Page load depends on your network speed. Thank you for your patience. You may also report the error.

Loading...

பொலிக

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

திருவாய்மொழி

ஐந்தாம் பத்து

பொலிக

இப்பகுதி ஸ்ரீ வைஷ்ணவ பக்தகோடிகளுக்கு மங்களா சாஸனம் செய்கிறது, பல்லாண்டு பாடுகிறது. ஒன்றும் தேவும்' முதலான பாடல்களால் ஆழ்வார் உலகுக்கு உபதேசம் செய்து இவ்வுலகையே பரமபதமாக்கிவிட்டார். அங்குள்ளோரும் இங்கு வரலாம் என்று சொல்லும்படி ஸம்ஸாரத்திற்கும் பரமபதத்திற்குமுள்ள வேற்றுமை நீங்கியதாகக் காணப்பட்டது.

பக்த கோடிகளைக் கண்டு வாழ்த்தல்

அறுசீர் ஆசிரிய விருத்தம்

அடியார் திருக்கூட்டத்தால் மண்ணுலகும் விண்ணுலகாயிற்று

3128. பொலிக பொலிக பொலிக!

போயிற்று வல்லுயிர்ச் சாபம்,

நலியும் நரகமும் நைந்த

நமனுக்கிங் கியாதொன்று மில்லை,

கலியும் கெடும்கண்டு கொள்மின்

கடல்வண்ணன் பூதங்கள் மண்மேல்,

மலியப் புகுந்திசை பாடி

யாடி யுழிதரக் கண்டோம்.

தொண்டர்காள்!வாருங்கள் ;துழாயானைத் தொழலாம்

3129. கண்டோம் கண்டோம் கண்டோம்

கண்ணுக் கினியன கண்டோம்,

தொண்டீர் எல்லீரும் வாரீர்

தொழுது தொழுதுநின் றார்த்தும்,

வண்டார் தண்ணந்து ழாயான்

மாதவன் பூதங்கள் மண்மேல்,

பண்டான் பாடிநின் றாடிப்

பரந்து திரிகின் றனவே.

கலியுகம் நீங்கிக் கிருதயுகம் வந்துவிட்டதே!

3130. திரியும் கலியுகம் நீங்கித்

தேவர்கள் தாமும் புகுந்து,

பெரிய கிதயுகம் பற்றிப்

பேரின்ப வெள்ளம் பெருக,

கரிய முகில்வண்ண னெம்மான்

கடல்வண்ணன் பூதங்கள் மண்மேல்,

இரியப் புகுந்திசை பாடி

எங்கும் இடங்கொண் டனவே.

எல்லோரும் பகவத் பஜனை செய்கிறார்களே!

3131. இடங்கொள் சமயத்தை யெல்லாம்

எடுத்துக் களைவன போல,

தடங்கடல் பள்ளிப் பெருமான்

றன்னுடைப் பூதங்க ளேயாய்,

கிடந்தம் இருந்தும் எழுந்தும்

கீதம் பலபல பாடி,

நடந்தும் பறந்தும் குனித்தும்

நாடகம் செய்கின் றனவே.

வைகுந்தனடியார்கள் எங்கும் நிறைந்துள்ளனர்

3132. செய்கின்ற தென்கண்ணுக் கொன்றே

ஒக்கின்ற திவ்வுல கத்து,

வைகுந்தன் பூதங்க ளேயாய்

மாயத்தி னாலெங்கும் மன்னி,

ஐயமொன் றில்லை யரக்கர்

அசுரர் பிறந்தீருள் ளீரேல்,

உய்யும் வகையில்லை தொண்டீர்!

ஊழி பெயர்த்திடும் கொன்றே.

தொண்டீர் அடியார்களைத் தொழுது உய்ம்மின்

3133. கொன்றுயி ருண்ணும் விசாதி

பகைபசி தீயன வெல்லாம்,

நின்றிவ் வுலகில் கடிவான்

நேமிப்பி ரான்தமர் போந்தார்,

நன்றிசை பாடியும் துள்ளி

யாடியும் ஞாலம் பரந்தார்,

சென்று தொழுதுய்ம்மின் தொண்டீர்!

சிந்தையைச் செந்நி றுத்தியே.

கண்ணபிரானே மாபெருந்தெய்வம்

3134. நிறுத்திநும் உள்ளத்துக் கொள்ளும்

தெய்வங்க ளும்மையுய் யக்கொள்,

மறுத்து மவனோடே கண்டீர்

மார்க்கண் டேயனும் கரியே,

கறுத்த மனமொன்றும் வேண்டா

கண்ணனல் லால்தெய்வ மில்லை,

இறுப்பதெல் லாமவன் மூர்த்தி

யாயவர்க் கேயி றுமினே.

அடியார் கூட்டத்தைத் தொழுது வாழுங்கள்

3135. இறுக்கு மிறையிறுத் துண்ண

எவ்வுல குக்கும்தன் மூர்த்தி,

நிறுத்தினான் தெய்வங்க ளாக

அத்தெய்வ நாயகன் றானே,

மறுத்திரு மார்வன் அவன்றன்

பூதங்கள் கீதங்கள் பாடி,

வெறுப்பின்றி ஞாலத்து மிக்கார்

மேவித் தொழுதுய்ம்மி னீரே.

இவ்வுலகம் அச்சுதன் அடியார்களை நிரம்பக் கொண்டுள்ளது

3136. மேவித் தொழுதுய்ம்மி னீர்கள்

வேதப் புனித இருக்கை,

நாவிற்கொண் டச்சுதன் றன்னை

ஞான விதிபிழை யாமே,

பூவில் புகையும் விளக்கும்

சாந்தமும் நீரும் மலிந்து,

மேவித் தொழுமடி யாரும்

பகவரும் மிக்க துலகே.

யாவரும் தொழுதால் கலியுகமே இல்லாது போகும்

3137. மிக்க வுலகுகள் தோறும்

மேவிக்கண் ணன்திரு மூர்த்தி,

நக்கபி ரானோ டயனும்

இந்திர னும்முத லாக,

தொக்க அமரர்கு ழாங்கள்

எங்கும் பரந்தன தொண்டீர்,

ஒக்கத் தொழுகிற்றி ராகில்

கலியுக மொன்றுமில் லையே.

இவற்றைப் பாடுகு : மன மாசு நீங்கும்

3138. கலியுக மொன்றுமின் றிக்கே

தன்னடி யார்க்கருள் செய்யும்,

மலியும் சுடரொளி மூர்த்தி

மாயப்பி ரான்கண்ணன் றன்னை,

கலிவயல் தென்னன் குருகூர்க்

காரிமா றன்சட கோபன்,

ஒலிபுக ழாயிரத் திப்பத்து

உள்ளத்தை மாசறுக் கும்மே.

நேரிசை வெண்பா

மாறன் சொல் நமது மன மாசைப் போக்கும்

பொலிக பொலிகவென்று பூமகள்கோன் றொண்டர்,

மலிவுதனைக் கண்டுகந்து வாழ்த்தி - உலகில்

திருந்தாதார் தம்மைத் திருத்திமா றன்சொல்,

மருந்தாகப் போகுமன மாசு.

Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is கையார்
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is  மாசறு சோதி
Next
htmltitle
UPDATE on 13 July 2017:

Thanks to the devotees at dheivathinkural.wordpress.com, many corrections have been incorporated on these pages. If you find an error, please help us by reporting it