Page load depends on your network speed. Thank you for your patience. You may also report the error.

Loading...

கருமாணிக்கமலை

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

திருவாய்மொழி

எட்டாம் பத்து

கருமாணிக்கமலை

தோழி சொல்லும் பாசுரங்களாக அமைந்துள்ளது இப்பகுதி. தலைவிக்குத் திருமண வயது வந்தது. தந்தையர் சுயம்வரத்திற்காக மணமுரசு அறைவித்தனர். இதனைத் தோழி அறிந்தாள். குட்டநாட்டுத் திருப்புலியூர்ப் பெருமானோடு இவளுக்கு (தலைவிக்கு) ஏற்பட்டிருக்கும் தொடர்பையும் அவள் அறிந்திருந்தாள். தந்தையரின் முயற்சி கண்டு தலைவி மனக்கவலை அடைவாளே என்று எண்ணினாள். எனவே, அம்முயற்சியை மாற்ற ஒரு தந்திரம் செய்தாள். 'அம்மனைமீர், இவளைக் காணும்போது இவளுக்குத் (உங்கள் மகளுக்குத்) திருப்புலியூர்ப் பெருமானோடு கலப்பு ஏற்பட்டதுபோல் தோன்றுகிறதே உங்கள் முயற்சிக்கே இடமில்லை' என்று கூறி, அயல்மணம் விலக்குகிறாள். பராங்குசநாயகியே ஈண்டுத் தலைவி.

தலைவியின் உண்மையான காதலை உரைத்துத்

தோழி அயல் மணம் விலக்குதல்

கலி நிலைத்துறை

மாயன் பேச்சையே இவள் பேசுகிறாள்

3535. கருமா ணிக்க மலைமேல்மணித்

தடந்தாமரைக் காடுகள்போல்,

திருமார்வு வாய்கண்கை யுந்திகாலுடை

யாடைகள் செய்யபிரான்

திருமா லெம்மான் செழுநீர்வயல்

குட்டநாட்டுத் திருப்புலியூர்,

அருமாயன் பேரன்றிப் பேச்சிலள்

அன்னைமீரிதற் கென்செய்கேனோ

திருப்புலியூரையே இவள் புகழ்கிறாள்

3536. அன்னைமீ ரிதற்கென் செய்கேன்?

அணிமேருவின் மீதுலவும்,

துன்னு சூழ்சடர் ஞாயிறும்

அன்றியும்பல் சுடர்களும்போல்,

மின்னு நீண்முடி யாரம்பல்கலன்

றானுடை யெம்பெருமான்,

புன்னை யம்பொழில் சூழ்திருப்

புலியூர் புகழுமிவளே.

திருப்புலியூர் வளத்தையே எப்போதும் இவள் சொல்கிறாள்

3537. புகழு மிவள்நின் றிராப்பகல்

பொருநீர்க்கடல் தீப்பட்டு,எங்கும்

திகழு மெரியடு செல்வதொப்பச்

செழுங்கதி ராழிமுதல்

புகழும் பொருபடை யேந்திப்போர்

புக்கசுரரைப் பொன்றுவித்தான்

திகழு மணிநெடு மாடம்நீடு

திருப்புலி யூர்வளமே.

தேவபிரானின் திருநாமங்களையே இவள் சொல்கிறாள்

3538. ஊர்வ ளம்கிளர் சோலையும்

கரும்பும்பெருஞ் செந்நெலும்சூழ்ந்து

ஏர்வ ளம்கிளர் தண்பணைக்

குட்டநாட்டுத் திருப்புலியூர்,

சீர்வ ளம்கிளர் மூவுல

குண்டுமிழ் மூவுல

குண்டுமிழ் தேவபிரான்,

பேர்வ ளம்கிளர்ந் தன்றிப்பேச்

சிலளின்றிப் புனையிழையே.

அப்பன் திருவருளில் மூழ்கினான் இவள்

3539. புனையிழைகள் அணிவும் ஆடையுடையும்

புதுக்க ணிப்பும்,

நினையும் நீர்மைய தன்றிவட்கிது

நின்று நினைக்கப்புக்கால்,

சுனையி னுள்தடந் தாமரை

மலரும்தண் திருப்புலியூர்,

முனைவன் மூவுல காளிஅப்பன்

திருவருள் மூழ்கினளே.

இவள் கண்ணனைச் சேர்ந்தமைக்கு அடையாளங்கள் உள

3540. திருவருள் மூழ்கி வைகலும்

செழுநீர்நிறக் கண்ணபிரான்,

திருவருள் களும்சேர்ந் தமைக்கடை

யாளம் திருந்தவுள,

திருவருள் அருளால் அவன்சென்று

சேர்தண் திருப்புலியூர்,

திருவருள் கமுகொண் பழத்தது

மெல்லியல் செவ்விதழே.

இவள் கண்ணன் தாள் அடைந்தாள்

3541. மெல்லிலைச் செல்வவண் கொடிபுல்க

வீங்கிளந் தாள்கமுகின்,

மல்லிலை மடல்வாழை யீன்கனி

சூழ்ந்து மணம்கமழ்ந்து,

புல்லிலைத் தெங்கி னூடுகால்

உலவும்தண் திருப்புலியூர்,

மல்லலம் செல்வக் கண்ணன்தாள்

அடைந்தாள்இம் மடவரலே.

இவள் பாம்பணையான் திருநாமங்களையே சொல்கிறாள்

3542. மடவரல் அன்னைமீர்கட் கென்சொல்லிச்

சொல்லுகேன்? மல்லைச்செல்வ

வடமொழி மறைவாணர் வேள்வியுள்

நெய்யழல் வான்புகைபோய்

திடவிசும் பிலமரர் நாட்டை

மறைக்கும்தண் திருப்புலியூர்,

படவர வணையான் றன்நாமம்

அல்லால் பரவா ளிவளே.

திருப்புலியூர்ப் புகழன்றி வேறொன்று சொல்லாள் இவள்

3543. பரவா ளிவள்நின் றிராப்பகல்

பனிநீர்நிறக் கண்ணபிரான்,

விரவா ரிசைமறை வேதியரொலி

வேலையின் நின்றொலிப்ப,

கரவார் தடந்தோறும் தாமரைக்

கயந்தீவிகை நின்றலரும்,

புரவார் கழனிகள் சூழ்திருப்

புலியூர்ப்புக ழன்றிமற்றே.

திருப்புலியூர் மாயப் பிரான் திருவருள்

3544. அன்றிமற் றோருபாய மென்னிவ

ளந்தண்டு ழாய்கமழ்தல்,

குன்ற மாமணி மாடமாளிகைக்

கோலக்கு ழாங்கள்மல்கி,

தென்தி சைத்தில தம்புரைக்

குட்டநாட்டுத் திருப்புலியூர்,

நின்ற மாயப்பி ரான்திரு

வருளாமிவள் நேர்பட்டதே

இப்பாடல்களால் திருமாலுக்கு அடிமை செய்யலாம்

3545. நேர்பட்ட நிறைமூ வுலகுக்கும்

நாயகன் றன்னடிமை,

நேர்பட்ட தொண்டர்தொண்டர்

தொண்டர்தொண்டன் சடகோ பன்,சொல்

நேர்பட்ட தமிழ்மாலை யாயிரத்துள்

இவையு மோர்பத்தும்

நேர்பட் டாரவர், நேர்பட்டார்

நெடுமாற்கடி மைசெய்யவே.

நேரிசை வெண்பா

கருமால் திறத்திலொரு கன்னிகையாம் மாறன்,

ஒருமா கலவி யுரைப்பால் - திரமாக

அந்நியருக் காகா தவன்றனக்கே யாகுமுயிர்,

இந்நிலையை யோர்நெடி தா.

Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is கண்கள் சிவந்து
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is  நெடுமாற்கடிமை
Next
htmltitle
UPDATE on 13 July 2017:

Thanks to the devotees at dheivathinkural.wordpress.com, many corrections have been incorporated on these pages. If you find an error, please help us by reporting it