நெடுமாற்கடிமை

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

திருவாய்மொழி

எட்டாம் பத்து

நெடுமாற்கடிமை

இத்திருவாய்மொழி பாகவத சேஷத்வத்தைக் கூறுகிறது. பாகவத கைங்கர்யமே புருஷார்த்தம் என்பதையும் உணர்த்துகிறது. பகவானிடம் பக்தி கொள்வதுடன் அவனடியார்களிடமும் (பாகவதர்களிடமும்) பக்தி கொள்ளவேண்டும். பகவத் பக்தியின் எல்லை நிலம் பாகவத பக்தி. பகவத் பக்தியின் உறுதியை பாகவத பக்தியே வெளிப்படுத்தும்.

பாகவத கைங்கர்யம்

அறுசீர் ஆசிரிய விருத்தம்

திருமால் அடியார்களின் திருவடிகளே சரணம்

3546. நெடுமாற் கடிமை செய்வேன்போல்

அவனைக் கருத வஞ்சித்து,

தடுமாற் றற்ற தீக்கதிகள்

முற்றும் தவிர்ந்த சதிர்நினைந்தால்,

கொடுமா வினையேன் அவனடியார்

அடியே கூடும் இதுவல்லால்,

விடுமா றென்ப தென்னந்தோ!

வியன்மூ வுலகு பெறினுமே?

பக்தர்களின் திருவடி வணங்கி இன்பம் பெற்றேன்

3547. வியன்மூ வுலகு பெறினும்போய்த்

தானே தானே யானாலும்,

புயல்மே கம்போல் திருமேனி

அம்மான் புனைபூங் கழலடிக்கீழ்,

சயமே யடிமை தலைநின்றார்

திருத்தாள் வணங்கி, இம்மையே

பயனே யின்பம் யான்பெற்ற

துறுமோ பாவி யேனுக்கே?

பக்தர்களையன்றி மற்றோரை வணங்கமாட்டேன்?

3548. உறுமோ பாவி யேனுக்கிவ்

வுலகம் மூன்றும் உடன்நிறைய,

சிறுமா மேனி நிமிர்த்தவென்

செந்தா மரைக்கண் திருக்குறளன்

நறுமா விரைநாண் மலரடிக்கீழ்ப்

புகுதல் அன்றி அவனடியார்,

சிறுமா மனிச ராயென்னை

ஆண்டா ரிங்கே திரியவே.

பக்தி நெறி ஒன்றே எனக்குப் போதும்

3549. இங்கே திரிந்தேற் கிழுக்குற்றென்!

இருமா நிலமுன் னுண்டுமிழ்ந்த,

செங்கோ லத்த பவளவாய்ச்

செந்தா மரைக்க ணென்னம்மான்

பொங்கேழ் புகழ்கள் வாயவாய்ப்

புலன்கொள் வடிவென் மனத்ததாய்

அங்கேய் மலர்கள் கையவாய்

வழிபட் டோட அருளிலே?

கவி பாடித் துதிக்கவே யான் விரும்புகிறேன்

3550. வழிபட் டோட அருள்பெற்று

மாயன் கோல மலரடிக்கீழ்,

சுழிபட் டோடும் சுடர்ச்சோதி

வெள்ளத் தின்புற் றிருந்தாலும்,

இழிபட் டோடும் உடலினிற்

பிறந்து தன்சீர் யான்கற்று,

மொழிபட் டோடும் கவியமுத

நுகர்ச்சி யுறுமோ முழுதுமே?

பரமன் புகழை நுகர்தலே என் விருப்பம்

3551. நுகர்ச்சி யுறுமோ மூவுலகின்

வீடு பேறு தன்கேழில்,

புகர்ச்செம் முகத்த களிறட்ட

பொன்னா ழிக்கை யென்னம்மான்,

நிகர்ச்செம் பங்கி யெரிவிழிகள்

நீண்ட அசுர ருயிரெல்லாம்,

தகர்த்துண் டுழலும் புட்பாகன்

பெரிய தனிமாப் புகழே?

அடியார்களைச் சேர்ந்து அடையும் இன்பமே வேண்டும்

3552. தனிமாப் புகழே யெஞ்ஞான்றும்

நிற்கும் படியாத் தான்தோன்றி,

முனிமாப் பிரம முதல்வித்தாய்

உலகம் மூன்றும் முளைப்பித்த,

தனிமாத் தெய்வத் தளிரடிக்கீழ்ப்

புகுதல் அன்றி அவனடியார்,

நனிமாக் கலவி யின்பமே

நாளும் வாய்க்க நங்கட்கே.

அடியார்கள் சேர்க்கை எந்நாளும் வாய்த்திடுக

3553. நாளும் வாய்க்க நங்கட்கு

நளிர்நீர்க் கடலைப் படைத்து,தன்

தாளும் தோளும் முடிகளும்

சமனி லாத பலபரப்பி,

நீளும் படர்பூங் கற்பகக்

காவும் நிறைபன் னாயிற்றின்,

கோளு முடைய மணிமலைபோல்

கிடந்தான் தமர்கள் கூட்டமே.

அடியார்களின் அடியார்க்கடியார் உறவு வேண்டும்

3554. தமர்கள் கூட்ட வல்வினையை

நாசஞ் செய்யும் சதிர்மூர்த்தி,

அமர்கொள் ஆழி சங்குவாள்

வில்தண் டாதி பல்படையன்,

குமரன் கோல ஐங்கணைவேள்

தாதை கோதில் அடியார்தம்,

தமர்கள் தமர்கள் தமர்களாம்

சதிரே வாய்க்க தமியேற்கே.

அடியார்க்கடியார்க்கு அடியாரின் அடியாரே எம் தலைவர்

3555. வாய்க்க தமியேற் கூழிதோ

றூழி, யூழி, மாகாயாம்

பூக்கொள் மேனி நான் குதோள்

பொன்னா ழிக்கை யென்னம்மான்,

நீக்க மில்லா அடியார்தம்

அடியார் அடியார் அடியாரெங்

கோக்கள், அவர்க்கே குடிகளாய்ச்

செல்லும் நல்ல கோட்பாடே.

இவற்றைப் படித்தால் இல்லறம் இனிக்கும்

3556. நல்ல கோட்பாட் டுலகங்கள்

மூன்றி னுள்ளும் தான்நிறைந்த,

அல்லிக் கமலக் கண்ணனை

அந்தண் குருகூர்ச் சடகோபன்,

சொல்லப் பட்ட ஆயிரத்துள்

இவையும் பத்தும் வல்லார்கள்,

நல்ல பதத்தால் மனைவாழ்வர்

கொண்ட பெண்டிர் மக்களே.

நேரிசை வெண்பா

பக்தரடிமையின் எல்லை நிலமே மாறன்

நெடுமா லழழுதனில் நீள்குணத்தில், ஈடு

படுமா நிலையுடைய பத்தர், - அடிமைதனில்

எல்லைநிலந் தானாக எண்ணினான் மாறன்,அது

கொல்லைநில மானநிலை கொண்டு.

Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is கருமாணிக்கமலை
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is  கொண்ட பெண்டிர்
Next