Page load depends on your network speed. Thank you for your patience. You may also report the error.

Loading...

ஐக்கிய சக்தி : தெய்வத்தின் குரல் (இரண்டாம் பகுதி)

“சரி, இப்படி தனித்தனியாக ஜாதிகள் பிரிந்திருந்தால் மொத்த ஸமூஹத்தில் கட்டுக்கோப்பு எப்படியிருக்கும்?” என்றால் அது (ஸமூஹக் கட்டுக்கோப்பு) இருக்கத்தான் செய்தது. த்வேஷத்தில் பிரிந்திருக்கிற இன்றைவிட அன்றைக்குத்தான் ஸமூஹ ஐக்கியம் இருந்தது. எப்படியிருந்தது என்றால் அத்தனை பேருக்கும் இருந்த பொதுவான மத உணர்ச்சியாலும் சாஸ்திர நம்பிக்கையாலும்தான். ஊருக்கே பொதுவாக, ஊருக்கே மத்தியமாக இருந்த ஆலயத்தால்தான். அத்தனை ஜனங்களும் ஈச்வர ஸந்நிதானத்தில் அரன்குடி மக்களாக ஒன்று சேர்ந்திருந்தார்கள்; வழிபாடுகளில், உத்ஸவாதிகளில் அத்தனை ஜாதியாரும் கலந்து கொண்டார்கள்; அவரவரும் ஒவ்வொரு விதத்தில் கைங்கர்யம் செய்தார்கள்.

ஆசௌசம் [தீட்டு] ஏற்பட்டுவிட்ட ஒரு ச்ரௌதிகள் மேலே பட்டால்கூட ஸ்நானம் செய்தவர்களே ரதோத்ஸவத்தில் பஞ்சமர்களோடு தோளோடு தோள் இடித்துக் கொண்டு வடம் பிடித்து இழுத்தார்கள்; திரும்பி வீட்டுக்கு வந்ததும் ஸ்நானம் செய்யாமலே சாப்பிட்டார்கள். ஏனென்றால் சாஸ்திரத்தில் அப்படியிருக்கிறது. மனஸில் த்வேஷமில்லாமல் ஐக்யமாயிருந்து தொழிலில் மட்டும் பிரிந்திருந்த காலம் அது. அப்போது ஜாதி முறையால் ஐக்கியமில்லாதிருந்ததாகக் கதை கட்டினாலும், வேத சாஸ்திர நம்பிக்கையும் கோவிலும் அன்றைக்கு ஸமூஹத்தை நன்றாக ஐக்கியப்படுத்தியது. இப்போது ஐக்கியம், ஐக்கியம் என்று சொல்லிக்கொண்டே த்வேஷப் பிரசாரத்தால் ஜனங்களைப் பரஸ்பர சத்ருக்கள் மாதிரிப் பிரித்திருக்கிறது!

இதனால்தான் அநேகமாக இப்போது ‘வேதமும் வேண்டாம்; கோயிலும் வேண்டாம்’ என்பது ‘ஜாதி வேண்டாம்’ என்பதோடு சேர்ந்திருக்கிறது.

வேதம் வேண்டாம், கோயில் வேண்டாம் என்பதுதான் ரொம்பவும் உச்சநிலையில் வேதமே சொல்வது. ஞானம் வந்த நிலையில் வேதம் வேதமில்லை; தீண்டாதவனில்லை என்று உபநிஷத்தே சொல்கிறது. அப்படி நிஜமாகவே இல்லையாக்கிக் கொள்வதற்காகவே அப்படிப்பட்ட ஞானம் வருகிற வரையில் வேதம் வேண்டும், கோயில் வேண்டும், ஜாதி வேண்டும் என்கிறது. ஒரே அபேதமாகி விடுவதற்கே முதலில் இத்தனை பேதமும் வேண்டும் என்கிறது.

இந்த லோக வாழ்க்கையை விட்டு விடுதலைக்கு ஓயாமல் பிரயாஸைப்படுகிறவனுக்கு முடிந்த முடிவில் எல்லாம் ஒன்றாகி விடுவதை வேதத்தில் சொல்லியிருக்கிறது; கிருஷ்ண பரமாத்மாவும் சொல்லியிருக்கிறார். முடிந்த முடிவில் காரியமே இல்லை. “தஸ்ய கார்யம் வித்யதே” [கீதை III.17]

காரியம், தொழில் என்று ஏற்பட்டுவிட்ட இந்த நடைமுறை லோக வாழ்க்கை விஷயத்தில் அந்த அபேத தத்வத்தைச் சொல்லி, இதனால் எந்த பேதமும் காரியலோகத்தில் கூடாது என்பது தப்பான வாதம். காரிய லோகத்திலும் இந்த ஸமபாவனையானது நம் மனஸில் அன்பு என்கிற ரூபத்தில் ஸகல ஜாதியிடமும், ஸகல பிராணிகளிடமும் கொஞ்சங்கூட ஏற்றத் தாழ்வில்லாமல் ஸமமாக நிறைந்து நிரம்பி இருக்க வேண்டும் என்றுதான் சாஸ்திரங்கள் சொல்கின்றன. அதாவது அன்பிலேதான் அபேதம். காரியத்தில் அபேதம் இல்லை. ‘எல்லாம் ஒன்று என்கிற பாவனை, உள்ளுணர்ச்சி எப்போதும் இருக்க வேண்டும்; அதனால் ஏற்படுகிற நிறைந்த ப்ரேமை இருக்க வேண்டும். ஆனால் காரியத்தில் வித்யாஸம் பார்க்கத்தான் வேண்டும்’ என்பதே சாஸ்திரங்களில் சொல்லியிருப்பது.

பாவாத்வைதம் ஸதா குர்யாத்; க்ரியாத்வைதம் ந கர்ஹிசித் என்று சொல்லியிருக்கிறது. அதாவது ‘எல்லாம் ஒன்று என்ற அத்வைதம் பாவனையில் எப்போதும் இருக்க வேண்டும்; காரியத்தில் ஒருபோதும் அல்ல’ என்று அர்த்தம்.

லோக வாழ்க்கையில் இப்படி பேதப்படுத்தினால்தான் ஒழுங்கும், சீரான போக்கும் இருக்கும். அப்போதுதான் குழப்பமில்லாமல், மனக்கலக்கமில்லாமல் ஆத்ம சிந்தனையை வளர்த்துக் கொள்ள முடியும். லோக வாழ்க்கை பொய் என்பதைத் தெரிந்து கொள்வதற்காகவே, இப்படி அதை ரொம்பவும் நிஜம் மாதிரி ஒழுங்குப்படுத்தித் தர வேண்டும் என்பதுதான் ஸநாதன தர்மத்தின் ஏற்பாடு.

அதிலே நாலு வர்ணம் என்று வைத்தது இன்னம் கவடுவிட்டுப் பிரிந்து கலந்து பல ஜாதிகளாயின. ஸப்த ஸ்வரங்களே பலவகையாகச் சேர்ந்து எழுபத்திரண்டு மேளகர்த்தா ராகங்களும், மற்ற கணக்கில்லாத ஜன்ய ராகங்களும் உண்டானது போல், நாலு வர்ணத்துக்கு ஆதாரமான தத்வமே மேலும் பல ஜாதிகளாகப் பிரித்துக் கொடுத்தது. இவ்வளவு பிரிவுகளையும் அவற்றுக்குரிய தர்மங்களையும் பற்றி ஸம்பிரதாயங்கள் ஏற்பட்டிருக்கின்றன.

Previous page in  தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is ஸம வாய்ப்பு விஷயம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is  பிற மதங்களில்
Next
htmltitle
UPDATE on 13 July 2017:

Thanks to the devotees at dheivathinkural.wordpress.com, many corrections have been incorporated on these pages. If you find an error, please help us by reporting it