பிறகு போகவே முதலில் வேண்டும் : தெய்வத்தின் குரல் (இரண்டாம் பகுதி)

உபவேதங்கள் மட்டுந்தானா என்ன? கர்மாக்கள் அத்தனையும் – தர்மசாஸ்திரம் சொன்ன அத்தனை விஷயங்கள், வேதத்தின் கர்மகாண்டத்திலேயே உள்ள அநுஷ்டானங்கள் எல்லாமும் கூட – முடிவிலே அடிபட்டுப் போகிறவைதான். ஆனால் அந்த முடிவிற்குப் போவதற்கே அடிமட்டத்தில் அவை வேண்டும். இத்தனை படிப்பதும், பார்ப்பதும், அறிவும், அநுபவிப்பதும், அநுஷ்டிப்பதும் பரமாத்மாவை தெரிந்து கொள்வதற்கு வழியாகத்தான்.

கற்றதனால் ஆய பயன் என் கொல் – வாலறிவன்

நற்றாள் தொழாஅர் எனின்?

என்று திருவள்ளுவரும் கேட்கிறார். அந்த goal (லக்ஷ்யம்) எந்நாளும் மறக்கக்கூடாது. அதை மறந்து விட்டால், வித்யைகளைப் பயிலுவது மட்டுமின்றி, வைதிக கர்மாக்களும், பூஜையும், க்ஷேத்ராடனம் தீர்த்தாடனம் செய்வதும்கூடப் பிரயோஜனம் இல்லை. எங்கேயும் நிறைந்த பரம்பொருளிடம் மனஸார நாட்டமில்லாவிடில் இவை எதுவும் பிரயோஜனமில்லை என்று அப்பர் ஸ்வாமிகள் சொல்கிறார்.

கங்கை யாடிலென்? காவிரி யாடிலென்?

கொங்கு தண்கும ரித்துறை யாடிலென்?

ஒங்கு மாகட லோதநீ ராடிலென்?

எங்கு மீசன் எனாதவர்க் கில்லையே!

அப்பர் ஸ்வாமிகள் சொல்கிற மாதிரியேதான் பகவத் பாதாளும் ‘பஜகோவிந்த’த்தில்

குருதே கங்கா ஸாகர கமனம்

என்று கங்கையில் ஆரம்பித்து,

வ்ரத பரிபாலனம் அதவா தானம்

ஞான விஹீன:ஸர்வமதேன

முக்திம் ந பஜதி ஜன்மசதேந

என்கிறார். எங்குமாய் எல்லாமாய் இருக்கிற பரமாத்ம ஞானத்துக்கு ஆசைப்படாமல் கங்கா ஸங்கமத்தில் ஸ்நானம் செய்வதாலும், விரதங்களை அநுஷ்டிப்பதாலும், தானங்கள் பண்ணவதாலும் நூறு ஜன்மா எடுத்த பின்பும் முக்தி கிடைக்காது என்கிறார்.

அப்பரும், ஆசார்யாளும் சொன்ன இதே கங்கையைப் பற்றிய பிரஸ்தாவம் இவ் விஷயமாகவே “மநுஸ்மிருதி” யிலும் வருகிறது. தீர்த்தங்களில் கங்கை மாதிரி, க்ஷேத்திரங்களில் குரு க்ஷேத்ரம். இந்த இரண்டையும் சேர்த்து மநு சொல்கிறார்:

யமோ வைவஸ்வதோ ராஜா யஸ்தவைஷ ஹ்ருதி ஸ்தித:|

தேன சேதவிவாதஸ்தே மா கங்காம் மா குரூன் கம:||

யமனுக்கு வைவஸ்தன் என்றும் பெயர். அவனுக்கே தர்மராஜா என்றும் பெயரல்லவா? அதனால் இங்கே ‘யமோவைவஸ்வதோ ராஜா’ என்பதற்கு ‘தர்மம்’ என்று பொருள் கொள்ள வேண்டும். “தர்மம் ஒருத்தனுடடைய ஹ்ருதயத்தில் குடி கொண்டு விட்டாலே போதும். அவனுடைய பாபமெல்லாம் போய் விடுகிறது. அவன் பாப நிவிருத்திக்காக கங்கைக்கும் குரு க்ஷேத்ரத்துக்கும் ஓட வேண்டியதே இல்லை” என்பது ச்லோகத்தின் கருத்து.

பக்குவம் வந்து விட்டால் சாஸ்திரம் வேண்டாம், க்ஷேத்திரம் வேண்டாம், தீர்த்தம் வேண்டாம். அந்த நிலையில் வேதமே வேதமில்லை, தேவர்களே தேவர்களில்லை என்று உபநிஷத்தே சொல்கிறதே!1

அதற்காக அப்பரும், ஆசாரியாளும், மநுவும் பக்தி, கர்ம அநுஷ்டானங்களை ஆக்ஷேபித்தார்கள் என்று தப்பர்த்தம் செய்து கொள்ளக் கூடாது. இவற்றைச் செய்யும்போதே ‘இவற்றை விட்டு விட்டுப் போகிற காலமும் வரவேண்டும் – அல்லது சரியாகச் சொன்னால், இவை நம்மை விட்டுப் போகிற காலமும் வரவேண்டும். அப்படி வந்து நாம் பரமாத்ம ஸத்யம் ஒன்றிலேயே கரைந்து இருக்க வேண்டும்’ என்ற எண்ணத்தோடு பண்ண வேண்டும் என்று அர்த்தம்.

“கங்கா ஸாகரத்துக்கு ஏன் போக வேண்டும்?” என்று கேட்ட அதே ஆசார்யாள்தான் ஒரு க்ஷேத்ரம், ஒரு தீர்த்தம் பாக்கியில்லாமல் தேசம் நெடுக ஸஞ்சாரம் பண்ணியும் நமக்கு வழி காட்டியிருக்கிறார். வியாகரணத்தையும் அதையும் இதையும் படித்து என்ன பிரயோஜனம் என்று ‘பஜ கோவிந்தம்’, ‘சிவாநந்த லஹரி’ முதலியவற்றில் அவர் சொன்னாலும், அவர் தெரிந்து கொள்ளாத சாஸ்திரமில்லை: ‘ஸர்வக்ஞ’ பட்டமே பெற்றவர் அவர்.

ஆசார்யாளுக்கு எல்லாக் கலையும் தெரியுமா என்று பார்ப்பதற்காக ஒரு சக்கிலியன் பரீக்ஷை பண்ணினானாம். ‘செருப்பு தைக்க வருமா?’ என்று அவரைக் கேட்டானாம். உடனே அவர் ஊசியை மூக்கின்மேலே தேய்த்துக் கொண்டு விட்டு, வெகு நேர்த்தியாகச் செருப்புத் தைக்க ஆரம்பித்து விட்டாராம். மூக்குத் தோல் மேல் ஊறும் ஒரு திரவம் ஊசியில் படுவதால் அது செருப்புக்குள் சுலபமாகத் துளைத்துக் கொண்டு போகும் என்பதால் சக்கிலியர் அப்படித்தான் தேய்த்துக் கொள்வார்களாம். அப்படியே பண்ணி அந்தத் தொழிலாளியிடம் ‘ஸர்ட்டிஃபிகேட்’ வாங்கினதில் ஜகதாசாரியர்களும் பெருமைப் பட்டார்களாம்!

இதே மாதிரி இன்னொரு கதை உண்டு. மாட்டின் முதுகில் ஏதாவது பட்டால் அது சிலிர்த்துக் கொண்டு முதுகில் சுழி சுழியாகப் பரவுமே!அதே மாதிரி ஒரு பெரியவர் ராஜ சபையில் சுழித்துக் கொண்டு காட்டினாராம். ராஜா பீதாம்பரம் போர்த்தினானாம். அதே ஸமயத்தில் ஒரு கோனார் இந்த வித்தைக்கு ஸபாஷ் போட்டுத் தன் மேல் போட்டிருந்த கிழிந்த கம்பளியை எடுத்து அவர் மேல் போட்டானாம். அவர் ராஜாவின் பீதாம்பரத்தைவிட மாட்டோடேயே ஜீவனம் செய்கிற இந்த கோனாரின் கிழிசல் கம்பளிதான் விசேஷமானது என்றாராம்!

இந்த இரண்டு கதைகளிலிருந்து எல்லா வித்தைகளும் தொழில்களும், அவற்றைச் செய்கிற தொழிலாளிகளும் கலைஞர்களும் பெற்றிருந்த உயர்ந்த மதிப்பு தெரிகிறது.

ஒரு நிலையில் எல்லாம் வேண்டும். அப்புறம் அவை போய்விட வேண்டும்.

“யாக்ஞவல்க்ய ஸ்ம்ருதி”யில்

க்ரந்தமப்யஸ்ய மேதாவீ ஞான விஞ்ஞான தத்பர:|

பலாலமிவ தான்யார்த்தீ ஸர்வ சாஸ்த்ரம் பரித்யஜேத்:||

என்று இருக்கிறது. பார்த்துப் பார்த்து ஒருத்தன் நெல்லைப் பயிர் பண்ணுகிறான். அந்தக் கதிர் புஷ்டியாக வளர எத்தனை உண்டோ அத்தனையும் பண்ணுகிறான். அப்புறம் அறுவடை காலத்தில் என்ன செய்கிறான்? போரடித்துத் தான்ய மணிகளை மட்டும் பொறுக்கிக் கொண்டு அந்த கதிரை வெறும் வைக்கோல் என்று தள்ளிவிடுகிறான். இப்படித்தான் ஸர்வ சாஸ்திரங்களையும் படித்தும் அநுஷ்டித்தும் நெல் கதிரைப் போல் நன்றாகப் பேணிய பின், ஞானம் என்கிற பலனான தானியம் உண்டாகி முதிர்ந்த பிறகு, அத்தனை சாஸ்திரங்களையும் வைக்கோலாகத் தள்ளிவிட வேண்டும் என்பது தாத்பரியம்.

தானியமணிக்காகத்தான் இதைப் பயிரிடுகிறோம் என்று ஒரு விவஸாயிக்கு அடியிலிருந்து நினைவிருப்பது போல், நம்முடைய முடிவான பலன் ஆத்ம ஞானந்தான் என்பதை மறக்காமல் ஸகல சாஸ்திரங்களையும் ஸயன்ஸ்களையும் தெரிந்து கொண்டு, ஸகல அநுஷ்டானங்களையும் செய்ய முயலவேண்டும். இதுதான் நாம் வளர்க்கிற கதிர். அதற்குத்தான் விதையாவது போட வேண்டும் என்றே இவ்வளவு சொல்கிறேன்.

பதினாலு வித்யை, பதினெட்டு வித்யை பற்றிச் சொன்னதெல்லாம் இதற்குத்தான். இந்த பதினெட்டு வித்யைகளும் த்வைத, அத்வைத, விசிஷ்டாத்வைத, சைவ ஸித்தாந்த வித்யாஸங்களில்லாமல் ஹிந்துக்கள் என்ற பெயருள்ள அனைவருக்கும் பொதுவானவை. இவற்றிலே முதல் நாலு வித்யைகளான வேதங்களில் வருகிற உபநிஷத்துக்களுக்கு இந்த ஒவ்வொரு ஸித்தாந்த ஆசாரியரும் பண்ணின வியாக்யானங்களில்தான் வித்யாஸங்கள் வருகின்றன. அஷ்டாதச [பதினெட்டு] வித்தைகள் வித்யாசமில்லாமல் எல்லோருக்கும் பொதுவானவையே.

இவற்றில் வராவிட்டாலும் ‘யோகம்’ என்று ஒன்று இருக்கிறது. கர்மா, பக்தி, ஞானம் எல்லாமே யோகம்தான் என்றாலும் மனஸை அடக்குவதற்கென்றே அஷ்டாங்க யோகம் என்று ஒன்று இருக்கிறது. ராஜயோகம் என்று அதைச் சொல்வார்கள். அது பதினெட்டு வித்யையில் வராவிட்டாலும் ஸாங்கியம் – யோகம், நியாயம்-வைசேஷிகம், மீமாம்ஸை-வேதாந்தம் என்று இரண்டிரண்டாகப் பிரிந்த ஷட்-தரிசனம் என்ற ஆறு சாஸ்திரங்களில் வருவது.

இது தவிர சைவர், வைஷ்ணவர், சாக்தர் முதலியவர்களின் வழிபாட்டுக்கு ஆதாரமாக தந்திர சாஸ்திரங்கள் என்பனவும், ஆகம சாஸ்திரங்கள் என்பனவும் உள்ளன. நம் தேசத்தின் மத வாழ்வுக்கும், ஸமுதாய வாழ்வுக்கும் மையக் களமாகியுள்ள கோவில் நிர்மாணம், ஆலய வழிபாட்டு முறைகள் முதலியன ஆகமங்களில் இருப்பவையே ஆகும்2.

இவற்றில் எவ்வளவுக்கெவ்வளவு தெரிந்து கொள்கிறோமோ அவ்வளவுக்கவ்வளவு நம் மத அறிவு விசாலமாகும். நம் சாஸ்திரங்கள் மஹா சமுத்திரம் மாதிரி இருக்கின்றன. முடியுமட்டில் இவற்றைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு பக்கம் சாஸ்திர நம்பிக்கையுள்ள கட்டுப் பெட்டிகள், மறுபக்கம் நவீனக்கல்வி படித்தவர்கள் என்று பிரிந்திருப்பதே தவறு. சாஸ்திரங்களில் நம்பிக்கை மட்டுமல்லாமல், நாமே எல்லா சாஸ்திரங்களையும், வித்யைகளையும் படித்தால் கட்டுப்பெட்டிகளாக இருக்க வேண்டியதேயில்லை. அதனால் அவற்றையும் படித்து, மாடர்ன் ஸயன்ஸ்களையும் படித்து, இந்த ஸயன்ஸிலும் நிறை அம்சங்கள் நம் சாஸ்திரங்களில் இருக்கின்றன என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இதே மாதிரி ஸயன்ஸ்காரர்களும் சாஸ்திரங்களைப் படித்து புரிந்து கொள்ள வேண்டும் என்பது என் ஆசை. இதற்காக பகவானைப் பிரார்த்தனை பண்ணுகிறேன். ஒன்றுக்கொன்று ‘காம்ப்ளிமென்டரி’ யாக பழசும் புதிசும் இட்டு நிரப்பிக் கொள்ள வேண்டும்.

நானும் சரி, மற்றவர்களும் சரி எவ்வளவு பேசினாலும் லெக்சரால் கல்சர் (கலாசாரம்) வளராது. படிப்பதாலும் வளராது. நமக்கென்று காரியத்தில் பின்னி வைத்திருக்கிற அநுஷ்டானங்களைப் பண்ணினால்தான் சித்த சுத்தி ஏற்பட்டு, நாம் படிப்பதில் ஸாரம் எது என்று புரிந்து கொண்டு அதைக் கிரஹித்துக் கொண்டு கல்சரை வளர்க்க முடியும். பிற தேச விஷயங்களில் எதை எடுத்துக் கொள்வது என்று பரிசீலித்து முடிவு செய்வதற்கு அஸ்திவாரமாக முதலில் நம் சாஸ்திரப்படி வாழ முயற்சி பண்ண வேண்டும்.

இக்காலத்தில் ஆஹாரம், விஹாரம், வாஹனம் எல்லாமே மாறித்தான் விட்டது. அத்தனையும் நம் பண்பாட்டுப்படி மாற்ற முடியுமா என்று மலைப்பாயிருந்தாலும், கொஞ்சம் strain பண்ணிக்கொண்டாவது [சிரமப்படுத்திக் கொண்டாவது] சிலதையாவது மாற்ற ஆரம்பிக்கத்தான் வேண்டும். நம் மதத்துக்கு ஆதாரமான ஆசாரங்கள், ஆஹார சுத்தி முதலியவை, பழக்கத்தில் இருந்தால்தான் போஷிக்கும். முதலில் லெக்சராகவும் அப்புறம் லைப்ரரியில் புஸ்தகமாகவும் மட்டும் இருந்தால் வெறும் வறட்டுப் பெருமை தவிரப் பிரயோஜனமில்லை.

நான் சொல்கிறபடி மாறுவது ஒன்றும் பெரிய கஷ்டமில்லை. ஒரே ஒரு அம்சத்தை மட்டும் நாம் பிடிவாதமாக மாற்றிக் கொண்டு விட்டால் இது ஸாத்யம் தான். “பணம் தான் பிரதானம்” என்பதே அந்த அம்சம். பணமே குறி என்று நாம் இறங்கின பிற்பாடுதான் ஆசாரங்கள், வித்யா ஞானம் எல்லாமே போய்விட்டன. நம் தேசத்தில் பணம் முக்யமாய் இருந்ததேயில்லை. லௌகிக வாழ்க்கையை ஆத்ம அபிவிருத்திக்கு உபாயமாக மட்டும் வைத்துக் கொள்வதுதான் நம்முடைய தேசாசாரம்.

வித்யை பணத்தையும் கொடுக்கும் — ‘அர்த்தகரீ ச வித்யா’ என்று சொல்லியிருக்கிறது. நாமோ நமக்குப் பணத்தைத் தருவது மட்டுமே வித்யை, பணம் சம்பாதிப்பதற்கே வித்யை — “அர்த்தகரீ ஏவ வித்யா” என்று பண்ணிக் கொண்டிருக்கிறோம். இந்த எண்ணம், பணப் பேராசை போய் விட்டால் சாஸ்திரோக்தமான ஆசாரங்களோடு வாழ்ந்து எல்லா வித்யைகளையும் சாஸ்திரங்களையும் ஆர்வத்தோடு படித்து, விவேகத்தோடு ஸாரத்தைக் கிரஹித்துக் கொண்டு நாமும் வளர்ந்து நம் பண்பாட்டையும் வளர்த்து வாழ்விக்க முடியும். இப்படி நம் தேசம் பூர்வத்தில் இருந்தபடி லோகத்துக்கு வழி காட்டியாக இருப்பதற்கு எல்லோரும் அடக்கத்தோடு பகவானைப் பிரார்த்தனை பண்ணிக் கொண்டு, நம்மாலான பிரயத்தனங்களைப் பண்ணுவோம்.


1 ப்ருஹதாரண்யகம் IV.3.22.

2 ஷட்தரிசனங்கள் குறித்து இந்நூலிலேயே ஆங்காங்கு விவரங்கள் உள்ளன. “தெய்வத்தின் குரல்” ஐந்தாம் பகுதியில் “‍‍‍ஸ்ரீ ச‍‍ங்கர சரிதம்” என்ற பேருரையிலும் அவை பேசப்படும். ‘யோகம்’ குறித்தும், ‘ஆகமம்’ குறித்தும் ‍‍‍ ஸ்ரீ மஹா பெரியவர்களின் விரிவுரைகள் பிற பகுதிகள் உருவாகையில் இடம் பெறும்.

Previous page in  தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is சுதேசம்-விதேசம்;பழசு-புதிசு
Previous
Next page in தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is  நவீனர்களின் கருத்து
Next