Page load depends on your network speed. Thank you for your patience. You may also report the error.

Loading...

அனைவரும் வைதிகராகுக! : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

எல்லா ஜனங்களும் ஆசாரமாயிருப்பதென்றால் தான் ஆசாரம் நிற்குமே தவிர, யாரோ வைதிகர்கள் என்று சிலர் ஆசாரமாயிருப்பதென்றால் அவர்களைத் தனி ஜாதி என்று பிரித்து அவர்களுக்கு மாத்திரமே சாஸ்திரம் என்கிற மாதிரி ஆகிவிடும். எனவே அனைவரும் அவரவருக்கான ஆசாரப்படி நடக்கப் பிரயாஸைப்படவேண்டும். முக்கியமாக, பிராம்மணனுக்குத்தானே நிறைய ஆசாரங்கள் வைத்திருக்கிறது? அதனால் அந்த ஜாதியில் பிறந்த எல்லாரும் ஆசாரங்களை நன்றாக அநுஷ்டிக்கப் பிரயத்தனம் செய்ய வேண்டும். தக்ஷிணை வாங்கிக் கொண்டு கர்மாக்களைப் பண்ணி வைக்கிறவர்கள்தான் வைதிகர்கள் என்று வைக்கிறபோது, தக்ஷிணையை உத்தேசித்துத்தான் வைதிகமாக இருக்கிறது என்று ஏற்படுகிறது! இப்படி ஒரு ஜீவனோபாயத்துக்காகவே அவர்கள் ஆசாரமாயிருக்கவேண்டி ஆகும்போது அதில் அநுஷ்டான சுத்தத்தையோ, சக்தியையோ, தன்னால் ஒரு ரெஸ்பெக்ட் கமான்ட் பண்ணும் [மரியாதையை ஈர்க்கும்] தேஜஸையோ எதிர்பார்ப்பதற்கில்லை. அதனால்தான் ‘வைதிகப் பிச்சு’ என்று கேலி பண்ணுகிற மாதிரி ஆகிறது.  நான் அவர்களைக் குறை சொல்கிறேனென்று நினைக்கக் கூடாது – வேறே எந்தத் தொழிலுக்கும், க்ளப்பில் தட்டுத் தூக்குவதற்குக்கூட, இன்னம் ஜாஸ்தி வரும்படி கிடைக்கிற போது, இவர்களாவது க்ருஹஸ்தர்கள் தங்களுடைய செலவினங்களில் கடைசி ‘அயிட்ட’மாக மூக்கால் அழுது கொண்டு தருகிற தக்ஷிணையில் ஜீவனம் நடத்தத் துணிந்து, ஊர்ப் பரிஹாஸத்தையும் தாங்கிக்கொண்டு, யாதாயாதம் அலைந்து கொண்டு பௌரோஹித்யம் [புரோஹிதத் தொழில்] செய்து, வேதகர்மா இந்த தேசத்தை விட்டுப் போயே விடாமல் காப்பாற்றித் தருகிறார்களேயென்று அவர்களுக்கு நன்றி சொல்லவே வேண்டும். ஆனாலும் எந்தத் துறையானாலும் அது ஆத்மார்த்தமாக இல்லாமல் உதர போஷணார்த்தமாக நடத்தப்படும்போது அதனுடைய ஜீவசக்தி குன்றிப்போய் விடுகிறது. அதனால் தான் இப்போது [கர்மாக்களைப்] பண்ணி வைக்கும் சாஸ்திரிகளையே வைதிகர்கள் என்று வைக்கிறபோது,  நான் முன்னே சொன்ன மாதிரி ஆசார சீலர்களுக்கு உள்ள காந்தியால் மற்றவர்கள் மதிப்பைப் பெறுவது என்பது இல்லாமல் போகிறது. நேர்மாறாக ஆகிறது.  நான் எல்லா சாஸ்திரிகளையும் சொல்லவில்லை. ஸமூஹத்தின் மதிப்பைப் பெற்று நல்ல சிஷ்டர்களாகவும், தேஜஸ்விகளாகவும், சுத்தமான அநுஷ்டாதாக்களாகவும் அங்கங்கே சாஸ்திரிகள் இல்லாமல் போகவில்லை. ஆனால் மொத்தத்தில், பண்ணி வைக்கும் வாத்தியார்களும், வெறுமனே தக்ஷிணை மட்டும் வாங்கிக்கொள்பவர்களும் அல்லது திவஸம் திங்களில் போஜனத்துக்கு மாத்திரம் போகிறவர்களுமே வைதிகர்கள் என்றாகியிருக்கிற இன்றைய – துர்த்தசையில் ‘வைதிகன்’ என்றாலே ‘இன்பீரியாரிடி காம்ப்ளெக்ஸ்’ [தாழ்வுணர்ச்சி] ஏற்படுவதாகத்தானிருக்கிறது.

ஆகையால் ஸம்பாத்யம் முதலான இதர நோக்கங்கள் தெரிந்தோ தெரியாமலோ இல்லாமல், சாஸ்திரத்துக்காகவே சாஸ்திரம், ஆசாரத்துக்காகவே ஆசாரம், வைதிகத்துக்காகவே வைதிகம் என்று எல்லாரும் ஆகவேண்டும். நான் சாஸ்திரப் பிரகாரம் நடக்கிறேனென்றால் இது காரணார்த்தம். இல்லாவிட்டால் எனக்கு பிழைப்பு நடக்காது. உபாத்யாயம் பண்ணுகிறவர்களும் இதே மாதிரிதான். இதையெல்லாம் genuine என்று சொல்ல முடியாது. இப்படி வேறு காரணங்களுக்காக என்றில்லாமல் எல்லாரும் ஆத்ம சுத்தி ஒன்றுக்காகவே சாஸ்த்ரோக்தமாயிருந்தால்தான் அது நிஜமானதாக இருக்கும். பூர்வத்தில் நமக்கு லோகம் முழுவதிலுமே எல்லாத் துறைகளிலும் பெருமை வாங்கித்தந்த அதன் நிஜ சக்தி அப்போதுதான் இன்றைக்கும் பேசும்! நம்முடைய தேசத்தின் ஜன ஸமூஹம் முழுக்கவுமே வைதிக ஸமூஹம் என்று ஆகவேண்டும். அதில் குறிப்பாக வேத ரக்ஷணத்துக்கென்றே ஏற்பட்ட ஜாதியில் அத்தனை பேரும் வைதிகர்களாக வேண்டும். இப்படி எல்லாருக்கும் ஸதாசாரமும் அநுஷ்டானமும் வேத சாஸ்திரப்படி யார் யாருக்கு எவையோ அவை இருந்துவிட்டால் உசத்தி-தாழ்த்தியும் கோப-தாபமும் ஓடியே போய்விடும். இப்போது emotional integration [உணர்ச்சி பூர்வ ஒருமைப்பாடு] என்று பேச்சில் பிரமாதமாகச் சொல்லிக்கொண்டே, எலெக்ஷனுக்கு நிறுத்தி வைப்பதானாலும், காலேஜ் அட்மிஷனானாலும், உத்யோகமானாலும் எதிலுமே ஜாதியையேதான் பார்த்து, இன்டெக்ரேஷனுக்கு நேர்மாறாகப் பண்ணி வருகிறார்கள். நான் சொல்கிறேன்: இந்த ‘இமோஷனல்’, ‘கிமோஷனல்’ என்பதெல்லாமே ஏதோ இமோஷனல் ஜோடனையாகத் தான் நிற்குமே தவிர ஸ்திரமாக நின்று பலன் தராது. உணர்ச்சியால் ‘இன்டெக்ரேஷன்’ என்பது நடக்காத காரியம். ஸதாசாரத்தால்தான் ‘இன்டெக்ரேஷன்’ ஏற்பட வேண்டும். எல்லாரும் ஸதாசாரம் என்ற தர்ம நெறிக்குள் கட்டுப்பட்டு வரும்போதுதான் தன்னால் கட்டுக் கோப்பான ஒரு ஸமூஹமாக இறுகுவார்கள்.

Previous page in  தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is ஆசாரமும், அலுவலக நடைமுறையும்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is  உடனே செய்ய வேண்டியது!
Next
htmltitle
UPDATE on 13 July 2017:

Thanks to the devotees at dheivathinkural.wordpress.com, many corrections have been incorporated on these pages. If you find an error, please help us by reporting it