Page load depends on your network speed. Thank you for your patience. You may also report the error.

Loading...

எடுத்துச் சொல்லிப் பயனுண்டா? : தெய்வத்தின் குரல் (இரண்டாம் பகுதி)

மிளகாய்க்கு நெய்விட்டுக் காரத்தை சமனம் பண்ணுகிறாற்போல் பிரகிருதி வேகங்களுக்கு விவாஹாதி ஸம்ஸ்காரங்களால் சமனம் உண்டாக்கப்படுகிறது. மிளகாயே இல்லாமல் இல்லை. அது இருக்கிறது. ஆனால் அதன் காரம் குடலை எரிக்காதபடி நெய் விட்டிருக்கிறது. லௌகிகமான, சரீர சம்பந்தமான ஸெளக்யம் கிருஹஸ்தாச்ரமத்தில் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அது கொழுந்து விட்டெரியாமல் ஏகப்பட்ட ஸம்ஸ்காரங்களால் புருஷனை ஓர் அளவில் கட்டுப்படுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. ஸ்திரீக்கோ பாதிவ்ரத்யத்தோடு [கற்போடு] கூடின கிருஹரக்ஷணை என்ற ஒன்றே இத்தனை ஸம்ஸ்காரத்துக்கும் ஸமமாயிருக்கிறது. இது நமக்கு மனஸில் பட்டுவிட்டால் போதும். நாம் இந்த தேசத்தில் ஆத்ம சிரேயோ லக்ஷியம் எந்த நாளும் வீணாகி விடக் கூடாது என்று ஹ்ருதய சுத்தத்தோடு நினைத்து பகவானைப் பிரார்த்தனை பண்ணிக் கொண்டு, அருள் துணையை நம்பி, எடுத்துச் சொல்லிக் கொண்டேயிருந்தால் என்றைக்காவது ஒரு நாள் வழி பிறக்கும். இப்போது போகிற போக்கிலே முடிவான ஒரு நிலையில் போய் முட்டிக் கொண்டு கடைசியில் இது அத்தனையும் அனர்த்தம்தான் என்று என்றைக்காவது ஜனங்கள் விழித்துக் கொள்கிறபோது, மீள்கிற வழி எது என்று தெரிவதற்காக நாம் சாஸ்திரத்திலுள்ளதைச் சொல்லிக் கொண்டேதான் இருக்க வேண்டும்.

‘வர்ணாச்ரமம், பால்ய விவாஹம் முதலானதுகளைப் பற்றிச் சொல்லி என்ன பிரயோஜனம்? அநேகமாக இவற்றில் முக்காலே மூணுவீசம் போயே போய்விட்டதே! பல விஷயங்களில் ராஜாங்கச் சட்டமே சாஸ்திரத்துக்கு மாறாக வந்துவிட்டதே!’ என்று கேட்கலாம். வாஸ்தவம்தான். அநேக விஷயங்களில் சட்டமே வந்து கையைக் கட்டித்தான் போடுகிறது.

Secular State என்று நம் ராஜாங்கத்துக்குப் பேர் சொல்கிறார்கள். ‘மதச்சார்பில்லாதது’ என்று இதற்கு அர்த்தம் சொல்கிறார்கள். அதாவது ஸமூஹ (social) விஷயங்களில் ஸர்க்கார் தலையிடலாமே தவிர, மத (religious) விஷயங்களில் தலையிடக் கூடாது என்று சொல்கிறார்கள். ஆனால் நம்முடைய மதத்திலே இப்படி மதம்-சமூகம் -வீடு-தனி மனுஷ்யன் என்று தனித்தனியாகப் பிரிக்காமல், எல்லாவற்றையும் சேர்த்துப் பின்னி integrate பண்ணி [ஒருங்கிணைத்து] அல்லவா வைத்திருக்கிறது? அதனால் சமூக விஷயம் என்று ஸர்க்கார் போடுகிற சட்டமும் மதத்தையே அல்லவா பாதிக்கிறது? இதை ஒப்புக்கொள்ளாமல் ‘இன்னின்ன விஷயங்களோடு மதம் முடிந்துவிடுகிறது; மற்றதெல்லாம் ராஜாங்கம் ஸம்பந்தப்பட்ட ஸமூஹ விஷயம்’ என்கிறார்கள்.

சரி, எல்லா மதத்திலுமே சில அம்சங்களிலாவது ஸமூஹ ஸமாசாரங்களும் வந்து விடுகிறதே, அவற்றின் விஷயத்திலும் இந்தக் கொள்கையைக் கடைபிடிக்கிறார்களா என்று பார்த்தால்- இங்கே தான் ரொம்ப வேதனையாயிருக்கிறது. ‘ஸெக்யூலர் ஸ்டேட்’டில் எல்லா மதமும் ஸமம் என்று சொன்னாலும், சிறுபான்மை மதஸ்தர்கள் social reform சட்டங்களை ஆக்ஷேபித்து, “இது எங்கள் மதத்தில் சொன்னதற்கு விரோதமாயிருக்கிறது. இது குரானுக்கு விரோதம்;கிறிஸ்துவக் கோட்பாட்டுக்கு முரணானது” என்று சொன்னால் உடனே அந்த மதஸ்தர்கள் விஷயத்தில் இந்தச் சட்டங்களுக்கு விலக்கு தந்துவிடுகிறார்கள். இம்மாதிரிச் சிறுபான்மை மதஸ்தருக்கு மட்டும் குடும்பக்கட்டுப்பாடு போன்ற ஒன்றில் விலக்குத் தந்தால் எதிர்காலத்தில் அவர்களே பெரும்பான்மையாகி விடவும் இடமேற்படுகிறது. ஆனால் ‘ஸெக்யூலர் ஸ்டேட்’ டாக இருந்தும் ஹிந்து மத விஷயமாக மட்டும் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்ற தீர்மானம் ஏற்பட்டிருக்கிறது. ‘மைனாரிட்டி ரிலிஜன்’காரர்கள் போல் நம்மிலே ஒரு சூடு பிறந்து ஆட்சேபிக்கிறவர்களே இல்லை. அப்படியே நாலு, பேர் எதிர்ப்புத் தெரிவித்தாலும், பிற்போக்குக்காரர்கள், பத்தாம் பசலிகள் (obscurantist) என்று அவர்களுக்குப் பெயர் கொடுத்துவிட்டுச் சட்டத்தைக் கொண்டு வந்துவிடுகிறார்கள்.

‘ஸெக்யூலர் ஸ்டேட்’ என்றால் மதச் சார்பில்லாத ஸர்க்கார் என்றே அர்த்தம். மத விரோதமான என்று அர்த்தமில்லை. ஒரு மதம் மட்டுமின்றி எல்லா மதமுமே அபிவிருத்தியாவது ஸெக்யூலர் ஸ்டேட்டுக்கு ஸம்மதமானதுதான்’ என்றெல்லாம் பெரிசாகப் பிரஸங்கம் பண்ணுபவர்கள் பண்ணினாலும், பிரத்யக்ஷத்தில் ஹிந்து மதத்தைத் தவிர மற்ற மதங்களுக்கு விரோதமில்லாத காரியங்களைப் பண்ணுவதுதான் இங்கே ஸெக்யூலர் ஸ்டேட் என்று நடந்து வருகிறது! தர்க்காஸ்து நிலம் மாதிரி ஹிந்து மதம் இருந்து வருகிறது.

“இது தெரிந்தும் ஏன் ஸாத்தியமில்லாத சாஸ்திர விஷயங்களை நச்சு நச்சு என்று சொல்கிறாய்?” என்றால் —

இப்போது இப்படி இருந்தாலும் இன்னும் எப்படி எப்படி போகும் என்று சொல்ல முடியாது. ‘அமெரிக்காவில் டாலரே விளைகிறது;அங்கே ஜனங்களுக்கு ஒரு குறையும் இல்லை’ என்றுதானே போன தலைமுறையில் நினைத்தோம். ஆனால் இப்போது எப்படியிருக்கிறது? அந்த தேசத்து ஜனங்களுக்கு இருக்கிற குறை மாதிரி, சூன்ய உணர்ச்சி மாதிரி, வேறு யாருக்குமே இல்லை என்று தெரிய வருகிறது. டாலரினாலேயே இத்தனை குறையும் என்றும் தெரிகிறது! லௌகிக ஸெளக்யத்தின் உச்சாணிக்குப் போன பிறகுதான் அவர்கள் இதிலே ஆத்மாவை எப்படி சூன்யமாக்கிக் கொண்டு விட்டோம் என்று விழித்துக் கொண்டிருக்கிறார்கள். டாலரில் மிதந்ததால் எத்தனை குடி, கொள்ளை, கொலை, விபசாரம் முதலிய தப்புகளில் போய் விழுந்து விட்டோம் என்று உணர ஆரம்பித்திருக்கிறார்கள். . கடைசியில் மனஸில் நிம்மதியில்லையே, சாந்தி இல்லையே என்று நம்முடைய யோகம், ஞான விசாரம், பஜனை முதலானவற்றுக்கு கூட்டம் கூட்டமாக வந்து கொண்டிருக்கிறார்கள்.

இதிலிருந்து, இரண்டு மூன்று தலைமுறைகளுக்கு நல்லதாகவே தோன்றி வந்த ஒன்று , அப்புறம் தலைதெறிக்கப் போன பிறகு அனர்த்தமானது என்று தெளிவாகிறது; அப்போது ஜனங்கள் விமோசனத்துக்கு ஓடுகிறார்கள் என்று தெரிகிறதல்லவா? இப்படியே இந்த இரண்டு தலைமுறைகளாக நல்லது என்று நினைத்து, பெரும்பாலும் நல்ல எண்ணத்துடனேயே, நம் தேசத்தில் பண்ணப்பட்டிருக்கிற சாஸ்திரத்துக்கு முரணான விஷயங்களாலும் எத்தனை ஹானி ஏற்பட்டிருக்கிறது என்பதை என்பதை இன்னொரு தலைமுறை உணரக்கூடும். இப்போதுகூட ஆங்காங்கே இந்த உணர்ச்சி கொஞ்சம் தலை தூக்கிக் கொண்டுதான் இருக்கிறது. ஆரம்பத்தில் நன்றாகியிருந்து குதிரைக்குட்டி மாதிரியாயிருந்து போகப் போக ஸ்வயரூபத்தை காட்டுகிற மாதிரிதான் சீர்திருத்தக் காரியங்கள் நடந்திருக்கின்றன என்று முடிவிலே முட்டிக்கொள்கிற ஸ்திதியில் தெரிய வரலாம். கீதையில் பகவான் இரண்டு வித ஸெளக்கியங்களைச் சொன்னார். ‘யதக்ரே விஷமிவ, பரிணாமே அம்ருதோபமம்’ என்பது ஒன்று. ஆரம்பத்தில் விஷம் போல இருந்துவிட்டு முடிவிலே எது அமிருதமாகிறதோ அதுதான் உயர்ந்த ஸாத்விக ஸெளக்யம். முதலில் ஆலஹாலம் வந்து விட்டுப் பிறகு அமிருதம் வந்தது இப்படித்தான். சாஸ்திரம், தனி மநுஷ்யன், குடும்பம், ஸமூஹம் எல்லாவற்றையும் கட்டுப்படுத்துகிறதே என்று ஆரம்பத்தில் விஷம் மாதிரிக் கசந்தாலும், போகப் போக இதுதான் எல்லாக் கட்டுகளும் தெறித்துப் போகிற ஆத்ம ஸ்வதந்திரம் என்கிற பேரானந்தத்தைத் தருகிற அமிருதம் என்று தெரியும். இதிலே விஷம் தற்காலிகம்; அமிருதம் சாச்வதம். இன்னொரு ஸெளக்யம், ‘யதக்ரே அம்ருதோபமம், பரிணாமே விஷமிவ’ என்பது. முதலில் அமிருதமாகத் தித்தித்து விட்டுப் போகப்போக விஷமாகிவிடுவது. இங்கே அம்ருதம் தாற்காலிகம்; விஷம் சாச்வதம். அமெரிக்காவில் டாலர் இப்படித்தான் முதலில் அம்ருதமாயிருந்துவிட்டு இப்போது விஷமாகியிருப்பதை அவர்களே தெரிந்து கொண்டிருக்கிறார்கள். இப்படியே இங்கும் எதிர்காலத்தில் தனி மனித நிறைவு, ஸமூஹக் கட்டுக்கோப்பு இரண்டும் ஹானியடைந்து, சாஸ்திர விரோதமாகப் பண்ணினதெல்லாம் முதலில் அம்ருதமாயிருந்தாலும் பிறகு இப்படி விஷமாகி விட்டதே என்று புரிந்து கொண்டு அழுகிற காலம் வரக்கூடும். அப்போது அமிருதத்தைத் தேடுகிறவர்களுக்கு அது எங்கேயிருக்கிறது என்று தெரியவேண்டும் அல்லவா? இப்போது நாம் பண்ணுகிற மாறுதல்கள்தான் முற்றி அவர்களுக்கு விஷம் தலைக்கேறிய ஸ்திதி ஏற்படப் போகிறபடியால் இதை (அமிருதம் எங்கேயிருக்கிறது என்பதை) அவர்களுக்குத் தெரிவிக்க வேண்டியது நம் கடமை. அதற்காகத்தான், இப்போது நாமே இந்த சாஸ்திரோக்தமான ஸமாசாரங்கள் என்ற அமிருதத்தைக் குடிக்காவிட்டாலும், பின்தலைமுறைகளில் நம்மைவிட க்ஷீண தசைக்குப் போய் விஷம் தலைக்கேறி விமோசனம் தேடுகிறவர்கள் தேடும்போது அவர்களுக்கு உதவுவதற்காகவாவது இந்த ஸமாசாரங்களை (குழி தோண்டிப் புதைத்து விடாமல்) சொல்லிக் கொண்டிருக்க வேண்டும். இந்த தீபம் வருங்காலத்திலாவது வழிகாட்ட விடவேண்டும்.

இந்த எண்ணத்தில்தான், காரியத்தில் செய்ய முடியாமல் கையைக் கட்டிப் போட்டிருந்தாலும் இன்னம் வாயைக் கட்டவில்லையே என்பதால் சாஸ்திர விதிகளை ஓயாமல் சொல்லிக் கொண்டிருக்கிறேன்.

Previous page in  தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is பெண்கள் உத்தியோகம் பார்ப்பது
Previous
Next page in தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is  செலவில் சாஸ்திரோக்தம்
Next
htmltitle
UPDATE on 13 July 2017:

Thanks to the devotees at dheivathinkural.wordpress.com, many corrections have been incorporated on these pages. If you find an error, please help us by reporting it