Page load depends on your network speed. Thank you for your patience. You may also report the error.

Loading...

மல்லிகை கமழ்

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

திருவாய்மொழி

ஒன்பதாம் பத்து

மல்லிகை கமழ்

இத்திருவாய்மொழியை 'மாலைப் பூசல்' என்று கூறுவர். கண்ணபிரான் ஆநிரை மேய்த்து மாலையில் வீடு திரும்பும் போது, சில நாட்கள் கண்ணன் குழலூதிக்கொண்டு முன்னே வருவான். பின்னால் பசுக் கூட்டங்கள் வரும். சில நாட்கள் பசுக்கள் முன்னே வரும். கண்ணன் அவற்றின் பின்னால் வருவான்.

இவ்வாறு வரும் நாளில் பசுக் கூட்டங்களின்முன் கண்ணனைக் காணாமல் ஆயர் பாடிப் பெண்கள் பட்ட பாட்டை ஆழ்வார் (தாமும் ஆயர் பெண்ணின் நிலையில்

இருந்து கொண்டு) பேசுகிறார் இத்திருவாய்மொழியில்.

மாலை நேரம் கண்டு தலைவி இரங்கல்

எண்சீர் ஆசிரிய விருத்தம்

கண்ணன் இல்லாமல் தனித்துவிட்டேனே

3645. மல்லிகை கமழ்தென்றல் ஈரு மாலோ!

வண்குறிஞ் சியிசை தவழு மாலோ,

செல்கதிர் மாலையும் மயக்கு மாலோ!

செக்கர்நன் மேகங்கள் சிதைக்கு மாலோ,

அல்லியந் தாமரைக் கண்ணன் எம்மான்

ஆயர்கள் ஏறரி யேறெம் மாயோன்,

புல்லிய முலைகளும் தோளும் கொண்டு

புகலிடம் அறிகிலம் தமிய மாலோ!

கண்ணனைக் காணோம், என் உயிர் காக்கமாறு என்?

3646. புகலிடம் அறிகிலம் தமிய மாலோ!

புலம்புறும் அணிதென்றல் ஆம்ப லாலோ,

பகலடு மாலைவண் சாந்த மாலோ!

பஞ்சமம் முல்லைதண் வாடை யாலோ,

அகலிடம் படைத்திடந் துண்டு மிழ்ந்து

அளந்தெங்கும் அளிக்கின்ற ஆயன் மாயோன்,

இகலிடத் தசுரர்கள் கூற்றம் வாரான்

இனியிருந் தென்னுயிர் காக்கு மாறென்?

கண்ணனின் நினைவு வாட்டுகிறதே!

3647. இனியிருந் தென்னுயிர் காக்கு மாறென்

இணைமுலை நமுகநுண் ணிடைநு டங்க,

துனியிருங் கலவிசெய் தாகம் தோய்ந்து

துறந்தெம்மை யிட்டகல் கண்ணன் கள்வன்,

தனியிளஞ் சிங்கமெம் மாயன் வாரான்

தாமரைக் கண்ணும்செவ் வாயும்,நீலப்

பனியிருங் குழல்களும் நான்கு தோளும்

பாவியேன் மனத் தேநின் றீரு மாலோ!

மாலைப்பொழுது வந்துவிட்டதே!எனக்குத் துணை இல்லையே!

3648. பாவியேன் மனத்தேநின் றீரு மாலோ

வாடைதண் வாடைவெவ் வாடை யாலோ,

மேவுதண் மதியம்வெம் மதிய மாலோ!

மென்மலர்ப் பள்ளிவெம் பள்ளி யாலோ,

தூவியம் புள்ளுடைத் தெய்வ வண்டு

துதைந்தஎம் பெண்மையம் பூவி தாலோ,

ஆவியின் பரமல்ல வகைக ளாலோ!

யாமுடை நெஞ்சமும் துணையன் றாலோ!

ஆயன் மனம் கல்லாகிவிட்டதோ? எப்படி உயிரைக் காப்பேன்?

3649. யாமுடை நெஞ்சமும் துணையன் றாலோ

ஆபுகும் மாலையும் ஆகின் றாலோ,

யாமுடை ஆயன்றன் மனம்கல் லாலோ

அவனுடைத் தீங்குழ லீரு மாலோ,

யாமுடைத் துணையென்னும் தோழி மாரும்

எம்மின்முன் னவனுக்கு மாய்வ ராலோ,

யாமுடை ஆருயிர் காக்கு மாறென்?

அவனுடை யருள்பெ றும்போது அரிதே.

அன்னைமீர்!நான் என்னவென்று சொல்லுவேன்?

3650. அவனுடை யருள்பெ றும்போ தரிதால்

அவ்வருள் அல்லன அருளும் அல்ல,

அவனருள் பெறுமள வாவி நில்லாது

அடுபகல் மாலையும் நெஞ்சும் காணேன்,

சிவனொடு பிரமன்வண் திரும டந்தை

சேர்திரு வாகமெம் மாவி யீரும்,

எவனினிப் புகுமிடம்? எவன்செய் கேனோ?

ஆருக்கென் சொல்லுகேன் அன்னை மீர்காள்!

எனது நெஞ்சம் கண்ணன் பக்கமே சேர்ந்தது

3651. ஆருக்கென் சொல்லுகேன் அன்னை மீர்காள்

ஆருயிர் அனவன்றிக் கூர்தண் வாடை,

காரொக்கும் மேனிநங் கண்ணன் கள்வம்

கவர்ந்தவத் தனிநெஞ்சம் அவன்க ணஃதே,

சீருற்ற அகிற்புகை யாழ்ந ரம்பு

பஞ்சமம் தண்பசுஞ் சாந்த ணைந்து,

போருற்ற வாடைதண் மல்லி கைப்பூப்

புதுமணம் முகந்துகொண் டெறியு மாலோ!

கண்ணனிற் கொடியது கண்ணன் கள்வம்

3652. புதுமணம் முகந்துகொண் டெறியு மாலோ

பொங்கிள வாடைபுன் செக்க ராலோ,

அதுமணந் தகன்றநங் கண்ணன் கள்வம்

கண்ணினிற் கொடிதினி அதனி லும்பர்,

மதுமண மல்லிகை மந்தக் கோவை

வண்பசுஞ் சாந்தினில் பஞ்ச மம்வைத்து,

அதுமணந் தின்னருள் ஆய்ச்சி யர்க்கே

ஊதுமத் தீங்குழற் கேயுய் யேன்நான்!

மாலையும் வந்தது. மாயன் வரவில்லையே!

3653. ஊதுமத் தீங்குழற் கேயுய் யேன்நான்

அதுமொழிந் திடையிடைத் தன்செய் கோலத்,

தூதுசெய் கண்கள்கொண் டொன்று பேசித்

தூமொழி யிசைகள்கொண் டொன்று நோக்கி,

பேதுறும் முகம்செய்து நொந்து நொந்து

பேதைநெஞ் சறவறப் பாடும் பாட்டை,

யாதுமொன் றறிகிலம் அம்ம அம்ம!

மாலையும் வந்தது மாயன் வாரான்.

மாலை வந்துவிட்டது நான் எப்படி உய்வேன்?

3654. மாலையும் வந்தது மாயன் வாரான்

மாமணி புலம்பவல் லேற ணைந்த,

கோலநன் னாகுகள் உகளு மாலோ

கொடியன குழல்களும் குழறுமாலோ,

வாலொளி வளர்முல்லை கருமு கைகள்

மல்லிகை யலம்பிவண் டாலு மாலோ,

வேலையும் விசம்பில்வண் டலறு மாலோ!

என்சொல்லி யுய்வனிங் கவனை விட்டே?

தொண்டர்காள் இவற்றைப் படித்து உய்வு பெறுக

3655. அவனைவிட் டகன் றுயிர் ஆற்ற கில்லா

அணியிழை ஆய்ச்சியர் மாலைப் பூசல்,

அவனைவிட் டகல்வதற் கேயி ரங்கி

அணிகுரு கூர்ச்சட கோபன் மாறன்,

அவனியுண் டுமிழ்ந்தவன் மேலு ரைத்த

ஆயிரத் துள்ளிவை பத்தும் கொண்டு,

அவனியுள் அலற்றிநின் றுய்ம்மின் தொண்டீர்!

அச்சொன்ன மாலை நண்ணித் தொழுதே.

நேரிசை வெண்பா

மாறன் அருளால் மயக்கம் தீரும்

மல்லடிமை செய்யும்நாள் மால்தன்னைக் கேட்க,அவன்

சொல்லுமள வும்பற்றாத் தொன்னலத்தால்,-செல்கின்ற

ஆற்றாமை பேசி அலமந்த மாறனருள்,

மாற்றாகப் போகுமென்றன் மால்.

Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is அறுக்கும் வினை
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is  மாலை நண்ணி
Next
htmltitle
UPDATE on 13 July 2017:

Thanks to the devotees at dheivathinkural.wordpress.com, many corrections have been incorporated on these pages. If you find an error, please help us by reporting it