Page load depends on your network speed. Thank you for your patience. You may also report the error.

Loading...

ஒன்றுந்தேவும்

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

திருவாய்மொழி

நான்காம் பத்து

ஒன்றுந்தேவும்

'உலகில் மக்கள் பகவானின் மேன்மையை (பரத்வத்தை) அறியாமல், பல தெய்வங்களிடம் பக்தி செலத்துகிறார்கள். பகவானின் மேன்மையை நன்கு விளக்கிச் சொன்னால், இவர்கள் அறிந்துகொண்டு பிறவித் துன்பத்தை நீக்கிக்கொள்ளக்கூடும்' என்று அருள்கொண்டு ஈண்டு உபதேசிக்கிறார் ஆழ்வார்.

தேவர்கட்கெல்லாம் தலைவன் எம்பெருமான் எனல்

அறுசீர் ஆசிரிய விருத்தம்

ஆதிப்பிரான் இருக்க, பிற தெய்வங்களைத் தேடுகிறீர்களே!

3106. ஒன்றுந் தேவு முலகும்

உயிரும் மற்றும் யாதுமில்லா

அன்று, நான்முகன் றன்னொடு

தேவ ருலகோ டுயிர்படைத்தான்,

குன்றம் போல்மணி மாடம்

நீடு திருக்குரு கூரதனுள்,

நின்ற ஆதிப்பி ரான்நிற்க

மற்றைத் தெய்வம் நாடுதிரே.

திருக்குருகூரைப் போற்றி வணங்குங்கள்

3107. நாடி நீர்வ ணங்கும்

தெய்வமும் உம்மையு முன்படைத்தான்,

வீடில் சீர்ப்புக ழாதிப்பி

ரானவன் மேவி யுறைகோயில்,

மாட மாளிகை சூழ்ந்தழ

காய திருக்குரு கூரதனைப்,

பாடி யாடிப் பரவிச்

செல்மின்கள் பல்லுல கீர்!பரந்தே.

திருக்குருகூர்ப் பரனே மாபெருந்தெய்வம்

3108. பரந்த தெய்வமும் பல்லுல

கும்படைத் தன்றுட னேவிழுங்கிக்,

கரந்து மிழ்ந்து கடந்தி

டந்தது கண்டும் தெளியகில்லீர்,

சிரங்க ளால்அ மரர்வ

ணங்கும் திருக்குரு கூரதனுள்,

பரன்திற மன்றிப் பல்லுலகீர்!

தெய்வம் மற்றில்லை பேசுமினே.

எல்லாத் தெய்வங்கட்கும் நாயகன் நாரணனே

3109. பேச நின்ற சிவனக்

கும்பிர மன்றனக் கும்பிறர்க்கம்

நாய கனவ னே,க

பாலநன் மோக்கத்துக் கண்டுகொள்மின்,

தேச மாமதிள் சூழ்ந்தழ

காய திருக்குரு கூரகனுள்,

ஈசன் பாலோர் அவம்ப

நைதலென் னாவதி லிங்கியர்க்கே?

நாராயணனே எல்லாத் தெய்வங்களுமாக விளங்குகிறான்

3110. இலிங்கத் திட்ட புராணத்

தீரும் சமணரும் சாக்கியரும்,

வலிந்து வாதுசெய் வீர்களும்

மற்றுநுந் தெய்வமு மாகிநின்றான்

மலிந்து செந்நெல் கவரி

வீசும் திருக்குரு கூரதனள்,

பொலிந்து நின்றபி ரான்கண்டீ

ரொன்றும் பொய்யில்லை போற்றுமினே.

மாயையில் சிக்காதீர் ; பரமனை நாடி ஓடுங்கள்

3111. போற்றி மற்றோர் தெய்வம்

பேணப் புறத்திட்டு உம்மையின்னே

தேற்றி வைத்ததெல் லீரும்

வீடு பெற்றாலுல கில்லையென்றே,

சேற்றில் செந்நெல் கமலம்

ஓங்கு திருக்குரு கூரதனுள்,

ஆற்ற வல்லவன் மாயம்

கண்டீரது அறிந்தறிந் தோடுமினே.

ஆதிநாதருக்கே அடிமையாக இருங்கள்

3112. ஓடி யோடிப் பல்பி

றப்பும் பிறந்துமற் றோர்தெய்வம்,

பாடி யாடிப் பணிந்துபல்

படிகால் வழியே றிக்கண்டீர்,

கூடி வானவ ரேத்த

நின்ற திருக்குர கூரதனுள்,

ஆடு புட்கொடி யாதி

மூர்த்திக் கடிமை புகுவதுவே.

மற்றைத் தெய்வங்களை விடுத்து ஆதிப்பிரானைப் போற்றுக

3113. புக்கடி மையினால் தன்னைக்

கண்ட மார்க்கண் டேயனவனை,

நக்க பிரானுமன் றுய்யக்

கொண்டது நாரா யணனருளே,

கொக்க லர்தடந் தாழை

வேலித் திருக்குரு கூரதனள்,

மிக்க ஆதிப்பி ரான்நிற்க

மற்றைத் தெய்வம் விளம்புதிரே.

திருக்குருகூரைச் சிந்தியுங்கள் : உய்யலாம்

3114. விளம்பும் ஆறு சமய

மும்அவை யாகியும் மற்றும்தன்பால்,

அளந்து காண்டற் கரிய

னாகிய ஆதிப்பி ரானமரும்,

வளங்கொள் தண்பணை சூழ்ந்தழ

காய திருக்குரு கூரதனை,

உளங்கொள் ஞானத்து வைம்மின்

உம்மை யுய்யக்கொண்டு போகுறிலே.

குடக்கூத்தனுக்கு அடிமை செய்வதே ஏற்றது

3115. உறுவ தாவ தெத்தேவும்

எவ்வுல கங்களும் மற்றும்தன்பால்,

மறுவில் மூர்த்தியோ டொத்தித்

தனையும் நின்றவண் ணம்நிற்கவே,

செறுவில் செந்நெல் கரும்பொ

டோங்கு திருக்குரு கூரதனுள்

குறிய மாணுரு வாகிய

நீள்குடக் கூத்தனுக் காட்செய்வதே.

இவற்றைப் பாடுக : வைகுந்தம் எளிதில் கிட்டும்

3116. ஆட்செய் தாழிப்பி ரானைச்

சேர்ந்தவன் வண்குரு கூர்நகரான்

நாட்க மழ்மகிழ் மாலை

மார்பினன் மாறன் சடகோபன்,

வேட்கை யால்சொன்ன பாடல்

ஆயிரத் துளிப்பத் தும்வல்லார்,

மீட்சி யின்றி வைகுந்த

மாநகர் மற்றது கையதுவே.

நேரிசை வெண்பா

மாறனையே என் கை தொழும்

'ஒன்றுமிலைத் தேவிவ் வுலகம் படைத்தமால்,

அன்றி'என யாரு மறியவே,-நன்றாக

மூதலித்துப் பேசியருள் மொய்மகிழோன் தாள் தொழவே,

காதலிக்கு மென்னுடைய கை.

Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is நண்ணாதார்
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is  கையார்
Next
htmltitle
UPDATE on 13 July 2017:

Thanks to the devotees at dheivathinkural.wordpress.com, many corrections have been incorporated on these pages. If you find an error, please help us by reporting it