Page load depends on your network speed. Thank you for your patience. You may also report the error.

Loading...

வெள்ளைச் சுரிசங்கு

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

திருவாய்மொழி

ஏழாம் பத்து

வெள்ளைச் சுரிசங்கு

தாய், முன்பு அரங்கனின் பண்புகளையும், வடிவழகையும் கூறினாள். பராங்குசநாயகி தாயின் வார்த்தைகளைக் கேட்டுத் தரித்திருந்தபின் 'அவனை (எம்பெருமானை) அடைந்தே தீர்வேன்'என்று கூறுகிறாள். தென்திருப்பேரெயில்

என்பது ஒரு திவ்ய தேசம். அங்கு இருக்கும் பெருமாள் மகர நெடுங்குழைக்காதர். மகள் (பராங்குசநாயகி) அவரிடம் செல்லப் புறப்படுகிறாள். தாயும் தோழியரும் தடுத்து, 'இதனால் பழி உண்டாகும்'என்கின்றனர். அப்படியானால், 'நீங்களே அவனிடம் என்னைக் கொண்டு சேருங்கள்'என்று கூறித் தன் துணிவை உரைப்பதாக ஈண்டுப் பாடல்கள் அமைந்துள்ளன.

யாவரும் தடுத்தும் தலைவி தலைவனைச் சேரத் துணிதல்

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

நான் திருப்போரைச் சேர்வேன்

3359. வெள்ளைச் சரிசங்கொ டாழி யேந்தித்

தாமரைக் கண்ணனென் னெஞ்சி னூடே,

புள்ளைக் கடாகின்ற வாற்றைக் காணீர்

என்சொல்லிச் சொல்லுகேன் அன்னை மீர்காள்,

வெள்ளச் சகமவன் வீற்றி ருந்த

வேத வொலியும் விழா வொலியும்,

பிள்ளைக் குழாவிளை யாட்டொலி யும்அறாத்

திருப்பே ரையில் சேர்வன் நானே. 1

என் மனம் கண்ணன் செங்கனிவாயின் திறத்தது

3360. நானக் கருங்குழல் தோழி மீர்காள்!

அன்னையர் காள்!அயற் சேரியீர்காள்,

நானித் தனிநெஞ்சம் காக்க மாட்டேன்

என்வசம் அன்றிதி ராப்ப கல்போய்,

தேன்மொய்த்த பூம்பொழில் தண்ப ணைசூழ்

தென்திருப் பேரையில் வீற்றி ருந்த,

வானப்பி ரான்மணி வண்ணன் கண்ணன்

செங்கனி வாயின் திறத்த துவ்வே. 2

தோழீ!என் மனம் நாணும் நிறையும் இழந்தது

3361. செங்கனி வாயின் திறத்த தாயும்

செஞ்சுடர் நீண்முடித் தாழ்ந்த தாயும்,

சங்கொடு சக்கரம் கண்டு கந்தும்

தாமரைக் கண்களுக் கற்றுத் தீர்ந்தும்,

திங்களும் நாளும் விழாவ றாத

தென்திருப் பேரையில் வீற்றி ருந்த,

நங்கள் பிரானுக்கென் னெஞ்சம் தோழீ!

நாணும் நிறையு மிழந்த துவ்வே. 3

அன்னைமீர்!என்மீது சினம் எதற்கு?

3362. இழந்தவெம் மாமை திறத்துப் போன

என்னெஞ்சி னாருமங் கேஒ ழிந்தார்,

உழந்தினி யாரைக்கொண் டென்உ சாகோ?

ஓதக் கடலொலி போல எங்கும்,

எழுந்தநல் வேதத் தொலிநின் றோங்கு

தென்திருப் பேரையில் வீற்றி ருந்த,

முழங்குசங் கக்கையன் மாயத் தாழ்ந்தேன்

அன்னையர் காள்!என்னை யென்மு னிந்தே? 4

அன்னைமீர்!திருப்பேர் நகரை எனக்குக் காட்டுங்கள்

3363. முனிந்து சகடம் உதைத்து மாயப்

பேய்முலை யுண்டு மருதி டைப்போய்,

கனிந்த விளவுக்குக் கன்றெ றிந்த

கண்ண பிரானுக்கென் பெண்மை தோற்றேன்,

முனிந்தினி யென்செய்தீர் அன்னை மீர்காள்!

முன்னி யவன்வந்து வீற்றி ருந்த,

கனிந்த பொழில்திருப் பேரை யிற்கே

காலம் பெறவென்னைக் காட்டு மின்னே. 5

திருப்பேர் நகர்க்கு என்னை உடனே அழைத்துச் செல்லுங்கள்

3364. காலம் பெறவென்னைக் காட்டு மின்கள்

காதல் கடலின் மிகப் பெரிதால்,

நீல முகில்வண் ணத்தெம் பெருமான்

நிற்குமுன் னேவந்தென் கைக்கும் எய்தான்,

ஞாலத் தவன்வந்து வீற்றி ருந்த

நான்மறை யாளரும் வேள்வி யோவா,

கோலச் செந்நெற்கள் கவரி வீசும்

கூடு புனல்திருப் பேரை யிற்கே. 6

தோழீ!என் நெஞ்சம் கண்டதுவே கண்டேன்

3365. பேரெயில் சூழ்கடல் தென்னி லங்கை

செற்ற பிரான்வந்து வீற்றி ருந்த,

பேரையிற் கேபுக்கென் னெஞ்சம் நாடிப்

பேர்த்து வரவெங்கும் காண மாட்டேன்,

ஆரை யினியிங் குடையம் தோழி!

என்னெஞ்சம் கூவவல் லாரு மில்லை,

ஆரை யினிக்கொண்டென் சாதிக் கின்றது?

என்னெஞ்சம் கண்டது வேகண் டேனே. 7

தோழீ!திருப்பேரெயில் சென்று சேர்வேன்

3366. கண்டது வேகொண்டெல் லாருங் கூடிக்

கார்க்கடல் வண்ணனோ டென்தி றத்துக்

கொண்டு,அலர் தூற்றிற் றதுமுத லாக்

கொண்டவென் காத லுரைக்கில் தோழீ,

மண்டிணி ஞால மும்ஏழ் கடலும்

நீள்வி சும்பும் கழியப் பெரிதால்,

தெண்டிரை சூழ்ந்தவன் வீற்றி ருந்த

தென் திருப் பேரையில் சேர்வன் சென்றே. 8

என்னைத் தேற்றாதீர்கள்!திருப்பேரைதான் சேர்வேன்

3367. சேர்வன்சென் றென்னுடைத் தோழி மீர்காள்!

அன்னையர் காள்!என்னைத் தேற்ற வேண்டா,

நீர்கள் உரைக்கின்ற தென்னி தற்கு?

நெஞ்சும் நிறைவும் எனக்கிங் கில்லை,

கார்வண்ணன் கார்க்கடல் ஞால முண்ட

கண்ண பிரான்வந்து வீற்றி ருந்த,

ஏர்வள வொண்கழ னிப்பழ னத்துத்

தென்திருப் பேரை யின்மா நகரே. 9

திருப்பேரையான் என் மனத்தைக் கவர்ந்து விட்டான்

3368. நகரமும் நாடும் பிறவும் தேர்வேன்

நாணெனக் கில்லையென் தோழி மீர்காள்,

சிகரம் அணிநெடு மாடம் நீடு

தென்திருப் பேரையில் வீற்றி ருந்த,

மகர நெடுங்குழைக் காதன் மாயன்

நூற்றுவ ரையன்று மங்க நூற்ற,

நிகரில் முகில்வண்ணன் நேமி யானென்

னெஞ்சம் கவர்ந்தெனை யூழி யானே? 10

இவற்றைப் படித்தால் திருமாலின் அடிமையாகலாம்

3369. ஊழிதோ றூழி யுருவும் பேரும்

செய்கையும் வேறவன் வையங் காக்கும்,

ஆழிநீர் வண்ணனை யச்சு தன்னை

அணிகுரு கூர்ச்சட கோபன் சொன்ன,

கேழிலந் தாதியோ ராயி ரத்துள்

இவைதிருப் பேரையில் மேய பத்தும்,

ஆழியங் கையனை யேத்த வல்லார்

அவரடி மைத்திறத் தாழி யாரே. 11

நேரிசை வெண்பா

மாறன் பாடல்களைப் படித்தால் பக்தராகலாம்

வெள்ளியநா மங்கேட்டு விட்டகன்ற பின்மோகம்,

தெள்ளியமால் தென்றிருப்பேர் சென்றுபுக,- உள்ளமங்கே

பற்றிநின்ற தன்மை பகருஞ் சடகோபற்கு,

அற்றவர்கள் தாமாழி யார். (63)

Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is கங்குலும் பகலும்
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is  ஆழியெழ
Next
htmltitle
UPDATE on 13 July 2017:

Thanks to the devotees at dheivathinkural.wordpress.com, many corrections have been incorporated on these pages. If you find an error, please help us by reporting it