Page load depends on your network speed. Thank you for your patience. You may also report the error.

Loading...

வயசு நிர்ணயத்துக்குக் காரணம் : தெய்வத்தின் குரல் (இரண்டாம் பகுதி)

ஸரஸ்வதி உள்ளே புகுந்தபின் காயத்ரீ புகுவது இருக்கட்டும்; இது எங்கேயோ அபூர்வமாக நடக்கிற சமாசாரம். காமன் உள்ளே புகுவதற்கு முன் காயத்ரீ உள்ளே புகுந்துவிட வேண்டுமென்பதுதான் முக்கியம். அதனால்தான் எட்டு வயசு என்று வைத்தார்கள். காமத்தின் ஆவேசம் ஏற்பட்டுவிட்டால் அது மந்திர சக்தி பெற முடியாமல் இழுத்துக் கொண்டு போகும். ஏற்கெனவே பெற்ற சக்தியைக்கூட ஜீரணிக்கிற சக்தி அதற்கு உண்டு. அதனால்தான் பதினாறு வயசுக்கு மேல், சாண் ஏறினால் முழம் சறுக்குகிற நிலை ஏற்படுவதற்கு ரொம்பவும் முந்தியே, காயத்ரீயை நன்றாக ஜபித்து அதில் ஸித்தி அடைந்து விடும்படியாக வயசு நிர்ணயம் செய்திருக்கிறார்கள்.

இதொன்றையும் நாம் ஸீரியஸாக எடுத்துக் கொள்வதேயில்லை. தண்டத்துக்குச் செய்கிறோம். அடியோடு விட்டு விடுவதற்குத் துணிச்சல் இல்லாததாலேயே காலம் தப்பி, முறை கெட்டு, ஏதோ செய்தோம் என்கிற பொய்த் திருப்திக்காகப் பண்ணுகிறோம். இதைவிட தைரியமாக நாஸ்திகமாக இருந்துவிட்டால்கூடத் தேவலை; அவனுக்கு ஒரு ‘கன்விக்ஷ’னாவது [கொள்கையுறுதியாவது] இருக்கிறதல்லவா என்றுகூடத் தோன்றுகிறது.

பாலப் பிராயத்திலேயே காயத்ரீயை ஜபிக்க ஆரம்பித்து விட்டால் பசுமரத்தாணியாக அது பதியும். காயத்ரீயானது முக்கியமாக mental power (மனோசக்தி) , தேஜஸ், ஆரோக்யம் எல்லாவற்றையும் அபரிமிதமாகத் தரவல்லது. இந்த ஜபத்தாலேயே குழந்தைகளுக்கு நல்ல concentration [சித்த ஒருமைப்பாடு] , புத்தி தீக்ஷண்யம், சரீர புஷ்டி எல்லாமும் உண்டாகும். பிற்பாடு காமம் தெரிந்தாலும் அது ஒரேடியடியாக இழுத்துக் கொண்டு போய், புத்தி குறைவிலும் சரீர அசுத்தியிலும் விடாதபடி பெரிய கட்டுப்பாடாக இருக்கும். பிரம்மசர்ய ஆச்ரமத்தில் இவன் வீர்யத்தை விரயம் பண்ணாமல், நல்ல பிரம்ம தேஜஸோடு, அறிவாளியாகவும், குணசாலியாகவும், அடக்கம் முதலான நன்னடத்தைகளோடும், தெய்வ பக்தியோடும், ஆத்ம ஸம்பந்தமான விஷயங்களில் பிடிமானத்தோடும் இருப்பதற்கு பால்யத்திலேயே காயத்ரீ அநுஸந்தானம் பண்ணுவது பெரிய ஸஹாயம் செய்யும். தங்கள் குழந்தைகளுக்கு இத்தனை நன்மைகளையும் ஒரு காரணமுமில்லாமல் இக்காலத்துப் பெற்றோர்கள் தடுத்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

காயத்ரீ ஜபம், வேத அத்யயனம், இதர வேதாங்கங்களைப் படிப்பது, பிக்ஷை எடுப்பது, குரு சுசுருஷை, நடுவே பிரம்மசரிய ஆச்ரமத்தில் செய்யவேண்டிய விரதங்கள் இவற்றை முடித்து நல்ல யௌவனத்தை அடைந்தவன் ஸமாவர்த்தனத்தோடு குருகுல வாஸத்தைப் பூர்த்தி பண்ண வேண்டும். பிறகு காசிக்கு யாத்திரை சென்று வரவேண்டும். காசி யாத்திரை முடிந்து திரும்பியவுடன் கல்யாணம் பண்ணிக் கொள்ள வேண்டும். ஸமாவர்த்தனத்துக்குப் பிறகு விவாஹம் வரையில் அதாவது ஒருவன் காசி யாத்திரை போய் வரும் கட்டத்தின் போது – அவனுக்கு ‘ஸ்நாதகன்’ என்று பெயர். இக்காலத்தில் ‘கான்வகேஷன்’ தான் ஸமாவர்த்தனம்! கல்யாணத்தில் காசி யாத்திரை என்று ஒரு கூத்து நடக்கிறது!

இதற்கப்புறம் விவாஹம் என்பது. அதுவும் நாற்பது ஸம்ஸ்காரங்களில் ஒன்று.

Previous page in  தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is உபநயன உதாரண புருஷர்கள்
Previous
Next page in தெய்வத்தின் குரல் - இரண்டாம் பாகம்  is  இயற்கையை மதிக்கும் இல்லறம்
Next
htmltitle
UPDATE on 13 July 2017:

Thanks to the devotees at dheivathinkural.wordpress.com, many corrections have been incorporated on these pages. If you find an error, please help us by reporting it