Page load depends on your network speed. Thank you for your patience. You may also report the error.

Loading...

மாசறு சோதி

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

திருவாய்மொழி

ஐந்தாம் பத்து

மாசறு சோதி

இத்திருவாய்மொழியில் 'மடலூர்வேன்'என்று கூறி, தாம் நினைப்பதை நடத்திக்கொள்ளப் பார்க்கிறார் ஆழ்வார். இப்பகுதி நாயகி நிலையில் அருளிச் செய்யப்பட்டது.

காதல் மிகுதியால் தலைவி மடலூரத் துணிதல்

கலி நிலைத்துறை

தோழீ!ஊரார் பழிச்சொல் என்ன செய்யும்

3139. மாசறு சோதியென் செய்ய

வாய்மணிக் குன்றத்தை,

ஆசறு சீலனை யாதி

மூர்த்தியை நாடியேஇ

பாசற வெய்தி யறிவிழந்

தெனைநா ளையம்?,

ஏசறு மூரவர் கவ்வை

தோழீ!என்செய்யுமே? 1

தோழீ!என் வாயும் கண்ணும் பசலை பூத்தனவே!

3140. என்செய்யு மூரவர் கவ்வை

தோழீ!இனிநம்மை,

என்செய்ய தாமரைக் கண்ண

னென்னை நிறைகொண்டான்,

முன்செய்ய மாமை யிழந்து

மேனி மெலிவெய்தி,

என்செய்ய வாயும் கருங்கண்

ணும்பயப் பூர்ந்தவே. 2

கண்ணன் என்னைக் கவர்ந்துவிட்டான்:பழிச்சொல் வந்தால் என்ன?

3141 ஊர்ந்த சகடம் உதைத்தபா

தத்தன், பேய்முலை

சார்ந்து சுவைத்த செவ்வாயன்

என்னை நிறைகொண்டான்,

பேர்ந்தும் பெயர்ந்தும் அவனோ

டன்றியோர் சொல்லிலேன்,

தீர்ந்தவென் தோழீ!என்செய்யு

மூரவர் கவ்வையே? 3

கண்ணனிடம் கொண்ட காதல்முளை தழைத்துவிட்டதே!

3142. ஊரவர் கவ்வை யெருவிட்

டன்னைசொல் நீர்மடுத்து,

ஈரநெல் வித்தி முளைத்த

நெஞ்சப் பெருஞ்செய்யுள்,

பேரமர் காதல் கடல்பு

ரைய விளைவித்த,

காரமர் மேனிநங் கண்ணன்

தோழீ!கடியனே. 4

தோழீ!மாலிடம் மையல் கொண்டேன்:

தாய் என்ன செய்வாளோ?

3143. கடியன் கொடியன் நெடிய

மாலுல கங்கொண்ட

அடியன், அறிவரு மேனிமா

யத்தன், ஆகிலும்

கொடியவென் னெஞ்சம் அவனென்றே

கிடக்கு மெல்லே,

துடிகொ ளிடைமடத் தோழீ!

அன்னையென் செய்யுமே? 5

தோழிமீர்!வாசுதேவன் வலையுள் அகப்பட்டேன்

3144. அன்னையென் செய்யிலென் ஊரென்

சொல்லிலென் தோழீமீர்,

என்னை யினியுமக் காசை

யில்லை யகப்பட்டேன்,

முன்னை யமரர் முதல்வன்

வண்துவ ராபதி

மன்னன், மணிவண் ணன்வாசு

தேவன் வலையுளே. 6

தோழீ!ஆழிப்பிரானை வணங்கப்பெறுவேமோ!

3145. வலையுள் அகப்படுத் தென்னைநன்

னெஞ்சம் கூவிக்கொண்டு,

அலைகடல் பள்ளி யம்மானை

ஆழிப் பிரான்றன்னை,

கலைகொள் அகலல்குல் தோழீ!

நம்கண்க ளால்கண்டு,

தலையில் வணங்கவு மாங்கொலோ

தைய லார்முன்பே? 7

தாயர் நாண நான் கண்ணனை என்று கூடுவேன்?

3146. பேய்முலை யுண்டு சகடம்

பாய்ந்து மருதிடைப்

போய்முதல் சாய்த்து, புள்வாய்

பிளந்து களிறட்ட,,

தூமுறு வல்தொண்டை வாய்ப்பி

ரானையெந் நாள்கொலோ,

யாமுறு கின்றது தோழீ!

அன்னையர் நாணவே? 8

தோழீ!கண்ணனைத் தூற்றியவாறே மடலூர் மடலூர்வேன்

3147. நாணும் நிறையும் கவர்ந்தென்னை

நன்னெஞ்சம் கூவிக்கொண்டு,

சேணுயர் வானத் திருக்கும்

தேவபி ரான்றன்னை,

ஆணையென் தோழீ!உலகு

தோறலர் தூற்றி,ஆம்

கோணைகள் செய்து குதிரி

யாம்மட லூர்துமே. 9

பெண்கள் அலர் தூற்றட்டும்:துழாய் சூடி மடலூர்வேன்

3148. யாமட லூர்ந்தும் எம்மாழி

யங்கைப் பிரானுடை,

தூமடல் தண்ணந் துழாய்மலர்

கொண்டு சூடுவோம்,

யாமட மின்றித் தெருவு

தோறயல் தையலார்,

நாமடங் காப்பழி தூற்றி

நாடும் இரைக்கவே. 10

இவற்றைப் பாடுக:மண்ணுலகிலேயே வைகுந்தம் கிட்டும்

3149. இரைக்கும் கருங்கடல் வண்ணன்

கண்ணபி ரான்றன்னை,

விரைக்கொள் பொழில்குரு கூர்ச்சட

கோபன் சொன்ன,

நிரைக்கொளந் தாதி யோரா

யிரத்து ளிப்பத்தும்,

உரைக்கவல் லார்க்கு வைகுந்த

மாகும்தம் மூரெல்லாம். 11

நேரிசை வெண்பா

பழிக்கு அஞ்சாமல் மடலூர முனைந்தான் மாறன்

மாசறு சோதிகண்ணன் வந்துகல வாமையால்,

ஆசை மிகுந்துபழிக் கஞ்சாமல், - ஏசறவே

மண்ணில் மடலூர மாறன் ஒருமித்தான்,

உண்ணடுங்கத் தான்பிறந்த ஊர். (43)

Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is பொலிக
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is  ஊரெல்லாம்
Next
htmltitle
UPDATE on 13 July 2017:

Thanks to the devotees at dheivathinkural.wordpress.com, many corrections have been incorporated on these pages. If you find an error, please help us by reporting it