Page load depends on your network speed. Thank you for your patience. You may also report the error.

Loading...

தேவிமாராவார்

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

திருவாய்மொழி

எட்டாம் பத்து

தேவிமாராவார்

பகவான் பிராட்டியாரோடு இருந்துகொண்டு திருவறன்விளையில் திருவாய்மொழி கேட்க விரும்புகிறான். அங்குச் சென்று திருவாய்மொழி பாடுவதோடு மற்றும் பல கைங்கர்யங்களையும் செய்யவேண்டும் என்று ஆழ்வார் பாரித்தார். ஆனால், அது நடைபெறவில்லை.

'பெருமானே c அடியார்களுக்கு வசப்பட்டவன் ஸர்வ சக்தன் எல்லாப் பொருள்களும் c இட்ட வழக்கு. அப்படி இருந்தும் c கட்டளை இட்டும் இது ஏன் நடைபெறவில்லை?' என்று ஆழ்வார் சந்தேகம் கொண்டு சிந்திக்கிறார்.

'ஆழ்வீர் உமக்கு எவ்வளவோ செய்திருக்கிறேன், தக்க நேரத்தில் இன்னும் பல நன்மைகளைச் செய்வேன்' என்று பகவான் ஆழ்வாரைத் தேற்றினான். ஆழ்வாரும் ஒருவாறு தேறிப் பாடுகிறார் இங்கு.

ஆழ்வார் தம் சந்தேகம் தெளிதல்

3447. தேவிமா ராவார் திருமகள் பூமி

யேவமற் றமரராட் செய்வார்,

மேவிய வுலகம் மூன்றவை யாட்சி

வேண்டுவேண் டுருவம்நின் னுருவம்,

பாவியேன் றன்னை யடுகின்ற கமலக்

கண்ணதோர் பவளவாய் மணியே,

ஆவியே!அமுதே!அலைகடல் கடைந்த

அப்பனே காணுமா றருளாய்.

கண்ணா!நின் பெயரையே நான் பிதற்ற அருள்

3448. 'காணுமா றருளாய்' என்றென்றே கலங்கிக்

கண்ணநீர் அலமர, வினையேன்

பேணுமா றெல்லாம் பேணிநின் பெயரே

பிதற்றுமா றருளெனக் கந்தோ,

காணுமா றருளாய் காகுத்தா!கண்ணா!

தொண்டனேன் கற்பகக் கனியே,

பேணுவார் அமுதே!பெரியதண் புனல்சூழ்

பெருநிலம் எடுத்தபே ராளா!

நரசிம்மா எங்களுக்குக் காட்சி தா

3449. எடுத்தபே ராளன் நந்தகோ பன்றன்

இன்னுயிர்ச் சிறுவனே, அசோதைக்

கடுத்தபே ரின்பக் குலவிளங் களிறே!

அடியனேன் பெரியவம் மானே,

கடுத்தபோர் அவுணன் உடலிரு பிளவாக்

கையுகி ராண்டவெங் கடலே,

அடுத்ததோர் உருவாய் இன்றுநீ வாராய்

எங்ஙனம் தேறுவர் உமரே?

அமுதே நின் மாயை எனக்குப் புரியவில்லையே

3450. உமருகந் துகந்த வுருவம்நின் னுருவம்

ஆகியுன் றனக்கன்ப ரானார்

அவர்,உகந் தமர்ந்த செய் செய்கையுன் மாயை

அறிவொன்றும் சங்கிப்பன் வினையேன்,

அமரது பண்ணி அகலிடம் புடைசூழ்

அடுபடை அவித்தஅம் மானே,

அமரர்தம் அமுதே!அசுரர்கள் நஞ்சே!

என்னுடை ஆருயி ரேயோ!

தேவதேவா!எங்கு வந்து உன்னைப் பெறுவேன்!

3451. ஆருயி ரேயோ அகலிடம் முழுதும்

படைத்திடந் துண்டுமிழ்ந் தளந்த,

பேருயி ரேயோ!பெரியநீர் படைத்தங்

குறைந்தது கடைந்தடைத் துடைத்த,

சீரிய ரேயோ!மனிசர்க்குத் தேவர்

போலத்தே வர்க்கும்தே வாவோ.

ஒருயி ரேயோ!உலகங்கட் கெல்லாம்

உன்னைநான் எங்குவந் துறுகோ?

எல்லாமான பரமனை எப்படி அடைவேன்?

3452. எங்குவந் துறுகோ என்னையாள் வானே!

ஏழுல கங்களும் நீயே,

அங்கவர்க் கமைத்த தெய்வமும் நீயே

அவற்றவை கருமமும் நீயே,

பொங்கிய புறம்பால் பொருளுள வேலும்

அவையுமோ நீயின்னே யானால்,

மங்கிய அருவாம் நேர்ப்பமும் நீயே

வான்புலன் இறந்ததும் நீயே

அப்பனே!என் சந்தேகம் தெளியவில்லையே!

3453. இறந்ததும் நீயே எதிர்ந்ததும் நீயே

நிகழ்வதோ நீயின்னே யானால்,

சிறந்தநின் தன்மை யதுவிது வுதுவென்

றறிவொன்றம் சங்கிப்பன் வினையேன்,

கறந்தபால் நெய்யே!நெய்யினின் சுவையே!

கடலினுள் அமுதமே, அமுதில்

பிறந்தவின் சுவையே!சுவையது பயனே!

பின்னைதோள் மணந்தபே ராயா!

பள்ளிக்கொண்டானே!நின்னை வணங்குமாறு அறியேன்

3454. மணந்தபே ராயா!மாயத்தால் முழுதும்

வல்வினை யேனையீர் கின்ற,

குணங்களை யுடையாய்!அசுரர்வன் கையர்

கூற்றமே!கொடியுபுள் ளுயர்த்தாய்,

பணங்களா யிரமும் உடையபைந் நாகப்

பள்ளியாய் பாற்கடல் சேர்ப்பா,

வணங்குமா றறியேன் மனமும்வா சகமும்

செய்கையும் யானும்நீ தானே.

அப்பனே!நின் தாள்களை எனக்கருள்

3455. யானும்நீ தானே யாவதோ மெய்யே

அருநர சுவையும் யானால்,

வானுய ரின்பம் எய்திலென் மற்றை

நரகமே யெய்திலென்? எனிலும்,

யானும்நீ தானாய்த் தெளிதொறும் நன்றும்

அஞ்சுவன் நரகம்நா னடைதல்,

வானுய ரின்பம் மன்னிவீற் றிருந்தாய்!

அருளுநின் தாள்களை யெனக்கே.

நின் அருளுக்குபூ பதிலுதவியாக என் உயிரைத் தருவன்

3456. தாள்களை யெனக்கே தலைத்தலை சிறப்பத்

தந்தபே ருதவிக்கைம் மாறா,

தோள்களை யாரத் தழுவிதென் னுயிரை

அறவிலை செய்தனன் சோதீ,

தோள்களா யிரத்தாய்!முடிகளா யிரத்தாய்!

துணைமலர்க் கண்களா யிரத்தாய்,

தாள்களா யிரத்தாய்!பேர்களா யிரத்தாய்!

தமியனேன் பெரிய அப்பனே!

இவற்றைப் படியுங்கள் உய்யலாம்

3457. பெரிய அப்பனைப் பிரமன் அப்பனை

உருத்திரன் அப்பனை, முனிவர்க்

குரிய அப்பனை அமரர் அப்பனை

உலகுக்கோர் தனியப்பன் றன்னை,

பெரியவண் குருகூர் வண்சட கோபன்

பேணின ஆயிரத் துள்ளும்

உரியசொல் மாலை இவையும்பத் திவற்றால்

உய்யலாம் தொண்டீர்!நங் கட்கே.

நேரிசை வெண்பா

உலகீர் மாறனையே சேரப் பொறாமையால்,

மேவுமடி யார்வசனாம் மெய்ந்நிலையும், - யாவையுந்தான்

ஆம்நிலையுஞ் சங்கித் தவைதெளிந்த மாறன்பால்,

மாநிலத்தீர்!நங்கள் மனம்.

Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is இன்பம் பயக்க
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is  நங்கள் வரிவளை
Next
htmltitle
UPDATE on 13 July 2017:

Thanks to the devotees at dheivathinkural.wordpress.com, many corrections have been incorporated on these pages. If you find an error, please help us by reporting it