புது பிராம்மண ஜாதி உண்டாக்கலாமா ? : தெய்வத்தின் குரல் (இரண்டாம் பகுதி)

ஸகல ஜாதியாரும் ஒளபாஸனம் செய்ய வேண்டும் என்கிற போது இன்னொரு விஷயத்தையும் கவனிக்கத் தோன்றுகிறது.

“ஒளபாஸனம் மட்டும் என்ன? அத்யயனம், காயத்ரீ, யஜ்ஞம் ஆகிய எல்லாவற்றையுமே எல்லா ஜாதியாரும் பண்ணினால் என்ன?” என்று சில பேர் கேட்கிறார்கள். ஒரு பக்கம் ஒரே நாஸ்திகம், ‘வேதத்தைக் கொளுத்த வேண்டும், பிள்ளையாரை உடைக்க வேண்டும்’ என்று இருந்தால், அப்படி சொல்கிறவர்கள் தங்களை சீர்திருத்தக்காரர்கள் என்று சொல்லிக் கொண்டால், இன்னொரு பக்கம் இன்னொரு தினுசு சீர்திருத்தக்காரர்களோ ஏன் பாரபட்சமில்லாமல் அத்தனை ஜாதியாருக்கும் எல்லா வைதிக கர்மாவிலும் அதிகாரம் கொடுக்கக் கூடாது என்கிறார்கள்.

நான் பிராம்மணன் குட்டிச்சுவராகப் போனதற்காகத் திட்டுகிறேன் அல்லவா? இதையே ஒரு ஒரு ஆதாரமாக, தங்களுக்கு ஆதரவாகப் பிடித்துக் கொண்டு இவர்கள், ‘பிராம்மணன்தானே தானும் கெட்டு மற்ற ஜாதிகளையும் கெடுத்து விட்டவன்? அதனால் இப்போது மறுபடி வைதிகமான வழிகளை, வேதாத்யயனம் முதலானதுகளை உயிர்ப்பிக்கிற போது, கடமையில் தப்பின பிராம்மண ஜாதிக்கு மட்டும் இவற்றில் ஏன் அதிகாரம் தரவேண்டும்? லோக க்ஷேமத்துக்காக வேதமும், வைதிக காரியமும் இருக்க வேண்டும் என்று நம்புகிற எந்த ஜாதியாரும், எல்லா ஜாதியாரும் இவற்றை மேற்கொண்டு, அநுஷ்டிக்கும்படிப் பண்ணிவிட வேண்டும் என்று கட்சி பேசுகிறார்கள். எல்லாருக்கும் பூணூல் போடலாம்; ஸகலருக்கும் வேதம் சொல்லிக் கொடுக்கலாம் என்கிறார்கள்.

ஆர்ய ஸமாஜம் மாதிரி இருக்கப்பட்ட ஸ்தாபனங்களில் எல்லாருக்கும் வேத அத்யயனம், யஜ்ஞங்கள் ஆகியவற்றில் அதிகாரம் கொடுத்திருக்கிறார்கள். பாரதி மாதிரி எங்கேயாவது யாராவது ஒருவர் பஞ்சமனுக்கு பிரம்மோபதேசம் பண்ணி வைக்கிறார். இப்படி வேதத்தை எல்லோருக்கும் பொதுவாக்கி விட்டால் என்ன என்று சீர்திருத்தவாதிகள் கேட்கிறார்கள்.

இது கொஞ்சங்கூட ஸம்மதமானதல்ல. சாஸ்திரத்தில் இருப்பதை சொல்ல அதன் பிரதிநிதியாக இருக்கிறவன் தான் நான். ஆகையால், இது பரம தியாகிகளாக, கொஞ்சங்கூட சொந்தப் பற்று பாசம் இல்லாமல், தங்களுக்கென்று சொத்து சுதந்திரமில்லாமல் லோக க்ஷேமத்தையே உத்தேசித்து தர்மங்களை விபாகம் பண்ணிக் கொடுத்த சாஸ்திரகாரர்களான ரிஷிகளுக்கு ஸம்மதமில்லை என்று சொல்ல வேண்டியது என் கடமை.

பாபத்தில் இரண்டு தினுசு. தனக்கான கர்மாவை விடுகிறவன் ஒருவிதமான பாபத்தை பண்ணுகிறான். இவனை கர்ம ப்ரஷ்டன் என்பார்கள். இன்னொருத்தன் தன் கர்மாவை விட்டதோடு நிற்காமல் இன்னொருத்தனின் கர்மாவை எடுத்துக் கொண்டு, அந்த ஜாதிக்காரன் மாதிரியே அவனுக்குரிய ஆசாரங்களை அநுஷ்டிக்கிறேன் என்று புறப்படுகிறான். இவனை ‘கர்மாந்தர ப்ரவிஷ்டன்’ என்பார்கள். இவன்தான் கர்ம ப்ரஷ்டனை விடப் பெரிய பாபம் செய்கிறவன் என்பது சாஸ்திரத்தின் அபிப்ராயம்.

ஏன்? இரண்டு காரணங்கள் உண்டு.

ஒன்று – தன் கர்மத்தை விட்டவன், வர்ண தர்மமே முழுக்கச் சரியில்லை என்று ஏதோ ஒரு ‘கன்விக்ஷன்’ (மனசாட்சிப்படியான உறுதி) ஏற்பட்டதால் அப்படிச் செய்தான் என்றாவது சமாதானம் சொல்லலாம். சாஸ்திர விஷயத்தில் நம் மனசாட்சிக்கு இடம் கிடையாதானாலும், ஏதோ இப்படிக் கொஞ்சம் சமாதானம் சொல்லவாவது இடம் இருக்கிறது. ஆனால், இன்னொருத்தனின் கர்மாவையும் அதற்கான ஆசார நியமங்களையும் எடுத்துக் கொள்கிறவன் என்ன நினைக்கிறான்? தனக்கு ஏற்பட்ட கர்மாவும் அதற்கான ஆசாரமுந்தான் மட்டம். இன்னொன்று உசத்தி என்ற நினைத்தே அதற்குப் போகிறான். இப்படிக் கர்மாக்களுக்குள் உயர்வு-தாழ்வு நினைப்பது நவீன கால அபேதவாதத்துக்கும், இக்காலத்தில் dignity of labour [எத்தொழிலும் கௌரவமானதே] என்பதற்கும் பொருந்தாது; பழங்கால சாஸ்திர வாதப்படியும் பொருந்தாது. வர்ண தர்மம் முழுதையும் தள்ளி விடுகிற கர்ம ப்ரஷ்டன், ரிஷிகள் என்னவோ காலத்துக்கு ஒவ்வாமல் செய்து விட்டார்கள் என்றுதான் நினைக்கிறான். அவர்களைப் பக்ஷபாதிகள் என்று நினைக்கவில்லை. ஆனால் தன்னதை விட்டுவிட்டு இன்னொரு வர்ண தர்மத்தை எடுத்துக் கொள்கிறவனோ ரிஷிகளைப் பக்ஷபாதியாக்கி விடுகிறான். இவன் புதிசாகத் தழுவுகிற வர்ணமே ஆத்ம சிரேயஸ் தருவது; இவனுக்காகப் பாரம்பரியமாக ஏற்பட்ட வர்ணத்தில் அந்தப் பலன் இல்லை என்று நினைத்துத் தானே இவன் மாறுகிறான்? அப்போது ரிஷிகள் வர்ண விபாகம் என்று பண்ணினதே வஞ்சனை என்றுதானே ஆகிறது! இதனால்தான் இவன் பண்ணுகிற பாபமே பெரிசு என்பது.

‘பிராம்மணர்கள் தவறி விட்டார்கள். அதனால் புதுப் பிராம்மணரை உண்டு பண்ணுவோம். என்றால் அது, அவன் தன் தர்மத்தை விட்டதால் நானும் என் தர்மத்தை விடுவேன் என்கிற பேச்சுதான். விடுவதோடு இல்லாமல் இன்னொன்றை எடுத்துக் கொள்வேன் என்கிறபோது இன்னம் தப்பாகிறது. அத்தனை கர்மாவும் அஹங்காரம் நசிப்பதற்காகத்தான். நமக்கென்று சொந்தமாக விருப்பு வெறுப்பு இல்லாமல், “ஈச்வராக்ஞையானது வேத சாஸ்திர மூலமாக நமக்குப் பிறப்பிலேயே எந்தத் தொழிலைக் கொடுத்ததோ அதைச் செய்வோம்” என்ற அடக்கமும் விநயமும் தான் வர்ண தர்மத்துக்கு அஸ்திவாரம். அதன்மேல் நின்று கொண்டு ஒவ்வொருவனும் தனக்கான தொழிலில் ஸதா உழைக்கிற போது அஹங்காரம் கரைகிறது.

புது ஜாதி உண்டுபண்ணுவது, புதுப் பிராம்மணனைப் பண்ணுவது என்கிறபோது- எத்தனை நல்ல எண்ணத்தோடு இப்படி ஆரம்பித்தாலும் சரி, வேத சப்தங்களும், வேத கர்மாக்களும் லோகத்தில் இருக்கப் பண்ண வேண்டும் என்று மனஸார நினைத்து, அந்த உயர்ந்த லட்சியத்துக்காகவே இப்படிச் செய்தாலும் சரி – இந்த மாதிரிச் செய்யும்போது அஹங்காரம் முந்திரிக்கொட்டை மாதிரி முந்திக்கொண்டு வரத்தான் செய்யும். இது இரண்டாவது காரணம்.

ஒரு பக்கத்தில் இப்படியென்றால், இன்னொரு பக்கமோ என்னதான் ஸமத்வம் பேசினாலும், பகுத்தறிவு வாதம் பண்ணினாலும், நாம் இதைப் பண்ணலாமா? பாரம்பரியமாகப் பண்ணி வந்தவர்கள் மாதிரி நம்மால் இந்த மந்திர உச்சாரணம் பண்ணியும் அநுஷ்டானங்களைப் பண்ணியும் பலன் பெற முடியுமா? என்று ஒரு எண்ணம் (inferiority complex) உள்ளூர உதைத்துக் கொண்டுத்தான் இருக்கும்.

ஆர்ய ஸமாஜத்திலும், அதற்கப்புறம் இன்று வரை புதிசு புதிசாக முளைத்துக் கொண்டிருக்கிற அநேக மதச் சீர்திருத்தங்களிலும் ஜாதியே இல்லை என்று வைத்து எல்லாருக்கும் வேதத்தில் பூர்ண அதிகாரம் கொடுத்திருந்தும்கூட இவற்றில் பிராமணரல்லாதவர் ஏன் கூட்டம் கூட்டமாக சேரவில்லை? புதிசாக ஒன்றை எடுத்துக் கொள்வதிலிருக்கிற கூச்சம்தான் முக்கியக் காரணம். நாஸ்திகமாகவே போனாலும் போகலாமே தவிர, பழைய‌ ஆஸ்திக ஆசாரங்களை நம் இஷ்டத்துக்கு திருப்பிக் கொள்ளக் கூடாது என்ற அடிப்படையான உயர்ந்த எண்ணம் பிராம்மணரல்லாதோருக்கு இருப்பதே முக்கிய காரணம். ஆகையினால், ‘நாங்கள் எல்லோரையும் வேதத்துக்கு திருப்புவோம்’ என்று ஓரிரண்டு பேர் கிளம்பினாலும், அவர்களோடு ஏதோ நாலைந்து சதவிகிதம் போனாலும் பாக்கி 95 சதவிகிதம் இப்போதுள்ள ஹிந்து சமுதாய அமைப்பில்தான் ஒட்டிக்கொண்டிருக்கும். இதனாலேயே அதில் சேருகிறவர்களுக்கும் உள்ளூர பயம், தாழ்வு மனப்பான்மை இருக்கத்தான் செய்யும். நாம் பண்ணி பலன் வருமா என்று சந்தேகம் இருக்கத்தான் செய்யும். இப்படியிருந்தால் சித்தம் சுத்தமாவது எப்படி? அஹங்காரம் மாதிரியே பயம், தாழ்வுணர்ச்சி, சந்தேகம் எல்லாம் அழுக்குகள். இவை இருக்கிறவரையில் சித்தம் சுத்தமாகாது. அப்படிச் செய்கிற காரியத்தால் லோகத்துக்கும் பிரயோஜனம் ஏற்படாது. ஒரு பக்கம் இப்படி இருக்கிற போதே, இன்னொரு பக்கம், “அவன் விட்டு விட்டதை நாம் செய்கிறோமல்லவா? என்ற அஹங்காரம், சவால் விடுகிற மாதிரியான (challenge பண்ணுகிற) மனப்பான்மை எல்லாமும் இருக்கும். இயற்கையாக ஒரு வர்ணத்தார் செய்து வந்ததை மற்றவர்கள் எடுத்துக் கொண்டு செய்கிறபோது அதைப் பெரிதாகப் பிரகடனம் பண்ணிக் காட்ட வேண்டும் என்று வந்துவிடும். ‘டெமான்ஸ்ட்ரேஷன்’ வந்துவிட்டால் அப்படிப்பட்ட காரியத்தில் ஹ்ருதயம் கலக்காது, ஹ்ருதய சுத்தி இருக்காது. மொத்தத்தில் இவனுக்கும் பலன் இராது; சமூகப் பயனும் விளையாது.

உணர்ச்சி வசப்படாமல், பகுத்தறிவோடு ஆலோசனை பண்ணிச் சில fact -களை (யதார்த்த உண்மைகளை) fact -கள் என்று ஒப்புக் கொள்ள வேண்டும். வேத மந்திரங்களில் சுத்தமான சப்தத்துக்கேயுள்ள சக்தியைப் பற்றி நிறையச் சொல்லியிருக்கிறேன் அல்லவா? அந்த ஸரியான சப்தங்கள் தான் என்றில்லை. ஜெர்மன் பாஷை, அல்லது கிட்டத்திலேயே உள்ள உருது இவைகளை எடுத்துக் கொண்டாலும் அவற்றிலே உள்ள சில சப்தங்கள் நமக்கு நெஞ்சாங்குழியை வலிக்கிற மாதிரி, பல்லை உடைக்கிற மாதிரி இருக்கின்றன. லேசில் உச்சரிக்க வரமாட்டேன் என்கிறது. ரொம்பப் பக்கத்திலேயே உள்ள தெலுங்கை எடுத்துக் கொண்டால்கூட ‘ச’வருகிற இடங்களில் ‘த்ஸ’ மாதிரி, ‘ஜ’வருகிற சில இடங்களில் Z சப்தம் மாதிரி அவர்கள் அநாயஸமாகப் பேசிக்கொண்டு போகிற மாதிரி நம்மால் முடியவில்லை. ஆனால் நம் ஊரிலே ஒரு ஜெர்மன் குழந்தை பிறந்தால், தெலுங்குக் குழந்தை பிறந்தால் அது பேச்சு வருகிறபோதே அந்தந்த பாஷையின் கஷ்டமான சப்தங்களைக் கூட ‘நாச்சுரலாக’ உச்சரித்து விடுகிறது. பாரம்பரியம் என்ற ஒன்று கிடையாது என்று என்னதான் சண்டை போட்டாலும் பிரத்யக்ஷ உண்மையாக fact -ஆக இருக்கிறது. இப்படியே வேத சப்தங்கள் அவற்றையே யுகாந்தரமாக ரக்ஷித்து வந்திருக்கிற பரம்பரைக்கு – இப்போது இரண்டு, மூன்று தலைமுறைகளாக அந்த ரக்ஷணை விட்டுப்போன பிறகும் கூட- ஸுலபமாக, இயற்கையாக வருகிறது. மற்றவர்களுக்கு இப்படிச் சொல்ல முடியாது. மந்திரங்களில் உச்சாரணம் தப்பினால் பலனே போய்விடுகிறது என்பதைப் பார்க்கிற போது இவர்கள் எத்தனை நல்ல எண்ணத்தில் அத்யயனாதிகளைப் பண்ணினாலும் பலனில்லை என்றுதானே ஆகும்?

இன்னொன்று – எத்தனையோ ஆயிரம் வருஷங்களாக ஒரு தர்மத்தில் வந்து பாரம்பரியமாக (heriditary-யாக) அதற்கேற்ற ஸ்வபாவத்தைப் பெற்றவர்களே அதை விட்டு விடுகிறார்கள் என்கிறபோது புதிசாக, அதுவும் இந்த நவீன காலச் சூழ்நிலையில் வேறொருவன் அந்த தர்மத்தை எடுத்துக் கொண்டு அப்பியஸிக்கிறேன் என்றால் அது எப்படி உருப்படியாக வரும்? உத்தேசம் நல்லதாக இருந்தாலும்கூட மநுஷ்ய மனஸ் பண்ணுகிற திரிசமனில் இதெல்லாம் வெறும் “சாலஞ்சாக”வும் சண்டையாகவும்தான் முடியும்.

ஆனதால் யோஜித்துப் பார்க்கிறபோது, இப்போது தேசத்தில் இரண்டு வித விபரீதமிருக்கிறதே (வேத கர்மாநுஷ்டானமே வேண்டாம் என்று பிராம்மணன் விட்டுவிட்டு இருப்பது ஒரு விபரீதம். மற்றவர்களும் வேத கர்மாநுஷ்டானங்களை எடுத்துக் கொள்ளலாம் என்பது இன்னொரு விபரீதம்) இப்படி இரண்டு இருப்பதில் எது எதைவிடப் பெரிய தப்பு என்று சொல்லத் தெரியவில்லை. செய்ய வேண்டியவன் அதைச் செய்யாவிட்டால் தப்பு; செய்யக்கூடாதவன் அதை செய்தாலோ அதைவிடத் தப்பு என்றுதான் பகவான் கீதையில் ஜட்ஜ்மென்ட் கொடுத்திருக்கிறார் :

“ஸ்வதர்மே நிதனம் ச்ரேய:பரதர்மோ பயாவஹ:”

“தனக்கான கர்மாவைப் பண்ணுவதால் சாவு ஏற்பட்டாலும் அதுவே சிரேயஸ். இன்னொருத்தனின் தர்மத்தை மேற்கொண்டால் அது பெரிய பயத்தைத் தருவது” என்கிறார். சாவு எப்படியும் வருவதால் ஸ்வதர்ம நிஷ்டனாகச் செத்துப் போனால் மறுபடி பிறக்க வேண்டாம். பகவானிடமே போய் விடலாம். அதுதான் பெரிய ச்ரேயஸ். “இன்னொருவனின் தர்மத்தால் பயம்” என்றால் என்ன? அது நரகத்தில் தள்ளிவிடும் என்றுதான் அர்த்தம். பெரிய பயம் அதுதான். நரகம் என்று ஒன்று இருப்பதாக நம்பாவிட்டாலும், இந்த ஜன்மாவிலோ, அடுத்த ஜன்மாவிலோ நரகத்துக்கு சமமான கஷ்டத்தை அநுபவிக்கும்படியாகும் என்று வைத்துக் கொள்ளலாம். அது தவிர, இன்னொரு தர்மத்தைப் பண்ணும் போதே அதை நாம் பண்ணுவதால் பாபம் சம்பவிக்குமோ என்று உள்ளுக்குள்ளே ஒரு பயம் அரித்துக் கொண்டுதான் இருக்கும். ஏனென்றால் இவன் வேத சாஸ்திரங்களை நம்பாத நாஸ்திகனல்ல. அப்படியிருந்தால் பிராம்மணனுடைய வைதிக காரியங்களை இவன் எடுத்துக் கொண்டிருக்க மாட்டானே! ஆகையால் நல்ல உத்தேசம் என்று நினைத்துக் கொண்டே இவன் இப்படிப் பண்ணினாலும், ‘வேத சப்தம் லோக க்ஷேமம் தரும் என்று சொன்ன அதே சாஸ்திரத்தில் தானே, இன்னொருத்தனின் தர்மம் பீதி விளைவிப்பது என்று சொல்லியிருக்கிறது!’ என்று உள்ளூரக் குடைந்து கொண்டு தானிருக்கும்.

மொத்தத்தில் விஷயம் என்ன வென்றால், சாஸ்திரம் என்றால் பூரணமாக சாஸ்திரத்தை ஒப்புக் கொள்வதாக இருக்க வேண்டும். அல்லது சாஸ்திரமே வேண்டாம் என்று முழுக்க நாஸ்திகனாக இருந்து விடவேண்டும். அப்படியில்லாமல் தம்முடைய புத்திசாலித்தனத்தைக் காட்டி சாஸ்திரத்தை நம் இஷ்டப்படி வளைத்துச் சிலதை எடுத்துக் கொள்வது, சிலதை விடுவது, சிலதை மாற்றுவது என்றால் அது நாஸ்திகத்தை விட பாபகரமானது. வேத மாதா நம் இஷ்டப்படி, இழுத்த இழுப்புக்கு வரவேண்டும் என்று நினைப்பது பெரிய தோஷம். இப்படி நினைத்துக் கொண்டே வேத அத்யயனம் பண்ணுகிறேன் என்றால் அது பரிஹாஸமான காரியம்தான்.

சீர்திருத்தவாதிகளிடம் எனக்குக் கோபமில்லை. அவர்களுடைய நல்ல எண்ணத்திலும் சந்தேகமில்லை. ஆனால் ஆலோசனை போதாததால், தெரியாமலே பெரிய தோஷத்தைச் செய்யப் பார்க்கிறார்கள். இங்கேயிருந்து அங்கே போகிறேன் என்று இவர்கள் வேலியை உடைக்கிற போது அங்கே பாக்கிக் கொஞ்சம் பேர் இருக்கிறவர்களும் இங்கே வந்து விடலாம் என்று வழிவிட்ட மாதிரி ஆகிவிடுகிறது என்பதை யோஜித்துப் பார்க்க வேண்டும்.

வேதாத்யயனத்தில் இருக்கிற அதே கௌரவம் தன்னுடைய தொழிலில் இருக்கிறது என்ற நிஜமான உணர்ச்சி இருந்தால், இப்படி இதைவிட்டு அதற்குப் போகத் தோன்றாது. ‘பிராம்மணர்கள் வேதத்தை விட்டு விட்டார்களே, அதனால் லோக க்ஷேமமான மந்திர சப்தம் போய் விடுகிறதே, அதற்காகத்தான் புதுப் பிராம்மணர்களைப் பண்ண வேண்டும்’ என்றால் இதிலே அஹங்காரம், சாலஞ்ஜ், டெமான்ஸ்ட்ரேஷன், இன்ஃபீரியாரிட்டி காம்ப்ளெக்ஸ் ஆகிய இத்தனை அனர்த்த பரம்பரை உண்டாவதைக் கவனிக்க வேண்டும். ஆகையால் வேதம் உயிரோடு இருக்கவேண்டும் என்ற லக்ஷ்யத்திற்கு நிஜமாகப் பாடுபடுவதானால், அதற்காகவே ஏற்பட்டு, யுகாந்திரமாக அந்த தர்மத்தை அநுஷ்டித்து வந்தவர்களையேதான் அதிலே மறுபடி திருப்பிவிட வேண்டும்.

பிராம்மணனை நான் திட்டுகிறேன் என்றால் இவனை திருத்தவே முடியாது என்று தலைமுழுகிவிட வேண்டும் என்று அர்த்தமில்லை. பிராம்மண ஜாதிக்காரர் ஒருத்தன்தான் கெட்டதற்கெல்லாம் ஆஸ்பதமானவன் என்று நான் நினைப்பதாக ஆகாது. துருக்க ராஜ்யமும், பிரிட்டிஷ் ராஜ்யமும் வந்தபோது பிராம்மணர்கள் தர்மத்தை விட்டார்களே, இப்போதும் இந்த புது நாகரிகப் போக்குகளில் அதிகம் போகிறார்களே என்று நான் திட்டுவதால், இவர்களிடம் மட்டுமே ஸ்பெஷலாக தப்பு இருக்கிறது என்று ஆகாது. இவர்களுடைய ஸ்தானத்தில் யார் இருந்தாலும் இப்படிப் பட்ட ஸந்தர்ப்ப நெரிசல்களில் இதே மாதிரிதான் பண்ணியிருக்கக் கூடும். இப்போது இவர்களைக் குற்றவாளிகளாக்கிவிட்டு இவர்களுடைய இடத்தில் தாங்கள் வந்தால் நல்லபடியாகச் செய்ய முடியும் என்று நினைக்கிறவர்களும் இந்த ‘ஸர்கம்ஸ்டன்ஸ்’களில் [சூழ்நிலையில்] இதே தப்புகளைப் பண்ணியிருக்கக்கூடும். பாரம்பர்யமாக புத்தி வேலையிலேயே இருந்தவர்கள் சந்தர்ப்ப வேகங்களில் மத விஷயமாக, ஆத்ம ஸம்பந்தமாக அந்த புத்தி சக்தியை உபயோகிக்க முடியாமல் லௌகிகத்தில் இறங்கினால் இப்படித்தான் ஒரே தலைகீழாகக் சறுக்கிக்கொண்டு போகும்படியாகும். இதை நான் Justify பண்ணுகிறேன் [நியாயமென்று ஒப்புக்கொள்கிறேன்] என்று அர்த்தமில்லை. ஆனாலும் இந்தக் காலத்தில் சீர்திருத்த எழுத்தாளர்கள் விபச்சாரத்துக்குக்கூட ‘ஸைகாலஜி’யைக் காட்டி ஸமாதானம் சொல்வதால், அந்த ஸமாதானம் பிராம்மணர்கள் கெட்டுப்போனதற்கும் கொஞ்சம் உண்டு என்பதை எடுத்துக் காட்டினேன். நான் பிராம்மணர்களைக் கண்டிப்பதால், அவர்கள் மட்டும்தான் அயோக்கியர்கள் என்பதாக மற்றவர்களும் மட்டம் தட்ட வேண்டும் என்று ஆகாது. அவர்களுக்கு எடுத்துச்சொல்லி யோக்கியர்களாகப் பண்ணுவதுதான் மற்றவர்களின் கடமை. இந்த ஒரு நாற்பது ஐம்பது வருஷமாக1 பிராம்மணன் என்றால் கிள்ளுக்கீரை என்று நினைத்து எத்தனை விதமாய் பரிஹாஸம், மான பங்கம் பண்ணினாலும் அத்தனையும் பொறுத்துக் கொள்கிற ஸாதுக்களாயிற்றே; இதற்கு முந்தியும் நாலைந்து தலைமுறைகளுக்கு முன்வரையில் இத்தனை ஆத்மிக குலதனத்துக்கும் கலைகளுக்கும் கார்டியன்களாகக் காப்பாற்றிக் கொடுத்தவர்களாயிற்றே என்பதை நினைத்து மற்றவர்கள் இப்போது அவர்களை அவர்களுக்கான வாழ்க்கை நெறியில் பிரியத்தோடு ஊக்க வேண்டும். அவர்கள் மறந்துவிட்ட உயர்ந்த தர்மத்தை, தியாகத்தை அவர்களுக்கு நயமாக எடுத்துக்காட்டி உறைக்கும்படியாகப் பண்ணவேண்டும்.

விஷயந்தெரியாத சில பிராமணர்கள் எப்போதோ மற்றவர்களைக் கொடுமைப் படுத்தினார்கள் என்பதற்குப் பதிலடியாக இப்போது இவர்களை த்வேஷித்துக் காரியங்களைச் செய்வது சரியில்லை. பழைய கொடுமைகளைப் போக்க வேண்டும். மற்றவர்களுக்கு ஸமூஹத்தில் உயர்ந்த ஸ்தானம் வர வேண்டும் என்று போராடியதிலும் பிராம்மணர்கள்தானே முன்னிலையில் இருந்திருக்கிறார்கள் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். பிராம்மணர்களின் அதிக்கிரமத்தை பிராம்மணர்கள்தானே அதிகம் எடுத்துச் சொல்லி திருத்தினார்கள்? ஆகையால் துவேஷத்தை வளர்த்துக்கொண்டே போவதில் பயனில்லை. அது தமிழ்ப் பண்பாடு என்ற விசேஷித்து சொல்வதற்கு ஏற்றதுமில்லை.

துரதிஷ்டவசமாக பிராம்மணர்கள் நல்ல சீர்திருத்தம் என்று நினைத்து தப்பான ஸமத்துவங்களை ஏற்படுத்தப் போனதில், கீழேயிருப்பதை மேலே உயர்த்துவதற்குப் பதில் மேலே இருக்கிறதை கீழே இறக்கியதாகத்தான் ஏற்பட்டிருக்கிறது. இரண்டு தினுஸில் ஸமமாய் இருக்கலாம். ஒன்று எல்லாம் உயர்ந்திருக்கலாம். அல்லது எல்லாம் தாழ்ந்திருக்கலாம். பாரத்தை உயரே தூக்கிப் போவது கஷ்டம். கீழே உருட்டி விடுவது ஸுலபம். அந்த மாதிரிதான் நம்முடைய சீர்திருத்த சமத்துவம் எது ஸுலபமோ அதைப் பண்ணிவிட்டது. Equality , equality [ஸமத்துவம்] என்று பண்ணினதில் quality [தரம்] போய்விட்டது! வாஸ்தவத்தில் ஒரே மாதிரியான காரியத்தை எல்லாரும் பண்ணுகிற ஸமத்வம் அவசியமானதேயில்லை. பலவிதமாகப் பிரிந்து காரியங்களைச் செய்வதால் ஸமத்வம் இல்லை என்றும் அர்த்தம் இல்லை. இதைப் பற்றி நிறையச் சொல்லியிருக்கிறேன்2. எனவே இப்போது ஒரே மாதிரி எல்லாரும் செய்கிற uniformity -ஐ விட்டு விட்டு, பிரிந்து செய்தும் ஐக்கியமாயிருக்கிற unity -க்காகப் பிரயத்தனம் பண்ண வேண்டும்.

தமிழ் நாகரிகத்தில் ப்ரம்ம த்வேஷமும், ஸம்ஸ்கிருத த்வேஷமும் இருந்ததேயில்லை என்பதைப் புரிந்து கொண்டு விட்டால் போதும். ஆத்மிக விஷயங்கள், மத சாஸ்திரங்கள், காவியங்கள், கலை நூல்கள் அத்தனையும் ஏராளமாக இருக்கிற ஸம்ஸ்கிருதத்திடமும் துவேஷம் போய், “அது நம் பாஷையும்தான்” என்ற உணர்ச்சி வர வேண்டும். எல்லோரும் அதைக் கற்க வேண்டும். லோக க்ஷேமத்துக்காக பிரம்மண்யம் என்று தனியாக ஒன்று இருக்க வேண்டும் என்ற உணர்ச்சி ஏற்பட்டு, அதற்கான அத்யயன யஜ்ஞாதிகளை அவற்றில் அதிகாரம் பெற்றவர்கள் பண்ணும்படி உத்ஸாஹப் படுத்த வேண்டும். இப்போது வேதம் உபநிஷத்து எல்லாம் புஸ்தகமாக வந்துவிட்டதால் எல்லோரும் அவற்றின் கருத்துக்களைப் படித்துத் தெரிந்து கொள்ளலாம். ஆனால் பல வருஷங்கள் பிடிக்கிற அத்யயனம், யஜ்ஞகர்மா முதலியவற்றைச் செய்யப் போக வேண்டாம். அது அவசியமேயில்லை.

நல்ல எண்ணம், சீர்திருத்தம் எதுவானாலும் முதலில் அடக்கம் வேண்டும். அப்படியிருந்து கொண்டு செய்தால் சாஸ்திர விரோதமாக போக வேண்டியது வராது.


1 1959‍ல் கூறியது.

2 “தெய்வத்தின் குரல்-முதற்பகுதி”யில் “வைதிக மதம்” என்ற பிரிவிலுள்ள உரைகள் பார்க்க.

Previous page in  தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is ஒளபாஸனம்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is  ஸ்திரீகளின் ஒரே வைதிகச் சொத்து
Next