இல்லறத்தான்; இல்லாள் : தெய்வத்தின் குரல் (இரண்டாம் பகுதி)

ஒரு யுவாவானவன் குருகுலவாஸம் முடித்து ஸமாவர்த்தனமாகிய உடனேயே அவனுக்கு ஒற்றைப் பூணூல் போய் இரட்டைப் பூணூல் ஏற்பட்டு விடுகிறது. பிரம்மசரிய ஆச்ரமத்தில் தரித்த தண்டம், கிருஷ்ணாஜினம் (மான் தோல்) மேகலை முதலியன போய்விடுகின்றன. இப்போது அவன் ஏகவஸ்திரத்தை தட்டாடையாக உடுத்துவதும் போய், பஞ்சகச்சம் கட்டிக்கொண்டு, உத்தரீயமாக மேல் வேஷ்டி போட்டுக் கொள்ள வேண்டும். பிரம்மசரியத்தில் போக்யம் உதவாது என்று ஒதுக்கின சந்தனம், குண்டலம், புஷ்பம் (புருஷர்களும் சிகையில் புஷ்பம் தரிப்பதுண்டு) , பாதரக்ஷை முதலிய அலங்கார வஸ்துகளையும், ஸெளக்ய ஸாதனங்களையும் அணிந்து கொண்டு, மை கூட இட்டுக்கொண்டு, குடை பிடித்துக்கொண்டு போய் அவன் ராஜாவிடமோ, ராஜப் பிரதிநிதியிடமோ தன் வித்யையையும், சுத்த பிரம்மசரியத்தையும் நிரூபித்துவிட்டு, மேற்கொண்டு கல்யாணத்துக்கு வேண்டிய திரவியத்தை தானமாகப் பெறவேண்டும்- இது சாஸ்திரத்தில் சொன்னபடியாகும்.

கல்யாணம் செய்து கொள்ள இருக்கிற ஒரு யுவா அதற்காகவே தானம் வாங்க வேண்டுமென்று சாஸ்திரத்தில் சொல்லியிருப்பதிலிருந்தே கல்யாணச் செலவு பிள்ளை வீட்டுக்காரனுடையதுதான் என்று அழுத்தமாகத் தெரிகிறதல்லவா?

இன்னொன்றும் தெரிகிறது. ஸமாவர்த்தனம் பண்ணி ஸ்நாதகனான ஒருவன் பிற்பாடு கல்யாணம் செய்து கொள்ளாமல் ஏகாங்கியாகவே இருந்தாலுங்கூட அவனுக்கு இரட்டைப் பூணூல், பஞ்சகச்சம் இவை உண்டு என்று ஆகிறது. வேஷ்டி நுனி தெரியாமல் கொசுவிச் சொருகுவதால் ஒருவனின் சக்தி காப்பாற்றப்படுகிறது. முஸல்மான்கள் வேஷ்டி ஓரங்களைச் சேர்த்துத் தைத்துக் கட்டிக் கொள்கிறார்களல்லவா? பஞ்சகச்சமாக இல்லாவிட்டாலும், தமிழ்நாடும் மலையாளமும் தவிர, மற்ற இடங்களில் எல்லாருமே (பூணூல் இல்லாதவர்களும்கூட) கச்சம் போட்டே கட்டுகிறார்கள். இப்போது வேஷ்டியே போய், என்னைப் பார்க்க வருகிறபோதுகூட முழு நிஜார் போட்டுக் கொள்வது என்றிருக்கிறது! இந்த ஸ்திதியில் கச்சம், தட்டாடை வித்யாஸங்களைச் சொல்வது வேடிக்கையாகத்தானிருக்கிறது!…

இப்போது குருகுல‌வாஸம், பிறகு ஸமாவர்த்தனம், கங்காயாத்திரை முதலிய எதுவும் இல்லாவிட்டாலும் பெண் வீட்டுக்காரனிடமிருந்து “வசூல்” செய்வதற்கு இன்னொரு item -ஆகப் ‘பரதேசிக் கோலம்’ என்று ஒன்றை வைத்துக் குடை, பாதரக்ஷை, வாக்கிங் ஸ்டிக் எல்லாம் வாங்கித்தர வைக்கிறோம். மாப்பிள்ளைக்கு மையிட்டு சங்கிலி போட்டு காசி யாத்திரை என்று ஒன்று நடத்துகிறோம்.

கல்யாணமாகாமலே நைஷ்டிக பிரம்மசாரியாக இருப்பதை சாஸ்திரம் அநுமதித்தாலும் அது விதிவிலக்கான கேஸ்தான். பொது விதி, “யதோக்தமாக குருகுலவாஸம் முடித்ததும் பிரம்மசரிய ஆச்ரமத்தை முடித்து அடுத்ததற்குப் போ” என்பதுதான். அதாவது பிரம்மசரியம் சாஸ்திரோக்தமாக முடிந்தவுடன் கிருஹஸ்தாச்ரமத்துக்கு ஏற்பாடு செய்துவிட வேண்டியதுதான்.

பிராம்மணனுக்குப் பிறக்கும்போதே மூன்று கடன்கள் உள்ளனவே, ரிஷிகடன், தேவர் கடன், பித்ரு கடன் என்று! இவற்றில் பிரம்மசரியத்தில் செய்கிற வேத அத்யயனம் ரிஷிருணத்தை மட்டுந்தானே போக்குகிறது? யஜ்ஞங்கள் செய்து தேவருணத்தைத் தீர்ப்பதற்காகவும், நல்ல ஆண் ஸந்ததி மூலம் பித்ரு ருணத்தைத் தீர்ப்பதற்காகவும் இவன் கலியாணம் செய்து கொண்டால்தானே முடியும்?

பித்ரு கடன் தீரவே முக்யமாய் ஸந்ததி வேண்டும். இவன் திவஸம் பண்ணினால் மட்டும் போதாது. மூன்று முன் தலைமுறைக்காரர்களைப் பித்ரு லோகத்திலிருந்து மேலே அனுப்ப வேண்டுமானால் இவன் காலத்துக்குப் பின்னும் இரண்டு தலைமுறைகளில் திவஸமும் தர்ப்பணமும் நடந்தாக வேண்டும். அதற்காகப் புருஷப் பிரஜை வேண்டும். நைஷ்டிக பிரம்மசாரியாகவோ, ஸந்நியாஸியாகவோ இருக்கத் தகுதி பெற்ற அபூர்வமான சிலரின் விஷயம் என்னவென்றால் அவர்களது பரிசுத்தியாலும் ஞானத்தாலும் பிற்பாடு சிராத்த கர்மாக்கள் இல்லாமலே மூன்று தலைமுறை மட்டுமில்லாமல் இருபத்தியோரு தலைமுறைகள் கடைத்தேறி விடுகின்றன.

ஒரு புருஷன் கற்க வேண்டியதைக் கற்று முடித்தவுடன் லோகத்தில் தர்மங்களை அநுஷ்டிப்பதற்காகப் பத்தினி என்ற துணையைச் சேர்த்துக் கொள்ளவேண்டும்; அதுவே ஒரு கன்னிகைக்குப் பதி என்ற ஓரிடத்தில் மனஸை அர்ப்பணம் பண்ணி ஆத்ம பரிசுத்தி அடைய உபாயமாயிருக்க வேண்டும்; இருவருமாகச் சேர்ந்து நல்ல பிரஜைகளை உண்டாக்க வேண்டும் என்ற உத்தமமான அபிப்ராயத்தில் விவாஹமும் கிருஹஸ்தாச்ரமமும் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன.

கிருஹஸ்தாச்ரமத்தைத் தமிழில் இல்லறம் என்பார்கள். கிருஹம் என்றால் இல்லம்தான். “இல்லறமல்லது நல்லறமல்ல” என்று தர்ம சாஸ்திரங்களைப் போலவே தமிழ் ஆன்றோர்களும் இந்த ஆச்ரமத்தைத்தான் சிறப்பிக்கின்றனர்.

‘க்ருஹம்’ என்றால் வீடு. குருவின் வீட்டிலிருந்து திரும்பி வந்து சொந்த வீட்டில் தர்மங்களை நடத்துபவன் ‘க்ருஹஸ்தன்’. ‘க்ருஹ-ஸ்தன்’ என்றால் நேர் அர்த்தம் ‘வீட்டில் இருப்பவன்’. அதையே ‘வீட்டிற்கு உடைமைக்காரன்’ என்ற அர்த்தத்தில் எடுத்துக் கொண்டிருக்கிறோம். அவனை அகமுடையான், அகத்துக்காரன், வீட்டுக்காரன் என்றெல்லாம் வீட்டுக்கு முக்யஸ்தனாக வைத்தே பத்தினியானவள் குறிப்பிடுகிறாள். பத்தினியைத் தவிர மற்றவர்கள் அவனை இப்படிச் சொல்வதில்லை. அந்த பத்தினியை ‘க்ருஹிணி’ என்றே சொல்கிறார்கள். ‘க்ருஹஸ்தை’ என்று சொல்வதில்லை. ‘க்ருஹிணி’ என்பதால் வீட்டிலே அவளுக்குத்தான் முக்யத்வம் அதிகம் என்று தெரிகிறது. ‘க்ருஹஸ்தை’ என்றால் வீட்டிலே இருப்பவள் என்று மட்டுமே ஆகும். ஆனால் ‘க்ருஹணி’ என்கிறபோதோ வீடே இவளுடையதுதான், இவள்தான் வீட்டை நிர்வாகம் பண்ணுகிறவள் என்ற உயர்ந்த அர்த்தம் ஏற்படுகிறது. தமிழிலும் புருஷனை ‘இல்லறத்தான்’- ‘இல்- அறத்தான்’- என்பதாக கிருஹத்தில் பண்ண வேண்டிய தர்ம காரியங்களைச் செய்ய வேண்டியவன் என்றே குறிப்பிட்டு விட்டு, பத்தினியைத்தான் ‘இல்லாள்’ என்பதாக வீட்டுக்கே உடைமைக்காரி என்ற மாதிரி சொல்லியிருக்கிறது. ‘இல்லான்’ என்று புருஷனை சொல்வதில்லை. அப்படிச் சொன்னால் ஒன்றும் இல்லாதவன் என்றே ஆகும். இல்லத்தரசி, மனைவி, மனையாள் என்று பத்தினியை சொல்வதுபோல், புருஷனை இல்லத்தரசன், மனைவன், மனையான் என்று சொல்வதில்லை. தெலுங்கிலும் பத்தினியையேதான் ‘இல்லு’ என்கிறார்கள்.

Previous page in  தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is விவாஹத்தின் உத்தேசங்கள்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is  ஒளபாஸனம்
Next