Page load depends on your network speed. Thank you for your patience. You may also report the error.

Loading...

மின்னிடை மடவார்

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

திருவாய்மொழி

ஆறாம் பத்து

மின்னிடை மடவார்

எம்பெருமானின் பிரிவாற்றமாட்டாமல் ஆழ்வார் புள்ளினங்களைத் தூது விட்டார். ஆழ்வாரின் துன்பத்தை அறிந்த எம்பெருமான், முதலை வாய்பட்ட யானைக்கு அருள வந்தாற்போல் ஓடிவந்து காட்சி தர எண்ணினான். அப்போது ஆழ்வார், 'பெருமானே!இங்கு உமக்குச் செய்யவேண்டுவது ஒன்றுமில்லை;காரியம் உள்ள இடத்திற்குச் செல்லலாம்'என்று ஊடலில் பேசுவதாக அமைந்துள்ளது. தம்மைக் கோபியர் நிலையில் இருத்திப் பாடுகிறார் ஆழ்வார்.

தலைவன் தாமதித்து வரக் கண்ட தலைவி ஊடி உரைத்தல்

ஆசரியத்துறை

நம்பீ!என் பந்தும் கழற்சிக்காயும் தந்துவிட்டுப் போ

3238. மின்னிடை மடவார்கள் நின்னருள் சூடுவார்

முன்புநா னதஞ்சுவன்,

மன்னுடை இலங்கை யரண்காய்ந்த மாயவனே,

உன்னுடைய கண்டாயம் நானறிவ னினியது

கொண்டு செய்வதென்,

என்னுடைய பந்தும் சுழலும் தந்து போகு நம்பீ! 1

கண்ணா!பிற பெண்களிடம் சென்று குழல் ஊது

3239. போகுநம் பீ!உன் தாமரை புரைகண் ணிணையும்

செவ்வாய் முறுவலும்,

ஆகுலங்கள் செய்ய அழிதற்கே நோற்றோ மேயாம்?,

தோகைமா மயிலார்கள் நின்னருள் சூடுவார்

செவியோசை வைத்தெழ,

ஆகள் போகவிட்டுப் குழலூது போயிருந்தே. 2

பெருமானே!உன் பொய்யுரையைப் பிறரிடம் சொல்

3240. போயி ருந்தும்நின் புள்ளுவம் அறியாத

வர்க்குரை நம்பி, நின்செய்ய

வாயிருங் கனியுங் கண்களும் விபரீத மிந்நாள்,

வேயி ருந்தடந் தோளினா ரித்திரு

வருள்பெறு வார்யவர்கொல்

மாயிருங் கடலைக் கடைந்த பெருமானாலே? 3

கண்ணா!கடுஞ்சொல் சொல்லாதே!

3241. ஆலி னீளிலை யேழுலக முண்டன்று நீகிடந்

தாய்,உன் மாயங்கள்

மேலை வானவரு மறியா ரினியெம் பரமே?

வேலி னேர்தடங் கண்ணினார் விளையாடு

சூழலைச் சூழவே நின்று

காலி மேய்க்கவல் லாய்!எம்மைநீ கழறேலே. 4

கண்ணா!எம்பூவையோடும் கிளியோடும் விளையாடாதே

3242. கழறேல் நம்பீ!உன் கைதவம் மண்ணும் விண்ணும்

நன்கறியும், திண்சக்கர

நிழறு தொல்படை யாய்!உனக் கொன்றுணர்த் துவன்நான்,

மழறு தேன்மொழி யார்கள்,நின்னருள்

சூடுவார் மனம் வாடி நிற்க,எம்

குழறு பூவையடும் கிளியோடும் குழகேலே. 5

நம்பீ!அழகிகள் பலர் உளர்:எனவே இங்கு வராதே

3243. குழகி யெங்கள் குழமணன் கொண்டு

கோயின்மை செய்து கன்மமொன் றில்லை,

பழகி யாமிருப் போம்பர மேயித் திருவருள்கள்?,

அழகி யாரில் வுலகுமூன் றுக்கும்

தேவிமை தகுவார் பலருளர்,

கழக மேறேல் நம்பீ!உனக்கும் இளைதே கன்மமே. 6

நெடியாய்!எங்கள் பொம்மைகளைப் பறிக்காதே

3244. கன்மமன் றெங்கள் கையில் பாவை பறிப்பது

கடல்ஞால முண்டிட்ட,

நின்மலா!நெடியாய்!உனக்கேலும் பிழைபிழையே,

வன்மமே சொல்லி யெம்மைநீ விளையாடுதி,

அதுகேட்கில் என்னைமார்,

தன்ம பாவமென னாரொரு நான்று தடிபிணக்கே. 7

மூர்த்தியே!என்னை c வளைத்தால் பிறர் ஏசுவர்

3245. பிணக்கி யாவையும் யாவரும் பிழையாமல்

பேதித்தும் பேதி யாதது,ஓர்

கணக்கில் கீர்த்தி வெள்ளக் கதிர்ஞான மூர்த்தியினாய்,

இணக்கி யெம்மையெந் தோழிமார் 'விளையாடப்

போதுமின்'என்னப் போந்தோமை,

உணக்கி நீவளைத் தாலென்சொல் லாருக வா தவரே? 8

கண்ணா!எங்களைப் பார்த்துப் புன்னகை பூக்கவில்லையே!

3246. உகவையால் நெஞ்சம் உள்ளுருகி

உன்தாமரைத் தடங்கண் விழிகளின்,

அகவலைப் படுப்பான் அழித்தாயுன் திருவடியால்,

தகவு செய்திலை எங்கள் சிற்றிலும் யாமடு

சிறுசோறுங் கண்டு,நின்

முகவொளி திகழ முறுவல் செய்து நின் றிலையே. 9

கண்ணா!உன்னால் எங்களுக்கு எப்பொழுதும் துன்பம்தான்

3247. நின்றிலங்கு முடியினாய்!இருபத் தோர்கால்

அரசு களைகட்ட,

வென்றி நீண்மழுவா!வியன் ஞாலம் முன்படைத்தாய்,

இன்றிவ் வாயர் குலத்தை வீடுய்யத்

தோன்றிய கருமா ணிக்கச்சுடர்,

நின்றன்னால் நலிவே படுவோ மென்றும் ஆய்ச்சி யோமே. 10

இவற்றைப் படித்தால் வறுமையே வராது

3248. ஆய்ச்சி யாகிய அன்னையால் அன்று வெண்ணெய்

வார்த்தையுள், சீற்ற முண்டழு

கூத்த அப்பன் றன்னைக் குருகூர்ச் சடகோபன்,

ஏத்திய தமிழ்மாலை யாயிரத்துள் இவையு

மோர்பத் திசையடும்,

நாத்தன்னால் நவில வுரைப்பார்க் கில்லை நல்குரவே. 11

நேரிசை வெண்பா

மனமே!நாள்தோறும் மாறன் அடிகளைத் தொழு

மின்னிடையார் சேர்கண்ணன் மெத்தெனவந் தானென்று,

தன்னிலைபோய்ப் பெண்ணிலையாய்த் தன்றள்ளி, - 'உன்னுடனே

கூடேன்?'என் றூடுங் குருகையர்கோன் தாள்தொழவே,

நாடோறும் நெஞ்சமே!நல்கு. (52)

Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is வைகல் பூங்கழி
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is  நல்குரவும்
Next
htmltitle
UPDATE on 13 July 2017:

Thanks to the devotees at dheivathinkural.wordpress.com, many corrections have been incorporated on these pages. If you find an error, please help us by reporting it