ஒளபாஸனம் : தெய்வத்தின் குரல் (இரண்டாம் பகுதி)

பாணிக்ரஹணம், மாங்கல்ய தாரணம், ஸப்த பதி முதலிய எல்லாமே விவாஹத்தோடு முடிந்து போகிற சடங்குகள். ஆனால் அப்படி முடியாமல் விவாஹத்தில் தொடங்கி, ஸந்நியாஸம் அல்லது மரணம் வரையில் நீடிக்கிற ஒரு சடங்கு விவாஹத்திலிருந்து ஏற்படுகிறது. அதாவது, எந்த அக்னியின் ஸாட்சியாக விவாஹம் செய்யப்படுகிறதோ அந்த அக்னி என்றைக்கும் அணையாமல் அதிலே செய்கிற ஒளபாஸனம் என்ற சடங்கு.

அக்னி காரியம் வைதிக மதத்துக்கு முக்கியமானது. பிரம்மசாரி ‘ஸமிதாதானம்’ என்பதாக தினமும் இருவேளையும் ஸமித்துக்களை [சுள்ளிகளை] ஹோமம் பண்ணுகிறான். அந்தக் கர்மா கலியாணத்தோடு முடிந்து விடுகிறது. கலியாணத்திலிருந்து அக்னி காரியங்கள் – யாக, யஜ்ஞாதிகள் – அதிகமாகின்றன. முதலாவதாக ஸமிதாதானத்துக்குப் பதில் ‘ஒளபாஸனம்’ ஆரம்பிக்கிறது. ‘உபாஸனை’ சம்பந்தப்பட்டது எதுவோ அதுவே ஒளபாஸனம். பல தேவதைகளைப் பூஜை, மந்திரம், தியானம் முதலியவற்றால் உபாஸிப்பதாகச் சொன்னாலும், ஹிந்துக்கள் எல்லோருக்கும் வேதப்படி ஏற்பட்ட உபாஸனை ‘ஒளபாஸனம்’ என்றே பெயர் பெற்ற அக்னி காரியம்தான்.

இது எல்லா ஜாதியினருக்கும் விதிக்கப்பட்ட கர்மா. நான்காம் வர்ணத்தவர்களுக்கு உபநயனமில்லாவிட்டாலும் அவர்களுக்கும் விவாஹ ஸம்ஸ்காரமும் அதிலிருந்து ஏற்படும் ஒளபாஸனம் என்ற அக்னி காரியமும் உண்டு.

வைத்ய நாத தீக்ஷிதீயம் முதலான தர்ம சாஸ்திர நூல்கள் சூத்ர வர்ணத்தார் எப்படி ஜாதகர்மம், நாமகரணம், ஆன்ஹிகம் [நித்தியப்படி காரியங்கள்] , ஸ்நானம், தானம், தேவபூஜை, அபர கர்மம் [ஈமச் சடங்கு] , சிராத்தம் முதலியன செய்ய வேண்டுமென்று விவரித்துச் சொல்லியிருக்கின்றன. அவர்களுக்கு இருக்கிற இந்த ‘ரைட்’ களை அவர்களுக்கு தெரிவித்து அநுஷ்டிக்கப் பண்ணாமலே, ‘எந்த ரைட்’டும் இல்லை’ என்று சீர்திருத்தவாதிகள் சண்டைக்கு வருகிறார்கள். நமோந்தமான [‘நமோ’ என்று முடிகிற] ச்லோக ரூபமான மந்திரங்களைச் சொல்லி நாலாம் வர்ணத்தவர் மற்றவர்களைப் போலவே ப்ரதி தினமும் இரண்டு வேளையும் விவாஹத்திலிருந்து தொடங்கி ஒளபாஸனம் செய்ய உரிமை பெற்றிருக்கிறார்கள்.

Previous page in  தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is இல்லறத்தான்;இல்லாள்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is  புது பிராம்மண ஜாதி உண்டாக்கலாமா?
Next