புறத்திலிருந்து அகத்துக்கு : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

புறம் என்று எடுத்துக்கொண்டால், ரொம்பவும் ஃபிலஸாஃபிகலாக, வேதாந்தமாகப் போகிறபோது எல்லாவற்றுக்கும் புறத்தில், வெளியில் இருப்பது சரீரம். அன்னமயகோசம் என்று ஐந்து கோசங்களில் அதைத்தான் ஆத்மாவுக்கு ரொம்ப தூரத்தில் வைத்துச் சொல்லியிருக்கிறது. அது எப்படிப் போனால் என்ன என்று ரொம்பவும் உதாஸீனமாகத்தான் மஹா ஞானிகள் இருந்திருக்கிறார்கள். அநேக மஹான்களைப் பற்றிக் கேள்விப்படுகிறோம். மல மூத்ராதிகளைப் பூசிக்கொண்டு, புழுத்துப் போனதைத் தின்றுகொண்டு, ஸ்நானம் கிடையாது, பல் தேய்க்கிறதில்லை என்று, எங்கேயோ குப்பை கூளத்திலே கிடந்தார்கள் என்று. இதற்கெல்லாம் மாறாக ஒருத்தன் சரீர சுத்தியை இப்படியிப்படி உண்டாக்கிக் கொள்ள வேண்டும், ஆஹாரம் இப்படியிப்படி சுத்தமாயிருக்கணும், அவன் வஸிக்கின்ற இடத்தில் இப்படியாகப்பட்ட சுத்தமான அம்சங்களெல்லாம் இருக்க வேண்டும் என்பதையெல்லாம், ரொம்பவும் ‘புற’த்திலேயிருந்து கொண்டு ஆசார சாஸ்திரங்களில் நிறையச் சொல்லியிருக்கிறது. நாம் இருக்கிற நிலையில் இப்படிப் புறசுத்தியில் கண்டிப்பும் கறாருமாக இருந்து ஆரம்பித்தால்தான், அப்புறம் என்றைக்கோ ஒருநாள் அந்த ஞானிகளுடைய நிலைக்குப் போகலாம். என்பதற்காகவே, அதாவது முடிவிலே முழுக்க ஆத்ம லோகம் என்கிற அகவாழ்விலே சேர்கிறதை லக்ஷ்யமாகக் கொண்டே சரீரம், வீடு, சுற்றுப்புறம் முதலான புற விஷயங்களின் சுத்தத்திலிருந்து ஆரம்பித்து ஆசாரங்கள் விதிக்கப்பட்டிருக்கின்றன.

இந்த வெளிவிஷயங்களில் என்ன கட்டுப்பாடு வேண்டிக் கிடந்தது என்று நாம் இஷ்டப்படி பண்ணினால், எல்லாம் மனஸ் இழுத்துக்கொண்டு போகிறபடி போய், அதுவும் இல்லை, இதுவும் இல்லை என்றுதான் முடியும். ஆசாரம் ஆத்ம ஸாக்ஷாத்காரத்தை உண்டாக்கி விடவில்லை என்று இந்த நாள் வேதாந்திகள் சொல்கிறது நிஜந்தான். அதாவது, உடனே, நேர்பலனாக உண்டாக்கவில்லை என்பது நிஜந்தான். ஆனால் என்றைக்கோ ஒரு நாளாவது நாம் நிஜமான வேதாந்திகளாக ஆக வேண்டுமானால், அதற்கு இப்போது நமக்கு இருக்கிற சரீர-குடும்ப-ஸமூஹ அபிமானங்களில் ஆரம்பித்து இவற்றை எப்படி ஆசார ரீதியில் சுத்தப்படுத்திக் கொள்வது என்பதில் கவனம் செலுத்தி அப்படி பண்ணிக்கொண்டு போனால்தான் முடியும். ஆசாரமேயில்லாமல் ஆத்ம ஸம்பத்தை ஸம்பாதித்துக் கொள்வது என்பது எந்த ஒரு நாளுமே அந்த ‘ஐடியல்’ நிலைக்குப் போக முடியாமல், நம்மைக் கெடுப்பதில்தான் முடியும்.

“ஆசார ஹீநம் ந புநந்தி வேதா:”– அதாவது, ஆசாரமில்லாமல் எத்தனைதான் வேதத்தைப் படித்தாலும் அதனால் ஒருத்தனை வேதம் சுத்தனாக்கி விடாது என்று சொல்லியிருக்கிறது. எப்பேர்ப்பட்ட புண்ய தீர்த்தமானாலும் மண்டையோட்டிலே கொண்டு வந்தால் எப்படிப் பிரயோஜனப்படாதோ, எத்தனை நல்ல பசும் பாலானாலும் நாய்த்தோற் பையில் வைத்திருந்தால் எப்படிப் பானயோக்யமாகாதோ அப்படியே ஆசாரஹீனன் எவ்வளவு வேத சாஸ்திரங்களெல்லாம் படித்தவனாயிருந்தாலும் அவனிடமுள்ள வித்யை அவனுக்கும் உதவாமல் லோகத்துக்கும் உதவாமலே போகும் என்று சாஸ்திரத்திலிருக்கிறது. வேதத்தைப்பற்றி, உபநிஷத்தைப் பற்றி நன்றாகப் பிரஸங்கம் பண்ணுகிறார்கள், ரொம்ப ஆராய்ச்சி பண்ணிப் புஸ்தகங்கள் எழுதுகிறார்கள் என்பதால் அப்படிப்பட்டவர்கள் சுத்தர்கள் என்று ஆகிவிடாது. தாங்கள் ஆசாரங்களை விட்டு விட்டதால் மற்றவர்களும் விடவேண்டும் என்று இவர்கள் சொல்வதற்கும் ‘வால்யூ’ கிடையாது. சுத்தர்கள் எப்படி வாழ்கிறார்களோ, தங்கள் வாழ்க்கை யுதாரணத்தாலேயே என்ன உபதேசிக்கிறார்களோ அதற்குத்தான் மதிப்பு உண்டு. தலைமுறை தலைமுறையாக அநேக சுத்தர்கள் ஆசாரங்களை அநுஷ்டித்து வந்திருப்பதால்தான் அதற்கு ஸதாசாரம், சிஷ்டாசாரம் என்ற பெயர்கள் வந்திருக்கின்றன. ஸத்துக்கள் அநுஷ்டிப்பது ஸதாசாரம். ஸத்துக்கள் என்றால் நல்லவர்கள், உத்தமர்கள். சிஷ்டர்கள் என்றால் உசந்த குணமும் தோஷமில்லாத வாழ்க்கையும் உள்ளவர்கள்; ‘சான்றோர்’, ‘மேலோர்’ எனப்படுகிறவர்கள். அப்படிப்பட்டவர்கள் சாஸ்திரப்படியான ஆசாரங்களை நன்றாக அநுஸரித்துத்தான் வந்திருக்கிறார்கள். ஞானத்திலே போய் ஆத்ம ஸாக்ஷாத்காரம் பெறுவது, பக்தியினாலே ஈஸ்வராநுபவம் அடைவது என்ற இரண்டும் ஜீவனின் உள் குணத்தை மாற்றிக் கொள்வதாகவேயிருக்க, ஆசாரமெல்லாம் சர்மா, சின்னங்கள் முதலிய வெளி விஷயம் பற்றினதாயிருக்கிறது என்று சொல்பவர்கள் சொன்னாலும் இதை விட்டால் அதற்குப் போக வழியில்லை*. ”


*தெய்வத்தின் குரல்” இரண்டாம் பகுதியில் “வேதம்” என்ற உரையிலுள்ள ‘வேதமும் வேதாந்தமும் முரணானவையா? என்னும் பிரிவும், “நாற்பது சம்ஸ்காரங்கள்” என்ற உரையிலுள்ள ‘குணமும் காரியமும்’ என்னும் பிரிவும் இவ்விஷயமாக தெளிவு தரும்.

Previous page in  தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is ஆசாரம் என்பதன் இலக்கணம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is  ஆசாரத்தில் ஸாமான்ய தர்மங்கள்
Next