Page load depends on your network speed. Thank you for your patience. You may also report the error.

Loading...

குரவையாய்ச்சியர்

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

திருவாய்மொழி

ஆறாம் பத்து

குரவையாய்ச்சியர்

எம்பெருமானின் அற்புதச் செயல்களில் ஈடுபட்ட ஆழ்வார், அவற்றை அநுபவிக்கமுடியவில்லையே என்று 'பிறந்தவாறும்'என்ற திருவாய்மொழியில் மனம் தளர்ந்து பேசினார். எம்பெருமானின் செயல்களை அநுபவித்து அதனால் தமக்குண்டான பெருமிதத்தை ஈண்டு வெளியிடுகிறார்.

கிருஷ்ணனின் லீலைகளைப் பேசக் கிடைத்தமைக்கு மகிழ்தல்

அறுசீர் ஆசிரிய விருத்தம்

கண்ணனின் லீலைகளைப் பேசி நிறைவு பெற்றேன்

3260. குரவை யாய்ச்சிய ரோடு கோத்ததும்

குன்றமொன் றேந்தியதும்

உரவுநீர்ப் பொய்கை நாகம் காய்ந்ததும்

உட்பட மற்றும்பல,

அரவில் பள்ளிப் பிரான்தன் மாய

வினைகளை யேயலற்றி,

இரவும் நன்பக லும்த விர்கிலம்

என்ன குறைவெமக்கே? 1

கிருஷ்ணலீலை பேசும் எனக்கு எதுவும் நிகர் இல்லை

3261. கேயத் தீங்குழ லூதிற்றும் நிரைமேய்த்த

தும்,கெண்டை யண்கண்

வாசப் பூங்குழல் பின்னை தோள்கள்

மணந்ததும் மற்றும்பல,

மாயக் கோலப் பிரான்றன் செய்கை

நினைந்து மனம்குழைந்து,

நேயத் தோடு கழிந்த போதெனக்

கெவ்வுல கம்நிகரே? 2

கண்ணனின் லீலைகள் நினைக்கும் எனக்குத் துன்பமேயில்லை

3262. நிகரில் மல்லரைச் செற்ற தும்நிரை

மேய்த்தும் நீணெடுங்கைச்,

சிகர மாகளி றட்டதும் இவைபோல்

வனவும் பிறவும்,

புகர்கொள் சோதிப் பிரான்றன் செய்கை

நினைந்து புலம்பி,என்றும்

நுகர வைகல் வைகப்பெற் றேனெனக்

கென்இனி நோவதுவே? 3

கண்ணன் புகழ் பேசும் எனக்கு எதுவும் வேண்டாம்

3263. நோவ ஆய்ச்சி யுரலோ டார்க்க

இரங்கிற்றும் வஞ்சப்பெண்ணைச்,

சாவப் பாலுண் டதும்ஊர் சகடம்

இறச்சா டியதும்,

தேவக் கோலப் பிரான்றன் செய்கை

நினைந்து மனம்குழைந்து,

மேவக் காலங்கள் கூடி னேன்எனக்

கென்இனி வேண்டுவதே? 4

கண்ணனை புகழும் என் வலிமைதான் என்னே!

3264. வேண்டித் தேவ ரிரக்க வந்து

பிறந்ததும் வீங்கிருள்வாய்,

பூண்டன் றன்னை புலம்பப் போயங்கோர்

ஆய்க்குலம் புக்கதும்,

காண்ட லின்றி வளர்ந்து கஞ்சனைத்

துஞ்சவஞ் சம்செய்ததும்,

ஈண்டு நான்அலற் றப்பெற் றேன்எனக்

கென்ன இகலுளதே? 5

கண்ணன் மாயங்களைத் துதித்தேன்:துக்கமே இல்லை

3265. இகல்கொள் புள்ளைப் பிளந்த தும்இமில்

ஏறுகள் செற்றதுவும்,

உயர்கொள் சோலைக் குருந்தொ சித்ததும்

உட்பட மற்றும்பல,

அகல்கொள் வையம் அளந்த மாயனென்

அப்பன்றன் மாயங்களே,

பகலிராப் பரவப் பெற்றேன் எனக்கென்ன

மனப்ப ரிப்பே? 6

கண்ணனின் மாயங்களை நினைக்கும் எனக்கு நிகர் யார்?

3266. மனப்பரிப் போட ழுக்கு மானிட

சாதியில் தான்பிறந்து,

தனக்கு வேண்டுருக் கொண்டு தான்றன

சீற்றத்தினை முடிக்கும்,

புனத்து ழாய்முடி மாலை மார்பனென்

அப்பன்றன் மாயங்களே,

நினைக்கும் நெஞ்சுடை யேனெ னக்கினி

யார்நிகர் நீணிலத்தே? 7

கண்ணனின் லீலைகளைப் பேசும் எனக்குக் கலக்கமேயில்லை!

3267. நீணிலத் தொடுவான் வியப்ப நிறைபெரும்

போர்கள் செய்து,

வாண னாயிரம் தோள்து ணித்ததும்

உட்பட மற்றும்பல,

மாணி யாய்நிலம் கொண்ட மாயனென்

அப்பன்றன் மாயங்களே,

காணும் நெஞ்சுடை யேனெனக் கினியென

கலக்க முண்டே? 8

கண்ணனைப் புகழும் எனக்குப் பகையேயில்லை

3268. கலக்க வேழ்கட லேழ்மலை யுலகே

ழும்கழி யக்கடாய்,

உலக்கத் தேர்கொடு சென்ற மாயமும்

உட்பட மற்றும்பல,

வலக்கை யாழி யிடக்கைச் சங்கம்

இவையுடை மால்வண்ணனை,

மலக்குநா வுடையேற்கு மாறுள தோவிம்

மண்ணின் மிசையே? 9

கண்ணனே எனக்கு நாயகர்

3269. மண்மிசைப் பெரும்பாரம் நீங்கவோர்பாரத

மாபெ ரும்போர்,

பண்ணி, மாயங்கள் செய்து சேனையைப்

பாழ்பட நூற்றிட்டுப்போய்,

விண்மி சைத்தன தாம மேபுக

மேவிய சோதிதன்தாள்,

நண்ணி நான்வணங் கப்பெற் றேன்எனக்

கார்பிறர் நாயகரே? 10

இவற்றைப் பாடுக:பக்தர் ஆகலாம்

3270. நாய கன்முழு வேழுல குக்குமாய்

முழுவே ழுலகும்,தன்

வாய கம்புக வைத்துமிழ்ந் தவையாய்

அவையல் லனுமாம்,

கேசவன் அடியிணை மிசைக்குரு கூர்ச்சட

கோபன் சொன்ன

தூய வாயிரத் திப்பத்தால் பத்த

ராவர் துவளின் றியே. 11

நேரிசை வெண்பா

மனமே!மாறனின் பாடல்களில் மயங்கு

'குரவைமுத லாங்கண்ணன் கோலச் செயல்கள்,

இரவுபக லென்னாம லென்றும், - பரவுமனம்

பெற்றேன்!'என் றேகளித்துப் பேசும் பராங்குசன்றன்,

சொற்றேனில் நெஞ்சமே!துவள். (54)

Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is நல்குரவும்
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is  துவனில்
Next
htmltitle
UPDATE on 13 July 2017:

Thanks to the devotees at dheivathinkural.wordpress.com, many corrections have been incorporated on these pages. If you find an error, please help us by reporting it