Page load depends on your network speed. Thank you for your patience. You may also report the error.

Loading...

தனிப் பிரிவாகாத நவீன மதத் தலைவர்கள் : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

ஸநாதனமான ஆசார்யபீடமொன்றில் நான் இருப்பதால் நான் இந்த விஷயத்தைச் சொன்னால் உடனே vested interest [ஸ்வய நல நோக்கம்] எனற கண்டனம் வரும். வந்தாலும் வரட்டும் என்றுதான், மனஸில் படுவதைச் சொல்லாவிட்டால் தோஷம் என்பதால் சொல்கிறேன். இப்போது அநேக ஸ்வாமியார்கள் தோன்றியிருக்கிறார்கள். இவர்கள் ஹிந்துமதம் என்ற parent body -யிலிருந்து, மூலஸ்தானத்திலிருந்து தாங்கள் பிரிந்து போய்ச் சீர்திருத்த மதம் தனியாக ஆரம்பித்திருப்பதாகக் காட்டிக் கொள்வதில்லை. அதாவது இவர்கள் பெயரிலும் ஸ்தாபனம், மிஷன் ஏதாவது இருந்தாலும் அதை ஹிந்து மதத்தின் main stream–கு வெளியாக பிரம்ம ஸமாஜ், ஆர்ய ஸமாஜ் என்று அநேகச் சீர்திருத்த இயக்கங்கள் தனியாக இருப்பது போலக் காட்டிக் கொள்வதில்லை ஸம்ப்ரதாயமாக வந்துள்ளதும், இன்றும் பெரும்பாலான ஜனங்கள் விட்டுப் போகத் தைரியமில்லாமல் ஒட்டிக் கொண்டிருக்கிற மாதிரி இருப்பதுமான traditional ஹிந்து மதத்தின் பிரதிநிதிகளாகவே தங்களை இந்த ஸ்வாமிஜிகள் சொல்லிக் கொள்கிறார்கள். நம்முடைய வேதாந்தம், இதிஹாஸம் இவற்றைப் பற்றி நன்றாகப் பிரஸங்கம் செய்தும் புஸ்தகம் போட்டும் பிரசாரம் பண்ணுகிறார்கள். நம்முடைய பண்டிகைகளைக் கொண்டாடுகிறார்கள். பஜனையிலிருந்து யோகம் வரையில் எல்லாம் சொல்லிக் கொடுக்கிறார்கள். இதையெல்லாம் பார்க்கிறபோது traditional-ஆக வந்துள்ள எங்களைப் போன்ற தர்ம பீடங்களை விடக்கூட இவர்கள்தான் மதப்பிரசாரத்துக்காக நிறையப் பண்ணி, “மறுமலர்ச்சி” என்கிறார்களே அப்படி ஸமய விஷயத்தில் ஜனங்களைச் சக்தியோடு திருப்பி வருகிறார்கள் என்று தோன்றுகிறது. அப்படிப்பட்ட கூட்டம் இவர்களிடம் சேருகிறது. இவர்களில் சிலருக்கு விசேஷ வாக்குவன்மை இருக்கிறது. ஆத்மார்த்தமான விஷயங்களைப் பொது ஜனங்கள் ரஸித்துக் கேட்கும் விதத்தில் அழகாகவும் மனஸில் பதியும்படியும் எடுத்துச் சொல்கிறார்கள். இன்னம் சில பேருக்கு வியாதி, வக்கை, வேறே ஏதோ கஷ்டம், ஆபத்து என்றால் அதைத் தீர்த்து வைக்கிற சக்தி இருக்கிறதென்று போகிறார்கள். ஸித்திகள் உள்ளவர்களாக இப்படிச் சிலர் இருக்கிறார்கள். அவர்களிடம் போகிறவர்கள் இம்மாதிரி லாபங்களைப் பெறுவது மட்டுமில்லாமல் சில ஸமயாநுஷ்டானங்களையும் பின்பற்ற ஆரம்பிக்கிறார்கள்.

ஆகையால் பிராசீனமான தர்ம பீடங்களில் இல்லாமல் தனியாகத் தோன்றியிருக்கிற ஸ்வாமியார்களாலும் மதத்துக்கு நல்லது நடந்துதான் வருகிறது. மனஸ் விட்டுச் சொன்னேனானால், எங்களைப் போன்ற ஸநாதன ஆசார பீடங்களைக் கட்டுப்பெட்டி என்று படிப்பாளிகளும், தேசத்தலைவர்களும் திருப்பித் திருப்பிச் சொல்லி, புது ஜெனரேஷன்களுக்கு ஒரு ப்ரெஜூடிஸே உண்டாக்கியிருந்த ஸந்தர்ப்பத்தில், ஜனங்கள் அடி நாஸ்திகமாகப் போகாமல் ஏதோ கொஞ்சமாவது மத விச்வாஸம் பெற்றதற்குக் காரணமே இந்தத் தனி ஸ்வாமிஜிகள்தான் என்று கூடச் சொல்லலாம். சித்தாகத்தான் இருக்கட்டும், வேறு ஏதோ சக்தியாகத்தான் இருக்கட்டும்; நாலு பேருக்கு கஷ்டத்தைப் போக்குகிறார்கள், அதோடு அவர்களைக் கொஞ்சம் பயபக்தியில் தூண்டிவிடுகிறார்கள், ஆத்ம விஷயங்களைப் பேசியும் எழுதியும் பிரசாரம் பண்ணுகிறார்களென்பதற்காக இவர்களைப் பற்றி நல்லதாகத்தான் நினைக்க வேண்டும்.

இது ஒரு நல்ல தொழிலாயிருக்கிறதே என்று போலிகளும் கிளம்பியிருக்கலாம் ஜனங்கள் அவர்களிடம் ஏமாந்தும் போகலாம். தடுக்கி விழுந்த இடமெல்லாம் ஒரு Divine Messenger [திவ்ய தூதர்] , Messiah [இறைவன் அனுப்பி வைத்த லோக ரக்ஷகர்] , தெய்வாம்சமே பெற்றவர் என்று ஏதாவதொன்று சொல்லிக் கொண்டு பலபேர் இருந்தால் genuine -ஆக இருக்க முடியுமா என்று ஜனங்களுக்கும் கலக்கம். ஆனாலும் ‘எத்தைத் தின்றால் பித்தம் தெளியும்?’ என்று பாவம், அங்கேயும் ஓடுகிறார்கள். இப்படியே ஒரு பக்கம் வெளிதேசத்தவர்களும் Gurudom, Swamidom என்று கேலி பண்ணிக் கொண்டே, இன்னொரு பக்கம் கூட்டம் கூட்டமாக இவர்களிடம் வந்து சிஷ்யர்களாகிறார்கள்.

போலி இருக்கலாம் என்பதற்காக, எல்லாம் போலி என்று சொல்லிவிட முடியாது. வேறே எது போலியோ இல்லையோ, ஒரு ஸ்வாமிஜியிடம் போகிறான், ஏதோ ஒரு கஷ்டம் தீர்கிறது என்றால், வாஸ்தவத்தில் அவர் அதைத் தீர்த்து வைக்காவிட்டால்கூட, இவனுக்கு ஒரு தாப சாந்தி உண்டாவது போலியில்லையே? நிஜந்தானே? பிரஸங்கம் பண்ணுகிறபடி அவர் [சொந்த வாழ்க்கையில்] இல்லாவிட்டாலும் போகட்டும், அதைக் கேட்டதில் இவனுக்கு ஒரு தெளிவு வந்தது நிஜந்தானே? அவர் எப்படி வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும் – இவன் நல்லது என்று நினைத்துப் போனான், தன் அஹங்கார மமகாரங்களை விட்டு நமஸ்காரம் பண்ணினான். ஏதோ நல்லதையும் அடைந்தான். முடிவில் கொஞ்சமாவது தெய்வ பக்தி பெற்று ஏதோ கொஞ்சம் மதாநுஷ்டானத்தையும் எடுத்துக்கொள்கிறான். இந்த மட்டில் நல்லதுதான்.

ஆனாலும் ‘ஸமயாசாரம்’ என்று பார்க்கும்போது என்ன ஆகிறது? இந்த ஸ்வாமிஜிக்கள் அநேகமாக சாஸ்திர ஆசாரங்களில் பெரும்பாலானவற்றைக் கழித்துக் கட்டி விடுகிறார்கள். இவர்களில் முக்காலே மூணுவீசம் பேரும் அதிகார பேதத்தை*ஆதரிக்காதவர்கள்தான். வேறு பல ஆசார அநுஷ்டானங்களையும் காலத்துக்குப் பொருந்தாது என்று எடுத்துப் போட்டுவிட்டார்கள்தான். சாறு – சக்கை, தானியம் – உமி என்று சொல்லிக்கொண்டு, ஸமயாசார அநுஷ்டானங்களில் அவரவருக்கு எது ஸரியென்று தோன்றுகிறதோ, எது இஷ்டமாயிருக்கிறதோ, ஸெளகரியமாயிருக்கிறதோ அது மட்டுமே சாறு, அதுதான் தானியம் என்று வைத்துக்கொண்டு பாக்கியெல்லாமே சக்கை, உமி என்று விட்டு விடுகிறார்கள். எங்களைப் போன்ற ஸநாதனிகள் ஆசாரம் ஆசாரம் என்று சொல்லிக் கொண்டு, ஸ்பிரிட்டை [உயிரை] விட்டு விட்டு ஸ்கெலிடனை [எலும்புக்கூட்டை] மட்டும் பிடித்து வைத்துக் கொண்டிருக்கிறோம் என்று இவர்கள் சொல்லி, ட்ரெடிஷனல் மதத்தில் தொண்ணூறு பெர்ஸென்டாக இருக்கும் ஆசார அநுஷ்டானாதிகளை விட்டு விட்டிருக்கிறார்கள். ஆனாலும் ஹிந்துமத parent body -யிலிருந்து வெளியேறித் தனியான சீர்திருத்த இயக்கமாகவும் இல்லாமல் இதிலேயே இருந்துகொண்டு, இவர்கள் அநுஷ்டிப்பதுதான் ஸரியான ஹிந்துமதம் என்று ஜனங்கள் பிரமை கொள்ளும்படிப் பண்ணுகிறார்கள்.

இந்த இடத்திலே தான் நான் பிரிந்துபோகிற சீர்திருத்த இயக்கங்களே தேவலையென்று நினைக்கிறேன். அபிப்ராய பேதமிருந்தால் நன்றாக ஆலோசித்து பேதத்தைப்


* வர்ண-ஆச்ரமங்களை பொறுத்து எவரெவர் என்னென்ன செய்யலாம், செய்யக்கூடாது என்னும் சாஸ்திர பாகுபாடு.

Previous page in  தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is ஆத்மிக லக்ஷியச் சீர்திருத்தம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - மூன்றாம் பகுதி  is  'நவீன வேதாந்தி'கள்
Next
htmltitle
UPDATE on 13 July 2017:

Thanks to the devotees at dheivathinkural.wordpress.com, many corrections have been incorporated on these pages. If you find an error, please help us by reporting it