Page load depends on your network speed. Thank you for your patience. You may also report the error.

Loading...

மானேய் நோக்கு

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

திருவாய்மொழி

ஐந்தாம் பத்து

மானேய் நோக்கு

திருக்குடந்தையிலே தளர்ந்த ஆழ்வார், 'திருவல்ல வாழ்'என்ற மலைநாட்டுத் திருப்பதிக்குச் செல்ல நினைத்தார். ஆனால், அவ்வூருக்குப் போகமுடியாமல் சோலைகளும், தென்றலும், வண்டுகளின் இன்னிசையும், வைதிகச் செயல்களின் ஆரவாரமும் அவரைத் தடுத்துத்துயர் விளைவித்தன. அவற்றால் ஏற்பட்ட நோவினை ஆழ்வார் ஈண்டுப் புலப்படுத்துகிறார். தோழியர்க்கு ஒரு தலைவி கூறும்

கூற்றாக இப்பகுதி அமைந்துள்ளது.

தன்னைத் தடுக்கும் தோழியர்க்குத் தலைவி கூறுதல்

கலி விருத்தம்

திருவல்லவாழ்க் கோமானை நான் கூடுவது என்று?

3205. மானேய் நோக்குநல்லீர்!

வைகலும்வினை யேன்மெலிய,

வானார் வண்கமுகும்

மதுமல்லிகை யுங்கமழும்,

தேனார் சோலைகள்சூழ்

திருவல்ல வாழுறையும்

கோனா ரை,அடியேன்

அடிகூடுவ தென்றுகொலோ? 1

எம்பிரானின் கழலிணையைக் காண்பேனா?

3207. சூடும் மலர்க்குழவீர்!

துயராட்டியே னைமெலிய,

பாடுநல் வேதவொலி

பரவைத்திரை போல்முழங்க,

மாடுயர்ந் தோமப்புகை

கமழும்தண் திருவல்லவாழ்

நீடுறை கின்றபிரான்

கழல்காண்டுங்கொல் நிச்சலுமே? 3

நம்பிரானின் நன்னலம் எனக்குக் கிட்டுமா?

3208. நிச்சலும் தோழிமீர்காள்!

எம்மைநீர்நலிந் தென்செய்திரோ?

பச்சிலை நீள்கமுகும்

பலவும்தெங்கும் வாழைகளும்,

மச்சணி மாடங்கள்மீ

தணவும்தண் திருவல்லவாழ்,

நச்சர வினணைமேல்

நம்பிரானது நன்னலமே. 4

எம்பிரானை என் கண்கள் காணுதல் எந்நாள்?

3209. நன்னலத் தோழிமீர்காள்!

நல்லவந்தணர் வேள்விப்புகை,

மைந்நலங் கொண்டுயர்விண்

மறைக்கும்தண் திருவல்லவாழ்,

கன்னலங் கட்டிதன்னைக்

கனியைபின் னமுதந்தன்னை,

என்னலங் கொள்சுடரை

என்றுகொல்கண்கள் காண்பதுவே? 5

எம்பிரானின் திருவடிகளைக் காணுதல் எந்நாள்?

3210. காண்பதெஞ் ஞான்றுகொலோ

வினையேன்கனி வாய்மடவீர்,

பாண்குரல் வண்டினொடு

பசுந்தென்றலு மாகியெங்கும்,

சேண்சினை யோங்குமரச்

செழுங்கானல் திருவல்லவாழ்,

மாண்குறள் கோலப்பிரான்

மலர்த்தாமரைப் பாதங்களே? 6

நம்பிரானை நாள்தோறும் நான் தொழுவேனோ?

3211. பாதங்கள் மேலணிபூத்

தொழக்கூடுங்கொல் பாவைநல்லீர்,

ஓதநெ டுந்தடத்துள்

உயர்தாமரை செங்கழுநீர்,

மாதர்கள் வாண்முகமும்

கண்ணுமேந்தும் திருவல்லவாழ்,

நாதனிஞ் ஞாலமுண்ட

நம்பிரான்றன்னை நாடொறுமே? 7

தோழிமீர்!பிரானின் திருவடிகளை நான் தொழமுடியுமோ?

3212. நாடொறும் வீடின்றியே

தொழக்கூடுங்கொல் நன்னுதவீர்,

ஆடுறு தீங்கரும்பும்

விளைசெந்நெலு மாகியெங்கும்,

மாடுறு பூந்தடஞ்சேர்

வயல்சூழ்தண் திருவல்லவாழ்,

நீடுறை கின்றபிரான்

நிலந்தாவிய நீள்கழலே? 8

சக்கரப் பெருமான் அருள்பெற்றுத் தொழுவேனோ?

3213. கழல்வளை பூரிப்பயாம்

கண்டுகைதொழக் கூடுங்கொலோ,

குழலென்ன யாழுமென்னக்

குளிர்சோலையுள் தேனருந்தி,

மழலை வரிவண்டுகள்

இசைபாடும் திருவல்லவாழ்,

கழலின் மலிசக்கரப்

பெருமானது தொல்லருளே? 9

நாராயணன் நாமங்களை யான் சொல்வேனோ?

3114. தொல்லருள் நல்வினையால்

சொல்லக்கூடுங்கொல் தோழிமீர்காள்,

தொல்லருள் மண்ணும்விண்ணும்

தொழநின்ற திருநகரம்,

நல்லரு ளாயிரவா

நலனேந்தும் திருவல்லவாழ்,

நல்லருள் நம்பெருமான்

நாராயணன் நாமங்களே? 10

இவற்றைப் படித்தோர் பெருஞ்சிறப்புப் பெறுவர்

3215. நாமங்க ளாயிர

முடையநம்பெரு மானடிமேல்,

சேமங்கொள் தென்குருகூர்ச்

சடகோபன் தெரிந்துரைத்த,

நாமங்க ளாயிரத்துள்

இவைபத்தும் திருவல்லவாழ்,

சேமங்கொள் தென்னகர்மேல்

செப்புவார்சிறந் தார்பிறந்தே. 11

நேரிசை வெண்பா

மாறன் பாடல்களைப் படித்தால் பிறவித் துன்பம் இல்லை

மாநலத்தால் மாறன் றிருவல்ல வாழ்புகப்போய்த்,

தானிளைத்து வீழ்ந்தவ்வூர் தன்னருகில், - மேனலங்கித்

துன்பமுற்றுச் சொன்ன சொலவுகற்பார் தங்களுக்குப்,

பின்பிறக்க வேண்டா பிற. (49)

Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is ஆரா அமுதே
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is  பிறந்தவாறும்
Next
htmltitle
UPDATE on 13 July 2017:

Thanks to the devotees at dheivathinkural.wordpress.com, many corrections have been incorporated on these pages. If you find an error, please help us by reporting it