Page load depends on your network speed. Thank you for your patience. You may also report the error.

Loading...

பண்டைநாளாலே

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

திருவாய்மொழி

ஒன்பதாம் பத்து

பண்டைநாளாலே

'எல்லா உறவு முறைகளையும் கொண்ட சிறந்த உறவினராக இருக்கும் எம்பெருமான் நமக்கு நன்மை செய்வதற்காகவே திருப்புளிங்குடி என்ற திவ்யதேசத்தில் திருக்கண் வளர்கிறான். நாம் அங்கு சென்று அவனை அணுகினால் நமக்கு உறவினர்கள் செய்யும் செயல்களை எல்லாம் செய்வான்' என்று கூறி ஆழ்வார் அங்கு சென்று அவனை அடைகிறார்.

தமக்கு அருள் செய்யுமாறு ஆழ்வார் பரமனை வேண்டல்

எழுசீர் ஆசிரிய விருத்தம்

திருப்புளிங்குடியானே!என்னை நோக்குக

3568. பண்டைநா ளாலே நின்திரு வருளும்

பங்கயத் தாள்திரு வருளும்

கொண்டு,நின் கோயில் சீய்த்துப்பல் படிகால்

குடிகுடி வழிவந்தாட் செய்யும்,

தொண்டரோர்க் கருளிச் சோதிவாய் திறந்துன்

தாமரைக் கண்களால் நோக்காய்,

தெண்டிரைப் பொருநல் தண்பணை சூழ்ந்த

திருப்புளிங் குடிக்கிடந் தானே!

புளிங்குடியானே நின் திருவடிகளை என் தலையில் வை

3569. குடிக்கிடந் தாக்கஞ் செய்துநின் தீர்த்த

அடிமைக்குற் றேவல்செய்து, உன்பொன்

அடிக்கட வாதே வழிவரு கின்ற

அடியரோர்க் கருளி,நீ யருநாள்

படிக்கள வாக நிமிர்த்தநின் பாத

பங்கய மேதலைக் கணியாய்,

கொடிக்கொள்பொன் மதிள்சூழ் குளிர்வயல் சோலைத்

திருப்புளிங் குடிக்கிடந் தானே!

பள்ளிகொண்டானே!எழுந்து அமர்க

3570. கிடந்தநாள் கிடந்தாய் எத்தனை காலம்

கிடத்தியுன் திருவுடம் பசைய,

தொடர்ந்துகுற் றேவல் செய்துதொல் லடிமை

வழிவரும் தொண்டரோர்க் கருளி,

தடங்கொள்தா மரைக்கண் விழித்துநீ யெழுந்துன்

தாமரை மங்கையும் நீயும்,

இடங்கொள்மூ வுலகும் தொழவிருந் தருளாய்

திருப்புளிங் குடிக்கிடந் தானே

என்னை ஆள்பவனே!நாங்கள் காண c வா

3571. புளங்குடிக் கிடந்து வரகுண மங்கை

இருந்துவை குந்தத்துள் நின்று,

தெளிந்தவென் சிந்தை அகங்கழி யாதே

என்னையாள் வாயெனக் கருளி,

நளிந்தசீ ருலகம் மூன்றுடன் வியப்ப

நாங்கள்கூத் தாடிநின் றார்ப்ப,

பளிங்குநீர் முகிலின் பவளம் போல் கனிவாய்

சிவப்பநீ காணவா ராயே.

கருடவாகனா!எங்களுக்குக் காட்சி தா

3572. பவளம்போல் கனிவாய் சிவப்பநீ காண

வந்துநின் பன்னிலா முத்தம்,

தவழ்கதிர் முறுவல் செய்துநின் திருக்கண்

டாமரை தயங்குநின் றருளாய்,

பவளநன் படர்க்கீழ்ச் சங்குறை பொருநல்

தண்திருப் புளிங்குடிக் கிடந்தாய்,

கவளமா களிற்றி னிடர்டெத் தடத்துக்

காய்சினப் பறவையூர்ந் தானே!

புளியங்குடியாய்!எம் இடர்களை அகற்று

3573. காய்சினப் பறவை யூர்ந்துபொன் மலையின்

மீமிசைக் கார்முகில் போல்,

மாசின மாலி மாலிமான் என்றங்

கவர்படக் கனன்றுமுன் னின்ற,

காய்சின வேந்தே!கதிர்முடி யானே!

கலிவயல் திருப்புளிங் குடியாய்,

காய்சின ஆழி சங்குவாள் வில்தண்

டேந்தியும் இடர்கடி வானே!

பெருமானே!எம் கண்முன் ஒரு நாள் இருந்திடு

3574. எம்மிடர் கடிந்திங் கென்னையாள் வானே!

இமையவர் தமக்குமாங் கனையாய்,

செம்மடல் மலரும் தாமரைப் பழனத்

தண்திருப் புளிங்குடிக் கிடந்தாய்,

நம்முடை யடியர் கவ்வைகண் டுகந்து

நாம்களித் துளநலம் கூர,

இம்மட வுலகர் காணநீ யருநாள்

இருந்திடாய் எங்கள்கண் முகப்பே,

வைகுந்தா!பூமியில் எங்களுக்கும் காட்சி தந்திடு

3575. எங்கள்கண் முகப்பே உலகர்கள் எல்லாம்

இணையடி தொழுதெழுந் திறைஞ்சி,

தங்களன் பாரத் தமதுசொல் வலத்தால்

தலைத்தலைச் சிறந்துபூ சிப்ப,

திங்கள்சேர் மாடத் திருப்புளிங் குடியாய்!

திருவைகுந் தத்துள்ளாய்!தேவா,

இங்கண்மா ஞாலத் திதனுளு மொருநாள்

இருந்திடாய் வீற்றிடங் கொண்டே.

புளியங்குடியானே!எங்கள் கண் குளிரத் தரிசனம் தா

3576. வீற்றிடங் கொண்டு வியன்கொள்மா ஞாலத்

திதனுளு மிருந்திடாய், அடியோம்

போற்றியோ வாதே கண்ணினை குளிரப்

புதுமலர் ஆகத்தைப் பருக,

சேற்றிள வாளை செந்நெலூ டுகளும்

செழும்பணைத் திருப்புளிங் குடியாய்,

கூற்றமாய் அசுரர் குலமுதல் அரிந்த

கொடுவினைப் படைகள்வல் லானே!'

அமுதே!நின் திருவடியை நான் பிடிக்க ஒரு நாளாவது வா

3577. கொடுவினைப் படைகள் வல்லையாய் அமரர்க்

கிடர்கெட அசுரர்கட் கிடர்செய்,

கடுவினை நஞ்சே!என்னுடை அமுதே!

கலிவயல் திருப்புளிங் குடியாய்,

வடிவிணை யில்லா மலர்மகள் மற்றை

நிலமகள் பிடிக்கும்மெல் லடியை,

கொடுவினை யேனும் பிடிக்கநீ ஒருநாள்

கூவுதல் வருதல்செய் யாயே.

இவற்றைப் படித்தோர் சிறந்த பக்தர்களாவர்

3578. 'கூவுதல் வருதல் செய்திடாய்' என்று

குரைகடல் கடைந்தவன் றன்னை,

மேவிநன் கமர்ந்த வியன்புனல் பொருநல்

வழுதிநா டன்நட கோபன்,

நாவியல் பாடல் ஆயிரத் துள்ளும்

இவையுமோர் பத்தும்வல் லார்கள்,

ஒவுத லின்றி யுலகம்மூன் றளந்தான்

அடியிணை யுள்ளத்தோர் வாரே.

நேரிசை வெண்பா

மனமே!மாறன் திருவடிகளே நம் துணை

பண்டையற வான பரனைப் புளிங்குடிக்கே

கண்டு, 'எனக்கெல் லாவுறவின் காரியமும், - தண்டறநீ

செய்தருள்'என் றேயிரந்த சீர்மாறன் றாளிணையை,

உய்தணையென் றுள்ளமே!ஓர்

Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is கொண்ட பெண்டிர்
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is  ஓராயிரமாய்
Next
htmltitle
UPDATE on 13 July 2017:

Thanks to the devotees at dheivathinkural.wordpress.com, many corrections have been incorporated on these pages. If you find an error, please help us by reporting it