Page load depends on your network speed. Thank you for your patience. You may also report the error.

Loading...

வார்கடா அருவி

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

திருவாய்மொழி

எட்டாம் பத்து

வார்கடா அருவி

'ஆழ்வீர்!திருச்செங்குன்றூர்த் திருச்சிற்றாற்றிலே மிகவும் வல்லமை பொருந்திய மூவாயிரம் வேதியர்கள் பரிந்து நோக்குவதையும், அவர்களோடு நான் சேர்ந்திருப்பதையும் பாரீர்!எனக்கே உரிய வீர்ய பராக்ரமம் முதலானவற்றையும் பாரீர்' என்று பகவான் அவற்றைக் காட்ட, ஆழ்வார் அச்சம் நீங்கி அவனது வடிவழகை அநுபவித்து உகக்கிறார்.

திருச்செங்குன்றூரில் கண்ணனைத் தரிசித்து மகிழ்தல்

எழுசீர் ஆசிரிய விருத்தம்

நாங்கள் சேருமிடம் திருச்செங்குன்றூரே

3480. வார்கடா அருவி யானைமா மலையின்

மருப்பிணைக் குவடிறுத் துருட்டி,

ஊர்கொள்திண் பாகன் உயிர்செகுத் தரங்கின்

மல்லாரைக் கொன்றுசூழ் பரண்மேல்,

போர்கடா வரசர் புறக்கிட மாட

சீர்கொள்சிற் றாயன் திருச்செங்குன் றூரில்

திருச்சிற்றா றெங்கள்செல் சார்வே.

திருச்செங்குன்றூரானே எனக்குத் துணை

3481. எங்கள்செல் சார்வு யாமுடை அமுதம்

இமையவர் அப்பனென் அப்பன்,

பொங்குமூ வுலகும் படைத்தளித் தழிக்கும்

பொருந்துமூ வுருவனெம் அருவன்,

செங்கயல் உகளும் தேம்பணை புடைசூழ்

திருச்செங்குன் றூர்த்திருச் சிற்றாறு

அங்கமர் கின்ற, ஆதியான் அல்லால்

யாவற்மற் றென்அமர் துணையே?

திருச்செங்குன்றூரான் திருவடிகளே எனக்குச் சரண்

3482. என்னமர் பெருமான் இமையவர் பெருமான்

இருநிலம் இடந்தவெம் பெருமான்,

முன்னைவல் வினைகள் முழுதுடன் மாள

என்னையாள் கின்றஎம் பெருமான்,

தென்திசைக் கணிகொள் திருச்செங்குன் றூரில்

திருச்சிற்றாற் றங்கரை மீபால்

நின்றவெம் பெருமான், அடியல்லால் சரணம்

நினைப்பிலும் பிறிதில்லை எனக்கே.

திருச்செங்குன்றூரான் திருவடிகளே எனக்குக் காவல்

3483. பிறிதில்லை யெனக்குப் பெரியமூ வுலகும்

நிறையப்பே ருருவமாய் நிமிர்ந்த,

குறியமாண் எம்மான் குரைகடல் கடைந்த

கோலமா ணிக்கமென் எம்மான்,

செறிகுலை வாழை கமுகுதெங் கணிசூழ்

திருச்செங்குன் றூர்த்திருச் சிற்றாறு

அறிய,மெய்ம் மையே நின்றவெம் பெருமான்

அடியிணை யல்லதோர் அரணே.

என் ஆவி கண்ணனையல்லது விரும்பாது

3484. அல்லதோர் அரணும் அவனில்வே றில்லை

அதுபொரு ளாகிலும், அவனை

அல்லதென் ஆவி அமர்ந்தணை கில்லா

தாதலால் அவனுறை கின்ற,

நல்லநான் மறையோர் வேள்வியுள் மடுத்த

நறும்புகை விசும்பொளி மறைக்கும்,

நல்லநீள் மாடத் திருச்செங்குன் றூரில்

திருச்சிற்றா றெனக்கநல் லரணே.

பள்ளிகொண்டானைத் திருச்செங்குன்றூரில் கண்டேன்

3485. எனக்குநல் லரணை எனதா ருயிரை

இமையவர் தந்தைதாய் தன்னை,

தனக்குந்தன் தன்மை அறிவரி யானைத்

தடங்கடல் பள்ளியம் மானை,

மனக்கொள்சீர் மூவா யிரவர்வண் சிவனும்

அயனம் தானுமொப் பார்வாழ்,

கனக்கொள்திண் மாடத் திருச்செங்குன் றூரில்

திருச்சிற்றா றதனுள்கண் டேனே.

திருச்செங்குன்றூரான் என் சிந்தையில் உள்ளான்.

3486. திருச்செங்குன் றூரில் திருச்சிற்றா றதனுள்

கண்டவத் திருவடி யென்றும்,

திருச்செய்ய கமலக் கண்ணும்செவ் வாயும்

செவ்வடி யும்செய்ய கையும்,

திருச்செய்ய கமல வுந்தியும் செய்ய

கமலமார் பும்செய்ய வுடையும்,

திருச்செய்ய முடியும் ஆரமும் படையும்

திகழவென் சிந்தையு ளானே!.

திருச்செங்குன்றூரானைப் புகழும் விதம் அறியேன்

3487. திகழவென் சிந்தை யுள்ளிருந் தானைச்

செழுநிலத் தேவர்நான் மறையோர்,

திசைகைகூப்பி யேத்தும் திருச்செங்குன் றூரில்

திருச்சிற்றாற் றங்கரை யானை,

புகர்கொள்வா னவர்கள் புகலிடந் தன்னை

அசுரர்வன் கையர்வெங் கூற்றை,

புகழுமா றறியேன் பொருந்துமூ வுலகும்

படைப்பொடு கெடுப்புக்காப் பவனே

திருச்செங்குன்றூரானே எல்லாத் தெய்வங்களும்

3488. படைப்பொடு கெடுப்புக் காப்பவன் பிரம

பரம்பரன் சிவபிரான் அவனே,

இடைப்புக்கோ ருருவும் ஒழிவில்லை யவனே

புகழ்வில்லை யாவையும் தானே,

கொடைப்பெரும் புகழார் இனையர்தன் னானார்

கூரிய விச்சையோ டொழுக்கம்,

நடைப்பலி யியற்கைத் திருச்செங்குன் றூரில்

திருச்சிற்றா றமர்ந்த நாதனே.

திருச்செங்குன்றூர்ப் பெருமானையே விரும்பினேன்

3489. அமர்ந்த நாதனை யவரவ ராகி

அவர்க்கருள் அருளுமம் மானை

அமர்ந்ததண் பழனத் திருச்செங்குன் றூரில்

திருச்சிற்றாற் றங்கரை யானை,

அமர்ந்தசீர் மூவா யிரவர்வே தியர்கள்

தம்பதி யவனிதே வர்வாழ்வு,

அமர்ந்தமா யோனை முக்கணம் மானை

நான்முக னையமர்ந் தேனே.

இப்பாடல்கள் பிறவித் துன்பத்தை முடிக்கும்

3490. தேனைநன் பாலைக் கன்னலை யமுதைத்

திருந்துல குண்டவம் மானை,

வனைநான் முகனை மலர்ந்ததண் கொப்பூழ்

மலர்மிசைப் படைத்தமா யோனை,

கோனைவண் குருகூர் வண்சட கோபன்

சொன்னவா யிரத்துளிப் பத்தும்,

வானின்மீ தேற்றி யருள்செய்து முடிக்கும்

பிறவிமா மாயக்கூத் தினையே.

நேரிசை வெண்பா

மனமே!மாறன் திருவடிகளையே சேர்

வாராமல் அச்சமினி மால்தன் வலியினையும்,

சீரார் பரிவருடன் சேர்த்தியையும், - பாருமெனத்

தானுகந்த மாறன்றாள் சார்நெஞ்சே!சாராயேல்,

மானிடவ ரைச்சார்ந்து மாய்

Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is அங்குமிங்கும்
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is  மாயக்கூத்தா
Next
htmltitle
UPDATE on 13 July 2017:

Thanks to the devotees at dheivathinkural.wordpress.com, many corrections have been incorporated on these pages. If you find an error, please help us by reporting it