்டார். இவர்கள் அடித்துத் தின்னாவிட்டாலும், இவர்கள் தின்னுகிறார்கள் என்றேதான் இன்னொருத்தன் அடிப்பதால் அவன் பண்ணுகிற ஜீவஹிம்ஸை தோஷம் இவர்களைத்தான் சேரும் என்று சொல்லாமல் சொல்லி விட்டார்.

வள்ளுவர் மாதிரியான பெரியவர்கள் என்ன சொன்னாலும் அவர்கள் [பௌத்தர்கள்] அப்படியேதான், தாங்களாக அடிப்பதில்லை, ஆனால் இன்னொருத்தன் அடித்ததைத் தின்னுவது என்று தொடர்ந்தும் செய்து வந்தார்கள். இதனால் பிற்பாடு புத்தமதம் இங்கே [இந்தியாவில்] மறைந்து பர்மா, ஸிலோன் [ஸ்ரீலங்கா] , மலேயா முதலிய தேசங்களில் நிலைப்பட்டபோது ஒரு விசித்ரமான ‘டெவலப்மென்ட்’ உண்டாயிற்று. இந்த தேசங்களோடு நமக்கு ரொம்ப காலமாக ஸமுத்ர மார்க்கமாகத் தொடர்பு வந்திருக்கிறதல்லவா? இதனால் பிற்காலத்தில் தஞ்சாவூர் நாகப்பட்டினத்திலிருந்து ராமநாதபுரம் கீழ்க்கரை வரையில் கடற்கரை ஓரமாகத் துருக்கர்கள் நிறையக் குடியேறி வஸிக்க ஆரம்பித்தபோது, “இந்த பர்மா, ஸிலோன் பௌத்தர்கள் தாங்களே பிராணிவதை செய்கிறதற்கில்லையென்பதால், ‘எவன் அடித்துக் கொண்டு வந்து நிற்பான்’? என்று பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நாம்தான் இதைத் தொழிலாக நடத்த ஆரம்பித்து விட்டால் என்ன?” என்று யோசனை பண்ணி அந்தத் தேசங்களுக்குப் போய்க் கசாப்புக் கடைகள் வைத்தார்கள். நிறையப் பணம் பண்ணிக் கொண்டு திரும்பி வந்தார்கள். இவர்கள் அந்த தேசங்களைப் பற்றிச் சொல்லிக் கேட்டதன் மேலேதான் ராமநாதபுரம் கீழ்க் கரைக்குப் பக்கத்திலுள்ள நகரத்தார்கள் அங்கே முதலில் வட்டிக்கடை வைக்கப்போனார்கள் என்று சொல்வதுண்டு. “வட்டி வாங்கக்கூடாது” என்று குரானில் இருப்பதால் துருக்கர்கள் அங்கே வட்டிக்கடை வைக்கவில்லை.

நம் தேசத்திலேயுங்கூட புத்தர், அசோகன் முதலானவர்களே வாழ்ந்து, பௌத்தமதம் ரொம்பவும் அநுஷ்டானத்திலிருந்த பிஹாரிலும், உ.பி.யின் சில பகுதிகளிலுந்தான் இன்றைக்கு ரொம்பவும் அதிகமாக ‘நான்-வெஜிடேரியன்’கள் இருப்பது. பெங்காலில் வருஷத்தில் ஆறு மாஸம் கங்காதி நதிகள் பிரவாஹமாய் உடைப்பெடுத்துக் கொண்டு, காய்கறித் தோட்டங்கள் அழுகிப்போய் விடுமாதலால், ஒரு compelling necessity -யின் [நிர்பந்த தேவையின்] மீது அங்கே ஸகல ஜாதியாரும் பிரவாஹத்தில் யதேஷ்டமாகக் கிடைக்கும் மத்ஸ்யத்தை ‘ஜலபுஷ்பம்’ என்று மறக்கறிப் பெயரைச் சொல்லிக் கொண்டு சாப்பிட்டாலும், மற்ற தினுஸான மாம்ஸங்களை பெங்காலி பிராமணர்களும், அவர்களுடைய ஆசாரத்தைத் தாங்களாக follow பண்ணும் மற்றவர்களும் தொடமாட்டார்கள். பிஹார், அதைச் சுற்றியிருக்கிற பிரதேசங்களில் இப்படியில்லை. பெங்காலில் பிராமணர்கூட மத்ஸ்யம் சாப்பிடுவதை நான் ‘ஜஸ்டிஃபை’ பண்ணுகிறேனென்று அர்த்தமில்லை. ஆனால் சிலதை ‘ஜஸ்டிஃபை’ பண்ண முடியாவிட்டாலும், ‘ஏதோ தொலைகிறது’ என்று கொஞ்சம் விட்டுக் கொடுக்கலாமல்லவா? இதற்குக்கூட இடமில்லாமல், necessity -யின் compulsion -ஏ இல்லாமல் சில இடத்தில் பூர்வத்தில் செல்வாக்குப் பெற்றிருந்த பௌத்தத்தில் அஹிம்ஸா நியமத்தை எல்லோருக்கும் பொதுவாக விதி செய்திருந்ததேதான்! எதிலுமே ‘எக்ஸ்ட்ரீ’முக்குப் போனால் அப்புறம் நேர்மாறாகத்தான் நடக்க ஆரம்பித்துவிடும்.

இப்போது நடைமுறை ஸாத்யம் எதுவோ அதிலே ஆரம்பித்துக் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி ஐடியலை ஸாத்யமாகப் பண்ணிக் கொள்வதுதான் நடக்கக் கூடியது; அதுதான் புத்திசாலித்தனம். அப்படித்தான் நம் சாஸ்திரம் வழி பண்ணிக் கொடுக்கிறது.

பதார்த்தம், அதை நமக்கு ஆஹாரமாகப் பண்ணிப் போடுகிறவர்கள், ஆகிய இரண்டும், ஸாத்விகமாக இருக்க வேண்டும் என்பதே ஐடியல். அதை ஸர்வ ஜனங்களும் gradual -ஆக ஸாதித்துக் கொள்ள வேண்டும். ஸகலருக்கும் இதிலே இப்படியொரு ஆர்வமும், ஊக்கமும் பிறப்பதற்காக பிராம்மண ஜாதியார் மட்டும் பிறந்ததிலிருந்தே எப்பொழுதும் இந்த லக்ஷ்ய நிலையை யதார்த்தத்தில் அநுஷ்டித்துக் காட்ட வேண்டும். பிராம்மணணின் ஸ்வதர்மத்தில் அத்யாபனம், அதாவது பிறத்தியாருக்குப் போதனை பண்ணுவது ஒன்றோ இல்லையோ? இப்படி டீச்சிங் பண்ணுவது என்பது இவன் ஸகல வித்யைகளையும் தான் கற்று மற்ற ஜாதியினருக்கும் ‘டீச்’ பண்ணுவதோடு நின்றுவிடவில்லை; சிரம ஸாத்யமான ஐடியல் நிலையைத் தான் பரமத் தியாகியாகப் பிரத்யக்ஷத்தில் நடத்திக் காட்டி இந்த வாழ்க்கை உதாரணத்தாலும், வாயால் சொல்லாமலே மற்றவர்களுக்கு உயர்ந்த லக்ஷியங்களை ‘டீச்’ பண்ணுவதுதான் மற்ற ‘டீச்சிங்’கை விடவும் முக்யமானது. சாஸ்திரங்கள் இப்பேர்ப்பட்ட பளுவான ஸமூஹப் பொறுப்பை பிராமணணுக்கே தந்திருக்கிறது என்று புரிந்து கொள்ளாமல், அது அவனுக்குத்தான் ரொம்ப சலுகை, ஸெளகர்யம் எல்லாம் தந்து உசத்தி வைத்திருப்பதாகக் குற்றம் சொல்கிறார்கள்.

பரம பவித்ரமான வேத மந்த்ரங்களை பிராம்மணன் ரக்ஷித்துத் தர வேண்டியிருக்கிறது என்பதால் அப்படிப்பட்ட சரீரத்துக்குள் மது, மாம்ஸாதிகள் போகப்படாது என்று விதி பண்ணி வைத்திருக்கிறது.

Previous page in  தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is நியமத்தில் வேறுபாடுகள்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is  'சைவ'உணவு
Next