Page load depends on your network speed. Thank you for your patience. You may also report the error.

Loading...

உண்ணுஞ்சோறு

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

திருவாய்மொழி

ஆறாம் பத்து

உண்ணுஞ்சோறு

இதுவும் தாய் சொல்லும் பகுதியே. பராங்குசநாயகியாகிய தம் மகளோடு தாய் படுத்திருக்கிறாள்;உறங்கிவிடுகிறாள்;சிறிது நேரத்தில் கண் திறந்து பார்க்கும்போது படுக்கையில் பெண் காணவில்லை. தேடுகிறாள்;கிடைக்கவில்லை. எவரேனும் கவர்ந்து சென்றனரோ என்று சிந்திக்கிறாள்;பிறகு 'இவளுக்குத் திருக்கோளூர் எம்பெருமான்மீது ஆசை மிகுதி!அங்குதான் சென்றிருப்பாள்'என்று அறுதியிட்டுக் கூறுகிறாள்.

திருக்கோளூர் மதுரகவிகள் அவதரித்த இடமாகும்.

தலைவனது ஊர் நோக்கிச் சென்ற மகளைப் பற்றி தாய் இரங்குதல்

கலி நிலைத்துறை

என் மகள் திருக்கோளூர்தான் சென்றிருப்பாள்

3293. உண்ணுஞ் சோறு பருகுநீர்

தின்னும்வெற் றிலையுமெல்லாம்

கண்ணன், எம்பெருமா னென்றென்

றேகண்கள் நீர்மல்கி,

மண்ணினுள் அவன்சீர் வளம்மிக்

கவனூர் வினவி,

திண்ண மென்னிள மான்புகு

மூர்திருக் கோளூரே. 1

தலைவி திருக்கோளூர்க்குப் போயிருப்பாளோ?

3294. ஊரும் நாடும் உலகமும்

தன்னைப்போல், அவனுடைய

பேரும் தார்களு மேபிதற்றக்

கற்பு வானிடறி,

சேருநல் வளஞ்சேர் பழனத்

திருகோ ளூர்க்கே,

போருங் கொலுரை யீர்கொடி

யேன்கொடி பூவைகளே! 2

திருக்கோளூரில் என் மகள் என்ன செய்வாள்?

3295. பூவை பைங்கிளிகள் பந்து

தூதைபூம் புட்டில்கள்,

யாவையும் திருமால் திருநாமங்

களேகூவி யெழும்,என்

பாவை போயினித் தண்பழனத்

திருக்கோ ளூர்க்கே,

கோவைவாய் துடிப்ப மழைக்கண்ணொ

டென்செய் யுங்கொலோ? 3

திருக்கோளூர்க்கா என் மகள் செல்ல விரும்பினாள்?

3296. கொல்லை யென்பர்கொ லோகுணம்

மிக்கனள் என்பர்கொலோ,

சிலலை வாய்ப்பெண் டுகளயற்

சேரியுள் ளாருமெல்லே,

செல்வம் மல்கி யவன்கிடந்த

திருக்கோ ளூர்க்கே,

மெல்லிடை நுடங்க இளமான்

செல்ல மேவினளே. 4

திருக்கோளூரை என் மகள் எப்படி ரசிக்கின்றாளோ?

3297. மேவி நைந்து நைந்துவிளை

யாடலுறா ளென்சிறுத்

தேவிபோய், இனித்தன்

திருமால் திருக்கோ ளூரில்,

பூவியல் பொழிலும் தடமும்

அவன்கோ யிலுங்கண்டு,

ஆவியுள் குளிர எங்ஙனே

யுகக்குங்கொல் இன்றே? 5

என் மகள் திருக்கோளூரானைக் கண்டு நைவாள்

3298. இன்றெனக் குதவா தகன்ற

இளமான் இனிப்போய்,

தென்திசைத் திலத மனைய

திருக்கோ ளூர்க்கே

சென்று,தன் திருமால் திருக்கண்ணும்

செவ்வாயும் கண்டு,

நின்று நின்று நையும்

நெடுங்கண்கள் பனிமல்கவே. 6

திருக்கோளூர்க்கு என் மகள் எப்படி நடந்திருப்பாள்?

3299. மல்குநீர் கண்ணொடு மைய

லுற்ற மனத்தனளாய்,

அல்லுநன் பகலும் நெடுமா

லென்றழைத் தினிப்போய்,

செல்வம் மல்கி அவன்கிடந்த

திருக்கோ ளூர்க்கே,

ஒல்கி யல்கி நடந்தெங்ஙனே

புகுங்கொ லொசிந்தே? 7

என் மகள் கண்ணீர் துளும்பச் செல்வாளோ?

3300. ஒசிந்த நுண்ணிடை மேல்கையை

வைத்து நொந்துநொந்து,

கசிந்த நெஞ்சின ளாய்க்கண்ண

நீள்துளும்பச் செல்லுங்கொல்,

ஒசிந்த வொண்மல ராள்கொழுநன்

திருக்கோ ளூர்க்கே,

கசிந்த நெஞ்சின ளாயெம்மை

நீத்தஎம் காரிகையே? 8

என் மகள் எம்மை நினையாமல் சென்றுவிட்டாளே!

3301. காரியம் நல்லன களவை காணிலென்

கண்ணனுக்கென்று,

ஈரியா யிருப்பாளி தெல்லாம்

கிடக்க இனிப்போய்,

சேரி பல்பழி தூயிரைப்பத்

திருக்கோ ளூர்க்கே,

நேரிழை நடந்தா ளெம்மை

யன்றும் நினைத்திலளே. 9

பழி வருதலை நினையாமல் என் மகள் போய்விட்டாளே!

3302. நினைக்கிலேன் தெய்வங்காள் நெடுங்கண்

இளமான் இனிப்போய்,

அனைத்து லகுமு டைய

அரவிந்த லோசனனை,

தினைத்தனை யும்விடா ளவன்சேர்

திருக்கோ ளூர்க்கே,

மனைக்கு வான்வான்பழியும் நினையாள்

செல்ல வைத்தவனளே. 10

இவற்றைப் படித்தோர் பொன்னுலகையாள்வர்

3303. வைத்த மாநிதி யாம்மது

சூதனை யேயலற்றி,

கொத்த லர்பொழில் சூழ்குரு

கூர்ச்சட கோபன்சொன்ன,

பத்து நூற்று ளிப்பத்

தவன்சேர் திருக்கோளூர்க்கே,

சித்தம் வைத்து ரைப்பார்

திகழ்பொன் னுலகாள்வாரே. 11

நேரிசை வெண்பா

மாறன் திருவடி நமக்குப் பொன்னாகும்

'உண்ணுஞ்சோ றாதி யருமூன்றும் எம்பெருமான்

கண்ணன்'என்றே நீர்மல்கிக் கண்ணிணைகள், - மண்ணுலகில்

மன்னுதிருக் கோளூரில் மாயன்பாற் போமாறன்,

பொன்னடியே நந்தமக்குப் பொன். (57)

Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is மாலுக்கு
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is  பொன்னுலகு
Next
htmltitle
UPDATE on 13 July 2017:

Thanks to the devotees at dheivathinkural.wordpress.com, many corrections have been incorporated on these pages. If you find an error, please help us by reporting it