Page load depends on your network speed. Thank you for your patience. You may also report the error.

Loading...

அஞ்சிறை

ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம்

திருவாய்மொழி

முதற்பத்து

அஞ்சிறை

நம்மாழ்வாருக்குப் பராங்குசன் என்றும் பெயர். இவர் தலைவியாய் இருந்து பாடும்போது பராங்குச நாயகி என்று இவரைச் கூறுவார்கள். எம்பெருமானாகிற தலைவனைக் குறித்து நாரை, வண்டு, AO, பூவை முதலியவற்றை தூது விடுகிறார். ஞான அநுட்டானங்களைக் கொண்ட ஆசாரியர்களையே பறவைகளாகக் கொள்ள வேண்டும். எம்பெருமானை அடைவிக்குமாறு ஆசாரியர்களை வேண்டவதாகப் பொருள் கொள்ளல் தக்கது.

கொச்சகக் கலிப்பா

நாராய் திருமாலிடம் தூது சென்று எனக்கருள்

2708. அஞ்சிறைய மடநாராய்

அளியத்தாய், நீயும்நின்

அஞ்சிறைய சேவலுமாய்

ஆவாவென் றெனக்கருளி,

வெஞ்சிறைப்புள் ளுயர்த்தாற்கென்

விடுதூதாய்ச் சென்றக்கால்,

வன்சிறையில் அவன்வைக்கில்

வைப்புண்டா லென்செய்யுமோ?

குயில்காள்!தூது செல்க

2709. என்செய்ய தாமரக்கண்

பெருமானார்க் கென்தூதாய்,

என்செய்யு முரைத்தக்கால்

இனக்குயில்காள்!நீரலிரே?,

முன்செய்த முழுவினையால்

திருவடிக்கீழ்க் குற்றவேல்,

முன்செய்ய முயலாதேன்

அகல்வதுவோ விதியினமே?

அன்னங்காள்!என் மயக்கத்தை வாமனனுக்குக் கூறுக

2710. விதியினால் பெடைமணக்கும்

மென்னடைய அன்னங்காள்,

மதியினால் குறள்மாணாய்

உலகிரந்த கள்வற்கு,

'மதியிலேன் வல்வினையே

மாளாதோ வென்று,ஒருத்தி

மதியெல்லா முள்கலங்கி

மயங்குமால்' என்னீரே?

கிரௌஞ்சப்!பட்சிகளே தூது சென்றருள்க

2711. என்நீர்மை கண்டிரங்கி

யிதுதகா தென்னாத,

என்நீல முகில்வண்ணற்

கென்சொலியான் சொல்லுகெனோ

நன்னீர்மை யினியவர்கண்

தங்காதென் றொருவாய்ச்சொல்

நன்னீல மகன்றில்காள்!

நல்குதிரோ நல்கீரோ?

குருகே!நாரணனிடம் தூது சென்றருள்க

2712. நல்கிததான் காத்தளிக்கும்

பொழிலேழும் வினையேற்கே,

நல்கத்தா னாகாதோ?

நாரணனைக் கண்டக்கால்,

மல்குநீர்ப் புனற்படப்பை

இரைதேற்வண் சிறுகுருகே,

மல்குநீர்க் கண்ணேற்கோர்

வாசகங்கொண் டருளாயே.

வண்டே!என் கருத்தை ஆழியாளிடம் சொல்

2713. 'அருளாத நீரருளி

யவராவி துவராமுன்,

அருளாழிப் புட்கடவீர்

அவர்வீதி யருநாள்' என்று,

அருளாழி யம்மானைக்

கண்டக்கா லிதுசொல்லி

யருள்,ஆழி வரிவண்டே!

யாமுமென் பிழைத்தோமே?

என்ன குற்றம் செய்தேன்? கிளியே! திருமாலைக் கேள்

2714. என்பிழைகோப் பதுபோலப்

பனிவாடை யீர்கின்ற,

என்பிழையே நினைந்தருளி

யருளாத திருமாலார்க்கு,

'என்பிழைத்தாள் திருவடியின்

தகவினுக்ª 'கன் றொருவாய்ச்சொல்,

என்பிழைக்கு மிளங்கிளியே!

யான் வளர்த்த நீயலையே?

நாகணவாய்ப்புள்ளே தூது செல்லாவிடில் தண்டப்பேன்

2715. நீயலையே சிறுபூவாய்

நெடுமாலார்க் கென் தூதாய்,

நோயெனது நுவலென்ன

நுவலாதே யிருந்தொழிந்தாய்?,

சாயலொடு மணிமாமை

தளர்ந்தேன்நான், இனியுனது

வாயலகில் இன்னடிசில்

வைப்பாரை நாடாயே.

குளிர்காற்றே!என்னைத் துன்புறுத்தாதே

2716. நாடாத மலர்நாடி

நாடொறும் நாரணன்றன்,

வாடாத மலரடிக்கீழ்

வைக்கவே வகுக்கின்று,

வீடாடி வீற்றிருத்தல்

வினையற்ற தென்செய்வதோ?,

ஊடாடு பனிவாடாய்!

உரைத்தீரா யெனதுடலே.

மனமே!ஆழியாளிடம் எனது நிலையைக் கூறு

2717. உடலாழிப் பிறப்புவீ

டுயிர்முதலா முற்றுமாய்,

கடலாழி நீர்தோற்றி

யதனள்ளே கண்வளரும்,

அடலாழி யம்மானைக்

கண்டக்கா லிதுசொல்லி,

விடலாழி மடநெஞ்சே!

வினையோடுமொன் றாமளவே.

இவற்றைப் பாடுக : தேவருலகு கிடைக்கும்

2718. அளவியன்ற ஏழுலகத்

தவர்பெருமான் கண்ணனை,

வளவயல்சூழ் வண்குருகூர்ச்

சடகோபன் வாய்ந்துரைத்த,

அளவியன்ற அந்தாதி

யாயிரத்துள் இப்பத்தின்,

வளவுரையால் பெறலாகும்

வானோங்கு பெருவளமே.

நேரிசை வெண்பா

இப் பாடல்கள் மாறனின் பக்தி வளமே

அஞ்சிறைய புட்கடமை 'ஆழியா னுக்கு,நீர்

என்செயலைச் சொல்லும்' எனவிரந்து, - விஞ்ச

நலங்கியதும் மாறனிங்கே நாயகனைத் தேடி,

மலங்கியதும் பத்தி வளம்.

 

Previous page in  சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is பத்துடை
Previous
Next page in சுலோகங்கள்/ ஸத் விஷயங்கள்  - ஸ்ரீ நாலாயிர திவ்வியப் பிரபந்தம் (இரண்டாம் பாகம்)  is  வளவேழ்
Next
htmltitle
UPDATE on 13 July 2017:

Thanks to the devotees at dheivathinkural.wordpress.com, many corrections have been incorporated on these pages. If you find an error, please help us by reporting it