ஆசானை ஈசனாக : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

ஆகையால், நம்மைப்போல பந்த நிலையிலில்லாமல் விடுபட்டு ஸ்வதந்திர புருஷராக இருக்கிற குருவேதான் நம்மை ஒரு ஒழுங்கிலே கட்டுப்படுத்துவதற்காகத் தாமும் அந்த ஒழுக்கத்தில் கட்டுப்பட்டு வாழ்ந்து காட்டி நமக்கு போதனை செய்கிற ஆசார்யராக இருக்கிறார் என்று புரிந்து கொண்டு நம்முடைய ஆசார்ய புருஷர்களிடம் பக்தி செலுத்த வேண்டும். ஈஸ்வரனேதான் இப்படி குரு, ஆசார்யர் என்ற ரூபத்தில் வந்து ஞானாநுக்ரஹம் செய்கிறான் என்று நினைத்து பக்தி பண்ணினால் பலன் சீக்கிரத்தில் கிடைக்கும். ஈஸ்வரன்தானே எல்லாமுமாகி இருப்பது? கல்லு, மண்ணு எல்லாங்கூட அவன்தான். அதனால் ஆசார்ய ஸ்வரூபமாக, குரு வடிவாக இருப்பவன் அவன்தான் என்பதில் என்ன ஆக்ஷேபணை?

இப்படிப் பார்த்தால், நாம் மட்டும் அவனில்லாமல் யார் என்று கேள்வி வருகிறது. நாமே ஈஸ்வரன் என்கிறபோது ஆசார்யன் என்று இன்னொருத்தனை எதற்காக ஈஸ்வரனாக உபாஸிக்க வேண்டும் என்பது அடுத்த கேள்வி.

எல்லாம் அவன்தான் என்றாலும் ஒன்றுக்கும் தன்னுடைய ஈஸ்வரத்வம் தெரியவில்லையே! நமக்கு நம் ஈஸ்வரத்வம் கொஞ்சமாவது தெரிகிறதா? தெரிந்தால் இத்தனை ஆசை, கோபம், பயம், அழுகை, பொய், பாபம் இருக்குமா? அதனால் எல்லாம் அவன் என்றாலும், பூர்ணமான அவனாகத் தன்னைத் தெரிந்துகொள்ளாமல் அவனே போட்டுக் கொண்ட வேஷங்களாகத்தான் இருக்கின்றன. நாமெல்லாம் நன்றாக அஞ்ஞான வேஷம் போட்டுக்கொண்டு, மூல ஆஸாமியை அடையாளமே கண்டுகொள்ள முடியாதபடி ஆனவர்களாக இருக்கிறோம். ஆசார்யர் என்பவர் இத்தனை கோணா-மாணா வேஷமாக இல்லை. அவரிடம் ஆஸாமியை அடையாளம் கண்டுகொள்ள முடிகிறது. அதனால் அவரிடம் ஈஸ்வரத்வத்தை நாம் பக்தி பண்ணினால் கண்டு அநுபவிக்கலாம். நம்மிடமே தெரிந்து கொள்ள முடியாத தெய்வத்தன்மையை அவரிடம் ஸுலபமாகத் தெரிந்து கொள்ளலாம். பல தினுஸாக வேஷம் போடுகிற ஒரே ஈஸ்வரன்தான், ரொம்பவும் அசட்டு வேஷமான நம்மை சமர்த்தாக்குவதற்கே, ஸ்பெஷலாக ஆசார்ய வேஷத்தில் வந்திருக்கிறான். இப்படி உணர்ந்து அவரிடம் பக்தி பண்ணினால் அப்புறம் அங்கே வேஷத்தை முழுசாகவே கலைத்துவிட்டுத் தன்னையே தெரியப்படுத்திக் கொண்டு விடுவான். அப்புறம், அப்புறந்தான் – நம் வேஷத்தின் அசட்டுதனங்களையும் போக்கி, அப்புறம் இந்த வேஷத்தையும் கலைத்து, நாமும் அவனேதான் என்று அறிந்து அநுபவிக்குமாறு அருள் செய்வான்.

முடிந்த முடிவான அந்த நிலைக்குப் போக இப்போது நாம் செய்ய வேண்டியது ஆசார்யரை ஈஸ்வரனாக நினைத்து அவர் உபதேசிக்கிறபடி நடப்பதுதான்.

Previous page in  தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is குரு-ஆசார்ய அபேதம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is  குலவழக்கையே கொள்க!
Next