Page load depends on your network speed. Thank you for your patience. You may also report the error.

Loading...

துவனில்

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

திருவாய்மொழி

ஆறாம் பத்து

துவனில்

தொலைவில்லிமங்கலம் என்பது ஒரு திவ்ய தேசம். இதனை இரட்டைத் திருப்பதி என்று கூறுவார்கள். இது ஆழ்வார் திருநகரியைச் சேர்ந்த நவ (ஒன்பது) திருப்பதிகளுள் ஒன்று. இப்பெருமான்மீது ஆழ்வாராகிய நாயகி கொண்டிருந்த காதன்மையைத் தோழி தாயர்க்கு உரைத்தல்போல் ஈண்டுப் பாடல்கள் அமைந்துள்ளன.

தோழி தாயர்க்குக் கூறுதல்

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

அன்னைமீர்!தலைவியை அவள் போக்கில் விட்டுவிடுங்கள்

3271. துவளில் மாமணி மாட மோங்கு

தொலைவில் லிமங்க லம்தொழும்

இவளை, cKQ யன்னை மீர்!உமக்

காசை யில்லை விடுமினோ,

தவள வொண்சங்கு சக்க ரமென்றும்

தாம ரைத்தடங் கணென்றும்,

குவளை யண்மலர்க் கண்கள் நீர்மல்க

நின்று நின்று குமுறுமே. 1

தேவபிரான் பெயரைச் சொல்லி இவள் கரைகின்றாள்

3272. குமுறு மோசை விழவொ லித்தொலை

வில்லி மங்கலம் கொண்டுபுக்கு,

அமுத மென்மொழி யாளை நீருமக்

காசை யின்றி அகற்றினீர்,

திமிர்கொண் டாலொத்து நிற்கும் மற்றிவள்

தேவ தேவபி ரானென்றே,

நிமியும் வாயடு கண்கள் நீர்மல்க

நெக்கொ சிந்து கரையுமே. 2

கண்ணன் செயல் கூறி இவள் கண்ணீர் சிந்துகிறாள்

3273. கரைகொள் பைம்பொழில் தண்ப ணைத்தொலை

வில்லி மங்கலம் கொண்டுபுக்கு,

உரைகொ ளின்மொழி யாளை நீருமக்

காசை யின்றி அகற்றினீர்,

திரைகொள் பௌவத்துச் சேர்ந்த தும்திசை

ஞாலம் தாவி யளந்ததும்,

நிரைகள் மேய்த்தது மேபி தற்றி

நெடுங்கண் ணீர்மல்க நிற்குமே. 3

கண்ணன் பெயர் கூறி இவள் மகிழ்கிறாள்

3274. நிற்கும் நான்மறை வாணர் வாழ்தொலை

வில்லி மங்கலங் கண்டபின்,

அற்க மொன்றும் அறிவு றாள்மலிந்

தாள்கண் டீரிவள் அன்னைமீர்,

கற்கும் கல்வியெல் லாம்க ருங்கடல்

வண்ணன் கண்ணபி ரானென்றே,

ஒற்க மொன்றுமி லள்உ கந்துகந்

துள்ம கிழ்ந்து குழையுமே. 4

தொலைவில்லிமங்கலம் நோக்கி இவள் தொழுகிறாள்

3275. குழையும் வாள்முகத் தேழை யைத்தொலை

வில்லி மங்கலம் கொண்டுபுக்கு,

இழைகொள் சோதிச்செந் தாம ரைக்கட்

பிரானி ருந்தமை காட்டினீர்,

மழைபெய் தாலொக்கும் கண்ண நீரினொ

டன்று தொட்டும்மை யாந்து,இவள்

நுழையும் சிந்தையள் அன்னை மீர்!தொழும்

அத்தி சையுற்று நோக்கியே. 5

இவள் மணிவண்ணன் பெயர்களையே சொல்கிறாள்

3276. நோக்கும் பக்கமெல் லாம்க ரும்பொடு

செந்நெ லோங்குசெந் தாமரை,

வாய்க்கும் தண்பொரு நல்வ டகரை

வண்தொ லைவில்லி மங்கலம்,

நோக்கு மேல்அத் திசையல் லால்மறு

நோக்கி லள்வைகல் நாடொறும்,

வாய்க்கொள் வாசக மும்ம ணிவண்ணன்

நாம மேயிவள் அன்னைமீர்! 6

தொலைவில்லிமங்கலம் பற்றியே கேட்க விரும்புகிறாள் இவள்

3277. அன்னை மீர்!அணி மாம யில்சிறு

மானி வள்நம்மைக் கைவலிந்து,

என்ன வார்த்தையும் கேட்கு றாள்தொலை

வில்லி மங்கலம் என்றல்லால்,

முன்னம் நோற்ற விதிகொ லோமுகில்

வண்ணன் மாயங்கொ லோ,அவன்

சின்ன மும்திரு நாம முமிவள்

வாய னகள்தி ருந்தவே. 7

அரவிந்தலோசனா என்று கூறி இவள் இரங்குகிறாள்

3278. திருந்து வேதமும் வேள்வி யும்திரு

மாம களிரும் தாம்,மலிந்

திருந்து வாழ்பொரு நல்வ டகரை

வண்தொ லைவில்லி மங்கலம்,

கருந்த டங்கண்ணி கைதொ ழுதஅந்

நாள்தொ டங்கியிந் நாடொறும்,

இருந்தி ருந்'தர விந்த லோசன!'

என்றென் றேநைந்தி ரங்கமே. 8

மணிவண்ணா என்று இவள் கூவுகிறாள்

3279. இரங்கி நாடொறும் வாய்வெ ரீஇயிவள்

கண்ண நீர்கள் அலமர,

மரங்க ளுமிரங் கும்வ கை'மணி

வண்ண வோ!'என்று கூவுமால்,

துரங்கம் வாய்பிளந் தானு றைதொலை

வில்லி மங்கல மென்று,தன்

கரங்கள் கூப்பித் தொழுமவ் வூர்த்திரு

நாமங் கற்றதற் பின்னையே. 9

தொலைவில்லிமங்கலத்தைத் தலையால் வணங்குகிறாள் இவள்

3280. பின்னை கொல்நில மாம கள்கொல்

திரும கள்கொல் பிறந்திட்டாள்,

என்ன மாயங்கொ லோஇ வள்நெடு

மாலென் றேநின்று கூவுமால்,

முன்னி வந்தவன் நின்றி ருந்துறை

யும்தொ லைவில்லி மங்கலம்

சென்னி யால்வணங் கும்அவ் வூர்த்திரு

நாமம் கேட்பது சிந்தையே. 10

இவற்றைப் படித்தோர் திருமாலின் அடிமையாவர்

3281. சிந்தை யாலும்சொல் லாலும் செய்கையி

னாலும் தேவ பிரானையே,

தந்தை தாயென் றடைந்த வண்குரு

கூர வர்சட கோபன்சொல்,

முந்தை யாயிரத் துள்ளி வைதொலை

வில்லி மங்கலத் தைச்சொன்ன,

செந்த மிழ்பத்தும் வல்ல வரடி

மைசெய் வார்திரு மாலுக்கே. 11

நேரிசை வெண்பா

திருமாலின் சீலமெல்லாம் சொன்னவன் மாறன்

துவளறுசீர் மால்திறத்துத் தொன்னலத்தால், நாளும்

துவளறுதன் சீலமெல்லாஞ் சொன்னான், - துவளறவே

முன்னம் அனுபவத்தில் மூழ்கிநின்ற மாறனதில்,

மன்னுமுவப் பால்வந்த மால். (55)

Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is குரவையாய்ச்சியர்
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is  மாலுக்கு
Next
htmltitle
UPDATE on 13 July 2017:

Thanks to the devotees at dheivathinkural.wordpress.com, many corrections have been incorporated on these pages. If you find an error, please help us by reporting it